மெட்சு சண்டை
மெட்சு சண்டை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் பகுதி | |||||||||
5வது அமெரிக்கக் காலாட்படை டிவிசனின் வீரர்கள் மெட்சு நகருக்குள் நுழைகின்றனர் (நவம்பர் 18, 1944) |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
ஐக்கிய அமெரிக்கா | ஜெர்மனி | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
ஜார்ஜ் பேட்டன் | ஓட்டோ வான் நோபெல்சுடோஃப் |
மெட்சு சண்டை (மெட்ஸ் சண்டை, Battle of Metz) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேசநாட்டுப் படைகள் பிரான்சின் மெட்சு நகரை ஜெர்மானியப் படைகளிடமிருந்து கைப்பற்றின.
ஆகஸ்ட் 1944ல் பாரிஸ் நகரம் மீட்கப்பட்டவுடன் நேசநாடுகளின் மேற்கு ஐரோப்பியப் படையெடுப்பின் முதல் கட்டம் முடிவடைந்தது. அடுத்த கட்டமாக ரைன் ஆற்றங்கரைக்கு முன்னேற அவை திட்டமிட்டன. மெட்சு பிரான்சின் வடகிழக்கு மாகாணமான லொரைனில் அமைந்துள்ள ஒரு நகரம். மோசெல் மற்றும் அதன் கிளை ஆறான லாசே ஆற்றுக்கு இடையே அமைந்துள்ளது. பலமான அரண்நிலைகளைக் கொண்டது. மெட்சின் சுற்றுப்புறங்களில் பல பலமான கோட்டைகள் அமைக்கப்பட்டு அவை பதுங்குகுழிகள், சுரங்கப் பாதைகள் வழியாக இணைக்கப்பட்டிருந்தன. மெட்சு நகரைப் பாதுகாக்க நான்கரை டிவிசன் ஜெர்மானியப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தன. சிக்ஃபிரைட் கோட்டை பலப்படுத்த கால அவகாசம் தேவை என்று ஜெர்மானியப் போர்த் தலைமையகம் கருதியது. மெட்சு நகரத்தில் நேசநாட்டுப் படைகளை முடிந்தவரை தாமதப் படுத்தினால் இந்த அவகாசம் கிட்டுமென ஜெர்மானியத் தளபதிகள் நினைத்ததால், அதனை மேலும் பலப்படுத்தினர். இதனால் மேற்குப் போர்முனையில் மெட்சின் முக்கியத்துவம் அதிகமானது.
ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்க 3வது ஆர்மி மொசெல் ஆற்றின் கரையை அடைந்து அதனைக் கடப்பதற்கான ஆயத்தங்களைத் தொடங்கின. செப்டம்பர் 6ம் தேதி இரு தரப்புப் படையினருக்கும் முதல் மோதல் நடைபெற்றது. செப்டம்பர் மாதம் முழுவதும் ஆற்றைக் கடக்க அமெரிக்கப்படைகள் மேற்கொண்ட முயற்சிகளை ஜெர்மானியர் தடுத்து முறியடித்து விட்டனர். சிறு சிறு பாலமுகப்புகளை மட்டுமே அமெரிக்கப் படைகளால் கைப்பற்ற முடிந்தது. மெட்ஸ் நகரின் வலிமையை உணர்ந்து கொண்ட அமெரிக்கத் தளபதிகள் அக்டோபர் மாதம் முழுவதும் தீவிர ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டனர். அந்த மாதம் முழுவதும் பெரிய அளவில் மோதல்கள் ஏதும் ஏற்படவில்லை. தயாரான பின்னர் புதிய அமெரிக்கத்தாக்குதல் மெட்சு நகரின் பின் பகுதியில் நவம்பர் 3ம் தேதி மீண்டும் துவங்கியது. ஒரு மாதம் முழுவதும் உழைத்து உருவாக்கிய புதிய தாக்குதல் உத்திகளைப் பயன்படுத்தி அமெரிக்கப் படைகள் ஒன்றன் பின் ஒன்றாக மெட்சு நகரின் சுற்றுப்புறக் கோட்டைகளைக் கைப்பற்றின. மிஞ்சியிருந்த கோட்டைகளை சுற்றி வளைத்து தனிமைப்படுத்தி விட்டன. நவம்பர் 17ம் நாள், மெட்சு நகரம் தாக்கப்பட்டது. நவம்பர் 21ம் தேதி வாக்கில் நகரம் முழுவதும் அமெரிக்கப் படைகள் வசமானது. மெட்சின் ஜெர்மானியத் தளபதி கிட்டெலும் கைது செய்யப்பட்டார்.
மெட்சு நகரம் வீழ்ந்தாலும், அதன் பல சுற்றுப்புற கோட்டைகள் தொடர்ந்து அமெரிக்கர்களை எதிர்த்து வந்தன. அவற்றை நேரடியாகத் தாக்கினால் வீண் சேதம் ஏற்படுமென்று அமெரிக்கத் தளபதிகள் கருதியதால், மெதுவாக சுற்றி வளைத்து சண்டையிட்டனர். தனிமைபடுத்தப்பட்ட கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக சரணடைந்தன. இறுதிக் கோட்டை டிசம்பர் 13ம் தேதி சரணடைந்தது.
படங்கள்
[தொகு]-
மெட்ஸ் அருகே ஒரு ஜெர்மானிய வீரர்
-
கைபற்றப்பட்ட மெட்சில் வீடு வீடாக சோதனை செய்யும் அமெரிக்கப் படையினர்