உலகக்கோப்பை: திரிசங்கு நிலையில் பாகிஸ்தான் - வங்கதேசத்தை வீழ்த்தியும் வருந்துவது ஏன்?
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. இதன் மூலம் 4 தோல்விகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
பாகிஸ்தானுக்கு இந்த ஆட்டத்தில் கிடைத்துள்ள வெற்றி, அதன் அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அதேசமயம், நாக்அவுட் சுற்று வாய்ப்புக் கதவு மூடப்பட்ட நிலையில் வங்கதேசம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.
வலுவான பேட்டிங், நெருக்கடியான பந்துவீச்சு ஆகியவற்றை வெளிப்படுத்தி வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியபோதும், பாகிஸ்தானின் மனக்குறை தீரவில்லை.
வெற்றி கட்டாயம்
டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேச அணியில் மெஹதி ஹசனுக்குப் பதிலாக, தவ்ஹித் ஹிர்தாய் சேர்க்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன, அதில், இமாம் உல் ஹக்கிற்குப் பதிலாக பக்கர் ஜமான் அழைக்கப்பட்டிருந்தார், முகமது நவாஸுக்குப் பதிலாக அகா சல்மானும், சதாப் கானுக்குப் பதிலாக உசாமா மிர்ரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஆரம்பமே அதிர்ச்சி
வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ், தான்சித் ஹசன் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஷாகின் அப்ரிடி தனது முதல் ஓவரின் 5-வது பந்தில் ஹசனை கால்காப்பில் வாங்கவைத்து வெளியேற்றினார். அடுத்துவந்த ஷான்டோவும் 4ரன்கள் சேர்த்த நிலையில், அப்ரிடி வீசிய 4-வது ஓவரில் ஸ்குயர் லெக் திசையில் இருந்த உசாமா மிர்ரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஹாரிஸ் ராஃப் வீசிய 6-வது ஓவரில் முஸ்பிகுர் ரஹிம் 5 ரன்னில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
மெஹமத்துல்லா, லிட்டன் தாஸ் கூட்டணி விக்கெட் சரியாமல் தடுத்து நிதானமாக பேட் செய்தனர். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே வங்கதேசம் சேர்த்தது.
மந்தமான ரன் சேர்ப்பு
10 ஓவர்கள் முதல் 20 ஓவர்கள் வரை லிட்டன் தாஸ், மெஹமத்துல்லா பவுண்டரிகள் அடித்தும், சிக்ஸர்கள் விளாசியும் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் வங்கேதச அணி 100 ரன்களை எட்டியது. அரைசதத்தை நெருங்கிய லிட்டன் தாஸ் 45 ரன்னில், இப்திகார் அகமது வீசிய 21-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்துவெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த தவ்ஹித் ஹிர்தாய், மெஹமத்துல்லாவுடன் சேர்ந்தார். 58 பந்துகளில் அரைசதம் அடித்த மெஹமத்துல்லா நீண்டநேரம் நிலைக்கவில்லை.
20 ஓவர்கள் முதல் 30வது ஓவர்கள் வரை நடுப்பகுதியில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் வங்கதேச பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததால், ரன் சேர்க்க திணறினர். இதனால் இந்த 10 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே வங்கதேசம் சேர்த்தது.
மெஹமத்துல்லா 56 ரன்கள் சேர்த்தநிலையில், அப்ரிடி வீசிய 30வது ஓவரில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்த ஓவரில் ஹிர்தாய் 7 ரன்னில் உசாமா மிர் பந்துவீச்சில் இப்திகார் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார்.
