உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
microscopic view of E. Coli a Thompson's Gazelle in profile facing right
a Goliath beetle facing up with white stripes on carapace A tree fern unrolling a new frond
உயிரியல், வாழும் உயிரிகளைப் பற்றிய அறிவியல்புலம் ஆகும்.
உயிரியல்

உயிரியல் என்பது வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். உயிரியலில் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு அல்லது படிமலர்ச்சி, பரம்பல், உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படுகின்றன.[1][2]. இப்புலம் உயிரினங்களுடைய இயல்புகளையும் நடத்தைகளையும், எப்படி தனிப்பட்ட உயிரினங்களும், உயிரின இனங்களும், தோற்றம் பெற்றன என்பதையும் அவை தங்களுக்குள்ளும், ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகளையும் பற்றிக் கருத்தில் கொள்கிறது.

உயிரியலின் வரலாறு

[தொகு]

நவீன உயிரியல் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சி அடைந்து இருப்பினும், உயிரியலை உள்ளடக்கியதும் அதனுடன் தொடர்பானதுமான அறிவியல் தொல்பழங்காலத்தில் இருந்தே கற்கப்பட்டது. இயற்கை தத்துவம் மொசப்பத்தேமிய, எகிப்திய, சிந்துவெளி, சீன நாகரிகங்களில் இருந்தே கற்கப்பட்டது. இருப்பினும், நவீன உயிரியலும் இயற்கை ஆய்வும் அதன் அணுகுமுறை தோற்றம் என்பன பெரும்பாலும் பண்டைய கிரேக்க இயற்கை மெய்யியலோடு பெரிதும் தொடர்பு கொண்டுள்ளமை தெளிவாகிறது. அதேவேளை மருத்துவ முறையான கல்வி இப்பொகிரேட்டசு (Hippocrates) காலம் (கி.மு.460-கி.மு.370) வரை பின்னோக்கி செல்கிறது. அரிஸ்டாடில் உயிரியல் வளர்ச்சிக்கு மிகவும் பங்களித்துள்ளார்.

இடைக்கால இசுலாமிய உலக அறிஞர்களான அல்-சாகிசுவும் (al-Jahiz) (781–869), அல்-தினவாரும் (Al-Dinawari) (828–896) தாவரவியல் பற்றியும் , இராசெசு (Rhazes) (865–925) உடற்கூறியல் பற்றியும் உடலியங்கியல் பற்றியும் நூல்களை எழுதினர். குறிப்பாக கிரேக்க மெய்யியல் அறிவு மரபுகளை ஆய்வு செய்த இஸ்லாமிய அறிஞர்களால் மருத்துவம் சிறப்பாக கற்கப்பட்டது. அந்தோனி வான் இலியூவன்கோக் (Antony van Leeuwenhoek) நுண்ணோக்கியை மேம்படுத்திய பின் உயிரியல் விரைவில் விரிவாக வளரத் தொடங்கியது. இதன் பின்னரே விந்தணுக்களும் பாக்டீரியா எனும் குச்சுயிரியும் நுண்ணோக்கி அங்கிகளின் பாகுபாடும் கண்டுபிடிக்கப்பட்டன. நுண் நோக்கியியல் முன்னேற்றங்கள் உயிரியல் சிந்தனையில் மேலும் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உயிரியலாளர்கள் பலர் உயிர்க்கலத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். 1838 மற்றும் 1839 இல், செல்டியனும் சுவானும் பின்வரும் கருத்துக்களை ஊக்குவிக்கத் தொடங்கினர். 1) உயிரினங்களின் அடிப்படை அலகு உயிர்க்கலம் ஆகும் 2) தனிப்பட்ட உயிர்க்கலங்களில் வாழ்வின் அனைத்து பண்புகளும் உண்டு 3) அனைத்து உயிர்க்கலங்கள் மற்ற உயிர்க்கலங்களின் பகுப்பில் இருந்தே உருவாகின்றன. இவை பின்னர் உயிர்க்கலக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டன .

உயிரியல் புலங்கள்

[தொகு]

உயிரியல் ஒரு பரந்த அளவிலான, தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்வித் துறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாகப் பல படிநிலை மட்டங்களில் உயிரினங்கள் பற்றியும், அவை வாழும் சூழல் பற்றியும் ஆய்வு செய்வதோடு, உயிரின வகைகளும் அவற்றை ஆயும் சிறப்பு முறைகள் பற்றியும் கூட ஆய்வு செகின்றன.

