உள்ளடக்கத்துக்குச் செல்

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம்
Mysore Sand Sculpture Museum
அருங்காட்சியகத்தில் இந்து மதக் கடவுள் சாமுண்டீசுவரியின் மணற்சிற்பம்.
நிறுவப்பட்டது2014
அமைவிடம்சாமுண்டி மலைகள் சாலை, மைசூர், இந்தியா
வகைமணற்சிற்பம்
நிறுவியவர்எம்.என்.கௌரி

மைசூர் மணல் சிற்ப அருங்காட்சியகம் (Mysore Sand Sculpture Museum) இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் அமைந்துள்ள முதல் மணல் சிற்ப அருங்காட்சியகமாகும்.[1][2] சாமுண்டி மலைகளின் அடிவாரத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 150 மணல் சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. சிற்பங்கள் ஒவ்வொன்றும் மணல் கலைஞர் எம்.என். கௌரி அவர்களால் உருவாக்கப்பட்டவையாகும். மைசூரின் கலாச்சார பாரம்பரியம், வனவிலங்கு மற்றும் மதம் போன்ற கருப்பொருள்களை அடிப்படையாக வைத்து இச்சிற்பங்களை அவர் உருவாக்கியிருந்தார்.

வரலாறு

[தொகு]

தனது இயந்திரப் பொறியியல் படிப்பின் இரண்டாம் ஆண்டில் அப்படிப்பைத் தொடராமல் வெளியேறிய பிறகு, எம்.என். கௌரி கணினி இயங்கு படத்துறையில் பயிற்சி பெற்றார், இப்பயிற்சியின் போது அவர் 3 டி மேக்சு என்ற மென்பொருளைப் பயன்படுத்தி முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கினார். கணினியில் உருவாக்கப்பட்ட சிற்பங்களுக்கு "உயிரோட்ட உணர்வு" இல்லாததால், அவர் 2011 ஆம் ஆண்டு முதல் முறையாக மணல் சிற்பத்தை முயற்சித்தார். அவரது பணிக்கு பாராட்டு கிடைத்ததும், 20 இலட்சம் ரூபாய் கடன் பெற்று சாமுண்டி மலையின் அடிவாரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மணல் சிற்ப அருங்காட்சியகத்தை தொடங்க முடிவு செய்தார். [3][1]

அருங்காட்சியகம் 2014 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது, 150 சிற்பங்களை உருவாக்க 115 முழு பாரவண்டி கட்டுமான மணல் பயன்படுத்தப்பட்டது.[4] சிற்பங்கள் 16 வெவ்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கியவையாகும். பெரும்பாலும் மைசூரின் கலாச்சார பாரம்பரியம், வனவிலங்கு மற்றும் மும்மதம் தொடர்பான கருப்பொருள்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட சிற்பங்களில் விநாயகர், மைசூர் தசரா, கிறித்துமசு தாத்தா, கிறித்துமசு மரம், இராசி சக்கரம், இசுலாமிய கலாச்சாரம், டிசுனிலேண்டு, கடல் வாழ்க்கை, சிரிக்கும் புத்தர், சாமுண்டீசுவரி, பகவத் கீதை உபதேசம் மற்றும் காவிரி நதி ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். [4][1][5][6]

2017 ஆம் ஆண்டு அருங்காட்சியகத்தில் முப்பரிமாண தாமி புகைப்படக் காட்சிக்கூடம் அறிமுகப்படுத்தப்பட்டது. [2]

பராமரிப்பு

[தொகு]

இந்த சிற்பங்கள் அருங்காட்சியகத்தின் உலோக உறைக்குள் பாதுகாக்கப்படுகின்றன. சூரிய ஒளியைக் கடந்து செல்ல அனுமதிக்கும் மேல்நிலை நீர்ப்புகா தாள்கள் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சேதங்கள் ஏற்பட்டால் சிற்பங்கள் ஒவ்வொரு வாரமும் துடைக்கப்பட்டு மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன. பாதுகாப்பிற்காகப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினாலும் சிற்பங்களை பூச்சிகள் மற்றும் கொறித்துண்ணிகளிடமிருந்து பாதுகாப்பது "மிகப்பெரிய சவால்" என்று இச்சிற்பங்களை உருவாக்கிய கௌரி கூறுகிறார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Mendonsa, Kevin (5 April 2014). "Sand sculpture museum, another tourist attraction". Deccan Herald. https://www.deccanherald.com/content/397022/sand-sculpture-museum-another-tourist.html. பார்த்த நாள்: 23 January 2020. 
  2. 2.0 2.1 Kumar, R. Krishna (26 April 2017). "3D art now at Sand Sculpture Museum". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/3d-art-now-at-sand-sculpture-museum/article18229121.ece. பார்த்த நாள்: 23 January 2020. 
  3. 3.0 3.1 K., Rathna (28 July 2019). "Grain by grain, amazing sand creations". The New Indian Express. https://www.newindianexpress.com/states/karnataka/2019/jul/28/grain-by-grain-amazing-sand-creations-2010569.html. பார்த்த நாள்: 23 January 2020. 
  4. 4.0 4.1 Bennur, Shankar (30 April 2014). "Getting creative using sand and water". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/getting-creative-using-sand-and-water/article5960480.ece. பார்த்த நாள்: 23 January 2020. 
  5. Bennur, Shankar (15 September 2016). "Spreading the message of peace through sand art". The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/Spreading-the-message-of-peace-through-sand-art/article14638792.ece. பார்த்த நாள்: 23 January 2020. 
  6. "ಗಮನ ಸೆಳೆಯುತ್ತಿದೆ ಮೈಸೂರಿನ ಮರಳು ಶಿಲ್ಪಗಳ ಮ್ಯೂಸಿಯಂ" (in kn). Prajavani. 10 October 2019. https://www.prajavani.net/pravasa/sand-museum-mysore-672386.html. பார்த்த நாள்: 23 January 2020.