சர்தார் வல்லபாய் படேல்: காந்தி படுகொலைக்குப் பிறகும் ஆர்.எஸ்.எஸ்.சை தேச பக்தர்கள் என்று பேசியது ஏன்?

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், PHOTO DIVISION

  • எழுதியவர், ஜெய் ஷுக்லா
  • பதவி, பிபிசி நியூஸ், குஜராத்

(நவம்பர் 2023இல் பதிப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுரை சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளான இன்று மறுபகிர்வு செய்யப்படுகிறது)

"நான் முஸ்லிம்களின் உண்மையான நண்பன். ஆனால் நான் அவர்களின் மிகப்பெரிய எதிரியாகக் கருதப்படுகிறேன். எனது கருத்துகளைத் தெளிவாகத் தெரிவிப்பதில் நான் எப்போதும் மிகச் சரியாக இருப்பதாக நம்புகிறேன்.

அத்தகைய சூழ்நிலையில் இந்தியாவின் மீதான தேசபக்தியை மட்டும் அறிவிப்பது எந்த விதத்திலும் உதவாது என்பதை நான் அவர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவர்கள் தங்களது நிலை குறித்து நடைமுறை ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்."

"அண்மையில் முடிவடைந்த அகில இந்திய முஸ்லீம் மாநாட்டில், காஷ்மீர் விவகாரம் குறித்தும், அங்கே பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு குறித்தும் முஸ்லிம்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கவிரும்புகிறேன். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை அவர்கள் ஏன் கண்டிக்கவில்லை? இது மக்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இப்போது நீங்கள் ஒரே படகில் பயணம் செய்யும் அனைவருடனும் இணைந்து ஒன்றாக நீந்த வேண்டும் அல்லது ஒன்றாக மூழ்க வேண்டும் என்று இந்திய முஸ்லிம்களிடம் நான் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய முடியாது.”

“பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்புவோர் அங்கு சென்று நிம்மதியாக வாழ வேண்டும், ஆனால் இங்குள்ள மக்களும் நிம்மதியாக வாழ்ந்து முன்னேற்றப் பணிகளில் பங்களிக்க வேண்டும்.“

ஜனவரி 6, 1948 அன்று லக்னோவில் சர்தார் வல்லபாய் படேல் ஆற்றிய உரையின் சில பகுதிகள் இவை.

மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதிய 'பட்டேல், ஒரு வாழ்க்கை' புத்தகத்தில், "பாகிஸ்தான் என்ற ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்கு ஆதரவாக பலர் இருந்த நகரம் லக்னோ. எந்த முடிவும் எடுக்க முடியாத இஸ்லாமியர்களும் அந்த நகரத்தில் இருந்தனர்.

தீவிர இந்துக்களின் தாயகமாகவும் அந்த நகரம் இருக்கிறது. சர்தார் இங்கே முதல் குழுவுக்கு கிண்டலாகவும், இரண்டாவது குழுவுக்கு கடுமையான சொற்களாலும், மூன்றாவது குழுவுக்கு தெளிவாகவும் விளக்கினார்," எனக்குறிப்பிட்டுள்ளார்.

1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான்காவது வாரத்தில் மீரட்டில் காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. ராஜ்மோகன் காந்தி தனது புத்தகத்தில், "இந்த மாநாட்டில் சர்தார் பட்டேல் பாகிஸ்தான் வேண்டும் எனக் கோருபவர்களிடம், நீங்கள் எதைச் செய்தாலும், அதை அமைதியுடனும், அன்புடனும் செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று கூறினார், ஆனால் வாளுக்கு பதில் வாளில் இருந்து தான் கொடுக்கப்படும்," என எழுதியுள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், DINODIA PHOTOS/GETTY IMAGES

மகாத்மா காந்தி எழுதிய கடிதம்

நவகாளி, பீகார் வன்முறைகள் மற்றும் படுகொலைகள் நடந்து ஒரு மாதத்துக்குள்ளாகவே படேல் ஆற்றிய உரையின் சில பகுதிகள் நேருவுக்குப் பிடிக்கவில்லை. அப்போது காந்தி நவகாளியில் இருந்தார். நேருவும் ஆச்சார்யா கிருபலானியும் அவரைச் சந்திக்கச் சென்றனர்.

அப்போது மீரட்டில் ‘வாளுக்கு வாளால் பதில்’ என்ற சர்தாரின் பேச்சு பெரும் விவாதப் பொருளாக மாறியிருந்தது. காந்தி 1946 டிசம்பர் 30-ம் தேதியன்று சர்தாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதை நேருவிடம் அவருக்கு கொடுத்தனுப்பினார்.

ராஜ்மோகன் காந்தி, சர்தாரின் மகள் மணிபஹன் படேலின் நாட்குறிப்பை மேற்கோள் காட்டி, காந்தியின் கடிதத்தால் அவர் நாள் முழுவதும் சோகமாக இருந்ததார் எனக்குறிப்பிடுகிறார். காந்தி தனது கடிதத்தில், "உங்கள் மீது பல புகார்கள் வந்துள்ளன.

