உள்ளடக்கத்துக்குச் செல்

வாக்களிப்பு முறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல தனிப்பட்டவர்களைக் கொண்ட குழுவினர், ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுக்கு உரியவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ, அவை பெறுகின்ற வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்காக அல்லது அவற்றுள் விருப்பத்துக்கு உரியவற்றை அல்லது வெற்றி பெறுவதைத் தீர்மானிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு செயல்முறையே வாக்களிப்பு முறை எனப்படுகின்றது. சனநாயக வழிமுறையில் பொதுப்பதவிகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் வாக்களிப்பு பெரிதும் அறியப்படுகின்ற ஒன்றாகும்.

சிறப்பாக, வாக்களிப்பு முறை என்பது, குறிப்பிட்ட தொகுதி வாக்குகளிலிருந்து வெற்றி பெறுவதைத் தீர்மானிப்பதற்கான வரையறுக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும். செயல்முறை முறைப்படி வரையறுக்கப்படுவது மட்டுமன்றி, வாக்குகள் எண்ணப்படும் முறை மற்றும் அது தொடர்பான விதிகள் அனைத்தும் முன்கூட்டியே அறிவிக்கப்படவும் வேண்டும். முறைப்படி வரையறுக்கப்பட்ட வாக்களிப்பு முறைகள் பற்றிய கோட்பாடு, வாக்களிப்புக் கோட்பாடு (voting theory) எனப்படுகின்றது. இது, அரசறிவியல், பொருளியல், கணிதம் போன்றவற்றின் துணைத்துறையாகக் கருதப்படக்கூடியது. வாக்களிப்புக் கோட்பாடு, 18 ஆம் நூற்றாண்டிலேயே வளர்ச்சியடையத் தொடங்கியது. இதன் மூலம், வாக்களிப்புத் தொடர்பான பல் வேறுபட்ட அணுகுமுறைகள் உருவாகியுள்ளன.

பெரும்பாலான வாக்களிப்பு முறைகள் பெரும்பான்மை ஆட்சியை அடிப்படையாகக் கொண்டவை. பெரும்பான்மை ஆட்சிமுறை எளிமையான ஒரு முறையாக இருந்தாலும், பலவகையான வாக்களிப்பு முறைகள் புழக்கத்திலுள்ளன. மொத்த வாக்குகளின் அரைப்பங்குக்கு மேல் பெறுவதே தேர்ந்தெடுக்கப்படும் என்பது பெரும்பான்மை ஆட்சி முறையின் அடிப்படையாக இருந்தாலும், இரண்டுக்கு மேற்பட்ட தேர்வுக்கு உரியவை மத்தியில் தேர்வு நடைபெறும்போது எவரும் அரைப்பங்குக்கு மேல் பெறும் சந்தர்ப்பம் இல்லாமற் போவதுண்டு. இவ்வாறான சமயங்களில் அரைப்பங்குக்கு மேற்பட்டவர்களின் விருப்பம் அறிவதற்கான வேறு ஒழுங்குகள் வாக்களிப்பு முறையில் சேர்க்கப்பட்டிருக்கும். சில முறைகளில் அதிக வாக்குகள் பெறும் விருப்பு தேர்ந்தெடுக்கப்படுவதும் உண்டு.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]