தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
இக்கட்டுரை தொடரின் ஒரு பகுதியாகும் |
தமிழ்நாடு அரசியல் |
---|
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV-இல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள், பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் - 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன்படி கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு கொண்ட பஞ்சாயத்து ராஜ் என்ற ஊராட்சி முறை அறிமுகமானது. இடஒதுக்கீடு மற்றும் பெண்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாடு முனிசிபல் சட்டங்கள் (திருத்த) சட்டம், 2016 மற்றும் தமிழ்நாடு பஞ்சாயத்துகள் (திருத்த) சட்டம், 2016 ஆகியவற்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், நகர பஞ்சாயத்துகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக தமிழ்நாடு அரசு உயர்த்தியது.[1][2]
தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சிகள் என்றும் ஊரக உள்ளாட்சிகள் என்ற தலைப்பில், ஆறு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவையாவன:
நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்
[தொகு]ஊரக உள்ளாட்சி அமைப்புகள்
[தொகு]மாவட்ட வாரியான பட்டியல்
[தொகு]வ.எண்: | ||||||
---|---|---|---|---|---|---|
மாவட்டம் | ||||||
நகர்ப்புறம் | கிராமப்புறம் | |||||
மாநகராட்சிகள் | நகராட்சிகள் | பேரூராட்சிகள் | ஊராட்சி ஒன்றியங்கள் | கிராம ஊராட்சிகள் | ||
1 | அரியலூர் | 0 | 2 | 2 | 6 | 201 |
2 | செங்கல்பட்டு | 1 | 4 | 6 | 8 | NA |
3 | சென்னை | 1 | 0 | 0 | 0 | 0 |
4 | கோயம்புத்தூர் | 1 | 7 | 52 | 13 | 389 |
5 | கடலூர் | 1 | 6 | 16 | 13 | 682 |
6 | தர்மபுரி | 0 | 2 | 9 | 10 | 251 |
7 | திண்டுக்கல் | 1 | 3 | 24 | 14 | 306 |
8 | ஈரோடு | 1 | 4 | 53 | 14 | 343 |
9 | கள்ளக்குறிச்சி | 0 | 3 | NA | NA | NA |
10 | காஞ்சிபுரம் | 1 | 2 | 24 | 13 | 648 |
11 | கன்னியாகுமரி | 1 | 4 | 56 | 9 | 99 |
12 | கரூர் | 1 | 3 | 11 | 8 | 157 |
13 | கிருஷ்ணகிரி | 1 | 1 | 7 | 10 | 337 |
14 | மதுரை | 1 | 3 | 24 | 12 | 431 |
15 | மயிலாடுதுறை | 0 | 2 | NA | NA | NA |
16 | நாகப்பட்டினம் | 0 | 2 | 8 | 11 | 434 |
17 | நாமக்கல் | 1 | 4 | 19 | 15 | 331 |
18 | நீ்லகிரி | 0 | 4 | 11 | 4 | 35 |
19 | பெரம்பலூர் | 0 | 1 | 4 | 4 | 121 |
20 | புதுக்கோட்டை | 1 | 1 | 8 | 13 | 498 |
21 | இராமநாதபுரம் | 0 | 4 | 7 | 11 | 443 |
22 | இராணிப்பேட்டை | 0 | 6 | NA | NA | NA |
23 | சேலம் | 1 | 6 | 33 | 20 | 385 |
24 | சிவகங்கை | 1 | 3 | 12 | 12 | 445 |
25 | தென்காசி | 0 | 6 | NA | NA | NA |
26 | தஞ்சாவூர் | 2 | 2 | 22 | 14 | 589 |
27 | தேனி | 0 | 6 | 22 | 8 | 130 |
28 | திருவள்ளூர் | 1 | 6 | 13 | 14 | 539 |
29 | திருவண்ணாமலை | 1 | 3 | 10 | 18 | 860 |
30 | திருவாரூர் | 0 | 4 | 7 | 10 | 430 |
31 | தூத்துக்குடி | 1 | 3 | 18 | 12 | 408 |
32 | திருச்சிராப்பள்ளி | 1 | 3 | 17 | 14 | 408 |
33 | திருநெல்வேலி | 1 | 3 | 36 | 19 | 425 |
34 | திருப்பத்தூர் | 0 | 4 | NA | NA | NA |
35 | திருப்பூர் | 1 | 6 | 17 | 13 | 273 |
36 | வேலூர் | 1 | 2 | 22 | 20 | 753 |
37 | விழுப்புரம் | 0 | 3 | 15 | 22 | 1104 |
38 | விருதுநகர் | 1 | 5 | 9 | 11 | 450 |
மொத்தம் | 38 | 25 | 138 | 529 | 385 | 12,524 |
மாநகராட்சிகள்
[தொகு]தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சி களாகப் பிரித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள் இருக்கின்றன.