வாளுக்கு வாளால் தான் பதில் அளிக்கமுடியும் என்ற நீதியை நீங்கள் கற்பித்தால், அது உண்மையாக இருந்தால், அது மிகுந்த தீங்கு விளைவிக்கும்," என்று எழுதியிருந்தார்.

கடிதம் கிடைத்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 7 அன்று, சர்தார் காந்திக்கு பதில் கடிதம் எழுதினார். அதில், "உண்மையைப் பேசுவது எனது வழக்கம். எனது நீண்ட வாக்கியம் சுருக்கப்பட்டு, 'வாளுக்கு வாளால் பதில்' என்ற சூழலை உருவாக்கும் அளவுக்கு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது," எனத்தெரிவித்திருந்தார்.

இருப்பினும், சர்தார் முஸ்லீம்களின் விசுவாசம் குறித்து பலமுறை கேள்விகளை எழுப்பினார். ஜனவரி 5, 1948 இல் கல்கத்தாவில் அவர் ஆற்றிய உரையில், “முஸ்லிம்கள் ஏன் தங்கள் விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்குகிறார்கள் என்று கேட்கிறார்கள். நான் சொல்கிறேன், நீங்கள் ஏன் உங்கள் மனசாட்சியைக் கேட்கக்கூடாது?" எனக்கேள்வி எழுப்பியிருந்தார்.

சர்தார் பட்டேலின் இந்த உரைகள் 'பில்டிங் இந்தியா‘ஸ் யூனிட்டி' (Building India's Unity) என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

1978-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த ரஃபிக் ஜகாரியா, தனது ‘சர்தார் படேலும் இந்திய முஸ்லிம்களும்’ என்ற நூலில், “நாட்டின் பிரிவினையின் போது இந்து அகதிகளின் நிலையைப் பார்த்த பிறகு, சர்தாரின் மனதில் இந்து மனோபாவம் இருந்ததை உணரமுடியும். ஆனால், இந்திய முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கும் எந்த மனப்பான்மையும் அவரிடம் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை,” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், PHOTO DIVISION

படக்குறிப்பு, இந்தியாவை ஒரு வலுவான நாடாக உருவாக்குவதில் சர்தார் வல்லபாய் பட்டேல் மிகுந்த உறுதியுடன் இருந்தார்.

சர்தாரின் பேச்சுக்கள் தொடர்பாக நேருவுடன் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தன. மத நல்லிணக்கத்தைப் பொறுத்தவரை சர்தார் முஸ்லிம்களிடம் தாராள மனப்பான்மை கொண்டவர் அல்ல என்று நேரு தரப்பில் நம்பப்பட்டது.

சர்தாரின் பேச்சுக்கள், சம்பவம், நேரம், இடம், நபர் மற்றும் சூழல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தக்கூடாது என்றும், அவருடைய எந்த பேச்சையும் அல்லது வாக்கியத்தையும் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும் கருதக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான ரிஸ்வான் காத்ரி பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், “அவர் சிந்திக்காமல் பேசவில்லை. சூழலைப் பார்க்கும்போது, ​​நாட்டைப் பிளவுபடுத்திய மதத்தைப் பின்பற்றுபவர்கள் நாட்டிற்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை," என்றார்.

பல நேரங்களில் அவரது கிண்டல் பேச்சு சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்தது.

ஜகாரியா இப்படி எழுதுகிறார்: “இந்தியாவில் ஒரே ஒரு ‘தேசியவாத முஸ்லிம்’ இருக்கிறார். அவர்தான் ‘நேரு’ என்று சர்தார் ஒருமுறை கூறினார். இந்தச் செய்தி எவ்வளவு ஆழமாகப் பரவியது என்றால், காந்தி சர்தாரிடம், ‘தனது எண்ணங்கள் மனச்சாட்சியை மீறிவிடக் கூடாது’ என்று சொல்ல வேண்டிய அளவுக்கு ஆழமாகப் பரவியது.”

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேருவுக்கும், பட்டேலுக்கும் இடையே எப்போதும் ஒரு முரண் இருந்துகொண்டே இருந்தது.

ஆபரேஷன் போலோவுக்கு எதிரான விமர்சனங்கள்

ஹைதராபாத்தில் நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு, சர்தார் அங்குள்ள முஸ்லிம்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கும் வரை அவர்கள் பயப்பட வேண்டியதில்லை என்று உறுதியளித்தார்.

