மனிதக் கூர்ப்பு
மாந்தரினப் படிமலர்ச்சி அல்லது மனிதக் கூர்ப்பு (ஆங்கிலம்:Human Evolution) எல்லா உயிரினங்களதும் பொது மூதாதையான ஓர் உயிரினத்தினின்றே தொடங்கும் என்றாலும், பொதுவாக இது உயர்விலங்கினங்களின், குறிப்பாக ஓமோ (Homo) பேரினத்தின் படிமலர்ச்சி வரலாற்றையே குறிக்கும். குறிப்பாக இது ஒமினிட்டுகளின் (Hominids) ஓர் இனமாக ஓமோ சப்பியென்சுகளின் (Homo Sapiens) தோற்றத்தை உள்ளடக்குகிறது. மனிதக் கூர்ப்பு குறித்த ஆய்வு பல துறைகளின் ஈடுபாட்டை வேண்டி நிற்கிறது. இத்தகைய துறைகளுள் உடற்சார் மானிடவியல், உயர்விலங்கினவியல், தொல்லியல், மொழியியல், கருவியல், மரபியல் என்பன அடங்குகின்றன.[1]
உயர்விலங்கினப் படிமலர்ச்சி, மரபியல் ஆய்வுகளின்படி, பிந்திய கிரத்தேசியசுக் காலத்திலும் அதாவது 85 மிமு (மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும்)விலும், புதைபடிவப் பதிவுகளின்படி பலையோசீன் காலத்துக்குப் பிற்படாமல் 55 மிமு விலும், தொடங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.[2][3][3]ஓமினிடே குடும்பம் 15-20 மில்லியன் ஆண்டுகள் முன்பு ஐலோபட்டிடே குடும்பத்திலிருந்து, பிரிந்துபோனது. 14 மிமு அளவில், பொங்கினே, அல்லது ஒராங்குட்டான்களும் ஓமினிடே குடும்பத்தில் இருந்து விலகிச் சென்றன.[4] பின்னர் 5-6 மிமு அளவில் கொரில்லா, சிம்பஞ்சி என்பன ஓமோ பேரினத்தை நோக்கிப் படிமலர்ந்த கால்வழியில் இருந்து விலகிச் சென்றுவிட்டன. 2.3-2.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில், இறுதிப் பொது மூதாதையான ஓமினினே, ஆசுத்திராலோபித்தசினெசுச் சிறப்பினம் என்பவற்றிலிருந்து நவீன மனித இனம் படிமலர்ந்தது.[5][6]
ஓமினினி கூட்டத்தில் (tribe) ஓமோ பேரினத்தின் பல்வேறு இனங்களும், துணை இனங்களும் தோன்றின. ஆனால் இன்று ஒன்று தவிர ஏனையவை முற்றாக அழிந்துவிட்டன அல்லது பிற இனங்களுடன் கலந்துவிட்டன. ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் வாழ்ந்த நிமிர்நிலை மாந்தன் (ஓமோ எரக்டசு) (Homo erectus), ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் வாழ்ந்த நியாந்திரதால்கள் (ஓமோ நியாந்திரதாலென்சிசு அல்லது ஓமோ சப்பியென்சு நியாந்திரதாலென்சிசு) இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதனின் முன்னோடியான தொடக்கநிலை சாரநிலை மாந்த இனம் (ஓமோ சப்பியென்சு) 400,000 தொடக்கம் 250,000 ஆண்டுகள் முன்னர் வரையிலான காலப் பகுதியில் தோன்றியது. தொடக்க நிலை மனிதர்களுக்கான எடுத்துக்காட்டுகளுள் ஓமோ ஐய்டெல்பெர்கென்சிசு, ஓமோ ரொடெசியென்சிசு, ஓமோ நியாந்திரதாலென்சிசு என்பனவும், சில வேளைகளில் ஓமோ அன்ட்டெசெசர், ஓமோ எர்காசுட்டர் என்பனவும் அடங்கும்.[7] உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தொடக்கநிலை சாரநிலை மாந்தர் (ஓமோ சப்பியென்சு) இனத்தில் இருந்து, நடுப் பழையகற்காலத்தில், ஏறத்தாழ 200,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர்.[8][8] நடத்தை அடிப்படையிலான தற்கால மனிதர் ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றினர் என்பது பலருடைய கருத்து. வேறு சிலர், தற்கால மனித நடத்தைகள், உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதர் தோன்றியபோதே உருவாகிவிட்டதாகக் கருதுகின்றனர்[9]
உடற்கூறு அடிப்படையிலான தற்கால மனிதரின் தோற்றம் குறித்து அறிவியலாளரிடையே நிலவும் கருத்துக்களுள் ஒன்று, நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றம் என்னும் கருதுகோள் ஆகும். இதை "அண்மை ஓரிடத் தோற்றக் கருதுகோள்" என்றும் "அண்மைக்கால ஆப்பிரிக்க வெளியேற்றப் படிமம்" என்றும் அழைப்பது உண்டு.[10][11][12] இக் கருதுகோளின்படி சாரநிலை மாந்தர் (ஓமோ சப்பியென்சு) இனம் ஆப்பிரிக்காவில் தோன்றி சுமார் 50,000 - 100,000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி ஆசியாவில் வாழ்ந்த நிமிர்நிலை மாந்தர் ( ஓமோ இரக்டசு) இனத்தையும், ஐரோப்பாவில் வாழ்ந்த நியாந்திரதால்களையும் பதிலீடு செய்துவிட்டது. இக்கருதுகோளுக்கு மாற்றீடாக பல்லிடத் தோற்றக் கருதுகோள் என்னும் ஒரு கருதுகோளும் உள்ளது. இக்கருதுகோள், நிமிர்நிலை மாந்தர் (ஓமோ இரக்டசு) இனம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிப் பல்வேறு பகுதிகளிலும் இனக்கலப்பு அடைந்ததனால் சாரநிலை மாந்தர்(ஓமோ சப்பியென்சு) இனங்கள் பல்வேறு புவியியல் பகுதிகளிலும் தனித்தனியாகத் தோற்றம் பெற்றனர் என்கிறது. மரபியல் அடிப்படையிலான சில ஆய்வுகளின்படி, ஆப்பிரிக்கரல்லாத மக்களில் நியாந்திரதால்களின் கூறுகள் இருப்பதும், நியாந்திரதால்களும், தெனிசோவா ஓமினின் போன்ற ஓமினிடுகளும் தமது மரபுப்பதிவுகளில் 6% வரையில் தற்கால மனிதருக்கு வழங்கியுள்ளதும் தெரியவருகிறது.[13][14][15]
படிமலர்ச்சிக்கான சான்றுகள்
[தொகு]மனிதக் கூர்ப்புக்கான சான்றுகள் இயற்கை அறிவியலின் பல துறைகளிலும் காணப்படுகின்றன. இச்சான்றுகளில் பெரும்பாலானவை புதைபடிவப் பதிவுகளாகவே காணப்படுகின்றன எனினும் தற்காலத்தில் இவ்விடயத்தில் மரபியலின் பங்களிப்பும் கூடிக்கொண்டு வருகிறது. முதுகெலும்பிகள், முதுகெலும்பிலிகள் ஆகிய இருவகை விலங்குகள் தொடர்பிலும் உயிர்வளர்ச்சி (ontogeny), உயிரினத் தோற்ற வரலாறு (phylogeny), குறிப்பாகக் கூர்ப்பு அடிப்படையிலான வளர்ச்சிசார் உயிரியல் போன்ற துறைகளில் நிகழும் ஆய்வுகள் இன்று எல்லா உயிரினங்களதும் கூர்ப்புக் குறித்த பல விடயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன.