- சென்னை மாநகராட்சி
- கோயம்புத்தூர் மாநகராட்சி
- மதுரை மாநகராட்சி
- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
- சேலம் மாநகராட்சி
- திருநெல்வேலி மாநகராட்சி
- தூத்துக்குடி மாநகராட்சி
- திருப்பூர் மாநகராட்சி
- ஈரோடு மாநகராட்சி
- வேலூர் மாநகராட்சி
- தஞ்சாவூர் மாநகராட்சி
- திண்டுக்கல் மாநகராட்சி
- ஓசூர் மாநகராட்சி
- நாகர்கோயில் மாநகராட்சி
- ஆவடி மாநகராட்சி
- தாம்பரம் மாநகராட்சி
- காஞ்சிபுரம் மாநகராட்சி
- கரூர் மாநகராட்சி
- கடலூர் மாநகராட்சி
- கும்பகோணம் மாநகராட்சி
- சிவகாசி மாநகராட்சி
- காரைக்குடி மாநகராட்சி
- நாமக்கல் மாநகராட்சி
- புதுக்கோட்டை மாநகராட்சி
- திருவண்ணாமலை மாநகராட்சி
இந்த மாநகராட்சிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் அல்லது இதற்கு சமமான தகுதியுடைய அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.
தேர்தல் முறைகள்
[தொகு]இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து மாநகர் மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவ்வாறே மாநகர் மன்ற தலைவரும் (மேயர்) நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றார் என்கிற முறை 20 நவம்பர் 2019 வரை அமலில் இருந்தது.
இத்தேதியில், தமிழ்நாட்டில் மேயர் பதவிக்கும், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.[3]
மாமன்ற உறுப்பினர்களில் இருந்து மாமன்றத்துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார்.
இவர் மாநகர மேயருக்கு அடுத்தபடியாக மாமன்றத் துணைத் தலைவர் செயல்படுவார்.
மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
நகராட்சிகள்
[தொகு]தமிழ்நாட்டின் நகராட்சிகள் தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர்.
இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
நகர்மன்றத் தலைவர் 20.11.2019 வரை மக்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
அந்த தேதியில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின்படி நகர்மன்றத் தலைவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார்.
நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன.
இவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.
- தமிழ்நாடு நகராட்சிகளுக்கான நிர்வாக ஆணையர் அலுவலக இணையதளம்
- தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் பட்டியல்(ஆங்கிலத்தில்)
மாவட்ட ஊராட்சிகள்
[தொகு]தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சிக் குழுக்கள் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை என்கிற அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
மாவட்டத்தில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் (ஊராட்சி ஒன்றியங்கள்) கொண்டு மாவட்ட ஊராட்சிக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன.
இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாவட்ட ஊராட்
சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார்.
மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரி ஆகியோர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகின்றனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்ட ஊராட்சிகள் இருக்கின்றன.[4]
பேரூராட்சிகள்
[தொகு]இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர்.
இந்த பேரூராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் பேரூராட்சி செயல் அலுவலர்களாக அரசின் மூலம் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பேரூராட்சி மன்ற தலைவர் 20.11.2019 வரை மக்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு வந்தார்.
அதன்பின் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின்படி பேரூராட்சி மன்றத் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலம் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை வந்தது.
