சைபர் கிரைம் மோசடியில் இழந்த பணத்தை இரண்டே நாட்களில் மீட்க முடியும் - எப்படி தெரியுமா?
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பகுதி நேர வேலை; 'ரிவ்யூ' செய்தால் மட்டும் போதும்; கைநிறைய வருமானம் என பேராசையை தூண்டிய சைபர் க்ரைம் குற்றவாளிகளின் மோசடி வலையில் சிக்கி, கோவையில் பெண் ஒருவர் 15 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.
இது போன்ற சைபர் க்ரைம் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? பாதிக்கப்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
கோவையை சேர்ந்த பட்டதாரிப்பெண் சுவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மூன்று வாரங்களுக்கு முன்பு ஆராத்யா என்ற பெயரில் சுவிதாவின் டெலிகிராமிற்கு ‘மேக் மை டிரிப்’ நிறுவனத்தில் பகுதி நேர வேலை உள்ளது, ஹோட்டல்களை விளம்பரப்படுத்தி பேச ரிவ்யூ செய்யும் 30 டாஸ்க் முடித்தால் தினமும் 900 – 4,000 ரூபாய் வருமானம் கிடைக்கும் என மெசேஜ் வந்துள்ளது.
பகுதி நேர பணியால் வருமானம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் சுவிதா, அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருந்த இணையதளத்தில் சென்று பதிவும் செய்துள்ளார்.
அதன்பின் மீண்டும் ஆராத்யா என்ற பெயரில் டெலிகிராமில், எப்படி ஹோட்டல்களை ரிவ்யூ செய்வது, எப்படி டாஸ்க் முடிப்பது போன்ற அறிவுரைகள் வழங்கியுள்ளது அந்த மோசடி கும்பல். அறிவுரைகளை பின்பற்றி முதற்கட்டமாக, 11 ஆயிரம் முதலீடு செய்து பகுதி நேர வேலையாக துவங்கிய சுவிதாவுக்கு, 20,274 ரூபாயை வழங்கியது அந்த மோசடி கும்பல். பணம் திரும்ப வந்ததால் அடுத்த கட்டத்துக்கு செல்வோம் என நினைத்த சுவிதா, மேலும், 17,324 ரூபாயை கூடுதலாக முதலீடு செய்து வேலை செய்த போது, 40,456 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதனால், மோசடி கும்பல் உண்மையான பணி வழங்குவதாக கண்மூடித்தனமாக நம்பியுள்ளார் சுவிதா.
‘டீலக்ஸ் டாஸ்க் – அதிக வருமானம்‘!
அந்தக்கும்பல், அதிக கமிஷன் வருமானம் கிடைக்கும் ‘டீலக்ஸ் டாஸ்க்’ முயற்சித்துப் பார்க்குமாறு கூறிய போது சுவிதா அதையும் முயற்சித்துள்ளார். இதற்காக மோசடி கும்பல் கூறிய, 6 வங்கிக் கணக்குகளில் சுவிதா தொடர்ச்சியாக, 15.74 லட்சம் ரூபாயை அனுப்பி முதலீடு செய்துள்ளார்.
ஆரம்பத்தில் பணம் கொடுப்பது போல் கொடுத்த அந்தக்கும்பல், திடீரென கமிஷன், வருமானம் என எந்தப்பணத்தையும் அனுப்பாததால், அதிர்ச்சியடைந்த சுவிதா, முதல் முதலாக ஆராத்யா என அறிமுகம் செய்துகொண்ட நம்பருக்கு தொடர்பு கொண்டபோது, அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி, கோவை சைபர் க்ரைமில் புகார் பதிவு செய்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீஸார் சைபர் க்ரைம் மோசடி கும்பலை தேடி வருவதுடன், சுவிதாவின் பணத்தை மீட்கும் முயற்சியை துவங்கியுள்ளனர்.
மோசடி கும்பலின் கவர்ச்சிகர பேச்சுக்களை நம்பி சுவிதா ஏமாற்றப்பட்டதைப் போல், தமிழகம் முழுவதிலும் தினம் ஒருவர் சைபர் க்ரைம் மோசடி கும்பலின் வலையில் சிக்கி பணத்தையும், வாழ்வையும் இழந்து வருவது தொடர்கதையாகவே உள்ளது.
இப்படியான சம்பவங்கள் நடக்கும் போது செய்ய வேண்டியது என்ன? எப்படி சைபர் கிரைம் மோசடி கும்பலால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்து வல்லுனர்கள் பிபிசி தமிழிடம் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
‘பகுதி நேர வேலை போர்வையில் குற்றங்கள்’
கோவை சுவிதா சம்பவம் பற்றியும், பல்வேறு வகையான நவீன மோசடிகள் குறித்தும் பிபிசி தமிழிடம் பேசிய கோவை சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அருண், ‘‘கோவையில் சுவிதாவிடம் நடத்தப்பட்டது வேலை அடிப்படையிலான (Task Based) சைபர் க்ரைம் குற்றம். பகுதி நேர வேலை என்ற போர்வையில் தான் இது போன்ற மோசடிகளை செய்கின்றனர்." என்றார்.
