இந்தியாவில் சோசலிசம்
இந்தியாவில் சமவுடைமை அல்லது சோசலிசம் பேரரசுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்போதே நிலைபெற்று நீண்ட வரலாற்றை உடையது; நாட்டின் அரசியல் மரபுடைமை வரலாற்றில் பெரும் பங்கு கொண்டது.
வரலாறு
[தொகு]உருசியப் புரட்சியின் போதே இந்தியாவிலும் சமவுடைமை இயக்கம் உருவாகத் துவங்கியது. இருப்பினும், 1871இலேயே கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு குழு அனைத்துலக தொழிலாளர்களின் ஒன்றியத்தின் இந்தியக் கிளையைத் துவங்க கார்ல் மார்க்சை அணுகினர். ஆனால் அது ஈடேறவில்லை.[1] மார்க்சையும் ஏஞ்செல்சையும் குறிப்பிட்டு இந்தியாவில் வெளியான முதல் ஆங்கிலக் கட்டுரை மார்ச் 1912இல் மாடர்ன் ரிவ்யூ என்ற கொல்கத்தா சஞ்சிகையில் வெளியானது. இதில் செருமனியில் வாழ்ந்த இந்தியப் புரட்சியளர் லாலா ஹர் தயாள் எழுதிய கார்ல் மார்க்சு – நவீன இருடி என்ற குறும் வாழ்க்கை வரலாறு வெளியானது.[2] கார்ல் மார்க்சின் வாழ்க்கை வரலாறு முதன்முதலாக ஓர் இந்திய மொழியில் வெளியானது 1914இல் ஆர். இராமகிருஷ்ணப் பிள்ளையால் எழுதப்பட்டதாகும்.[3]
இந்திய ஊடகங்களில் உருசியப் புரட்சியின் பெரும் தாக்கம் காணப்பட்டது. அனைத்து நாடுகளுக்கும் தங்களை வரையரைத்துக் கொள்ளும் உரிமையை போல்ஷ்விக் கொள்கை முன்னிறுத்தியது இந்தியர்களைக் கவர்ந்தது. புதிய உருசிய ஆட்சியையும் லெனினையும் பாராட்டிய பிரபல இந்தியர்களில் பிபின் சந்திரப்பாலும் , பால கங்காதர திலக்கும் முதன்மையானவர்கள். உருசியப் புரட்சியைக் குறித்து அறிந்தவுடனேயே அப்துல் சத்தர் கைரியும் அப்துல் சபார் கைரியும் மாசுகோ சென்று லெனினை சந்தித்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்தியாவில் பொதுவுடமைக் கருத்துக்கள் பரவ கிலாபத் இயக்கமும் பெரும் பங்காற்றியது. கலீபகத்தை காப்பாற்ற பல இந்திய முசுலிம்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். அவர்களில் பலர் சோவியத் ஒன்றியத்தில் பயணம் புரிந்தவேளையில் பொதுவுடமைக் கொள்கையால் கவரப்பட்டனர். இவர்களுடன் பல இந்துக்களும் சோவியத்தின் பல பகுதிகளுக்கு வருகை பரிந்தனர்.[4]
லெனினின் பொதுவுடைமை (போல்ஷ்விக்) கொள்கைகளுக்கு வளர்ந்துவந்த ஆதரவினால் கவலையடைந்த குடியேற்றவாத அரசு இக்கொள்கை இசுலாமிற்கு எதிரானதாக பத்வா வெளியிடச் செய்தனர். இந்தியாவிற்குள் மார்க்சியப் புத்தகங்கள் இறக்குமதியாவதை சுங்கத்துறையினர் தடுத்தனர். உள்துறை அமைச்சில் பொதுவுடமைக் கொள்கைகளின் தாக்கத்தை கண்காணிக்கத் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இக்கொள்கைகளுக்கு எதிரானப் பல நூல்கள் வெளியாயின.[5]
முதல் உலகப் போரின் முடிவில் இந்தியாவில் தொழில்துறை விரைவாக முன்னேறியது. அதேநேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏற்றமடைந்தன. இக்காரணங்களால் இந்தியாவில் தொழிலாளர் சங்கங்கள் உருவாகத் துவங்கின. பெருநகரப் பகுதிகளில் உருவான இச்சங்கங்கள் வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட்டன. 1920இல் அனைத்திந்திய தொழிற்சங்கக் காங்கிரசு உருவானது.[6]
சான்றுரைகள்
[தொகு]- ↑ M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front – Experience in Kerala and West Bengal. ஐதராபாத்து: Prajasakti Book House, 2003. p. 103
- ↑ M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front – Experience in Kerala and West Bengal. ஐதராபாத்து: Prajasakti Book House, 2003. p. 82, 103
- ↑ M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front – Experience in Kerala and West Bengal. ஐதராபாத்து: Prajasakti Book House, 2003. p. 82
- ↑ M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front – Experience in Kerala and West Bengal. ஐதராபாத்து: Prajasakti Book House, 2003. p. 83
- ↑ M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front – Experience in கேரளம் and மேற்கு வங்காளம். ஐதராபாத்து: Prajasakti Book House, 2003. p. 82-83
- ↑ M.V.S. Koteswara Rao. Communist Parties and United Front – Experience in Kerala and West Bengal. ஐதராபாத்து: Prajasakti Book House, 2003. p. 83-84