அதன்படி பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தான், பேரூராட்சி மன்றத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இவருக்கு அடுத்தபடியாக பேரூராட்சி மன்றத் துணைத் தலைவரும் வார்டு உறுப்பினர்கள் மூலமே தேர்வு செய்யப்படுகின்றார்.
பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலக ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 561 பேரூராட்சிகள் இருக்கின்றன.
இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் பேருராட்சிகளுக்கான ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன.[5]
ஊராட்சி ஒன்றியம்
[தொகு]மாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் கிராம ஊராட்சிகள் பல சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன.
இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக(சேர்மன்)வும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஒன்றிய ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அந்தப் பணிகளைத் தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன.
ஊராட்சிகள்
[தொகு]தமிழ்நாட்டில் 500 நபர்களும் அதற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய அனைத்து ஊர்களையும் அதன் வருவாய்க்கு ஏற்ப அருகிலிருக்கும் சில ஊர்களைச் சேர்த்து ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு தலைவரையும் மக்களே நேரடியாகத் தேர்வு செய்கின்றனர்.
மன்ற உறுப்பினர்களில் இருந்து ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார்.
இந்த ஊராட்சிகளில் தலைவரே நிதி உட்பட அனைத்துப் பொறுப்புகளையும் நேரடியாகக் கவனிக்கின்றார்.
இவருக்கு உதவியாக ஊராட்சி எழுத்தர் பணியில் ஒருவரை அரசு நியமிக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 12618 ஊராட்சிகள் இருக்கின்றன.
- இந்த ஊராட்சி அமைப்புகள் அவை இருக்கும் பகுதிகளில் ஒன்றிணைக்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் என்னும் அமைப்பிலும், இந்த ஊராட்சிகள் அனைத்தும் மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என்னும் அமைப்பின் கீழும் செயல்படுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள்
[தொகு]தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2012 ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகின்றன.[6]
மாநகராட்சிக்கான விருது
[தொகு]மாநகராட்சிகளில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்படும் மாநகராட்சிக்கு ரூபாய் 25 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும்.
நகராட்சிக்கான விருது
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள நகராட்சிகளில் சிறந்த நகராட்சிகளாகத் தேர்வு செய்யப்படும் மூன்று நகராட்சிகளில் முதலிடம் பெற்ற நகராட்சிக்கு ரூபாய் 15 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாமிடம் பெற்ற நகராட்சிக்கு ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்ற நகராட்சிக்கு ரூபாய் 5 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும்.
பேரூராட்சிக்கான விருது
[தொகு]தமிழ்நாட்டிலுள்ள பேரூராட்சிகளில் சிறந்த நகராட்சிகளாகத் தேர்வு செய்யப்படும் மூன்று பேரூராட்சிகளில் முதலிடம் பெற்ற பேரூராட்சிக்கு ரூபாய் 10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். இரண்டாமிடம் பெற்ற பேரூராட்சிக்கு ரூபாய் 5 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும். மூன்றாமிடம் பெற்ற பேரூராட்சிக்கு ரூபாய் 3 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படும்.
இதையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Nadu women get 50 per cent quota in local bodies". deccanchronicle. 20 February 2016. https://www.deccanchronicle.com/nation/current-affairs/210216/tamil-nadu-women-get-50-per-cent-quota-in-local-bodies.html.
- ↑ "Jayalalithaa Thanks MLAs for Adopted Bills Providing 50 Percent Reservation for Women in Local Bodies". newindianexpress. 21 February 2016. https://www.newindianexpress.com/cities/chennai/2016/feb/21/Jayalalithaa-Thanks-MLAs-for-Adopted-Bills-Providing-50-Percent-Reservation-for-Women-in-Local-Bodies-895164.html.
- ↑ "Ordinance for indirect election of mayors, municipal chairmen promulgated in Tamil Nadu". 21 November 2019 – via www.thehindu.com.
- ↑ "Rural Development & Panchayat Raj Department, Government of Tamil Nadu, India". www.tnrd.gov.in.
- ↑ "Directorate of Town Panchayats, Government of Tamil Nadu". www.tn.gov.in.
- ↑ தமிழகத்தில் முதல்முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகள்[தொடர்பிழந்த இணைப்பு] (தினமணி செய்தி)