"முதலில் டெலிகிராம் குழுவில் இணைத்து, கூகுளில் மேப்பில் ஹோட்டல், கல்வி நிறுவனங்களுக்கு பாசிடிவ் ரிவ்யூ செய்வதை டாஸ்க் ஆக வழங்குவார்கள். இதில் ஈடுபடுவோருக்கு, 2,000 – 4,000 ரூபாய் வரையில் வழங்கிவிட்டு, பின் டீலக்ஸ் டாஸ்க் எனக்கூறி தனியாக மற்றொரு டெலிகிராம் குழுவில் இணைப்பார்கள்."
"அதில், ஏற்கனவே பலரும் பணத்தை செலுத்தி இரட்டிப்பு பணம் பெற்றதைப்போன்ற சில ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்து, நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். பின், 2,000, 10,000, 20,000, 1 லட்சம் அளவிற்கு பணம் செலுத்தி இரட்டிப்பாக பெறலாம் எனக்கூறுவார்கள். குழுவில் இணைந்த மக்கள் பணம் செலுத்தி டாஸ்க் துவங்கினால் சில நாட்களுக்கு பணத்தை இரட்டிப்பு செய்து தந்து நம்பிக்கையை ஏற்படுத்தி, கூடுதலாக பணத்தை முதலீடு செய்ய வைப்பார்கள். அதன்பின் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வைத்து, மோசடி செய்து தப்பி விடுவார்கள்."
"மோசடி கும்பல் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதால் தான் மக்கள், லட்சணக்கணக்கான ரூபாயை போலியான முதலீடு, ரிவ்யூ போன்ற மோசடி செய்யும் நபர்களுக்கு அனுப்பி பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற மோசடிகளில் அதிக அளவில் ஐ.டி நிறுவன ஊழியர்கள், படித்த பட்டதாரிகள் தான் பாதிக்கப்படுகின்றனர். இரட்டிப்பு வருமானம் தரும் அளவுக்கு அப்படியென்ன பிஸினர் அது? இந்த சாதாரண புரிதல் கூட இல்லாமல், யாரிடமும் ஆலோசனை செய்யாமல், படித்தவர்களே பாதிப்பது வருத்தமாக உள்ளது."
"சதுரங்க வேட்டை என்ற சினிமாவில் வரும் ‘ஒருத்தன ஏமாத்தணும்னா முதல்ல அவன் ஆசைய தூண்டனும்’ என்ற வசனம் போலத்தான், பேராசையை தூண்டி மோசடிகளை நிகழ்த்துகின்றனர்,’’ என்றார்.
சைபர் மோசடியில் இழந்த பணத்தை மீட்க முடியுமா?
சைபர் கிரைம் வழக்குகளில் மக்கள் இழந்த பணத்தை மீட்பது கடினமான வேலை என்கிறார் இன்ஸ்பெக்டர் அருண்.
மேலும் தொடர்ந்த அவர், ‘‘சைபர் கிரைம் மோசடி கும்பல், 5 லட்சம் ரூபாயை 1 மணி நேரத்தில், 1,200 வங்கிக்கணக்கு வரையில் பிரித்து அனுப்பி, மோசடியில் கிடைத்த பணத்தை பயன்படுத்துகின்றனர்.
இதற்காகவே விவரம் தெரியாத சாதாரண மக்களை பயன்படுத்தி அவர்கள் பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அவர்களுக்கே தெரியாமல் மோசடி கும்பல் அந்தக்கணக்கை நிர்வகிக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இதற்காகவே சில கும்பல் உள்ளது.
சாதாரண ஏழை மக்களை குறி வைத்து அவர்களுக்கு 1,000 – 5,000 ரூபாய் வரையில் பணம் கொடுத்து, அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கை துவங்கி விடுகின்றனர். சமீபத்தில் கூட அரசு உதவித்தொகை கிடைக்கும் எனக்கூறி சாமானிய மக்கள் பெயரில் வங்கிக் கணக்கு துவங்கிய சைபர் க்ரைம் குற்றவாளிகளை கைது செய்திருந்தோம்.
ஒரு கணக்கில் இருந்து பல கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுவதால், அவை அனைத்தையும் டிரேஸ் செய்து அவற்றை முடக்கி பணத்தை மீட்பது தான் பெரிய சவால்.
இதனால், தான் சைபர் க்ரைம் மோசடிகளில், பணத்தை மீட்பதில் தாமதம் ஏற்படுவதுடன், முழு பணத்தை மீட்க முடியாத சூழல் உருவாகிறது. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் குற்றங்கள் அதிகரிக்கின்றன; மக்கள் விழிப்புடன் இருந்தால் மட்டுமே தப்ப முடியும்,’’ என்கிறார் அவர்.
