4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?
- எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்
- பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாமர்செட் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 37 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும், அவர்களை மனிதர்களே உண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டனில் வெண்கலக் காலத்தின் ஆரம்பம் மிகவும் அமைதியானதாக இருந்த நிலையில், இதுதான் அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் 1970களில் குகைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இந்த எலும்புகளை வீசி எறிந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இந்தச் சம்பவம் 'பழிவாங்கும்' நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் எனவும், இதன் விளைவுகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் எதிரொலித்ததாகவும் கூறுகிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிக் ஷூல்டிங்.
இந்த வன்முறையில் இறந்தவர்களை "மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்கும் நோக்கிலும்" சடலங்களை "அவமதிக்கும் நோக்கிலும்" ஒரு சடங்காக உட்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
- ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?
- மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்
- வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு
- 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்
எத்தனை பேர் உயிரிழந்தனர்?
மூவாயிரத்திற்கும் அதிகமான எலும்புத் துகள்கள் சாமர்செட் பகுதியில் மெண்டிப் ஹில்ஸ் என்ற இடத்தில் சார்டர் வாரன் எனப்படும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாராய்ச்சியாளர்களால் சோதனை செய்யப்பட்டது.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என 37 பேர் உயிரிழந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அந்தக் காலத்தில் பிரிட்டனில் இருந்த கிராமங்களில் பெரும்பாலும் 50 முதல் 100 பேர் வரை வாழ்ந்து வந்தனர் என்றும் இந்தத் தாக்குதல் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிவின் விளிம்பில் தள்ளியிருக்கும் என்றும் தெரிவித்தனர்.
பிரிட்டனில் வெண்கல காலம் கி.மு. 2500-2000 முதல் கி.மு. 800 வரை நீடித்தது. இந்தக் காலகட்டத்தில்தான் மனிதர்கள், ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்கள் கல்லில் செய்யப்படுவதற்குப் பதிலாக வெண்கலத்தில் செய்யப்படத் தொடங்கினர். புதுப்புது விவசாய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன, பெரிய மற்றும் நிரந்தரமான நிலங்கள் பிரிக்கப்பட்டன.
கல்லால் ஆன ஆயுதங்களால் தாக்குதல்
இந்தத் தாக்குதல் திடீரென நடத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எந்தவித பதில் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு வல்லுநர்கள் தெரிவித்தனர்.
எலும்புகளில் காணப்படும் கீறல்கள் மற்றும் வெட்டுகள் ஆகிய அடையாளங்கள், தாக்குதல் நடத்தியவர்கள் வேண்டுமென்றே கல்லால் ஆன ஆயுதங்களைக் கொண்டு மனிதர்களைத் துண்டுகளாக வெட்டிச் சாப்பிட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
"இந்த அடையாளங்களை ஒரு விலங்கின் எலும்பில் பார்த்திருந்தால், சந்தேகமே இன்றி இரைச்சிக்காக இவை வெட்டப்பட்டுள்ளன என்பதைக் கூறிவிடுவோம்," என்கிறார் பேராசிரியர் ஷூல்டிங்.
தாக்குதல் நடத்தியவர்கள் மனிதர்களை பசி மற்றும் பஞ்சம் காரணமாக உண்ணவில்லை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏனென்றால், அருகில் இருந்த விலங்குகளின் எலும்புகள் போதுமான உணவு இருந்ததை உறுதி செய்கிறது.
இதுதான் இந்தக் காலகட்டத்தில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட பெரியளவிலான வன்முறை நிகழ்வு.
உறவுச் சிக்கலால் நிகழ்ந்ததா?
அந்தக் காலத்தில், வளங்களுக்கான தேடலில்தான் வன்முறை உருவானது என்பதை நிரூபிக்க மிகக் குறைந்த ஆதாரங்களே உள்ளன.
இதனால், உறவுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தகுந்த முறிவுதான் இந்த வன்முறைக்கு அடிப்படையான காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
"கோபம், பயம், மனக்கசப்பு போன்ற காரணங்களால் தூண்டப்பட்டால் மட்டும்தான் ஒரு மனிதரை இப்படி பல்வேறு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ய முடியும்," என்று கூறுகிறார் ஷூல்டிங்.
"இதை ஒரு தனிநபர் செய்யவில்லை. ஒரு சமூகத்தை அழிக்க மற்றொரு சமூகம் ஒன்றுகூடி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்," என்றார் ஷூல்டிங்.
"இது தவறு என்று நினைத்தீர்கள் என்றால், இதற்காக நீங்கள்தான் ஏதாவது செய்திருக்க வேண்டும். சட்டத்திடம் சென்று நியாயம் கேட்க முடியாது," என்றார் ஷூல்டிங்.
இந்த விஷயத்தில் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டு பக்கமும் வன்முறையை அதிகரிக்கும் ஆட்கள் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமடைந்து இருக்கும்.
பிரிட்டனில் வெண்கல காலத்தின் தொடக்கம் பெரும்பாலும் அமைதியான வன்முறையற்ற காலமாகவே கருதப்பட்டது. ஏனெனில் தாக்குதல்களுக்கான ஆதாரம் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டது.
வாள் அல்லது கோட்டைப் பாதுகாப்பு போன்ற அமைப்பு எதுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னர் இந்தக் காலகட்டத்தில் வெறும் 10 பேர் மட்டுமே இதுபோன்ற வன்முறைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதாக அறியப்பட்டிருந்தது, என்றார் ஷூல்டிங்.
வரலாறு வன்முறை மிகுந்ததா?
இது ஒருமுறை மட்டுமே நடந்த தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்தச் சம்பவத்திற்கு பின்விளைவுகள் இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.
"ஏதோ ஒரு கட்டத்தில் மக்கள் அனைவரும் இந்த வன்முறையில் இருந்து பின்வாங்கி, சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளனர்," என்றார் ஷூல்டிங்.
ஆனால், இதற்காகவே கடந்த காலம் வன்முறை மிகுந்து இருந்ததாக எண்ணிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் ஷூல்டிங்.
"வெண்கல காலத்தைத் தாண்டி மனிதனின் இயற்கை குணத்தைப் பற்றி அறிய இது நமக்கு வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன்," என்றார் அவர்.
இந்த ஆராய்ச்சி 'ஆன்ட்டிக்விட்டி' (antiquity) ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)