பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா?

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலிய இளம் பேட்டர் சாம் கான்ஸ்டாஸுக்கும், விராட் கோலிக்கும் முதல் செஷனிலேயே முட்டிக் கொண்டது.
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

மெல்போர்ன் நகரில் இன்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்டர்களை சமாளிக்கத் திணறினர்.

பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரின் எம்சிஜி மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 86 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்து வலுவாக இருக்கிறது. ஸ்மித் 68 ரன்களுடனும், கேப்டன் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாக இருந்தது பும்ராவின் பந்துவீச்சு மட்டும்தான். அதிலும் பும்ராவின் பந்துவீச்சை அறிமுக வீரர் 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் வெளுத்துவிட்டார். மற்ற வகையில் பும்ராவின் வழக்கமான மிரட்டல் பந்துவீச்சு இருந்தது, முதல் நாளிலேயே பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதுதவிர சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை. இருப்பினும் சிராஜ் தவிர மற்ற 3 பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலிய அணியின் அறிமுக பேட்டர் 19 வயதான சாம் கான்ஸ்டாஸின் அதிரடி பேட்டிங், கோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இடையே நடந்த உரசல்கள் மற்றும் சூடான வார்த்தைகள், பும்ராவின் 3வது ஸ்பெலில் பந்துவீச்சு ஆகியவை முதல் நாள் ஆட்டத்தைப் பரபரப்பாக வைத்திருந்தது.

காணொளிக் குறிப்பு, விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸிடம் செய்த செயல் - ஐசிசி அளித்த தண்டனை என்ன?

பும்ராவை மிரளவிட்ட இளம் கான்ஸ்டாஸ்

ஆஸ்திரேலிய அணியில் 19 வயதான இளம் பேட்டர் சாம் கான்ஸ்டாஸ் இன்று அறிமுக வீரராக ஆட்டத்தைத் தொடங்கினார். கான்ஸ்டாஸ் களமிறங்கியபோது, மெல்போர்ன் அரங்கில் அமர்ந்திருந்த 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

பும்ரா பந்துவீச்சில், இரண்டாவது ஓவர் வரை பொறுமையாக பேட் செய்த கான்ஸ்டாஸ், திடீரென ராம்ப் ஷாட்டுக்கு முயன்றார்.

ஆனால், அந்த ஷாட்டை கான்ஸ்டாஸால் அடிக்க முடியவில்லை. அது மட்டுமல்ல பும்ராவை சீண்டும் வகையில் அவரின் பந்துவீச்சில் ஸ்கூப் ஷாட், ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்களையும் கான்ஸ்டாஸ் ஆட முயன்றார்.

பும்ரா

பட மூலாதாரம், Getty Images

தனது முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்த கான்ஸ்டாஸ், ஒரு கட்டத்தில் பும்ரா பந்துவீச்சில் பவுண்டரி, சிக்ஸர் எனப் பறக்கவிட்டார். 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் அரங்கில் பும்ரா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்த முதல் பேட்டராக கான்ஸ்டாஸ் உருவெடுத்துள்ளார்.

அதுமட்டுமின்றி பும்ராவின் பந்துவீச்சில் ராம்ப் ஷாட்டிலும் ஒரு சிக்ஸரை கான்ஸ்டாஸ் விளாசினார். பும்ரா வீசிய 7வது ஓவரில் இரு பவுண்டரிகள், சிக்ஸர் என 14 ரன்களையும், பும்ரா வீசிய 11வது ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 18 ரன்களையும் கான்ஸ்டாஸ் எடுத்தார்.

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2021ஆம் ஆண்டுக்குப்பின் பும்ரா வீசிய 747 ஓவர்களில் சிக்ஸர் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை கான்ஸ்டாஸ் பெற்றார். பும்ராவின் இரு ஓவர்களில் மட்டும் கான்ஸ்டாஸ் 32 ரன்களை விளாசி, 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரவீந்திர ஜடேஜாவின் சுழற்பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கிய கான்ஸ்டாஸ் விக்கெட்டை இழந்தார். முதல் விக்கெட்டுக்கு கவாஜாவுடன் சேர்ந்து கான்ஸ்டாஸ் 89 ரன்கள் சேர்த்துப் பிரிந்தார்.

ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் ஓய்வுக்குப் பிறகு சரியான தொடக்க ஆட்டக்காரரை ஆஸ்திரேலிய அணி தேடிவந்த நிலையில் இந்த ஆட்டத்தில் கான்ஸ்டாஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கோலிக்கு அபராதம்

சாம் கோன்டாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாம் கோன்டாஸ்

ஆஸ்திரேலிய இளம் பேட்டர் சாம் கான்ஸ்டாஸுக்கும், விராட் கோலிக்கும் முதல் செஷனிலேயே முட்டிக் கொண்டது. 10வது ஓவர் முடிந்த பின், சாம் கான்ஸ்டாஸ் தனது கையுறையை சரி செய்து நடந்து வந்தார். அப்போது அவருக்கு எதிர்த் திசையில் இருந்து வந்த விராட் கோலி, கான்ஸ்டாஸ் தோள்பட்டையின் மீது இடித்துச் சென்றார்.

அப்போது சாம் கான்ஸ்டாஸ், கோலியிடம் ஏதோ கேட்கவே கோலியும் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த சக ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, நடுவர் ஆகியோர் கோலியை சமாதானம் செய்தனர்.

இந்தச் சம்பவத்தை நேரலை வர்ணனையில் இருந்து பார்த்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், "கோலியின் செயல்பாடு வேண்டுமென்றே செய்ததைப் போல் இருந்தது. கான்ஸ்டாஸ் மீது கோலி திட்டமிட்டே மோதினார்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தச் சம்பவம் ஐசிசி தரப்பில் கவனிக்கப்பட்டது. ஐசிசி விதிகளை கோலி மீறியிருப்பதால் போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் முன்பாக ஆஜராகி கோலி விளக்கம் அளித்தார்.

அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே கோலி இடித்ததால் அவருக்கு எதிராக அபராதம் மற்றும் அபராதப் புள்ளி மட்டும் விதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் கோலிக்கு போட்டித் தொகையில் இருந்து 20 சதவீதத்தை ஐசிசி அபராதமாக விதித்தது. அதோடு, ஓர் அபராதப் புள்ளியும் அளித்தது. ஆனால், போட்டியில் விளையாடத் தடை ஏதும் விதிக்கவில்லை.

மிரட்டிய பும்ராவின் பந்துவீச்சு

பாக்ஸிங் டே டெஸ்ட்: பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா?

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய முதல்நாள் ஆட்டத்தில் பும்ராவின் பந்துவீச்சு மட்டும்தான் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு தொந்தரவாக இருந்தது.

இந்திய அணி தரப்பில் 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். அதில் பும்ராவின் பந்துவீச்சு கடைசி ஸ்பெல்லில் மட்டும்தான் நெருக்கடியாக அமைந்தது. முதல் நாளில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் பும்ரா 24 விக்கெட்டுகளை சாய்த்து ஒரு டெஸ்ட் தொடரில் தன்னுடைய அதிகபட்ச விக்கெட்டுகளை பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் வலுவாக அடித்தளமிட்டது. 237 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் வலுவாக இருந்தது. ஆனால், 3வது செஷனில் பும்ராவின் பந்துவீச்சில் 9 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி வேகமாக இழந்தது.

அஸ்வின் ஓய்வுக்குப் பிறகு அவருக்குப் பதிலாக வந்த வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஜடேஜா, ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே விளையாட முடியாத அளவில் நெருக்கடியான ஸ்விங் பந்தை வீசி ஆகாஷ் தீப் விக்கெட் எடுத்தார்.

இரு ஆண்டுகளுக்குப் பின் டாப் ஆர்டரில் 4 அரைசதம்

ஸ்மித்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் 4 பேரும் இன்றைய முதல்நாளில் அரைசதம் அடித்தனர். 2022ஆம் ஆண்டு, ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாப் ஆர்டரில் உள்ள 4 பேட்டர்களும் அரைசதம் அடித்திருந்தனர். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அதேபோன்று டாப் ஆர்டர் பேட்டர்கள் அரைசதம் அடித்துள்ளனர்.

அறிமுக வீரர் கான்ஸ்டாஸ்(60), உஸ்மான் கவாஜா(57), லாபுஷேன்(72), ஸ்மித்(68 நாட்அவுட்) ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி இன்றைய முதல்நாளில் பெரிய ஸ்கோரை எடுக்க கடைசி நேரத்தில் ஸ்மித் களத்தில் நங்கூரமிட்டு பேட் செய்தது முக்கியமான காரணம். கடந்த 3 டெஸ்ட்களிலும் இந்திய அணிக்கு தலைவலியாக இருந்த டிராவிஸ் ஹெட் பும்ரா பந்துவீச்சில் டக்-அவுட்டில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ஆட்டத்தில் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்மித்தின் பொறுப்பான, நிதானமான ஆட்டம்தான் ஆஸ்திரேலிய அணியை முன்னெடுத்துச் சென்றது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜடேஜா, சுந்தர் இருவரின் பந்துவீச்சையும் அனாசயமாக எதிர்கொண்ட ஸ்மித், 71 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மெல்போர்ன் மைதானத்துக்கும், ஸ்மித்துக்கும் இடையிலான காதல் தொடர்ந்து வருகிறது. இந்த மைதானத்தில்11 போட்டிகளில் ஆடிய ஸ்மித் 4 சதங்கள், 5 அரைசதங்கள் உள்பட 1093 ரன்கள் விளாசியுள்ளார். இன்று அவர் தனது 6வது அரைசதத்தை எட்டினார்.

லாபுஷேன் கடந்த 3 டெஸ்ட்களிலும் தடுமாறி, ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்த நிலையில் இன்று இரண்டாவது அரைசதத்தை அடித்தார். கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க முடியாமல் தடுமாறி வந்த லாபுஷேன் இன்று சதத்தை நோக்கி முன்னேறினார். ஆனால், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் லாபுஷேன், கோலியிடம் கேட்ச் கொடுத்து 72 ரன்களில் வெளியேறினார்.

ஆட்டம் எப்படிச் செல்லும்

ஆஸ்திரேலிய அணி

பட மூலாதாரம், Getty Images

தற்போது, களத்தில் ஸ்மித், கம்மினஸ் உள்ளனர். அடுத்ததாக ஸ்டார்க், நாதன் லேயன், போலந்த் என டெய்லெண்டர் பேட்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

இதில் ஸ்மித் விக்கெட்டை நாளை முதல் செஷனில் இந்திய அணி வீழ்த்திவிட்டால், 350 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணியை சுருட்டிவிடலாம்.

ஒருவேளை ஸ்மித் நங்கூரமிட்டால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை எட்டலாம். மெல்போர்ன் ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் என்பது எதிரணிக்கு சவாலான ஸ்கோராக இருக்கும்.

இன்றைய முதல்நாளில் முதல் இரு செஷன்களிலும் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியிருந்தது. இரண்டாவது புதிய பந்து மாற்றப்பட்டு மூன்றாவது செஷனில் பந்துவீசிய பிறகுதான் இந்திய அணி ஆதிக்கம் செய்தது. மூன்றாவது செஷனில் ஆஸ்திரேலிய அணி 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)