நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து விலகுவது ஏன்? கட்சிக்குள் என்ன நடக்கிறது?

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவது ஏன்?

பட மூலாதாரம், NAAM TAMILAR KATCHI

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து விலகுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

தலைமையே தவறு செய்யும்போது கட்சியில் தொடர விரும்பவில்லை எனக் கூறுகிறார், மருத்துவ பாசறையின் மாநில நிர்வாகியாக இருந்த இளவஞ்சி.

'விருப்பம் இருந்தால் கட்சியில் இருக்கலாம். இல்லாவிட்டால் போய்விடலாம்,' என்கிறார் சீமான்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் பலரும் விலகுவது ஏன்? இதற்கு சீமான் கூறும் விளக்கம் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொறுப்பாளர் கரு.பிரபாகரன், திருச்சி மண்டல பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர், கடந்த அக்டோபர் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினர்.

இவர்களைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் விலகியது, நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

'ஒரே பதில்... விலகிவிட்டேன்'

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், 'தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது, எங்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை. இதுகுறித்து கேட்டால், கட்சியில் இருந்து வெளியேறுமாறு சீமான் கூறினார்" என்கிறார்.

இரண்டு முறை இதே பதிலை கட்சித் தலைமை கூறியதால், கட்சியில் இருந்து விலகியதாக கூறும் சுகுமார், "கட்சியின் பொறுப்பாளர்களை ஒரு பொருட்டாகவே சீமான் எடுத்துக் கொள்வதில்லை. கட்சிக்காக பண விரயம் செய்ய வேண்டும். ஆனால், கேள்வி கேட்டால் பதில் கிடைப்பதில்லை" என்கிறார்.

மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த டாக்டர் இளவஞ்சியும் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய இளவஞ்சி, "நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த முதல் மருத்துவர் நான்தான். 14 வருடங்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற சாதாரண பதவியில் இருக்கிறேன். இதே அணியில் எனக்குப் பின்பு வந்தவர்களுக்கு தலைவர், துணைத் தலைவர் எனப் பதவி கொடுத்தார் சீமான். என்னை செயல்படவே விடவில்லை" என்கிறார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவது ஏன்?

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, டாக்டர் இளவஞ்சி

'யார் பொதுச்செயலாளர்... யார் பொருளாளர்?'

முன்னதாக, சீமானுக்கு நெருக்கமாக இருந்த சென்னை மாவட்ட நிர்வாகி புகழேந்தி மாறன், அக்கட்சியில் இருந்து விலகினார். மேற்கு மண்டல பகுதியில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான ராஜா அம்மையப்பனும் கட்சியில் இருந்து விலகினார். இவர் மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்திருந்தார்.

தனது முடிவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ராஜா அம்மையப்பன், 'நான் பயணிக்கும் கட்சியில் யார் பொதுச்செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமல் பயணிக்க விரும்பவில்லை. வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டவர்களில் சிலரை தவிர பலரை களத்தைப் பார்த்ததில்லை' எனக் கூறியிருந்தார்.

இதே கருத்தைக் கூறி கட்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறியிருக்கிறார், நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவேந்திரன்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவது ஏன்?

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, தேவேந்திரன்

செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேவேந்திரன், "இந்தக் கட்சியில் பொதுச்செயலாளர் யார்..பொருளாளர் யார் என்று தெரியாது. எந்த தகவல் கேட்டாலும் பதில் வருவதில்லை. ராணுவ பணியை துறந்து இந்தக் கட்சிக்குள் வந்தேன். இதே பாதையில் பயணித்தால் தமிழ்த்தேசியம் வெல்லாது" எனக் கூறியுள்ளார்.

அடுத்ததாக, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதாக, திங்கள் அன்று (நவம்பர் 11) சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக், 'நாகப்பட்டினத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் த.வெ.கவில் இணைந்ததாக கூறியுள்ளனர். அதில், ஒருவர் கூட நாம் தமிழர் இல்லை. இது பொய்யான தகவல்' எனத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவது ஏன்?

பட மூலாதாரம், HANDOUT

ஆடியோ சர்ச்சை

அதேநேரம், நாம் தமிழர் நிர்வாகிகள் குறித்து சீமான் பேசிய சில உரையாடல்கள் ஆடியோ வடிவில் பொதுவெளியில் பரவியதும் நிர்வாகிகள் விலகலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

குறிப்பாக, அக்கட்சியின் நிர்வாகி காளியம்மாளை சீமான் விமர்சித்துப் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது.