ஹைதராபாத்தில் ராணுவத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், பிரபல கட்டுரையாளருமான ஏ.ஜி.நூரானி எழுதியுள்ளார். அவர் தனது 'த டிஸ்ட்ரக்ஷன் ஆஃப் ஹைதராபாத்' என்ற புத்தகத்தில், "சர்தாரின் முடிவால் ஹைதராபாத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்" என்று எழுதினார். இதற்கு சுந்தர்லால் குழு அறிக்கையையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

கன்ஹையா முன்ஷி காங்கிரஸ் கட்சியில் ஆர்.எஸ்.எஸ்.-சின் முகவராக இருந்ததாக நூரானி எழுதுகிறார். சர்தார் முன்ஷியை இந்திய அரசின் பிரதிநிதியாக ஹைதராபாத்திற்கு அனுப்பியிருந்தார் என்பதும் அவர் சர்தாரின் சிறப்பான நபராக கருதப்பட்டதும்இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில் ஹைதராபாத்தை இந்தியாவின் புற்றுநோயாக சர்தார் கருதினார், ஏனெனில் நிஜாம் ஹைதராபாத்தை சுதந்திரமாக வைத்திருக்க விரும்பினார். ஆபரேஷன் போலோவின் கீழ் சர்தார் ஹைதராபாத்தில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினார். நேருவும் ராஜாஜியும் இராணுவ நடவடிக்கையை எதிர்த்தனர். ஆனால் சர்தார் பிடிவாதமாக இருந்தார்.

ரஃபிக் ஜகாரியா எழுதுகையில், "சர்தார் 1950 அக்டோபர் 7 அன்று ஹைதராபாத் சென்றார். போலீசாரை தவிர்த்து விமானம் மூலம் லைக் அலி பாகிஸ்தானுக்கு சென்றதாக அவர்களிடம் கூறப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்ட ஹைதராபாத் முஸ்லிம்கள் கொண்டாடினர். நிஜாமின் கடைசி பிரதமராக லைக் அலி இருந்தார்.

இந்நிலையில், சர்தார் முஸ்லிம்கள் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், முஸ்லிம்கள் தங்களின் எதிர்காலத்தை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை என நான் சந்தேகிக்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க ராணுவ நடவடிக்கை தேவை என்பதில் பட்டேல் உறுதியாக இருந்தார்.

பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 16, 1946 அன்று அந்த கோரிக்கை மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜின்னா அறிவித்தபோது, ​​அந்த அறிவிப்பின் மிக மோசமான தாக்கம் வங்காளத்தில் காணப்பட்டது.

ராஜ்மோகன் காந்தி தனது புத்தகத்தில், "வங்காள அரசின் தலைவரான எச்.எஸ். சுஹாரவர்தி அந்த நாளில் விடுமுறை அறிவித்தார். அன்று கொலை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஏராளமான அரங்கேறின.

ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் வாய்மூடி வேடிக்கை பார்த்தது. முதல் இரண்டு நாட்கள் ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர். ஆனால் பின்னர் எதிர் தாக்குதல் நடந்தது. ஐந்து நாட்கள் நீடித்த இந்த கொடிய வன்முறைச் சம்பவங்களில் 5,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதுடன், 15,000 பேர் காயமடைந்தனர்," என எழுதுகிறார்.

"சர்தார் படேல், ஆகஸ்ட் 21, 1946 இல் ராஜகோபாலாச்சாரிக்கு எழுதிய கடிதத்தில், ஏராளமான முஸ்லிம்கள் உயிரிழந்ததன் மூலம் முஸ்லிம் லீக் பாடம் கற்றுக் கொண்டதாகக் கூறினார்."

நவகாளிக்குப் பிறகு பீகாரிலும் வன்முறை ஏற்பட்டது. அப்போதைய இடைக்கால அரசின் தலைவராகப் பதவி வகித்த நேரு வங்காளத்திலும் பீகாரிலும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதற்கிடையில், பிகாரில் விசாரணை தாமதமானதற்கு சர்தார் படேல் தான் காரணம் என்று முஸ்லீம் லீக் உறுப்பினர் காந்திக்கு கடிதம் எழுதினார்.

முதலில் சர்தாருக்கு கடிதம் எழுதிய காந்தி, நீங்கள் விசாரணைக் கமிஷனுக்கு எதிரானவர் என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் பிப்ரவரி 5, 1947 அன்று இரண்டாவது கடிதம் எழுதினார். அதில், ‘'நீங்கள் விசாரணைக் கமிஷன் அமைக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்,” எனத்தெரிவித்திருந்தார்.

சர்தார் காந்திக்கு பதிலளித்த போது, பிப்ரவரி 17-ம் தேதி எழுதிய கடிதத்தில், "விசாரணை கமிஷன் அமைக்க நான் தடையாக இருப்பதாக யார் சொன்னது? விசாரணையை நிறுத்துவதில் ஆளுநரின் பங்கு உள்ளது. வைஸ்ராயும் இதை விரும்பவில்லை.