ஒமினிடுகளில், முள்ளந்தண்டு படிப்படியாக நேராகிக்கொண்டு வருவதையும், மூளையின் கனவளவு கூடிக்கொண்டு வருவதையும், முக அம்சங்கள் மாறிவருவதையும், பல்லமைப்பின் மாற்றத்தோடு சேர்ந்து மெல்லுவதற்கான தசைநார்கள் குறைந்து வருவதையும் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன. மேல்நிலை உயர் விலங்கினங்களில் வால், இடுப்பெலும்பில் முக்கோண எலும்பாக மாறிவிட்டது. எல்லா முதுகெலும்பிகளும் தமது உயிர்வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் வாலைக் கொண்டிருக்கின்றன. மனிதரைப் பொறுத்தவரை, மனிதக் கருவளர்ச்சியின் 14 முதல் 22 வரையான 4 வாரக் காலப்பகுதியில் வால் இருப்பதைக் காணலாம்.[16] மனிதரில் இப்போது பயன்பாடற்றுப் போய்விட்ட மூன்றாவது கண்மடல் இருப்பதையும் காணமுடியும். மனிதனுக்குக் கீழ்நிலையில் உள்ள விலங்குகளின் புறக் காதில் தசைநார்கள் உள்ளன. இவை புற ஒலிகளைக் குவிப்பதற்காகக் காதைத் தனியே அசைப்பதற்குப் பயன்படுகின்றன. இத் தசைநார்கள் மனிதனில் வலுவிழந்த நிலையில் உள்ளன.[17].[18]
அங்கால் தசைநார்களும் மனிதக் கூர்ப்புக்குச் சான்றாக விளங்குகின்றன. சில விலங்குகள் பொருட்களைக் காலால் பிடிப்பதற்கும், அவற்றைக் கையாள்வதற்கும் அங்கால் தசைநார்கள் பயன்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனிதக்குரங்கு பற்றிப் பிடிப்பதற்குக் கைகளைப் போலவே கால்களையும் பயன்படுத்த வல்லது. மனிதனிலும் இத் தசைநார்கள் காணப்பட்டாலும், இவை வளர்ச்சியடையாத நிலையில் பயன்படாமல் உள்ளது. இதனால் சில வேளைகளில், உடலின் பிற பாகங்களை மீட்டுருவாக்குவதற்குத் திசுக்கள் தேவைப்படும்போது, மருத்துவர்கள் இந்தத் தசைநார்களை எடுத்துப் பயன்படுத்துகின்றனர். தற்காலத்தில் 9% குழந்தைகள் இந்தத் தசைநார்கள் இல்லாமலே பிறப்பது, மனிதருக்கு இதன் தேவையின்மையைக் காட்டுகிறது.[19] கூர்ப்புக்குச் சான்றாக அமையும் இன்னொன்று சேக்கப்சனின் உறுப்பு ஆகும். விலங்குகளின் உடற்கூற்றின் ஒரு பகுதியாகிய இவ்வுறுப்பு மூக்கறையில் அமைந்துள்ளது. இவ்வுறுப்பு பாலுணர்வுக்கான விருப்பு, எச்சரிக்கை உணர்வு போன்றவற்றைத் தூண்டும் வேதிப்பொருளை உணர உதவுகிறது. இது விலங்குகள் பாலியல் தேவைக்காகப் பிற விலங்குகள் இருக்கும் இடத்தை அறியவும், ஆபத்துக்களை உணர்ந்து கொண்டு எச்சரிக்கை அடையவும், உணவு இருக்கும் இடத்தைக் கண்டுகொள்ளவும் பயன்பட்டது. மனிதர் பிறக்கும்போது இந்த உறுப்புடனேயே பிறக்கிறார்கள். எனினும் வளர்ச்சியில் தொடக்கக் கட்டத்திலேயே இதன் வல்லமை குறைவடைந்து பயனற்ற நிலைக்கு வந்துவிடுகிறது.[20] சிலவேளைகளில், முன்னைய உறுப்புக்களின் எச்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள சில அமைப்புக்கள் முன்னர் இன்னும் அறியப்படாத தேவைகளுக்குப் பயன்பட்டு இருக்கலாம்.[21] ஞானப்பற்களும் கூர்ப்புக்குச் சான்றாக அமைகின்றன. மனிதனின் மூதாதையர்கள் ஏராளமான தாவரப் பொருட்களை உணவாகக் கொண்டனர். கிடைக்கும்போது தேவையான அளவைச் சாப்பிட்டுவிடுவதற்கு இவ்வுணவை இவர்கள் விரைவாகச் சாப்பிடவேண்டும். இதனால், அவர்களது பெரிய வாய்கள் கூடிய திறன் கொண்டவையாக இருப்பதற்கு கூடுதலான அரைக்கும் பற்கள் (கடைவாய்ப் பற்கள், ஞானப் பற்கள்) தேவைப்பட்டன. அத்துடன், மனிதரின் மூதாதைகளின் உடலுக்கு செலுலோசைச் செரிக்கும் தன்மை போதிய அளவு இருக்காததால், உணவை வாயில் கூடுதலாக அரைத்துக் கொள்வதற்கும் இது தேவையாக இருந்தது. கூர்ப்பின் தேர்வு வழி மூலம் மனிதரின் உணவுப் பழக்கம் மாறிவிட்டது. தாடைகள் சிறியன ஆகிவிட்டன. இதனால் மூன்றாவது சோடி அரைக்கும் பல்லும் தேவையற்றது ஆகிவிட்டது.[22]
ஓமோவுக்கு முன்
[தொகு]பெரு மனிதக் குரங்குகளின் கூர்ப்பு
[தொகு]உயர் விலங்கினங்களின் கூர்ப்பு வரலாறு 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்து தொடங்குகிறது,[23] அறிந்தவற்றுள் மிகப் பழைய உயர்விலங்குகளை ஒத்த பாலூட்டி இனமான பிளெசியாடெப்பிசு (Plesiadapis)[24] வட அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. எனினும், பலியோசீன், இயோசீன் காலங்களின் வெப்பமண்டல நிலைமைகளில் இவ்வினம் யூரேசியா, ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிலும் பரந்து வாழ்ந்தது.
