டி.வி., ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவது எப்படி? ஆன்லைனா, கடையா எது சிறந்தது?
பண்டிகை நாட்களில் வீட்டுக்கு புதிய பொருளை வாங்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. தொலைபேசி, டிவி, கார் என்று அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆடி மாதம், பண்டிகை நாட்கள் வந்துவிட்டால், தள்ளுபடி விலையில் உபயோகப் பொருட்கள், செல்போன் போன்ற பொருட்கள் ஆன்லைன் தளங்களிலும் கடைகளில் கிடைக்கும் என்பதால் மக்கள் அவற்றை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தீபாவளி காலங்களில் போனஸ் போன்றவையும் கிடைக்கும் என்பதால் தீபாவளியை ஒட்டிய பண்டிகை நாட்களில் இவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தீபாவளிக்கு சில நாட்களே உள்ள நிலையில், இவற்றின் விற்பனையும் `சூடு` பிடித்துள்ளது.
இந்த பண்டிகை காலத்தில் இந்தியாவில் மொத்த விற்பனை மதிப்பு 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று ஆலோசனை நிறுவனமான ரெட்சீர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அக்டோபர் 15ஆம் தேதி முடிந்த பண்டிகை கால விற்பனையின் முதல் வாரத்தில் மட்டும் ஆன்லைன் நிறுவனங்களின் மொத்த விற்பனை மதிப்பு 47,000 கோடி ரூபாய் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
பிராண்டட் நிறுவனத்தின் ஒரு பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக அதே பொருளை குறைந்த விலையில் வாங்கலாமா? ஆன்லைனில் வாங்குவது லாபமா, கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவது லாபமா என்று பல்வேறு சந்தேகங்களும் எழாமல் இல்லை. இத்தகைய சூழலில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கும் முன் எவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது என்னென்ன கவனிக்க வேண்டும்?
எளிதானது, நேரம் மிச்சமாகும், அலைச்சல் மிச்சமாகும், உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே நினைத்த பொருட்களை வாங்கலாம். மேலும், நேரில் கடைக்கு சென்று ஒருபொருளை பார்த்துவிட்டு வாங்காமல் வருவது தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தும். ஆன்லைனில் இந்த பிரச்னை இல்லை போன்ற காரணங்களுக்காக ஆன்லைனில் பொருட்களை வாங்குவதை பலரும் விரும்புகின்றனர் என்கிறார் நிதி, சேமிப்பு ஆலோசகரும் ஒன்க்ரூ நிறுவனத்தின் சி.பி.ஓ.வுமான சதீஷ் குமார்.
“ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது முடிந்தவரை அதனின் விலையை இரண்டு, மூன்று ஆன்லைன் தளங்களுக்கு சென்று ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் கடைகளுக்கும் கூட சென்று அதன் விலையை சரிபார்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் ஆன்லைன் நிறுவனங்களை விட கடைகளில் அதிக தள்ளுபடியுடன் பொருட்கள் கிடைக்கின்றன” என்று அவர் கூறுகிறார்.
“ஒருவேளை கடைகளில் பொருட்களை வாங்க திட்டமிட்டால், பேரம் பேசுவது பலன் தரும். வீட்டில் உள்ள பழைய பொருட்களை கொடுத்துவிட்டு புதிய பொருட்களை வாங்குவதன் மூலமும் கணிசமான அளவு செலவை குறைக்க முடியும் ” என்று சதீஷ் குமார் குறிப்பிட்டார்.
ஆன்லைனில் விலை குறைவாக இருக்கிறது என்று ஏதோவொரு பொருளை வாங்காமல் அதற்கு வாடிக்கையாளர்கள் கொடுத்துள்ள ரேட்டிங், அவற்றை பற்றிய பின்னோட்டம் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
மலிவு விலை Vs விலை அதிகமான தரமான பொருள் - எதை வாங்குவது?
ஒருசிலர் தரமான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதை விட மலிவு விலை பொருட்களை வாங்குவதை விரும்புகின்றனர்.
இது தொடர்பாக சதீஷ் குமார் பேசும்போது,“ மலிவான தயாரிப்புகள் விலை குறைந்தவை என்பதால் பலரும் அதனை வாங்குகின்றனர். குறைந்த செலவில் அதிக வசதியை அவை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக ஒரு பிராண்டட் 40 இன்ச் டீவியை வாங்க வேண்டுமென்றால் ரூ.30 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்ய வேண்டும். ஆனால், அதே டீவியை தெரியாத எதோவொரு நிறுவனம் ரூ.12 ஆயிரம், ரூ.13 ஆயிரத்துக்கு விற்பனை செய்யும்போது அதனை வாங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், விலை குறைந்தவை என்பதால் ஒருமுறை அதனை பயன்படுத்தி பார்க்கலாம் என்றும் நுகர்வோர் அதன் மீது ஈடுபாடு காட்டுகின்றனர் ” என்றார்.