வைஸ்ராயின் பரிந்துரையின் பேரில் கல்கத்தாவில் விசாரணை நடக்கிறது. ஆனால் 12 மாதங்கள் கழித்து அறிக்கை வரும்.இவ்வளவு காலம் கழித்து விசாரணை நடத்தி என்ன பிரயோஜனம்?அது தேவையில்லாத செலவாகும், அதனால் எந்தப் பலனும் இல்லை," எனத்தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பட்டேலின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து மகாத்மா காந்தி விமர்சனம் செய்தார்.

1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் சுதந்திரமடைந்தது, இந்தியா ஆகஸ்ட் 15, 1947 இல் சுதந்திரம் பெற்றது. மேற்கு பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வகுப்புவாத கலவரங்கள் வெடித்தன. மேற்கு பஞ்சாபின் லாகூர், சியால்கோட், குஜ்ரன்வாலா மற்றும் ஷேக்பாரா ஆகிய இடங்களில் பயங்கர படுகொலைகள் நடந்தன. இது அமிர்தசரஸையும் பாதித்தது. இந்த வன்முறைகள் பின்னர் கல்கத்தாவிலும் பரவியது.

காந்தி கல்கத்தாவில் அமைதிக்காக உண்ணாவிரதம் இருந்தார். அங்கு அமைதி நிலைநாட்டப்பட்டபோது, ​​டெல்லியில் கலவரம் வெடித்தது. அங்கு பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்பட இருந்தது. செப்டம்பர் 5, 1948 இல், சுமார் இரண்டு லட்சம் இந்து அல்லது சீக்கிய அகதிகள் டெல்லிக்கு வந்தனர்.

டெல்லியில் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டனர்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத் தனது ‘இந்தியா வின்ஸ் ஃப்ரீடம்‘ என்ற புத்தகத்தில்,"டெல்லியில் சீக்கியர்களின் கலவர கும்பல் முஸ்லிம்களைத் தாக்கத் தொடங்கியது. மேற்கு பஞ்சாபில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்கு அங்குள்ள முஸ்லிம்கள் காரணமா என்று நான் ஆச்சரியப்பட்டேன். பிறகு ஏன் டெல்லியில் அப்பாவி முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டனர்?"

"பழைய கோட்டையில் அவர்களுக்கு நிவாரண முகாம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்த போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. சர்தார் படேல் மற்றும் நேரு ஆகியோர் தான் இந்த வன்முறைகள் பற்றிய விவரங்களைத் தரவேண்டும் என்னிடம் காந்தி கூறினார்.

ஆனால் சர்தாரின் கருத்து வேறுவிதமாக இருந்தது. எங்களுக்குள் வேறுபாடுகள் வளர்ந்தன. ஒரு பக்கம் நானும் நேருவும் இருந்தோம். மறுபக்கம் சர்தார் இருந்தார். நிர்வாகத்தில் இரண்டு குழுக்கள் உருவாயின. நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்ததால், மக்கள் சர்தாரை நிமிர்ந்து பார்த்தார்கள். பெரும்பான்மையினர் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் அவர் பணியாற்றினார். சிறுபான்மையினர் என்னையும் நேருவையும் எதிர்பார்த்ததனர்."

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜவஹர்லால் நேரு, கான் அப்துல் கபார் கான், சர்தார் ப;டடேல், மௌலானா ஆசாத் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்ட காட்சி.

சர்தார் படேலின் துறையின் கீழ் நேரடியாகச் செயல்படும் டெல்லி நிர்வாகம் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று மௌலானா சர்தார் மீது குற்றம் சாட்டினார்.

இது குறித்து மௌலானா எழுதும்போது, 'டெல்லியில் முஸ்லிம்கள் பூனைகள் மற்றும் நாய்களைப் போல் இறந்து கொண்டிருந்தபோது, ​​காந்தியுடன் நானும், நேருவும், சர்தாரும் அமர்ந்திருந்தோம். டெல்லியில் வன்முறையைத் தடுக்க நிர்வாகம் செயல்படும் விதம் குறித்து நேரு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, ​​முஸ்லிம்கள் பயப்படத் தேவையில்லை என்று சர்தார் அவரிடம் கூறினார். முஸ்லிம்களின் உயிரையும் உடமைகளையும் காப்பாற்ற அரசாங்கம் எவ்வளவோ முயற்சி செய்தும், வேறு எதுவும் செய்ய முடியவில்லை,” என எழுதியுள்ளார்.

மேலும், “சர்தாரின் பதிலால் நேரு மிகவும் அதிர்ச்சியடைந்தார். சர்தார் படேலுக்கு அப்படிப்பட்ட கருத்துகள் இருந்தால் அதில் நான் ஒன்றும் சொல்ல முடியாது என்று காந்தியிடம் கூறினார்,” எனத்தெரிவித்துள்ளார்.

இது மட்டுமின்றி, "டெல்லியில் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதாகவும், சர்தாரின் உள்துறை அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் காந்தி கூறியிருந்தார்.