30 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட முந்திய ஒலிகோசீன் காலத்தில் உருவாகிய முதல் அன்டார்ட்டியப் பனி தற்காலக் காலநிலையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இக் காலத்தைச் சேர்ந்த ஒரு உயர்விலங்கினம் நாதார்க்டசு ஆகும். 1980ல் செருமனியில் கண்டுபிடிக்கப்பட்டு, 16.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று அறியப்பட்ட புதைபடிவச் சான்றுகள் இதுபோல் கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இனங்களைவிட ஏறத்தாழ 1.5 மில்லியன் ஆண்டுகள் முற்பட்டது. இது, மனித இனம் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே தோன்றியது என்னும் கொள்கைக்குச் சவாலாக உள்ளது.
டிரையோபத்தேக்கசு உள்ளிட்ட ஆப்பிரிக்க மனிதக்குரங்கு, மனிதர் ஆகிய இனங்களின் தோற்றத்தை நோக்கிய கால்வழியைச் சேர்ந்த இந்த உயர் விலங்கினம் ஐரோப்பா அல்லது மேற்காசியாவில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று ஆப்பிரிக்காவுக்குள் நுழைந்ததாக டேவிட் பேகன்[25] என்பவர் கூறுகிறார்.
அறிந்தவற்றுள் மிகவும் பழமையான கட்டரைன், மிகமேல் ஒலிகோசீன் காலத்தைச் சேர்ந்ததும், வட கெனியப் பிளவுப் பள்ளத்தாக்கிலுள்ள எராகலியட்டைச் சேர்ந்ததுமான காமோயாபித்தேக்கசு ஆகும். இது 24 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[26] இதன் மூதாதைகள், ஏசிப்டோபித்தேக்கசு, புரொப்பிலியோபித்தேக்கசு, பராபித்தேக்கசு ஆகியவற்றுக்கு உறவுடையவை என்று கருதப்படுகிறது. இவை 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தன.[27] சாடனியசு போரினம், கிரவுன் கட்டரைன்களின் கடைசிப் பொது மூதாதைக்கு உறவுடையது என 2010 ஆண்டில் விபரிக்கப்பட்டது. இது 29-28 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தற்காலிகமாகக் கணித்துள்ளனர். இதன் மூலம் புதைபடிவப் பதிவுகளில் காணப்பட்ட 11 மில்லியன் ஆண்டுக்கால இடைவெளி நிரப்பப்பட்டது.[28]
22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், முந்திய மயோசீன் காலத்தைச் சேர்ந்த, மரத்தில் வாழும் தகவடைந்த பல வகைகள் கிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்ததானது இனங்கள் பிரிவடைந்ததன் நீண்ட வரலாற்றைக் காட்டுகிறது. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய புதைபடிவங்களில், விக்டோரியாபித்தேக்கசு என்னும் மிக முந்திய பழைய உலகக் குரங்குகளுக்கு உரியதாகக் கருதப்படும் பகுதிகள் இருந்துள்ளன. 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை செல்லும் மனிதக் குரங்குகளின் கால்வழியைச் சேர்ந்தவை என நம்பப்படும் பேரினங்களுள் புரோக்கான்சல், ரங்வாபித்தேக்கசு, டென்ட்ரோபித்தேக்கசு, லிம்னோபித்தேக்கசு, நாச்சோலாபித்தேக்கசு, ஈக்குவாட்டோரியசு, நியான்சாபித்தேக்கசு, ஆப்பிரோபித்தேக்கசு, எலியோபித்தேக்கசு, கென்யாபித்தேக்கசு என்பன அடங்குகின்றன. இவையனைத்தும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தனவாகும். நமீபியாவின் குகைப் படிவுகளில் கிடைத்த ஒட்டாவிப்பித்தேக்கசு; பிரான்சு, எசுப்பெயின், ஆசுத்திரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பியெரோலாபித்தேக்கசு, டிரையோபித்தேக்கசு போன்ற பொதுமைப்படுத்திய செர்க்கோபித்தேசிடுகள் அல்லாதவை கிழக்காப்பிரிக்காவில் இருந்து தொலைவில் உள்ள களங்களில் கிடைத்திருப்பது அக்காலத்தில் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும், நண்ணிலக்கடல் பகுதியிலும் பல்வேறு வகை இனப் பிரிவுகள் வாழ்ந்ததற்கான சான்றாகும். மியோசீன் ஓமினிடுகளுள் காலத்தால் பிற்பட்ட ஒரியோப்பித்தேக்கசு இத்தாலியில் நிலக்கரிப் படுகைகளில் இருந்து பெறப்பட்டது. இதன் காலம் 9 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
கிப்பன்களின் கால்வழி (ஐலோபட்டிடே குடும்பம்) பெருமனிதக் குரங்குகளிலிருந்து பிரிவடைந்தது சுமார் 18-12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் என்றும், ஓரங்குட்டான்கள் பெருமனிதக் குரங்குகளிலிருந்து பிரிவடைந்தது ஏறத்தாழ 12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்றும் மூலக்கூற்றுச் சான்றுகள் காட்டுகின்றன. கிப்பன்களின் வழிமரபைத் தெளிவாகப் பதிவு செய்யும் புதைபடிவச் சான்றுகள் எதுவும் கிடையா. இது இதுவரை அறியப்படாத தென்கிழக்காசிய ஒமினிடுவில் இருந்து தோன்றியிருக்கக்கூடும்.
