பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது?

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

மெல்போர்னில் நடந்து வரும் பாக்ஸிங் டே டெஸ்டின் இரண்டாவது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை அபாரமாக முடித்தது. ஆனால், இந்திய அணி பதிலடி தர முடியாமல் திணறி வருகிறது.

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல்நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் சேர்த்திருந்த ஆஸ்திரேலிய அணி இன்று 163 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை முடித்தது.

இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களுடன் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. ரிஷப் பந்த் 6 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரண்டாவது நாளில் கவனம் ஈர்த்தவை

பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருப்பதால் இந்தப் போட்டியும், அடுத்து வரும் சிட்னி டெஸ்ட் போட்டியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அது மட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி 3வது முறையாகத் தகுதி பெறுவதற்கு இரு டெஸ்ட் வெற்றிகள் தேவை என்பதால், இந்த டெஸ்ட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஸ்மித்தின் 34வது டெஸ்ட் சதம், இந்திய அணிக்கு எதிராக (11) அதிக சதம் அடித்து ஜோ ரூட்டின்(10 சதம்) சாதனையை முந்தியது, ஜெய்ஸ்வால் சதத்தைத் தவறவிட்டது, ஜெய்ஸ்வாலை ரன்-அவுட் ஆக்கிய கோலி, மூன்றாவது செஷனில் ஆட்டம் முடிய கடைசி 25 நிமிடங்கள் இருக்கையில் 6 ரன்களுக்குள் இந்திய அணி மளமளவென 3 விக்கெட்டுகளை இழந்தது ஆகியவை இரண்டாவது நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்தியாவுக்கு எதிராக ஸ்மித்தின் மைல்கல்

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் 34 வயதான ஸ்டீவ் ஸ்மித் பெர்த் டெஸ்டை தொடர்ந்து மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்து 140 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் அரங்கில் 34வது சதத்தைப் பதிவு செய்த ஸ்மித், இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய இங்கிலாந்தின் ஜோ ரூட் சாதனையை (10 சதம்) முறியடித்து 11வது சதத்தைப் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் அரங்கில் 10,000 ரன்களை எட்டவும் ஸ்மித்துக்கு இன்னும் 51 ரன்கள்தான் தேவைப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடியும் முன்பாக ஸ்மித் அந்த மைல்கல்லை எட்டுவார் எனத் தெரிகிறது.

ஸ்மித் 68 ரன்களுடன் இன்றைய 2வது நாள் ஆட்டத்தைத் தொடங்கி, 167 பந்துகளில் தனது 34வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். ஸ்மித்துக்கு துணையாக ஆடிய கேப்டன் கம்மின்ஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இன்று ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஸ்மித்தும், கம்மின்ஸும் வேகமாக ரன்களை சேர்த்தனர். இதனால் ஆஸ்திரேலிய ரன்ரேட் சீரான வேகத்தில் உயர்ந்தது. பும்ரா ஓவர் தவிர மற்ற எந்த இந்திய பந்துவீச்சாளர்களும் ஸ்மித்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் பந்துவீசவில்லை. கம்மின்ஸும் ஒரு கட்டத்தில் நிலைத்து ஆடத் தொடங்கி அரைசதத்தை நெருங்கினார். இன்னும் ஒரு ரன் எடுத்திருந்தால் கம்மின்ஸ் 4வது டெஸ்ட் அரைசதத்தை நிறைவு செய்திருப்பார். ஆஸ்திரேலிய அணி, முதல் 23 ஓவர்களில் 143 ரன்களை வேகமாகச் சேர்த்தது.

கடைசி வரை களத்தில் இருந்த ஸ்மித் 140 ரன்கள் (13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) சேர்த்து ஆகாஷ் தீப் பந்துவீச்சில் போல்டானார். ஸ்மித் ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டமானது. ஆகாஷ் தீப் வீசிய பந்தை விலகி வந்து ஆஃப் திசையில் ஸ்மித் அடிக்க முயன்றபோது, பந்து பேட்டில் பட்டு, அவரின் கால்காப்பில் பட்டு பிறகு ஸ்டெம்பில் பட்டது. இதுபோன்று போல்டானதை ஸ்மித் சற்றும் எதிர்பாராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஒருவேளை ஸ்மித் ஆட்டமிழக்காமல் இருந்தால், 150 ரன்களுக்கு மேல் குவித்திருப்பார்.

கடந்த 2023 ஜூன் மாதத்துக்குப் பின் டெஸ்ட் அரங்கில் சதம் விளாசமல் இருந்த ஸ்மித் பெர்த் டெஸ்டில் சதம் அடித்த பின் தொடர்ச்சியாக 2வது சதத்தைப் பதிவு செய்து இழந்த ஃபார்மை மீட்டுள்ளார்.

