பாம்பு போல நாக்கை இரண்டாக வெட்டி டாட்டூ - சிக்கிய இளைஞர் யார்? இதனால் என்ன ஆபத்து?

ஹரிஹரன் டாட்டூ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

திருச்சியில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வந்த இளைஞர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் நாக்கை இரண்டாகத் துண்டித்து, டாட்டூ போடுவது, கண்களில் நிறமி பூசுவது போன்றவற்றைச் செய்துள்ளார். மேலும், அவற்றைத் தனது இன்ஸ்டா பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? மனிதர்களின் நாக்கை பாம்பு போல மாற்றுவது ஏன்? டாட்டூ என்ற பெயரில் திருச்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நபர்கள் பிடிபட்டது எப்படி?

அதுகுறித்த வீடியோவில் பேசும் இளைஞரிடம் எந்தவித தயக்கமோ, அச்சமோ இல்லை. அவர் கைகாட்டும் இடத்தில் நாக்கு இரண்டாகத் துண்டிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு தையல் போடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

"இவ்வாறு அறுவை சிகிச்சை செய்வதை தவறு என அவர்கள் உணரவில்லை என்பதைவிட, அவர்கள் இதை ஒரு பெரிய பிரச்னையாகவே பார்க்கவில்லை" என்கிறார், திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

'ஏலியன் இமோ டாட்டூ' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் ஜெயராமனை கடந்த ஞாயிறு அன்று (டிசம்பர் 15) திருச்சி போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், மேல சிந்தாமணி அருகிலுள்ள பழைய கட்டடம் ஒன்றில், ஏலியன் இமோ டாட்டூ (Alien Emo tatto) என்ற பெயரில் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.

இந்தக் கடையை நடத்தி வந்த ஹரிஹரன் என்பவரை இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். 'ஹாய் ஏலியன்ஸ்' எனக் குறிப்பிட்டு, இவர் பேசும் காணொளிகளுக்கு ஒரு சாரார் மத்தியில் வரவேற்பு கிடைத்து வந்துள்ளது.

ஹரிஹரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்களுக்கு செயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்துவது, நாக்கைத் துண்டிப்பது, பல்வேறு வகை டாட்டூ போடுவது என உடல் அமைப்பு (body modification) மாற்றம் தொடர்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை 'கலாசாரம்' என்றே வீடியோ ஒன்றில் ஹரிஹரன் குறிப்பிடுகிறார்.

இரண்டு சம்பவங்கள்

கடந்த டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு பேருக்கு நாக்கைத் துண்டித்து ஹரிஹரன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறுகிறார், கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி.

இதுதொடர்பாக ஹரிஹரன் பதிவேற்றிய இரண்டு காணொளிகள், காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாம்பு போல மனிதர்களின் நாக்கை இரண்டாகத் துண்டித்து, அதற்கு நிறமூட்டும் வேலைகளைச் செய்வதை ஒரு சாதனையாக வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் 25 வயதான ஹரிஹரன் மற்றும் 24 வயதான ஜெயராமனை கோட்டை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.

ஹரிஹரன் டாட்டூ

பட மூலாதாரம், alien_emo_tattoo/Instagram

தனது நாக்கையும் மும்பை சென்று துண்டித்து நிறமூட்டியதாக காவல்துறை விசாரணையில் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இதற்காக 2 லட்ச ரூபாய் வரை செலவு ஆனதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவரது டாட்டூ கடையில் நடத்தப்பட்ட சோதனையில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்திகள், பிளேடு, ஊசி, மயக்க மருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

கைதான இருவர் மீதும் 118 (1), 125, 123, 212, 223 BNS, 75, 77 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு நபர் வேண்டுமென்றே ஆபத்தான கருவிகளைப் பயன்படுத்தி வேறு ஒருவருக்குத் தீங்கு விளைவிப்பதைக் குற்றம் என சட்டப் பிரிவு 118 (1) கூறுகிறது.

பி.என்.எஸ் (பாரதிய சன்ஹிதா) சட்டப்பிரிவு 123இன்படி, ஒருவருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் நச்சு, மயக்கம், தீங்கு விளைவிக்கும் பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்துக் கூறுகிறது.