நம்பிக்கையளித்த ஜோடி
7-வது விக்கெட்டுக்கு மெஹதி ஹசன், சஹிபுல் ஹசன் இருவரும் ஓரளவு நிலைத்து நின்று ரன்களைச் சேர்த்தனர். அனுபவ வீரர் சஹிபுல் ஹசன் 43 ரன்கள் சேர்த்தபோது, ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் வங்கதேச சரிவு தொடங்கியது. 185 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்த வங்கதேசம் அடுத்த 19 ரன்களில் மீதமிருந்த 3 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. மெஹதி ஹசன் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். டெய்லென்டர்கள் தஸ்கின் அகமது(6), முஸ்தபிசுர்(3) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 45.1 ஓவர்களில் வங்கதேச அணி 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
74 ரன்களுக்கு 7 விக்கெட்
வங்கதேச அணியைப் பொறுத்தவரை 130 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து ஓரளவுக்கு ஆடி வந்தது. ஆனால், அடுத்த 74 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்கதேச அணி பவர்ப்ளே ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றியதால், சுமை முழுவதும் நடுவரிசை பேட்டர்கள் மீது விழுந்ததால், ஸ்கோரை கட்டி எழுப்புவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.
அதிலும் 10 முதல் 20 ஓவர்கள் வரை வேகமாக ரன்கள் சேர்க்கப்பட்டால், அந்த வேகம் அடுத்தடுத்த ஓவர்களுக்கு தொடராவதால் ரன்ரேட் மந்தமாகியது.
அப்ரிடி அதிவேக 100 விக்கெட்
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்பிரிடி முதல் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஒருநாள் போட்டியில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, முகமது வாசிம் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனர், ஹாரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
4 பேர் மட்டுமே இரட்டை இலக்கம்
நடுவரிசையில் சஹிப்புல் ஹசன், மெஹமத்துல்லா, மட்டும் தாக்குப்பிடித்து விளையாடாமல் இருந்தால், வங்கதேசம் ஸ்கோர் 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். வங்கதேச அணியில் லிட்டன் தாஸ்(45), மெஹமத்துல்லா(56), சஹிப்புல் ஹசன்(43) ,மிராஜ்(25) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர், மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து, வங்கதேசத்தில் புதைகுழியில் தள்ளினர்.
இவுங்க மட்டும்தான் இதைச் செய்யல..!
இந்த உலகக் கோப்பைத் தொடரில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காத ஒரே அணி வங்கதேசம்தான். ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகூட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துவிட்டனர். இந்த போட்டியி்ல் வங்கதேச அணி மட்டும் 24 ஓவர்களில் டாட் பந்துகளை விட்டுள்ளது. அதாவது 148 பந்துகளில் ரன் ஏதும் சேர்க்கவில்லை.
பாடம் எடுத்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணி நேற்றைய ஆட்டத்தில் ஒருநாள் போட்டி எப்படி விளையாட வேண்டும் என்று பாடம் நடத்துவதுபோல் விளையாடி அசத்தினர். ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஒரு ரன், 2 ரன்கள் சேர்த்து, மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரி அடித்து, ஒருநாள் ஆட்டத்தை விளையாடுவதற்கான இலக்கணப்படி ஆடினர். ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு முன்பே சர்வதேச அறிமுகத்தைப் பெற்ற வங்கதேசத்தின் ஆட்டம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
உலகக் கோப்பைத் தொடரில் பவர்ப்ளே ஓவர்களில் குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை எப்படியாவது வங்கதேசம் இழந்துவிடுகிறது. இவையெல்லாம் வங்கதேச அணியின் செயல்பாட்டை மேலும் மோசமாக்குகிறது.
வலுவான தொடக்கம்
205 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பக்கர் ஜமான், அப்துல்லா ஷபீக் இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். வங்கதேச பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி 3 ஓவர்கள்வரை நெருக்கடி அளித்தனர். அதன்பின் பக்கர் ஜமான், ஷபீர் இருவரும் வழக்கமான ஆட்டத்தைக் கையாண்டு பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து ரன்களைச் சேர்த்தனர்.
பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி, 52 ரன்கள் சேர்த்து வலுவாக இருந்தது. முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 13-வது ஓவரில் அப்துல்லா ஷபீக் 3 பவுண்டரிகள் என 12 ரன்கள் சேர்த்தார்.
அரைசதம் அடித்த ஜோடி
18-வது ஓவர்கள் முடிவில் பக்கர் ஜமான், ஷபீக் இருவரும் அரைசதம் அடித்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். 20ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் சேர்த்திருந்தது. ஓவருக்கு சராசரியாக 6 ரன்ரேட்டில் பாகிஸ்தான் பயணித்தது.