பொருட்களை நீண்ட காலம் பயன்படுத்துபவர்கள் விலை அதிகம் என்றாலும் பிராண்டட் பொருட்களை வாங்குவதே சிறந்து என்று அவர் கூறுகிறார். “ மலிவு விலை பொருட்கள் ஒப்பீட்டளவில் பிராண்டட் பொருட்களைப் போல் செயல்பட்டாலும் நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் திறன் குறைந்துவிடும். அவற்றை அடிக்கடி பழுதுபார்க்க வேண்டும் அல்லது வேறு புதிய பொருளை வாங்க வேண்டி வரும். இதற்கு செலவு ஆகும். அதற்கு ஒரே முறை செலவு செய்து தரமான பொருளாக வாங்கலாம்”
கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதிலும் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக சதீஷ் கூறுகிறார். “பொருட்களை தொட்டு பார்த்து வாங்குவதை பலரும் விரும்புகின்றனர். ஆன்லைனில் பைக் போன்றவற்றை வாங்க முடியும் என்றாலும் நேரில் சென்று மக்கள் வாங்குவதற்கு காரணம் இதுதான்” என்கிறார் சதீஷ் குமார்.
தொடர்ந்து பேசிய அவர், “உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம் என்றாலும் அந்த பொருட்கள் உங்களை வந்தடைவதற்கு சில நேரங்களில் 4, 5 நாட்கள் வரை ஆகும். அதுவே, கடைகளுக்கு சென்று வாங்கும்போது அன்றைய நாளே அவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல், வீட்டு உபயோகப் பொருட்களின் பிரச்னை ஏற்பட்டுவிட்டால் ஆன்லைன் நிறுவனத்தையோ, குறிப்பிட்ட பொருளை தயாரித்த நிறுவனத்தையோ தொலைபேசியில் தொடர்புகொள்வதை ஒருசிலர் கடினமாக கருதுகின்றனர். கடையில் பொருட்களை வாங்கும்போது எதாவது பிரச்னை என்றால் கடைக்கே நேரில் சென்று அவற்றை சரி செய்துகொள்ள முடியும் என்று நினைக்கின்றனர்” என்றார்.
“ஸ்டார் முக்கியம்”
ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றில் 2 ஸ்டார், 5 ஸ்டார் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு இதனை கருத்தில்கொள்வது மிகவும் அவசியம் என்று கூறுகிறார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மின்னணு மற்றும் கருவியல்துறை, பொறியியல் புலத் துறையின் பேராசிரியரான முனைவர் ஜி.சக்திவேல்.
“இந்திய அரசின் ஆற்றல் திறன் பணியகம் (BEE) மூலம் இந்த ரேட்டிங் நிர்வகிக்கப்படுகின்றன. 2 ஸ்டார் உள்ள ஒரு பொருளை வாங்கும்போது விலை குறைவாகவே இருக்கும். அதேபொருளை 5 ஸ்டார் ரேட்டிங்கில் வாங்கும்போது கூடுதல் விலை கொடுக்க வேண்டிருக்கும். எனினும், அதிக ஸ்டார் உள்ள பொருட்களை வாங்கும்போது அந்த பொருட்கள் மிக குறைந்த அளவே ஆற்றலை நுகரும். இதனால், மின்சார பயன்பாட்டை குறைக்க முடியும். நீண்ட காலத்திற்கும் அவற்றை பயன்படுத்தலாம்” என்றார்.
எதிர்காலத்தில் மின் குப்பைகள் பெரிய பிரச்னையாக இருக்கும். அப்படியிருக்கும்போது, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை வாங்குவது தனிநபர் மட்டுமின்றி சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சக்திவேல் கூறுகிறார்.
பொருளின் அளவு முக்கியம்
வீட்டு உபயோகப் பொருட்களின் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் அவற்றின் அளவு. இது தொடர்பாக சக்திவேல் பேசும்போது, “ஒருசிலர் தங்கள் வீட்டின் ஹாலில் பெரிய டிவியாக வாங்கி வைத்திருப்பார்கள். அந்த அறை சிறியதாக இருக்கும் அதற்கு சிறிய டீவியே போதுமானதாக இருக்கும், பெரிய டீவியை வாங்குவதன் மூலம் வீணாக இடத்தை அடைத்திருப்பார்கள்.
அதேபோல் தேவையின்றி பெரிய அளவில் ஃபிரிட்ஜ் போன்றவை வாங்கியிருப்பார்கள். இதுவும் இடத்தை அடைக்கும். எனவே, வீட்டின் அளவுக்கு ஏற்ப பொருட்களின் அளவுகளை முடிவு செய்துகொள்ள வேண்டும்” என்றார்.
தேவைக்கு ஏற்ற பொருளை வாங்க வேண்டும்
“ஒருசிலர் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய (advanced) பொருட்களை வாங்குவார்கள். ஆனால், அந்த வசதிகளையெல்லாம் பயன்படுத்தாமலே இருப்பார்கள். இவற்றை வாங்குவதற்கு அதிக செலவும் செய்திருப்பார்கள் எனவே, இத்தகைய பொருட்களை வாங்குவதற்கு பதிலாக நம் தேவைக்கு ஏற்ற பொருட்களை வாங்குவதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்” என்கிறார் சக்திவேல்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)