பெரு மனிதக் குரங்குகளில் இருந்து மனிதக் கால்வழி பிரிந்தமை
[தொகு]கொரில்லாக்கள், சிம்பன்சிகள், மனிதர் ஆகியவற்றின் கடைசிப் பொது மூதாதைக்குக் கிட்டியதாகக் கருதப்படக் கூடியவை, கெனியாவில் இருந்து கிடைத்த நாக்காலிப்பித்தேகசு, கிரீசில் இருந்து கிடைத்த ஓரானோபித்தேகசு என்பனவாகும். மூலக்கூற்றுச் சான்றுகளின்படி 8 தொடக்கம் 4 மில்லியன் ஆண்டுகள் முன் வரையான காலப்பகுதியில், முதலில் கொரில்லாக்களும், பின்னர் சிம்பன்சிகளும் (பான் பேரினம்) மனிதனின் தோற்றத்தை நோக்கிச் சென்ற மரபுவழியில் இருந்து பிரிந்தன. மனிதனுடைய டி.என்.ஏ, சிம்பன்சிகளுடையவற்றுடன் ஏறத்தாழ 98.4% ஒத்துள்ளது. கொரில்லாக்கள், சிம்பன்சிகள் ஆகியவற்றின் புதைபடிவப் பதிவுகள் குறைந்த அளவே கிடைக்கின்றன. மழைக்காட்டு மண் அமிலத்தன்மை கொண்டதால் எலும்புகள் கரைந்துவிடுவதால் அவை புதைபடிவங்களாகப் பாதுகாக்கப்பட முடிவதில்லை என்பது ஒரு காரணம். மாதிரி எடுத்தல் குறைபாடுகளும் இதற்கு ஒரு காரணமாகலாம்.
பிற ஓமினைன்கள்; ஆன்டிலோப்புகள், கழுதைப்புலிகள், நாய்கள், பன்றிகள், யானைகள், குதிரைகள் போன்றவற்றுடன் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு வெளியேயுள்ள வரண்ட சூழலுக்குத் தகவு பெற்றிருக்கக்கூடும். இற்றைக்கு 8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதிக்குப் பின்னர், நிலநடுக்கோட்டு பகுதி சுருங்கியது. சிம்பன்சிகளில் இருந்து மனிதக் கால்வழி பிரிந்த பின்னர் உருவான அக் கால்வழியைச் சேர்ந்த பல ஓமினைன் இனங்களின் புதைபடிவங்கள் ஒப்பீட்டளவில் பெரிதும் அறியப்பட்டவை. இவற்றுள் காலத்தால் முந்தியது சகெலந்திறோப்பசு சண்டென்சிசு இது 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தியது (மிமு).
இவ்வாறான ஓமினின்கள் பின்வருமாறு:
பெயர் | காலம் (மிமு) | இனங்கள் |
---|---|---|
சகெலந்திறோப்பசு சண்டென்சிசு | 7 | -- |
ஒர்ரோரின் துங்கெனென்சிசு | 6 | -- |
ஆர்டிபித்தேக்கசு | 5.5-4.4 | ஆர்.கடப்பா, ஆர்.ரமிடசு |
ஆசுத்திடலோபித்தேக்கசு | 4-1.8 | ஆசு.அனமென்சிசு, ஆசு.அபாரென்சிசு, ஆசு.ஆபிரிகானசு, ஆசு.பகுரெல்காசலி, ஆசு.கார்கி, ஆசு.செடிபா |
கெனியந்துறோப்பசு | 3-2.7 | கெனி.பிளாட்டியோப்சு |
பராந்துறோப்பசு | 3-1.2 | ப.ஏத்தியோபிக்கசு, ப.போய்சி, ப.ரோபசுட்டசு |
ஓமோ | 2-இன்றுவரை | ஓமோ அபிலிசு, ஓமோ ருடோல்ஃபென்சிசு, ஓமோ எர்காசுட்டர், ஓமோ சியோர்சிக்கசு, ஓமோ அன்ட்டெசெசர், ஓமோ செப்பிரானென்சிசு, ஓமோ இரெக்டசு, ஓமோ ஈடெல்பர்கென்சிசு, ஓமோ ரொடீசியென்சிசு, ஓமோ நீன்டெர்தாலென்சிசு, ஓமோ சப்பியென்சு இடல்த்து, பழைய ஓமோ சப்பியென்சு, ஓமோ புளொரெசியென்சிசு |
ஓமோ பேரினம்
[தொகு]ஓமோ பேரினத்தில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரே இனம் ஓமோ சப்பியென்சு. அழிந்துபோன ஒரு ஓமோ இனம் ஓமோ சப்பியென்சு இனத்தில் மூதாதையாக இருக்கக்கூடும். அதே வேளை பெரும்பாலான இத்தகைய இனங்கள் ஓமோ சப்பியென்சுக்கு ஒன்றுவிட்ட உடன்பிறப்புக்கள் போன்றவை. இவை மனித மூதாதையரின் கால்வழியில் இருந்து விலகிச் சென்றுவிட்டவை.[29][30] இவற்றுள் எவையெவை தனி இனங்கள் எவை இன்னொரு இனத்தின் துணையினம் என்ற விடயங்கள் குறித்து ஒருமித்த கருத்து இன்னும் இல்லை. போதிய அளவு புதைபடிவங்கள் கிடைக்காதது இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இதைவிட, ஓமோ பேரினத்தில், இனங்களை வகைப்படுத்துவதில் காணப்படும் சிறிய வேறுபாடுகளும் மேற்படி கருத்தொற்றுமைக் குறைவுக்கு இன்னொரு காரணம்.[30] ஓமோ பேரினத்தில் காணப்பட்ட தொடக்ககால வேறுபாடுகளுக்கான காரணமாகக் கொள்ளத்தக்க விளக்கங்களுள் ஒன்றை சகாரா வெளியேற்றிக் கோட்பாடு (Sahara pump theory) முன்வைக்கிறது. ஒருகாலத்தில் ஈரலிப்பான பகுதியாக இருந்த இன்றைய சகாரப் பாலைவனப் பகுதி உயிரினங்கள் ஆப்பிரிக்காவுக்கும், யூரேசியாவுக்கும் இடையே பரவுவதற்கு உதவியது என்பது இக் கோட்பாட்டின் சாரம்.