இந்த வகையான குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹரிஹரன் டாட்டூ

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, டாட்டூ போடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள்

இந்த வழக்கு குறித்து மேலதிக தகவல்களை பிபிசி தமிழிடம் விவரித்த கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி, "டாட்டூ கடையில் வைத்தே அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால், அதுதொடர்பான படிப்பறிவோ, முறையான உரிமமோ ஹரிஹரனிடம் இல்லை," என்றார்.

"கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவனுக்கு நாக்கைத் துண்டாக்கும் சிகிச்சையை ஹரிஹரன் செய்துள்ளார். மைனர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது தீவிர குற்றம் என்பதால் வழக்குப் பதிவு செய்தோம்" என்று நடந்ததை விவரித்தார்.

டாட்டூ வடிவங்களில் புதுப்புது மாதிரிகளை அறிமுகப்படுத்தி, 'ஜென் இசட்' தலைமுறையினரைக் கவர்வதற்காக இதுபோன்று ஹரிஹரன் செயல்பட்டு வந்துள்ளதாகவும் கோட்டை காவல் நிலைய போலீசார் கூறுகின்றனர்.

'அபாயகரமான கருவிகள்'

மாநகராட்சியில் உரிமம் பெறாமல் டாட்டூ கடையை ஹரிஹரன் நடத்தி வந்ததாகக் கூறுகிறார், திருச்சி மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் விஜய் சந்திரன்.

"எந்தக் கண்காணிப்பு வளையத்திலும் இந்தக் கடை இல்லை. மாநகராட்சி சட்டப்படி கடை நடத்தப்படவில்லை என்பதால் உடனே சீல் வைக்கப்பட்டுவிட்டதாக," அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"நாக்கைத் துண்டாக்கும்போது, மயக்க மருந்தை நாக்கில் ஹரிஹரனே செலுத்தியுள்ளார். அதே ஊசியை வேறு நபர்களுக்குப் பயன்படுத்தியுள்ளாரா எனத் தெரியவில்லை" எனக் கூறுகிறார் விஜய் சந்திரன்.

நாக்கை இரண்டாக துண்டித்து டாட்டூ: பாம்பு போல மாற்றுவதால் என்ன ஆபத்து? திருச்சியில் சிக்கிய கும்பல் சொன்னது என்ன?

பட மூலாதாரம், Vijaychandran

படக்குறிப்பு, இவ்வாறு செய்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகிறார், விஜய் சந்திரன்

இவ்வாறு செய்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

"கண்களுக்கு ஊசி மூலம் செயற்கை நிறங்களைச் செலுத்தி நிறமூட்டும் வேலையைச் செய்துள்ளார். நாக்கு துண்டிக்கப்பட்ட இருவருக்கும் கண்களில் நிறமூட்டூம் வேலையை அவர் செய்யவில்லை" எனக் கூறுகிறார் விஜய் சந்திரன்.

"உடற்பாகங்களில் துளையிட்டு டாட்டூ போடுவதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் ஊசிகள், பிளேடு ஆகியவற்றைக் கையாண்டுள்ளார். இந்தக் கருவிகளை கிருமி நாசினி மூலம் முறையாகச் சுத்தப்படுத்தவில்லை. இவை பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக் கூடியவை என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்கிறார், மருத்துவர் விஜய் சந்திரன்.

நாக்கை இரண்டாக துண்டித்து டாட்டூ: பாம்பு போல மாற்றுவதால் என்ன ஆபத்து? திருச்சியில் சிக்கிய கும்பல் சொன்னது என்ன?

பட மூலாதாரம், alien_emo_tattoo/Instagram

படக்குறிப்பு, கத்திகள், பிளேடு, ஊசி, மயக்க மருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

மேற்கொண்டு பேசிய விஜய் சந்திரன், "நாக்கைத் துளையிடுவது, மூக்கில் வளையம் போடுவதற்கு சில கருவிகளை ஹரிஹரன் வைத்துள்ளார். அவையெல்லாம் மிகவும் அபாயகரமானவை. சற்று வேகமாக அழுத்தினால்கூட மனிதர்களின் மூக்குப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுவிடும்" என்றார்.

தன்னிடம் நாக்கை வெட்டிக் கொண்டவர்களுக்கு சில வாக்குறுதிகளை ஹரிஹரன் கொடுத்துள்ளதாகவும் மருத்துவர் விஜய் சந்திரன் தெரிவித்தார்.