ஜனவரி 12, 1948 அன்று, வன்முறையைத் தடுக்க உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுக்க காந்தி முடிவு செய்தார். காந்தியின் உண்ணாவிரதத்தைத் தடுக்க சர்தார் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்,” எனத்தெரிவித்துள்ளார்.

"சர்தார் மறுநாள் காலை பம்பாய் மற்றும் கத்தியவாருக்குப் புறப்பட வேண்டியிருந்தது. எந்த காரணமும் இல்லாமல் உண்ணாவிரதம் இருப்பதாக காந்தியிடம் கூறினார். அதற்கு காந்தி, 'நான் சீனாவில் இல்லை. நான் டெல்லியில் இருக்கிறேன்.

என் கண்களும் காதுகளும் இன்னும் நன்றாக வேலை செய்கின்றன. முஸ்லிம்களின் குறைகள் மிகைப்படுத்தப்பட்டதாக நீங்கள் கூறுகிறீர்கள், நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை, நானும் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை,” என்று கூறியதாக மௌலானா பதிவு செய்துள்ளார்.

அடுத்த நாள் காலையில் சர்தார் தனது பயணத்தைத் தொடங்கினார். காந்தியின் உண்ணாவிரதத்தைக் கலைக்க டெல்லியில் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அமைதி முயற்சிகளில் திருப்தி அடைந்த காந்தி ஜனவரி 18 அன்று மௌலானாவிடம் இருந்து பெற்ற மொசாம்பி சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். முஸ்லிம்களின் அழிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் கட்டப்படுவதையும் உறுதி செய்தார்.

மௌலானாவின் கூற்றுப்படி, 'காந்தியின் இந்த அணுகுமுறையால் சர்தாருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கு மட்டும் கோபம் இல்லை. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் இந்து மகாசபையின் ஊழியர்களும் கோபமடைந்தனர்.'

ஆனால், ராஜ்மோகன் காந்தி இதற்கு மாறாக காந்தி தனது உண்ணாவிரதத்தை முறித்தபோது, ​​சர்தார் பம்பாயிலிருந்து ஒரு தந்தி அனுப்பினார் என்று எழுதியுள்ளார்.

சர்தார் படேல் குறித்து புத்தகம் எழுதியுள்ள மூத்த ஆய்வாளர் ஊர்விஷ் கோத்தாரி, "மௌலானா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஆனால் அதற்கு சர்தார் பொறுப்பேற்கவில்லை" என்கிறார்.

அந்தக் காலத்து நிலைமை அப்படித்தான் இருந்தது. 1946-50 காலகட்டத்தை சமீபத்திய சூழ்நிலையுடன் ஒப்பிடுகையில், சர்தாரை முஸ்லீம் விரோதி அல்லது வகுப்புவாதவாதி என்று அழைக்க முடியாது எனத்தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மௌலானா ஆசாத் அளித்த மொசாம்பி சாற்றை அருந்தி காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

பாகிஸ்தானுக்கு செல்லும் முஸ்லிம்கள் பஞ்சாப் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான அச்சம் உச்சத்தில் இருந்தது.

பாகிஸ்தானுக்கு வரும் மக்கள் ராஜ்புரா மற்றும் லூதியானாவுக்கு இடையே உள்ள பாட்டியாலா மற்றும் பதிண்டா அருகே படுகொலை செய்யப்படுவதாக அப்போதைய பாகிஸ்தானின் அமைச்சராக இருந்த கசன்ஃபர் அலி கான் சர்தார் படேலுக்கு தந்தி அனுப்பினார்.

ஆகஸ்ட் 26, 1947 இல், சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காகவும் நம்பிக்கையான சூழலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு பாட்டியாலா மகாராஜாவிடம் சர்தார் தந்தி அனுப்பினார். கலவரம் நிற்காததால், சர்தார் செப்டம்பர் 30 அன்று அமிர்தசரஸ் சென்று அங்கு ஒரு கூட்டத்தை நடத்தினார்.

ராஜ்மோகன் காந்தி தனது புத்தகத்தில், "இன்று லாகூரில் இந்துவோ சீக்கியரோ தனித்து நடமாட முடியாத சூழல் நிலவுகிறது. அமிர்தசரஸில் ஒரு முஸ்லிம் தனித்து வாழ முடியாது. இந்தச் சூழல் உலகம் முழுவதும் நம் பெயரைக் கெடுத்து விட்டது என்று கூட்டத்தில் சர்தார் பேசினார்," என்று எழுதியுள்ளார்.

மேலும், "சர்தாரின் இந்த தனிப்பட்ட முயற்சியால், பாகிஸ்தானுக்குச் செல்லும் ஒரு ரயில் கூட அதன்பின் தாக்கப்படவில்லை," எனத் தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமிர்தசரஸ் வன்முறைகள் காந்தி மற்றும் நேருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்திய போது, அவற்றைக் கட்டுப்படுத்த பட்டேல் அதிக முன்னுரிமை அளித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், பிரபல கட்டுரையாளருமான ஏ. ஜி. நூரானி ஒருமுறை ‘தி இந்துவில்’ ஒரு கட்டுரை எழுதினார்.