தொல்லியல், தொல்லுயிரியல் ஆகிய துறைகள் தரும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு ஓமோ இனங்களின் உணவுப் பழக்கங்கள் பற்றி உய்த்துணர முடிவதுடன், ஓமோக்களின் உடல்சார் கூர்ப்பு, நடத்தைசார் கூர்ப்பு என்பவற்றில் உணவுப் பழக்கங்களின் பங்கு குறித்து ஆய்வுகள் செய்யவும் முடிகிறது.[22][31][32][33][34]
ஓ.அபிலிசுவும் ஓ.கோட்டென்சென்சிசுவும்
[தொகு]ஓமோ அபிலிசு மிமு 2.4 தொடக்கம் 1.4 வரை வாழ்ந்தன. இவை பிளியோசீன் காலப் பிற்பகுதியில் அல்லது மிமு 2.5 - 2 வரையிலான பிளீசுட்டோசீன் கால முற்பகுதியில் ஆசுத்திரலோபித்தேசைனில் இருந்து பிரிந்து, ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் கூர்ப்படைந்தன. ஓமோ அபிலிசுக்கள், ஆசுத்திரலோபித்தேசைன்களுடன் ஒப்பிடும்போது சிறிய அரைக்கும் பற்களையும், பெரிய மூளையையும் கொண்டிருந்தன. இவை கற் கருவிகளைச் செய்தன. விலங்குகளின் எலும்புகளிலும் கருவிகளைச் செய்திருக்கக்கூடும். இவற்றின் எலும்புக்கூடு, இரண்டு கால்களால் நடப்பதைவிட, மரத்தில் வாழ்வதற்கே கூடிய தகவு பெற்றிருப்பதனால் இவற்றை ஓமோ பேரினத்தில் இருந்து ஆசுத்திரலோபித்தேக்கசு பேரினத்துக்கு மாற்றுவதே பொருத்தமானது எனச் சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.[35] மே 2010ல் ஓமோ கோட்டென்சென்சிசு என்னும் புதிய இனம் ஒன்றைத் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஓமோ அபிலிசுக்களையே ஓமோ பேரினத்தின் முதல் இனமாகக் கருதி வந்தனர். இப்போது, பெரும்பாலும், ஓமோ கோட்டென்சென்சிசு ஓமோ அபிலிசுக்கு முன்னரே தோன்றியிருக்கலாம் என்கின்றனர்.[36]
ஓ. ருடோல்ஃபென்சிசுவும் ஓ. சோர்சிக்கசுவும்
[தொகு]இவை, மிமு 1.9 - 1.6 காலப் பகுதியைச் சேர்ந்த புதைபடிவங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள். ஓமோ அபிலிசுக்கும் இவற்றுக்கும் உள்ள தொடர்புகள் இன்னும் தெளிவாகவில்லை.
- ஓ. ருடோல்ஃபென்சிசு என்பது கெனியாவில் இருந்து கிடைத்த ஒரு மண்டையோட்டுப் பகுதியால் குறிக்கப்படுகிறது. அறிவியலாளர் சிலர் இது இன்னுமொரு ஓமோ அபிலிசு என்கின்றனர். எனினும் இது உறுதியாகவில்லை.[37]
- ஓ. சோர்சிக்கசு சோர்சியாவில் கிடைத்தது. இது ஓமோ இரெக்டசுவுக்கும், ஓமோ அபிலிசுவுக்கும் இடைப்பட்டதாக[38] அல்லது ஓமோ இரக்டசுவின் ஒர் துணையினமாக இருக்கக்கூடும்.[39]
ஓ. எர்காசுட்டர், ஓ. இரெக்டசு என்பன
[தொகு]ஓமோ இரெக்டசுவின் முதல் புதைபடிவத்தை ஒல்லாந்த மருத்துவரான இயூசீன் துபோய்சு என்பவர், 1891 ஆம் ஆண்டில், இந்தோனீசியத் தீவுகளில் ஒன்றான சாவாவில் கண்டுபிடித்தார். அதன் உருவவியலை அடிப்படையாகக் கொண்டு, அவர் அதற்கு பித்தேகாந்திரோப்பசு இரெக்டசு எனப் பெயரிட்டார். இதை அவர் மனிதனுக்கும் மனிதக் குரங்குகளுக்கும் இடைப்பட்டதாகக் கருதினார்.[40] ஓமோ இரெக்டசு மிமு 1.8 தொடக்கம் 70,000 ஆண்டுகளுக்கு முன் வரையான காலப் பகுதியில் வாழ்ந்தது. இது, இவ்வினம் தோபோ பேரழிவினால் முற்றாகவே அழிந்திருக்கலாம் எனக் காட்டுகிறது. எனினும், ஓமோ இரெக்டசு சொலோவென்சிசு, ஓமோ புளோரசியென்சிசு ஆகிய இனங்கள் இப் பேரழிவில் இருந்து தப்பிவிட்டன. மிமு 1.8 - 1.25 காலப்பகுதியைச் சேர்ந்த ஓமோ இரெக்டசு, ஓமோ எர்காசுட்டர் என்னும் தனி இனமாக அல்லது ஓமோ இரெக்டசு எர்காசுட்டர் என்னும், ஓமோ இரெக்டசு இனத்தின் துணையினமாகக் கருதப்படுகிறது.
மிமு 1.5 - 1 காலப்பகுதியான, பிளீத்தோசீன் கால முற்பகுதியில், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் ஓமோ அபிலிசு இனத்தைச் சேர்ந்த ஒரு பகுதி பெரிய மூளையைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்ததோடு, நுணுக்கமான கற்கருவிகளையும் செய்தன. இவ்வியல்புகளும், வேறு சிலவும் இவற்றை ஓமோ இரெக்டசு என்னும் புதிய இனமாக வகைப்படுத்தப் போதியதாக இருந்தது. அத்துடன், உண்மையாக நிமிர்ந்து நடந்த முதல் மனித மூதாதை ஓமோ எரெக்டசு ஆகும்.[41] தளரா முழங்கால் பொருத்து வளர்ச்சியும், மண்டையோட்டுப் பெருந்துளையின் அமைவிட மாற்றமும், இது சாத்தியமாகக் காரணமாயிற்று. இவ்வினம், இறைச்சியைச் சமைப்பதற்கு நெருப்பையும் பயன்படுத்தி இருக்கக்கூடும்.