ஆரோக்கியமான கிரிக்கெட் சம்பவங்கள்

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம், Getty Images

பும்ராவின் பந்துவீச்சை ஸ்மித் இன்று மிகவும் ரசித்து பேட் செய்தார். பும்ராவின் துல்லியமான லென்த், ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க ஸ்மித் திணறினார். ஒரு கட்டத்தில் ஸ்மித்தால் விளையாட முடியாத வகையில் பும்ரா ஒரு ஸ்விங் பந்தை வீசினார்.

இந்தப் பந்தை எதிர்கொண்டபின் பும்ராவை பார்த்து கை கட்டைவிரலை உயர்த்தி பம்ப் செய்து ஸ்மித் பாராட்டினார். அதேநேரம் பும்ராவின் பந்தில் ஸ்மித் சிக்ஸர் விளாசியபோதும், பும்ரா சிரித்துக்கொண்டே சென்றார்.

ஸ்மித் டெஸ்ட் அரங்கில் 34வது சதம் விளாசிய நிலையில் அவரின் தோள்பட்டையில் தட்டிக்கொடுத்து விராட் கோலி பாராட்டு தெரிவித்தார்.

ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா?

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம், Getty Images

ஜெய்ஸ்வால், கோலி இடையிலான பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அதேநேரம், கோலியின் ஒத்துழைக்காத போக்குதான் இந்த பார்ட்னர்ஷிப் உடையக் காரணமாக இருந்ததாகவும் விவாதிக்கப்படுகிறது. மூன்றாவது விக்கெட்டுக்கு கோலி-ஜெய்ஸ்வால் கூட்டணி 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் 81 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் 150 ரன்களை அடித்த ஜெய்ஸ்வால், அதன்பின் 2 டெஸ்ட்களிலும் பெரிதாக ஆடாத நிலையில் இந்த ஆட்டத்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.

இவருக்குத் துணையாக ஆடிய கோலி, 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவினாலும் இருவருக்கும் இடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததால் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் ரன்-அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொதுவாக டெஸ்ட் போட்டியில் வேகமாக ஓடி ரன் எடுக்க வேண்டிய தேவையில்லை. ஸ்ட்ரைக்கையும் ரொட்டேட் செய்ய இது டி20 ஆட்டமும் இல்லை. அப்படியிருக்கும்போது ஜெய்ஸ்வால் மிட்-ஆன் திசையில் தட்டிவிட்டு கோலியை வேகமாக ஒரு ரன்னுக்கு ஏன் அழைத்தார் எனத் தெரியவில்லை. கோலியிடம் இருந்து எந்த சமிக்ஞையும் வராத நிலையில் பேட்டில் பந்து பட்டவுடனே ஜெய்ஸ்வால் ஏன் வேகமாக ஓடினார், கோலி க்ரீஸை விட்டு நகராத நிலையில் கோலியின் இடத்திற்கே ஜெய்ஸ்வால் ஏன் வந்தார் என்பது கேள்வியாக இருக்கிறது.

ஆனால், இதில் யார் மீது தவறு உள்ளது, ஏன் கோலி க்ரீஸை விட்டு நகரவில்லை, ஜெய்ஸ்வால் சதத்தை நெருங்கிய நிலையில் நல்ல ஃபார்மில் இருக்கும்போது கோலி ஏன் விக்கெட்டை தியாகம் செய்யவில்லை என்ற கேள்வி சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

அதேவேளையில், ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது முற்றிலும் சரியான தகவல் தொடர்பு இல்லாததால் வந்த விளைவுதான் எனவும், நீடித்து ஆட வேண்டிய இருவருக்கும் இடையே சரியான தகவல் தொடர்பு இல்லாததால் வலுவான பார்ட்னர்ஷிப் உடைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் விவாதிக்கின்றனர்.

மந்தமான ரோஹித்தின் பேட்டிங்

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

கேப்டன் ரோஹித் சர்மா கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் நடுவரிசையில் களமிறங்கிய நிலையில் இந்த டெஸ்டில் மீண்டும் தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் புதிய பந்தில் கம்மின்ஸ் பந்துவீச்சை சமாளிக்க ரோஹித் சர்மா தொடர்ந்து திணறி வருகிறார் என்பது இந்த டெஸ்டிலும் உறுதியானது.