இந்தக் கட்டுரையில் அவர், “நவம்பர் 1945 இல், பம்பாய், மரைன் டிரைவ் அருகே சௌபட்டி கடற்கரையில் முக்கிய காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஒரு நீச்சல் குளத்தைத் திறந்து வைத்தார். இந்த நீச்சல் குளத்தின் பெயர் பிரான்சுக்லால் மஃபத்லால் இந்து நீச்சல் குளம். இந்த நீச்சல் குளத்தின் கதவுகள் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினருக்கு மூடப்பட்டன. இந்த தலைவர் யார்? இந்த குளத்தை திறந்து வைத்தவர் பெயர் வல்லபாய் படேல். இந்த துணிச்சலான செயலுக்காக அவரைப் பாராட்டி ஒரு பெயர்ப் பலகை குளத்திற்கு வெளியே காணப்படுகிறது," எனத்தெரிவித்துள்ளார்.

முதலில் அது யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் முகமது அலி ஜின்னா, நவம்பர் 18, 1945 அன்று டெல்லியில் இருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பட்டேல் ஆற்றிய உரைக்கு பதிலளித்த போது, ​​"இந்து-முஸ்லிம் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் சர்தார் பட்டேலுக்கு பொருந்தாது. பம்பாயில் இந்துக்கள் மட்டும் பயன்படுத்தும் முதல் நீச்சல் குளத்தை அவர் தானே திறந்துவைத்தார்? எனக்கேட்டு சில இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது போன்ற நீச்சல் குளங்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு கடல் நீரைப் பெறும் அதிர்ஷ்டம் கூட இல்லை." எனத்தெரிவித்தார்.

இதற்கு நூரானி, வஹீத் அகமதுவின் தி நேஷன்ஸ் வாய்ஸ் (The Nation's Voice) என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி, 'அப்போது நேருவும், ராஜாஜியும் அவரைத் தடுக்க முயற்சிக்கவில்லை' என்றும் எழுதினார்.

சர்தாரை யாராவது முஸ்லிம் விரோதி என்று கூறி அரசியல் செய்தால், அவர் சர்தாரை இழிவு படுத்துகிறார்'' என்கிறார் ஊர்விஷ் கோத்தாரி.

சர்தார் தனது எதிர்ப்பாளர்களை கையாள்வதில் மிகவும் கடினமாக இருந்தார். அவருக்கு மறைமுகமான ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருந்தன என்று நூரானி எழுதுகிறார்.

நூரானி தனது நூலில், “அக்டோபர் 22, 1946 அன்று, இந்தியாவின் வைஸ்ராயான லார்ட் வேவல், பிரிட்டன் மன்னருக்கு எழுதிய கடிதத்தில் பட்டேல் ஒரு வகுப்புவாதி என்று தெளிவாக எழுதியிருந்தார்.

ஜகாரியா எழுதும் போது, “நாடு முழுவதும் பரவியுள்ள 562 சிறிய மற்றும் பெரிய சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பது உண்மையில் மிகப்பெரிய பணியாகும். இந்த அற்புதத்தைச் செய்ததன் மூலம், சர்தார் இந்தியாவின் பிஸ்மார்க் என்ற பட்டத்தைப் பெற்றார்.

இதில் காஷ்மீர் இடம் பெறவில்லை. அதனுடைய பொறுப்பு சர்தாரின் கையில் இல்லை. இன்றும் காஷ்மீர் நமது அரசியலுக்கு ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது,” எனக்குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினருக்காக ஆங்கிலேயர்களால் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் தொடரவோ, அல்லது மறுசீரமைப்பு செய்யவோ சர்தார் எதிராக இருந்தார்.

அரசியல் நிர்ணய சபையில் பட்டியல் சாதியினர் தவிர அனைத்து சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு முறையை ரத்து செய்வதற்கு சர்தார் ஆதரவு அளித்தார்.

பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் தவிர அனைத்து சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடு வழங்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர அரசியலமைப்பு சபை முடிவு செய்தது.

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

டெல்லி வன்முறையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபட்டதாகவும், அவர்கள் மீதும், கலவரத்தில் ஈடுபட்ட சீக்கிய கும்பல்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நேரு புகார் செய்தார். இருப்பினும், காவல்துறை அவர்களுக்கு எதிராக மென்மையாகச் செயல்பட்டதை நேரு பின்னர் ஒப்புக்கொண்டார்.