ஓமோ இரெக்டசுவுக்குப் புகழ்பெற்ற எடுத்துக்காட்டு பீக்கிங் மனிதன் ஆகும். இதன் பிற எடுத்துக்காட்டுகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் கிடைத்தன. இவற்றில் ஆசியா அல்லாத பிற பகுதிகளைச் சேர்ந்தவற்றை, தற்காலத்தில் தொல்மானிடவியலாளர் பலர், ஓமோ எர்காசுட்டர் என அழைக்கின்றனர். ஆசியாவைச் சேர்ந்தனவும், மண்டையோடு, பற்கள் என்பவை தொடர்பில் சில சிறப்பியல்புகளைக் கொண்டவை மட்டுமே தற்போது ஓமோ இரெக்டசு என்னும் இனத்துள் வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வியல்புகள் ஓமோ எர்காசுட்டர் இனத்தில் இயல்புகளில் இருந்து வேறுபடுகின்றன.
ஓ. செப்பிரானென்சிசு, ஓ. அன்ட்டெசெசர் என்பன.
[தொகு]இவை, இனங்களாக முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள். ஓ. இரெக்டசு, ஓ. எய்டெல்பர்கென்சிசு ஆகிய இனங்களுக்கு இடைப்பட்டதாக இவை இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.
- ஓ. அன்ட்டெசெசர், மிமு 1.2 - 500 ka வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது.[42][43] எசுப்பெயின், இங்கிலாந்து ஆகிய இடங்களில் கிடைத்த புதைபடிவங்கள் மூலம் அறியப்பட்டது.
- ஓ. செப்பிரானென்சிசு, இத்தாலியில் கிடைத்த ஒரு மண்டையோட்டு மூடியிலிருந்து அறியப்படுவது. 800,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணிப்பிடுகின்றனர்.[44]
ஓ. எய்டெல்பேர்கென்சிசு
[தொகு]ஓ. எய்டெல்பேர்கென்சிசு, எய்டெல்பேர்க் மனிதன் எனவும் அழைக்கப்படுகிறது. இது, 800,000 - 300,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையான காலப் பகுதியில் வாழ்ந்துள்ளது. ஓமோ சப்பியென்சு எய்டெல்பேர்கென்சிசு, ''ஓமோ சப்பியென்சு பலியோகங்கேரிகசு ஆகிய பெயர்களும் இதற்கு முன்மொழியப்பட்டு உள்ளன.[45]
ஓ. ரொடீசியென்சிசுவும், காவிசு மண்டையோடும்
[தொகு]- ஓ. ரொடீசியென்சிசு 300,000 - 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கணித்துள்ளனர். "ரொடீசிய மனிதன்" எனவும் அழைக்கப்படும் இதைத் தற்கால ஆய்வாளர் பலர் ஓ. எய்டெல்பேர்கென்சிசுவுக்குள் வகைப்படுத்த விரும்புகின்றனர். தொல் ஓமோ சப்பியென்சு, ஓமோ சப்பியென்சு ரொடீசியென்சிசு போன்ற வகைப்படுத்தல்களும் முன்மொழியப்பட்டு உள்ளன.
- 2006 ஆம் ஆண்டு பெப்ரவரியில், "காவிசு மண்டையோடு" எனப்படும் புதைபடிவம் எத்தியோப்பியாவில் உள்ள காவிசு என்னும் இடத்தில் கண்டறியப்பட்டது. ஓ. இரெக்டசு, ஓ. சப்பியென்சு ஆகியவற்றுக்கு இடைப்பட்டதாக அல்லது முற்றிலும் அழிந்துவிட்ட கூர்ப்புக் கால்வழிகளுள் ஒன்றைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படும் இது, 500,000-250,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது பற்றிய சுருக்கமான விவரங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இணைநிலை-மீளாய்வுக்கு உட்படுத்திய ஆய்வறிக்கை இன்னும் வெளிவரவில்லை. இதன் முக அமைப்பை வைத்து இது ஒரு இடைப்பட்ட இனமாக அல்லது பெண் "போடோ மனிதன்" ஆக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.[46]
இனங்கள் | வாழ்ந்த காலம் (மிமு) | வாழ்ந்த இடம் | முதிர் உயரம் | முதிர் நிறை | மண்டைக் கொள்ளளவு (சமீ³) | புதைபடிவப் பதிவு | கண்டுபிடிப்பு / பெயர் வெளியீடு |
---|---|---|---|---|---|---|---|
தெனிசோவா ஓமினின் | 0.04 | அல்தாய் கிராய் | 1 களம் | 2010 | |||
ஓ. அன்டெசெசர் | 1.2 – 0.8 | எசுப்பெயின் | 1.75 m (5.7 அடி) | 90 kg (200 lb) | 1,000 | 2 களங்கள் | 1997 |
ஓ. செப்பிரனென்சிசு | 0.5 – 0.35 | இத்தாலி | 1,000 | 1 மண்டையோட்டு மூடி | 1994/2003 | ||
ஓ. இரெக்டசு | 1.8 – 0.2 | ஆப்பிரிக்கா, யூரேசியா (சாவா, சீனா, இந்தியா, காக்கசசு) | 1.8 m (5.9 அடி) | 60 kg (130 lb) | 850 (முற்பகுதி) – 1,100 (பிற்பகுதி) | பல | 1891/1892 |
ஓ. எர்காசுட்டர் | 1.9 – 1.4 | கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா | 1.9 m (6.2 அடி) | 700–850 | பல | 1975 | |
ஓ. புளோரசியென்சிசு | 0.10 – 0.012 | இந்தோனீசியா | 1.0 m (3.3 அடி) | 25 kg (55 lb) | 400 | 7 தனி | 2003/2004 |
ஓ. கோட்டன்சென்சிசு | >2 – 0.6 | தென் ஆப்பிரிக்கா | 1.0 m (3.3 அடி) | 1 தனி | 2010/2010 | ||
ஓ. சோர்சிக்கசு | 1.8 | சோர்சியா | 600 | 4 தனி | 1999/2002 | ||
ஓ. அபிலிசு | 2.3 – 1.4 | ஆப்பிரிக்கா | 1.0–1.5 m (3.3–4.9 அடி) | 33–55 kg (73–121 lb) | 510–660 | பல | 1960/1964 |
ஓ. எய்டெல்பர்கென்சிசு | 0.6 – 0.35 | ஐரோப்பா, ஆப்பிரிக்கா, சீனா | 1.8 m (5.9 அடி) | 60 kg (130 lb) | 1,100–1,400 | பல | 1908 |
ஓ. நீன்டர்தாலென்சிசு | 0.35 – 0.03 | ஐரோப்பா, மேற்கு ஆசியா | 1.6 m (5.2 அடி) | 55–70 kg (121–154 lb) (கனமான உடற்கட்டு) | 1,200–1,900 | பல | (1829)/1864 |
ஓ. ரொடீசியென்சிசு | 0.3 – 0.12 | சாம்பியா | 1,300 | மிகக் குறைவு | 1921 | ||
ஓ. ருடோல்பென்சிசு | 1.9 | கெனியா | 1 மண்டையோடு | 1972/1986 | |||
ஓ. சப்பியென்சு இடல்த்து | 0.16 – 0.15 | எத்தியோப்பியா | 1,450 | 3 மண்டை எலும்புகள் | 1997/2003 | ||
ஓ. சப்பியென்சு சப்பியென்சு (தற்கால மனிதர்கள்) | 0.2 – தற்காலம் | உலகம் முழுதும் | 1.4–1.9 m (4.6–6.2 அடி) | 50–100 kg (110–220 lb) | 1,000–1,850 | இன்னும் வாழ்கின்றனர் | —/1758 |
குறிப்புகள்
[தொகு]- ↑ Heng HH (May 2009). "The genome-centric concept: resynthesis of evolutionary theory". Bioessays 31 (5): 512–25. doi:10.1002/bies.200800182. பப்மெட்:19334004.