கம்மின்ஸ் வீசிய 2வது ஓவரிலேயே ஷார்ட் லென்த்தாக வந்த பந்தை ஃபுல் ஷாட் அடிக்க முற்பட்டு மிட்-ஆன் திசையில் போலந்திடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா இந்தப் பந்தை எதிர்கொண்டு ஆடிய விதத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தப் பந்தை ரோஹித் சர்மா ஆடாமல் விட்டிருந்தாலே விக்கெட்டை காப்பாற்றி இருக்கலாம், எந்த பந்தை விடுவது, அடிப்பது எனத் தெரியாமல் டெய்லெண்டர் பேட்டர் போல் ரோஹித் சர்மா நம்பிக்கையிழந்த வகையில் பேட் செய்ததாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை ரோஹித் சர்மா (3,6,10,3) 22 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ரோஹித் சர்மா கடந்த 14 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உள்பட 155 ரன்கள் மட்டுமே சேர்த்து 11 சராசரி வைத்துள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை நீடிக்குமா என்பது சந்தேகமாகியுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வுகாலம் நெருங்கிவிட்டதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.

கடைசி செஷனில் மளமள விக்கெட்

இந்திய அணி மூன்றாவது செஷனில் ஆட்டம் முடிய இருக்கும் கடைசி 25 நிமிடங்களில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.

அதற்கு முன்பு வரை, 153 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இந்திய அணி வலுவாக இருந்தது. ஆனால், ஜெய்ஸ்வால் ரன்-அவுட் ஆனதும், அடுத்த ஒரு ரன்னில் விராட் கோலி 36 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் போலந்த் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கோலி வாக்குவாதம்

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம், Getty Images

இதே மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் கோலி சதம் அடித்திருந்த நிலையில் இந்த டெஸ்டில் 36 ரன்களில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். கோலி பெவிலியன் திரும்புகையில் ரசிகர் ஏதோ கூற பெவிலியன் சென்று திரும்பி வந்து அந்த ரசிகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர் ரசிகரை அடக்கி வைத்து, கோலியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

ஆகாஷ் தீப் சிங் கடந்த டெஸ்டில் ஓரளவு சிறப்பாக பேட் செய்தார் என்பதால், நைட்வாட்ச் மேனாக களமிறக்கப்பட்டார். ஆனால் அவரும் நிலைக்காமல் போலந்து பந்துவீச்சில் ஆகாஷ் தீப் டக்-அவுட்டில் ஆட்டமிழந்தார்.

ஏற்கெனவே 2வது டெஸ்டில் நைட்வாட்ச் மேனாக டெய்லெண்டரை களமிறக்கி பேட்டர்களை பாதுகாக்கும் உத்தியைத் தவறாகக் கையாண்டு, ரோஹித் சர்மா கையைச் சுட்டுக்கொண்ட நிலையில் ஜடேஜா, ரிஷப் பந்த் இருவரையும் இந்த டெஸ்டில் ஆட வைத்திருந்தால் ஒரு விக்கெட் எஞ்சியிருக்கும். ஆனால் நைட்வாட்ச் என்ற பெயரில் ஆகாஷ் தீப் விக்கெட்டை தேவையின்றி இந்திய அணி இழந்தது.

ஃபாலோ ஆனை தவிர்க்குமா இந்திய அணி

Boxing Day Test - IND vs AUS

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகாஷ் தீப் சிங்

இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களுடன் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. ரிஷப் பந்த் 6 ரன்களிலும், ஜடேஜா 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். ஃபாலோ ஆனை தவிர்க்க இந்திய அணிக்கு இன்னும் 111 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்திய அணியின் கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தாலும் இதில் வாஷிங்டன், நிதிஷ் ரெட்டி மட்டுமே ஓரளவு பேட் செய்யக் கூடியவர்கள், மற்றவர்கள் பேட்டர்கள் இல்லை என்பதால் ரிஷப் பந்த், ஜடேஜா இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைப்பது கட்டாயமாகியுள்ளது.

பும்ராவின் சாதனை விக்கெட்

பும்ரா டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமாகி விளையாடத் தொடங்கிய நாளில் இருந்து ஒரு டெஸ்ட் தொடரில் அதிகபட்சமாக 23 விக்கெட்டுகள்தான் வீழ்த்தியிருந்தார். அதைக் கடந்து இந்த டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியுள்ளார்.

இந்த டெஸ்டிலும் பும்ரா 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, 25 விக்கெட்டுகளாக உயர்த்தினார். அதுமட்டுமல்லாமல் பும்ரா தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு போட்டியில் ஒரு இன்னிங்ஸில்கூட 100 ரன்களை விட்டுக்கொடுத்து இல்லை, அந்தச் சாதனையையும் பும்ரா தொடர்கிறார். இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பும்ரா 99 ரன்கள்தான் விட்டுக்கொடுத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)