"நாக்கைத் துண்டாக்கி அழகுபடுத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் புரொமோட் செய்தால், பிரதிபலனாக திருவெறும்பூர் மற்றும் திருச்சியின் மையப் பகுதியில் புதிதாகத் தொடங்கவுள்ள டாட்டூ மையங்களை அவர்களுக்கே கொடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்" என்றார் விஜய் சந்திரன்.

நாக்கைத் துண்டிப்பதால் என்ன நடக்கும்?

"சமூக ஊடகங்களில் காணொளிகளைப் பார்த்துவிட்டு, அறிவியலுக்கு மாறான செயல்களைச் செய்யும்போது அவை உயிருக்கு ஆபத்தாக முடியும்" என்று எச்சரிகிறார், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணி ராஜன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒருவர் பேசுவதற்கு நாக்கு மிக முக்கியம். நாக்கைத் துண்டிக்கும்போது பேச்சுத் திறன் பாதிக்கும்; சுவை உணர்வு பறிபோகும். இவ்வாறு செய்வதால் சரியாகப் பேசுவதில் குளறுபடி ஏற்படும்" என்றார்.

வளரிளம் பருவத்தில் உள்ளவர்களின் மனதில் இதுபோன்ற காணொளிகள் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் தேரணிராஜன், "கண்ணில் நிறங்களைச் செலுத்தும்போது பார்வைத் திறனில் பாதிப்பு ஏற்படும். விழித்திரைப் படலத்திற்குள் ஊசியைச் செலுத்தி நிறமூட்டும்போது கண் பார்வையே போய்விடும்" என்கிறார்.

டாட்டூ - உளவியல் பின்னணி என்ன?

மருத்துவர் தேரணிராஜன்

பட மூலாதாரம், TheraniRajan

படக்குறிப்பு, இப்படி டாட்டூ போடுவது, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார், மருத்துவர் தேரணிராஜன்

"தங்களின் உடலை வருத்தி டாட்டூ போட்டுக் கொள்வது உளவியல் சிக்கலுக்கு உட்பட்ட ஒன்று" என்கிறார், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன்.

இயற்கைக்கு மாறாக, உடல் அமைப்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர் என்கிறார் மாலையப்பன்.

அந்த வகையில், "மிக அதிகமாக டாட்டூ குத்திக் கொள்ளும் சிலரின் பழக்கத்தை, இயல்பான நடத்தையாக (Normal behaviour) பார்க்க முடியாது" என்றும் மாலையப்பன் தெரிவித்தார்.

"பொதுவாகவே, தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது மனிதர்களின் இயல்பான குணம். அது அளவுடன் இருக்கும்போது எந்தவித பாதிப்பும் வரப் போவதில்லை" எனக் கூறுகிறார் மாலையப்பன்.

நாக்கில் டாட்டூ, ஹரிஹரன் கைது, மாலையப்பன்
படக்குறிப்பு, இயற்கையில் இருந்து பிறழும் நடவடிக்கையாக இதைக் கருதுவதாக, மாலையப்பன் கூறுகிறார்.

"இதை மனநோய் என்று அழைக்காமல், இயற்கையில் இருந்து பிறழ்ந்து போவதாகப் பார்க்கலாம். மற்றவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக உடல் உறுப்புகளை மாற்றிக் கொள்வதை உளவியல் சிக்கலாக அணுக வேண்டும்" என்கிறார் மாலையப்பன்.

அதோடு, இவ்வாறான உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகும் நபர்களை முறையாக மனநல ஆலோசனை வழங்கி நெறிப்படுத்தலாம் என்றும், வேறு எந்தெந்த வகைகளில் கவனத்தை ஈர்க்கலாம் என ஆலோசனை கொடுக்கும்போது அவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் விவரித்தார் அவர்.

டாட்டூ கடைகளில் ஆய்வு நடத்தக் குழு

டாட்டூ கடைகளை முறைப்படுத்துவதற்கு திருச்சி சம்பவம் உதாரணமாக மாறியுள்ளதாகக் கூறும் திருச்சி மாநகராட்சி நகர்நல அலுவலர் விஜய் சந்திரன், "மாநகராட்சியில் கடைகளைப் பதிவு செய்யும்போது 'ஆர்ட்டிஸ்ட்' எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால், நேரில் ஆய்வு நடத்தும்போது, அவை டாட்டூ கடைகளாக உள்ளன" என்கிறார்.

திருச்சி சம்பவத்தை ஆய்வு செய்வதற்காக மருத்துவ சேவைப் பணிகள் கழகத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)