- ↑ "Nova – Meet Your Ancestors". PBS. Retrieved 2008-10-24.
- ↑ 3.0 3.1 "Plesiadapis" (PDF). North Dakota Geological Survey. Retrieved 2008-10-24.
- ↑ Dawkins R (2004) The Ancestor's Tale.^ "Query: Hominidae/Hylobatidae". Time Tree. 2009. Retrieved December 2010.
- ↑ Stringer, C.B. (1994). "Evolution of Early Humans". The Cambridge Encyclopedia of Human Evolution. Cambridge: Cambridge University Press. p. 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-32370-3.
{{cite book}}
: Unknown parameter|editors=
ignored (help) Also பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-46786-5 (paperback) - ↑ McHenry, H.M (2009). "Human Evolution". Evolution: The First Four Billion Years. Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press. p. 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-03175-3.
{{cite book}}
: Unknown parameter|editors=
ignored (help) - ↑ G. Philip Rightmire (1998). "Human Evolution in the Middle Pleistocene: The Role of Homo heidelbergensis". Evolutionary Anthropology.
- ↑ 8.0 8.1 Fossil Reanalysis Pushes Back Origin of Homo sapiens, February 17, 2005, Scientific American.
- ↑ Mellars, Paul (2006). "Why did modern human populations disperse from Africa ca. 60,000 years ago?". Proceedings of the National Academy of Sciences 103 (25): 9381–6. Bibcode 2006PNAS..103.9381M. doi:10.1073/pnas.0510792103. PMC 1480416. PubMed.
- ↑ "Out of Africa Revisited - 308 (5724): 921g - Science". Sciencemag.org. 2005-05-13. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1126/science.308.5724.921g. Archived from the original on 2010-11-22. பார்க்கப்பட்ட நாள் 2009-11-23.
- ↑ Nature (2003-06-12). "Access: Human evolution: Out of Ethiopia". Nature. Archived from the original on 2010-11-22. பார்க்கப்பட்ட நாள் 2009-11-23.
- ↑ "Origins of Modern Humans: Multiregional or Out of Africa?". ActionBioscience. Archived from the original on 2010-11-22. பார்க்கப்பட்ட நாள் 2009-11-23.
- ↑ Reich D, Green RE, Kircher M, et al. (December 2010). "Genetic history of an archaic hominin group from Denisova Cave in Siberia". Nature 468 (7327): 1053–60. doi:10.1038/nature09710. பப்மெட்:21179161.
- ↑ Noonan J. P (May 2010). "Neanderthal genomics and the evolution of modern humans". Genome Res. 20 (5): 547–53. doi:10.1101/gr.076000.108. பப்மெட்:20439435.
- ↑ Laurent Abi-Rached, et al. (2011-08-25). "The Shaping of Modern Human Immune Systems by Multiregional Admixture with Archaic Humans". Science 334 (6052). doi:10.1126/science.1209202. பப்மெட்:21868630 இம் மூலத்தில் இருந்து Aug 2011 அன்று. பரணிடப்பட்டது.. http://digitalcommons.unl.edu/cgi/viewcontent.cgi?article=1122&context=publichealthresources.
- ↑ Saraga-Babić, M; Lehtonen, E; Svajger, A; Wartiovaara, J (1994). "Morphological and immunohistochemical characteristics of axial structures in the transitory human tail". Annals of anatomy 176 (3): 277–86. பப்மெட்:8059973.
- ↑ Owen, R. 1866–1868. Comparative Anatomy and Physiology of Vertebrates. London
- ↑ Montagna, W; Machida, H; Perkins, E.M. (1966). "The skin of primates XXXIII.: The skin of the angwantibo". American Journal of Physical Anthropology 25 (3): 277–290. doi:10.1002/ajpa.1330250307. பப்மெட்:5971502.
- ↑ Wiedersheim, Robert (1893). The Structure of Man: an index to his past history. London: Macmillan and Co.
- ↑ Muller, G. B. (2002) "Vestigial Organs and Structures." in Encyclopedia of Evolution. Mark Pagel, editor in chief, New York: Oxford University Press. pp. 1131–1133
- ↑ "Vestigial Organs Not So Useless After All, Studies Find"
- ↑ 22.0 22.1 Walker, Alan (2006). "Early Hominin Diets: Overview and Historical Perspectives". In Peter Ungar (ed.). Evolution of the Human Diet: The Known, the Unknown, and the Unknowable. US: Oxford University Press. pp. 3–10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-518346-7. (scroll up to view chapter 1 & part of chapter 2, which is a serendipitous result from another search. Subsequent attempts get a targeted search result gave returns without chapter 1).