மெஹதி ஹசன் வீசிய 21-வது ஓவரில் அப்துல்லா ஷகீப் கால்காப்பில் வாங்கி 68 ரன்னில் பெவிலியன் திரும்பினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 128 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த கேப்டன் பாபர் ஆசம், பக்கர் ஜமானுடன் சேர்ந்தார். பாபர் ஆசம் நிதானமாக பேட் செய்த பக்கர் ஜமான் அதிரடியாக ஆடி சிக்ஸர், பவுண்டரிகளை விளாசினார்.
வலுசேர்த்த பக்கர் ஜமான் வருகை
மெஹதி ஹசன் வீசிய 25-வது ஓவரில், பாபர் ஆசம் 9 ரன்னில் மெஹமுதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதத்தை நோக்கி நகர்ந்த பக்கர் ஜமான் 81 ரன்களில்(74 பந்துகள்,7சிக்ஸர், 3பவுண்டரி) மெஹதி ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். காயத்திலிருந்து மீண்டுவந்த பக்கர் ஜமான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபார்முக்கு வந்திருப்பது அந்த அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
ரிஸ்வான், இப்திகார் அகமது ஜோடி அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். முஸ்தபிசுர் வீசிய 29-து ஓவரில் ரிஸ்வான் 3 பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார். 30ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் சேர்த்தது.
4வது முறையாக 100 பந்துகள் எஞ்சியிருக்கும் நிலையில் வெற்றி
பாகிஸ்தான் அணி 31.2 ஓவர்களில் 200 ரன்களை எட்டி, பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெற்றது. ரிஸ்வான் 26 ரன்களிலும், இப்திகார் 17 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 32.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் 4வது முறையாக 100 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றியைச் சுவைத்துள்ளது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டு பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
திரிசங்கு நிலையில் பாகிஸ்தான்
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் பாகிஸ்தான் அணியின் நிகர ரன்ரேட் இன்னும் மைனசில்தான்(-0.024) இருக்கிறது.
அடுத்துவரும் இரு போட்டிகளையும் அதிக ரன்கள், அல்லது விக்கெட் வித்தியாசத்தில் வென்றால்தான் பாகிஸ்தான் ரன்ரேட் உயரும், நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான கடைசி இடத்தையாவது பிடிக்க முடியும். இப்போதுள்ள சூழலில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பு திரிசங்கு நிலையில்தான் இருக்கிறது.
நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தில் கிடைக்கும் முடிவின் மூலம் பல ஊகங்களுக்கு பதில் கிடைக்கும். நாக்அவுட் சுற்றில் எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம் என்ற ப்ளூபிரின்ட் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இந்த ஆட்டத்தில் கிடைக்கும் முடிவும் ஒரு வகையில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பையும் முடிவு செய்யும் என்பதால், அந்த அணி பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறது.
பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்ல என்ன நடக்க வேண்டும்ய
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, நியூசிலாந்து தோல்வியை சந்திக்க வேண்டும்.
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் நல்ல வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.
அடுத்ததாக, ஆப்கானிஸ்தான் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது மேற்பட்ட போட்டிகளில் தோற்க வேண்டும்.
ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து இரண்டு போட்டிகளில் தோற்க வேண்டும். இலங்கை அணி ஒரு போட்டியிலாவது வெற்றிபெற வேண்டும்.
அதேநேரம், வங்கதேச அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 6 தோல்விகளை அடைந்தும் இன்னும் 9-வது இடத்தில்தான் இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து அணி 6 போட்டிகளில் 5 தோல்விகள் அடைந்தும், கடைசி இடத்துக்கு சரிந்துவிட்டது. வங்கதேச அணியின் நாக்அவுட் சுற்றுக் கனவு முடிவுக்கு வந்துவிட்டது இனிமேல் மீதமுள்ள 2 ஆட்டங்களும் ஒரு முறைக்காக மட்டுமே விளையாடும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)