இழையம் அல்லது திசுக்களின் இயற்பியல், வேதியியல் செயல்பாடுகளைப் பற்றிய அறிவியல் உடலியங்கியல் ஆகும்.

இவ்வாறே, மேலும் பல கற்கைத்துறைகளின் ஊடாக, உயிரியல் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றது.[3]

நவீன உயிரியலின் அடிப்படைகள்

[தொகு]

உயிரியலில் பல கோட்பாடுகள் இருந்தாலும், நவீன உயிரியலுக்கு அடிப்படையாக முதன்மை வாய்ந்த ஐந்து கோட்பாடுகள் கீழே கருதப்படுகின்றன:[4]

  • கலக்கோட்பாடு - உயிர்க்கலங்களுடன் தொடர்புடைய அனைத்துக் கற்கைகளும் கலக்கோட்பாட்டில் அடங்கும். அனைத்து உயிரினங்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவகை உயிர்க்கலங்களைக் கொண்டிருக்கும். உயிரிகளின் கட்டமைப்பு வகையிலும் தொழிற்பாட்டு வகையிலுமான அடிப்படை அலகு உயிர்க்கலமாகும். அனைத்து உயிர்க்கலங்களும் முதலிலுள்ள கலங்களிலிருந்தே தோன்றும்.
  • படிமலர்ச்சிக் கோட்பாடு - மரபணுவில் ஏற்படும் மாற்றங்களாலும், இயற்கைத் தேர்வினாலும், ஒரு மக்கள்தொகையின் மரபுபேற்றுப் பண்புகள் தலைமுறைக்குத் தலைமுறை மாற்றமடையும். இதனால் புதிய இனங்களும், பரம்பரையாகக் கடத்தப்படக்கூடிய இயல்புகளும் உருவாகின்றன என படிமலர்ச்சிக் கோட்பாடு கொள்கிறது.
  • ஆற்றல் - அனைத்து உயிரினங்களின் நிலைப்பாட்டிற்கும் ஆற்றல் தேவைப்படுகின்றது. அந்த ஆற்றலை ஒரு வடிவத்தில் உள்ளெடுத்து, தமக்குத் தேவையான வடிவத்தில் உருமாற்றம் செய்துகொள்ளும் தன்மையை உயிரினங்கள் கொண்டிருக்கின்றன.
  • அகநிலைப்புக் கோட்பாடு - அனைத்து உயிரினங்களும் தமது உடற்சூழலை நிலையாகவும், மாறாமலும் பேணிச் சீரமைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும் என அகநிலைப்புக் கோட்பாடு கொள்கிறது..
  • மரபனியல் கோட்பாடு – மரபன் எனும் மரபணுவே மரபுபேற்றுக்கான அடிப்படை அலகாகும் என மரபனியல் கோட்பாடு கருதுகிறது.. ஓர் உயிரினத்தின் பண்புகள் அனைத்தும் டி.என்.ஏ எனும் மரபனில் இருக்கும்.

உயிரியலில் படிநிலை அமைப்பு

[தொகு]

உயிரியல் அமைப்பானது, பல்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. வாழ்வின் மிக அடிப்படையான கூறிலிருந்து, சிக்கலான அமைப்புக்கள்வரை இந்தப் படிநிலைகள் விரிந்து செல்கின்றன. இந்தப் படிநிலைகளில் மிகவும் அடிப்படையான படிநிலையாக அணுவும், மிக உயர்ந்த படியாக சூழலியல் அமைப்பும் இருக்கின்றன.

உயிரியல் கிளைப்பிரிவுகள்

[தொகு]

பின்வருவன உயிரியலின் கிளைப்பிரிவுகள் ஆகும்:[5][6]

படங்களின் தொகுப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Based on The Free Dictionary The Free Dictionary
  2. Based on definition from Aquarena Wetlands Project glossary of terms. பரணிடப்பட்டது 2004-06-08 at the வந்தவழி இயந்திரம்
  3. "Life Science, Weber State Museum of Natural Science". Community.weber.edu. Archived from the original on 2016-01-06. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
  4. Avila, Vernon L. (1995). Biology: Investigating life on earth. Boston: Jones and Bartlett. pp. 11–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86720-942-9.
  5. "Branches of Biology". Biology-online.org. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
  6. "Biology on". Bellaonline.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்&oldid=3947174" இலிருந்து மீள்விக்கப்பட்டது