உள்ளடக்கத்துக்குச் செல்

கஸ்தூரிபாய் காந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1902ல் மோகன்தாசு கரம்சந்த்காந்தி-கஸ்தூரிபாய்
1930ல் மகாத்மாகாந்தி-கஸ்தூரிபாய்

கஸ்தூரிபாய் (Kasturba Gandhi, ஏப்ரல் 11 1869பெப்ரவரி 22 1944) மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர்.

இளமை

[தொகு]

இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும் வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார்[1] கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.

அரசியல்

[தொகு]

கணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார். 1897 ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்ட மயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.

இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913 ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

விடுதலைப் போரில் ஈடுபாடு

[தொகு]

1915ல் இந்தியாவிற்கு திரும்பியபின் இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.

சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஓர் இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.

இறுதிகாலம்

[தொகு]
ஆகா கான் அரண்மனையில் கஸ்தூரிபாய் காந்தி மற்றும் மகாதேவ தேசாயின் சமாதிகள், புனே

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.[2]

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]