ஜனவரி 20 அன்று, காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் காந்தி உயிர் பிழைத்தார். அதே நாளில் மேற்கு பஞ்சாப்பை சேர்ந்த மதன்லால் பஹ்வா என்பவர் வெடிகுண்டு வீசினார். மதன்லால் பிடிபட்டார்.

ஆனால் மீதமுள்ளவர்கள் தப்பினர். காந்தியைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்படுவதாக மதன்லாலிடம் இருந்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

காந்திஜிக்கு பாதுகாப்பு கொடுப்பது பற்றி சர்தார் பேசினார். ஆனால் காந்தி அதை எதிர்த்தார். ஜனவரி 30 அன்று, மணிபெஹனுடன் காந்தியைச் சந்திக்க சர்தார் வந்தார். நேருவுக்கும் சர்தாருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நேருவிடம் இந்த விஷயத்தைப் பற்றி பேசப்போவதாக காந்தி சர்தாரிடம் கூறினார். அப்போதைய சூழ்நிலையில் இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள் நாட்டின் நலனுக்கானவை அல்ல என்று அவர் நம்பினார்.

மூன்று நிமிடங்களில் மணிபெஹனும் சர்தாரும் தங்கள் வீட்டை அடைந்தனர். அங்கு காந்தியை யாரோ சுட்டுக்கொன்றது தெரிய வந்தது.

காந்தியின் படுகொலைக்குப் பிறகு சர்தார் மீது குற்றச்சாட்டுகள் அதிகரிக்கத் தொடங்கின. பிப்ரவரி 3 அன்று, ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையின் கட்டுரையாளர், மகாத்மா காந்திக்கு பாதுகாப்பு வழங்கத் தவறியதற்காக சர்தார் உள்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எழுதினார்.

ஜெயபிரகாஷ் நாராயணனும் சர்தாரை விமர்சித்து, 30 வயது இளைஞன் கூட நிர்வகிக்கமுடியாத துறையை 74 ​​வயது முதியவர் எப்படி நிர்வகிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ராஜ்மோகன் காந்தி தனது நூலில், "சர்தார் தனது ராஜிநாமா கடிதத்தைத் தயார் செய்தார். ஆனால் அதை அனுப்பவில்லை. நேரு சர்தாருக்கு ஒரு உணர்ச்சிகரமான கடிதம் எழுதினார். அதில் அவர் இருவருக்கும் இடையே நிலவிய வேறுபாடுகளை மொத்த முரண்களாகச் சித்தரித்திருந்தார்.

மேலும், இந்த தீய விளையாட்டை நிறுத்துவது அவசியம். காந்தி காலமான பின் எழுந்துள்ள அவசரநிலையை எதிர்த்துப் போராட நாம் இருவரும் நண்பர்கள் அல்லது கூட்டாளிகளாக தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றவேண்டும் என எழுதியிருந்தார்,” எனத் தெரிவித்துள்ளார்.

“சர்தாரும் உற்சாகமாக பதில் அளித்தார். சர்தார் எழுதினார், நாங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கிறோம் என்று பாபுவும் கருதினார். இதை மனதில் வைத்து, உங்கள் தலைமையில் எனது கடமையை நிறைவேற்ற நான் உறுதிபூண்டுள்ளேன்.”

மேலும், "காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை ஆகியவை தடைசெய்யப்பட்டன. ஆனால், சர்தாருக்கும் நேருவுக்கும் அவற்றைப் பற்றி வெவ்வேறு கருத்துகள் இருந்தன. நேரு ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை ஆகியவற்றை பாசிஸ்டுகளாகக் கருதினார்.

ஆனால், சர்தார் அவர்களை தேசபக்தியாளர்கள் என்று கருதினார். காந்தியின் படுகொலை ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கான பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ் துவக்கியது என நேரு கருதினார். ஆனால், சர்தார் இதற்கு உடன்படவில்லை,” என ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காந்தியின் படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபை ஆகிய அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டன.

ஜூலை 17, 1948 அன்று, மாகாண முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு சர்தார் அழைப்பு விடுத்தார். முன்னதாக, ஹிந்து மகாசபா தலைவரும், நேரு அரசில் அமைச்சருமான ஷியாம பிரசாத் முகர்ஜி சில விஷயங்களை பரிசீலிக்குமாறு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் ஷியாம பிரசாத் முகர்ஜி, "காந்தி கொலையில் ஒரு சிறிய குழு ஈடுபட்டுள்ளது. சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லாதவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை," எனத்தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு முனையிலும் இந்துக்களை பலவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆனால் முஸ்லிம்களின் இத்தகைய (சந்தேகத்திற்குரிய) நடவடிக்கைகளுக்கு எதிராக யாரும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் ஷ்யாம பிரசாத் முகர்ஜி புகார் கூறினார்.