பெண்களை விமர்சித்துப் பேசியது தொடர்பான ஆடியோ வெளிவருவது தனக்கு மனவலியை தந்ததாக இளவஞ்சி கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கட்சி நிர்வாகியான காளியம்மாளை சீமான் விமர்சித்த ஆடியோ வெளிவந்தது. சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள பெண் ஒருவரை விமர்சித்த ஆடியோவும் வெளியானது.

இதைப் பற்றி என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. இதைப் பற்றி கட்சியில் உள்ள மகளிரிடம் விவாதித்தோம்.

உடனே, ஆடியோவை நாங்கள் பரப்புவதாக குற்றம் சுமத்தினர். பெண்களைத் தவறாகப் பேசுவதை எவ்வளவு நாட்கள் சகித்துக் கொள்ள முடியும்?" எனக் கேள்வி எழுப்புகிறார்

"கட்சிக்கு மருத்துவ பாசறை இருந்தாலும், மருத்துவம் சார்ந்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கட்சியில் எந்த அங்கீகாரமும் கொடுக்கப்படுவது இல்லை," என்கிறார் இளவஞ்சி.

"உங்கள் குறைகளை சீமானை நேரில் சந்தித்துக் கூறியிருக்கலாமே?" என்று கேட்ட போது, "யார் மீதேனும் தவறு இருந்தால் சீமானிடம் சொல்லலாம். அவரிடமே தவறு இருந்தால் யாரிடம் சொல்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.

"ஆடியோ விவகாரத்தில், தொழில்நுட்பத்தை வைத்து தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டதாகக் கூட சீமான் கூறியிருக்கலாம். ஆனால் தான் பேசியதாக அவரே ஒப்புக் கொள்கிறார். இதற்கு மேலும் அந்தக் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை" என்கிறார் இளவஞ்சி.

சீமானின் பதில் என்ன?

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவது ஏன்?

பட மூலாதாரம், SEEMAN

நாம் தமிழர் கட்சியில் இருந்து மண்டல, மாவட்ட நிர்வாகிகள் விலகுவது குறித்து, சென்னையில் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்களுக்கு என்ன மரியாதையோ அது உரிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

வேட்பாளர் தேர்வு சர்ச்சை குறித்துப் பேசிய சீமான், "வேட்பாளர்களை கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க முடியாது. விருப்பம் இருந்தால் கட்சியில் இருக்கலாம். இல்லாவிட்டால் போய்விடலாம். அது என்னுடைய பிரச்னை. என் கட்சியின் பிரச்னை" என்றார்.

"வேட்பாளரை அவர்களே தேர்வு செய்வார்கள் என்றால் இந்தக் கட்சியை நான் நடத்த வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறிய சீமான், "பேருந்தில் அமர்ந்துள்ள ஒவ்வொருவரிடமும், இந்த வண்டியை எப்படி ஓட்டுவது எனக் கேட்க முடியாது" என்றார்.

சிலர் விலகி செல்வது பலவீனம் அல்ல என்று கூறும் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவது ஏன்?

பட மூலாதாரம், HANDOUT

கடந்த மூன்று மாதங்களாக, ‘நாம் தமிழர் கூடாரம் காலியாகிறது’ என்பது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் மூலம் சிலர் பெரிதாக்குவதாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையில் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கூறுகிறார், "கட்சியை தொடங்கிய நாளில் இருந்து கட்சியை விட்டு சிலர் விலகிச் செல்வதும் இணைவதும் இயல்பாக நடக்கிறது" என்கிறார் அவர்.

"நாம் தமிழர் கட்சியில் தான் ஜனநாயகம் உயிர்ப்போடு உள்ளது. இங்கு அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. எந்தவித பின்புலமும் இல்லாதவர்கள் கூட உயர்த்தப்படுகின்றனர்" என்கிறார், இடும்பாவனம் கார்த்திக்.

கட்சியை விட்டு வெளியேறுகிறவர்களுக்கு காரணம் தேவைப்படுகிறது. அதற்காக, ‘உள்கட்சி ஜனநாயகம் இல்லை, பெண்களை மதிப்பது இல்லை’ எனக் காரணங்களை கற்பிப்பதாக கூறுகிறார் இடும்பாவனம் கார்த்திக்.

மேலும், " கட்சியை விட்டு வெளியேறுகிறவர்கள், விமர்சனம் செய்வதும் அவதூறு பரப்புவதும் இயல்பான ஒன்றுதான். அதை நாங்கள் புறம் தள்ளுகிறோம்" என்கிறார்.

கட்சியில் இருந்து சிலர் பிரிந்து செல்வது பலவீனம் அல்ல எனக் கூறும் இடும்பாவனம் கார்த்திக், "மோசமான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்கும் போதுதான் ஒரு கட்சி பலவீனம் ஆகும். சிலர் பிரிந்து செல்வது பலவீனம் அல்ல" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)