- ↑ [1] page 9 [2][3] 1999] - [P.R. Willoughby - 2005 [4][5] International Journal of Comparative Psychology UCLA ] - [R.D. Martin - 2002 doi:10.1016/B0-08-043076-7/03083-7 ] - [S. Tavaré, C. R. Marshall, O. Will, C. Soligo, & R. D. Martin - 2001 doi:10.1038/416726a ] [Retrieved 2012-01-01]
- ↑ [K. D. Rose -1994 DOI: 10.1002/evan.1360030505 ] - [J.Fleagle,C.Gilbert 2011-2012 [6] ] - [J.Roach 2008 [7] ] - [V. McMains - 2011 [8] ] - [2009 [9] & [10] ] [Retrieved 2012-01-01]
- ↑ Kordos L, Begun D R (2001). "Primates from Rudabánya: allocation of specimens to individuals, sex and age categories". J. Hum. Evol. 40 (1): 17–39. doi:10.1006/jhev.2000.0437. பப்மெட்:11139358.
- ↑ David W. Cameron (2004). Hominid adaptations and extinctions. UNSW Press. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86840-716-6. பார்க்கப்பட்ட நாள் 6 November 2011.
- ↑ David Rains Wallace (13 September 2005). Beasts of Eden: Walking Whales, Dawn Horses, and Other Enigmas of Mammal Evolution. University of California Press. pp. 240–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-24684-3. பார்க்கப்பட்ட நாள் 6 November 2011.
- ↑ Zalmout, I.S.; Sanders, W.J.; MacLatchy, L.M.; Gunnell, G.F.; Al-Mufarreh, Y.A.; Ali, M.A.; Nasser, A.-A.H.; Al-Masari, A.M. et al. (2010). "New Oligocene primate from Saudi Arabia and the divergence of apes and Old World Monkeys". Nature 466 (7304): 360–364. doi:10.1038/nature09094. பப்மெட்:20631798.
- ↑ Strait DS, Grine FE, Moniz MA (1997). "A reappraisal of early hominid phylogeny". J. Hum. Evol. 32 (1): 17–82. doi:10.1006/jhev.1996.0097. பப்மெட்:9034954.
- ↑ 30.0 30.1 Bill Bryson (2004). "28. The Mysterious Biped". A Short History of Nearly Everything. Random House, Inc. pp. 522–543. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-385-66004-4.
- ↑ Peter Ungar & Mark F. Teaford (2002). Human Diet: Its Origin and Evolution. Westport, CT: Bergin & Garvey. p. 206. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89789-736-5.
- ↑ Bogin, Barry (1997). "The evolution of human nutrition". In Romanucci-Ross, Lola; Moerman, Daniel E.; & Tancredi, Laurence R. (ed.). The Anthropology of Medicine: From Culture to Method (3 ed.). South Hadley MA: Bergen and Garvey. pp. 96–142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89789-516-3.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help);|archive-url=
requires|url=
(help); Unknown parameter|chapterurl=
ignored (help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ Barnicot NA (April/June 2005). "Human nutrition: evolutionary perspectives". Integr Physiol Behav Sci 40 (2): 114–17. doi:10.1007/BF02734246. பப்மெட்:17393680.
- ↑ Leonard WR, Snodgrass JJ, Robertson ML (2007). "Effects of brain evolution on human nutrition and metabolism". Annu Rev Nutr. 27: 311–27.
- ↑ Wood, B. & Collard, M. (1999) The changing face of Genus Homo. Evol. Anth. 8(6) 195-207
- ↑ "Toothy Tree-Swinger May Be Earliest Human". News.discovery.com. 2010-05-21. Archived from the original on 2012-05-02. பார்க்கப்பட்ட நாள் 2011-05-14.
- ↑ Wood B (1999). "'Homo rudolfensis' Alexeev, 1986-fact or phantom?". J. Hum. Evol. 36 (1): 115–8. doi:10.1006/jhev.1998.0246. பப்மெட்:9924136.
- ↑ Gabounia L. de Lumley M. Vekua A. Lordkipanidze D. de Lumley H. (2002). "Discovery of a new hominid at Dmanisi (Transcaucasia, Georgia)". Comptes Rendus Palevol 1 (4): 243–53. doi:10.1016/S1631-0683(02)00032-5.
- ↑ Lordkipanidze D, Vekua A, Ferring R, et al. (2006). "A fourth hominin skull from Dmanisi, Georgia". The anatomical record. Part A, Discoveries in molecular, cellular, and evolutionary biology 288 (11): 1146–57. doi:10.1002/ar.a.20379. பப்மெட்:17031841.
- ↑ Turner W (1895). "On M. Dubois' Description of Remains recently found in Java, named by him Pithecanthropus erectus: With Remarks on so-called Transitional Forms between Apes and Man". Journal of anatomy and physiology 29 (Pt 3): 424–45. பப்மெட்:17232143.
- ↑ Spoor F, Wood B, Zonneveld F (1994). "Implications of early hominid labyrinthine morphology for evolution of human bipedal locomotion". Nature 369 (6482): 645–8. doi:10.1038/369645a0. பப்மெட்:8208290.
- ↑ Bermúdez de Castro JM, Arsuaga JL, Carbonell E, Rosas A, Martínez I, Mosquera M (1997). "A hominid from the lower Pleistocene of Atapuerca, Spain: possible ancestor to Neandertals and modern humans". Science 276 (5317): 1392–5. doi:10.1126/science.276.5317.1392. பப்மெட்:9162001.
- ↑ Eudald Carbonell; José M. Bermúdez de Castro et al. (2008-03-27). "The first hominin of Europe". Nature 452 (7186): 465–469. doi:10.1038/nature06815. பப்மெட்:18368116 இம் மூலத்தில் இருந்து 2010-11-22 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5uQpaylUN?url=http://www.nature.com/nature/journal/v452/n7186/full/nature06815.html. பார்த்த நாள்: 2008-03-26.
- ↑ Manzi G, Mallegni F, Ascenzi A (2001). "A cranium for the earliest Europeans: Phylogenetic position of the hominid from Ceprano, Italy". Proc. Natl. Acad. Sci. U.S.A. 98 (17): 10011–6. doi:10.1073/pnas.151259998. பப்மெட்:11504953.
- ↑ Czarnetzki, A; Jakob, T; Pusch, CM (2003). "Palaeopathological and variant conditions of the Homo heidelbergensis type specimen (Mauer, Germany)". Journal of Human Evolution 44 (4): 479–95. doi:10.1016/S0047-2484(03)00029-0. பப்மெட்:12727464.
- ↑ Indiana University(March 27, 2006). "Scientists discover hominid cranium in Ethiopia". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2006-11-26.
[[பகுப்பு:மாந்தரினப் படிமலர்ச்சி
.
.
.....,
]]