முதல்வர்கள் கூட்டம் முடிந்ததும், சர்தார் சியாம பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், "ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபை மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்பாடுகள் அரசுக்கு ஆபத்தாக இருந்தன. பாதுகாப்புச் சட்டங்களின் படி, ஒருவரை ஆறு மாதங்களுக்கு மேல் காவலில் வைக்க முடியாது," எனத்தெரிவித்தார்.

லக்னௌவில் உள்ள இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களை காங்கிரஸில் சேருமாறு சர்தார் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் அவர்கள் மட்டுமே இந்துக்களின் பாதுகாப்பாளர்கள் அல்ல என்றும் கூறியிருந்தார்.

"ஆட்சியில் இருக்கும் சில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் அதிகார பலத்தில் ஆர்.எஸ்.எஸ்.-சை நசுக்க நினைக்கிறார்கள். அதிகார பலத்தால் ஒரு அமைப்பை நசுக்க முடியாது. ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தினர் திருடர்களும் கொள்ளையர்களும் அல்ல. அவர்கள் தேசபக்தர்கள். அவர்கள் தங்கள் நாட்டை நேசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் கருத்துக்கள் தவறானவை.”

சர்தாரின் இந்த பேச்சு வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது என்று எழுத்தாளர் ஹிம்மத்பாய் படேல் தனது சக்ரவர்த்தி சன்யாசி சர்தார் படேல் புத்தகத்தில் எழுதியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்தது.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய உர்விஷ் கோத்தாரி, "சர்தார் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபையை காங்கிரசில் சேர அழைப்பு விடுத்தார். அவர்கள் மீது அவருக்கு அதிக பாசம் இருந்தது என்று அர்த்தமல்ல. இந்தியா இப்போது சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அனைவரும் அதற்கு ஆதரவளிக்க வேண்டும். அனைவரும் அதை ஆதரிக்க வேண்டும். அம்பேத்கர் ஆட்சியில் இருந்தால், சியாம பிரசாத் முகர்ஜியும் அங்கு இருந்தால், அவர்களைப் பொறுத்தவரை, சங்கத்தை முன்னே அழைத்துச் செல்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை,” என்றார்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

பட மூலாதாரம், Getty Images

மௌலானா ஆசாத், சர்தாரின் மனம் எந்த திசையில் செயல்பட்டது என்பதற்கு இன்னொரு உதாரணத்தைப் பாருங்கள் என்று எழுதுகிறார். "முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் காரணங்களையும் தர்க்கங்களையும் கூறுவது முக்கியம் என்று சர்தார் உணர்ந்தார்."

"டெல்லியில் முஸ்லீம்களின் வீடுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களின் கண்காட்சியை சர்தார் ஏற்பாடு செய்தார். இந்துக்கள் மற்றும் சீக்கியர்களைத் தாக்க முஸ்லிம்கள் ஆயுதங்களை சேகரித்தனர் என்பது அவரது கோட்பாடு. இந்துக்களும் சீக்கியர்களும் எதிர்க்கவில்லை என்றால், முஸ்லிம்கள் அவர்களை அழித்திருப்பார்கள்," எனக்கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

"இந்த ஆயுதங்கள் அமைச்சரவைக் கூட்டத்தின் போது நிரூபிக்கப்பட்டன. மவுண்ட்பேட்டன் பிரபு சில கத்திகளை எடுத்து, இந்த ஆயுதங்களால் டெல்லி முழுவதையும் யாராவது கைப்பற்ற முடியும் என்பதை ஜீரணிக்க எனக்குக் கடினமாக உள்ளது" என்று கூறினார்.

இருப்பினும், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மாறாக, சர்தார் முஸ்லிம்கள் மீதும் அக்கறை கொண்டிருந்தார். ராஜ்மோகன் காந்தி எழுதுகிறார், "ராஜபுத்திரர்கள் மற்றும் சீக்கியர்கள் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களைத் தாக்கியபோது, ​​​​டெல்லியில் உள்ள சீக்கிய மற்றும் ராஜ்புத் படைப்பிரிவுகளுக்குப் பதிலாக மெட்ராஸ் படைப்பிரிவை சர்தார் நிறுத்தினார்."

"தெற்கு டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்காவைப் பற்றி அவர் கவலைப்பட்டார். பயந்துபோன சில முஸ்லிம்கள் தர்காவில் தஞ்சம் புகுந்தனர். சர்தார் தர்காவைப் பார்வையிட்டார். அங்கு சென்று அவர்களுக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும்படி பொறுப்பான அதிகாரிக்கு உத்தரவிட்டார்."

ஊர்விஷ் கோத்தாரி கூறும்போது, ​​“அந்தக் காலத்தில் சர்தாருக்கு நிறைய பொறுப்புகள் இருந்தன. அவற்றுள் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை விட நிர்வாகக் கண்ணோட்டம் முக்கியமானது. அவர் முஸ்லீம்கள் மீது அந்நிய உணர்வு கொண்டிருந்தார். ஆனால் அவர் முஸ்லிம்களை அழிக்கும் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)