"சைபர் மோசடியில் இழந்த பணத்தை 2 நாட்களில் மீட்க முடியும்"
பிபிசி தமிழிடம் பேசிய சைபர் க்ரைம் வல்லுனர் வினோத் ஆறுமுகம், ‘‘நாளுக்கு நாள் வேலை அடிப்படையிலான சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பகுதி நேர வேலை, பரிசு, ஆன்லைன் பொருட்கள் விற்பனை என்ற பெயரில் குற்றங்கள் நடக்கின்றன.
நாம் ஒருவருக்கு பணம் அனுப்பினாலோ அல்லது மோசடிக்கு உள்ளாகினாலோ, நமது வங்கிக்கணக்கில் இருந்து மோசடி செய்த நபருக்கு உடனடியாக பணம் சென்றுவிடும்.
ஆனால், நமது வங்கியில் இருந்து மோசடி செய்த நபரின் வங்கிக்கு, அதாவது வங்கிகளுக்குள்ளான பண பரிவர்த்தனை நடக்க இரண்டு நாட்கள் அதாவது 48 மணி நேரமாகும். இதனால், மோசடியால் பாதிக்கப்பட்ட உடனே வங்கியில் புகாரளித்தால், அந்த பரிவர்த்தனையை வங்கி ரத்து செய்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்.
சைபர் மோசடியில் சிக்கி மக்கள் பணத்தை இழந்தால், உடனடியாக அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன், மாவட்ட சைபர் க்ரைம் அலுவலகம் அல்லது, 1930 என்ற எண்ணில் புகாரளிக்க வேண்டும். சம்பவம் நடந்து எவ்வளவு விரைவாக புகாரளிக்கிறோமோ அவ்வளவு விரைவில் பணத்தை மீட்க முடியும்.
பணத்தை இழந்த பின், பணம் திரும்ப வரும் என்று காத்திருந்து மிகத்தாமதமாக புகாரளிக்கும் போது, பணத்தை மீட்பது மிகவும் சிரமமான செயலாகிவிடும்,’’ என்கிறார் அவர்.
பணத்தை மீட்டுக்கொடுப்பதில் என்ன சிக்கல்?
பிபிசி தமிழிடம் பேசிய அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிரான்கோ, ‘‘சைபர் க்ரைம் மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட மக்கள், பணத்தை பறிகொடுத்த 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தகவல் தெரிவிக்கும் பட்சத்தில், அந்த பரிவர்த்தனை ரத்து செய்து வாடிக்கையாளர் இழந்த பணத்தை, வங்கி மீட்டுத்தர முடியும். 48 மணி நேரத்தில் தகவல் தெரிவித்திருந்தால், வங்கி வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பித்தர வேண்டுமென மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது,’’ என்றார்.
மேலும், வங்கிகள் பணத்தை மீட்பதிலும், வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதாகவும் தெரிவிக்கிறார் தாமஸ் பிரான்கோ.
மேலும் தொடர்ந்த தாமஸ் பிரான்கோ, ‘‘பணத்தை இழந்த மக்கள் 48 மணி நேரத்துக்குள் வங்கிக்கு தகவல் தெரிவித்திருந்தால், பணத்தை மீட்டுத்தர வேண்டுமென உத்தரவிட்டிருந்தாலும், பெரும்பாலான வங்கிகள் பணத்தை மீட்பதும் இல்லை, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதும் இல்லை. ஏனெனில் பணத்தை மீட்பதில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் உள்ளதால், வங்கிகள் சாக்குபோக்கு காரணங்கள் சொல்லி வாடிக்கையாளர்களுக்கு பணத்தை மீட்டுக்கொடுப்பது இல்லை."
"வங்கிகளுக்கு உள்ளான பண பரிவர்த்தனைகள் தொடர்பான காப்பீடு இருக்கும் போதிலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணத்தை கொடுப்பது இல்லை. எனக்குத்தெரிந்து திருநெல்வேலி பகுதியில் ஒரு சுதந்திர போராட்ட வீரர் சைபர் மோசடியால் இழந்த 50 ஆயிரம் ரூபாயை, 3 ஆண்டுகளாகியும், இன்னமும் மீட்க முடியவில்லை."
"இந்த வழக்குகளில் பணத்தை மீட்பதில் பல சிக்கல்கள் நீடிப்பதையும், உத்தரவுப்படி பாதிக்கப்படும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணத்தை மீட்டு வழங்க வேண்டும் எனவும், ஓராண்டுக்கு முன் மத்திய ரிசர்வ் வங்கிக்கே புகாரளித்தோம். அந்த புகாருக்கு ரிசர்வ் வங்கி இதுவரை பதிலளிக்கவில்லை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,’’ என, அதிர்ச்சிகரான தகவலை பகிந்தார் தாமஸ் பிரான்கோ.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)