உள்ளடக்கத்துக்குச் செல்

முத்துசுவாமி தீட்சிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்துசுவாமி தீட்சிதர்
பிறப்பு24 மார்ச்சு 1775
திருவாரூர்
இறப்பு21 அக்டோபர் 1835 (அகவை 60)
எட்டயபுரம்
பாணிகருநாடக இசை
முத்துசுவாமி தீட்சிதர்

முத்துசுவாமி தீட்சிதர் (Muthuswami Dikshitar, மார்ச் 24, 1776 - அக்டோபர் 21, 1835) கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

இவர் இராமசுவாமி தீட்சிதருக்கும் சுப்புலட்சுமி அம்மையாருக்கும் மகனாக 1776 ஆம் ஆண்டு மன்மத வருடம், பங்குனி மாதம், 24 ஆம் நாள் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தார்.

வைத்தீசுவரன்கோயில் முத்துகுமாரசாமி அருளால் குழந்தை பிறந்ததாக கருதி, இவரின் பெற்றோர் "முத்துசுவாமி" எனப் பெயர் சூட்டினர். இரண்டு ஆண்டுகளுக்கு பின் இராமசுவாமி தீட்சிதருக்கு சின்னசுவாமி, பாலுசுவாமி என இரு புதல்வர்களும், பாலம்மாள் என்ற ஒரு புதல்வியும் பிறந்தனர்.

முத்துசுவாமி தீட்சிதர் சிறு வயதிலேயே பக்தி கொண்டிருந்தார். தெலுங்கு, சமஸ்கிருதம், சங்கீதம் மூன்றையும் தன் தந்தையாரிடம் கற்றார். காவியம், நாடகம், அலங்காரம், வியாகரணம் முதலிய இலக்கணங்களைக் கற்றார். தீட்சிதருக்கு சிறு வயதில் திருமணம் ஆனது. அவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு பெண். அந்தப் பெண் சந்ததியே இன்றும் வழங்கி வருகிறது.

தீட்சிதருக்கும் அவரின் தந்தைக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் வேதம், மந்திரம், முதலான சாத்திரங்களில் வல்லவர்கள். இனிமையாக பாடுவதிலும், வீணை வாசிப்பதிலும் திறமையானவர்கள். சிறந்த சாகித்திய கர்த்தாக்கள். சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்றவர்கள். தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்ற பின்னர் அவருடனே காசிக்குச் சென்று விசுவநாத தரிசனம் செய்தார்.

இசைப் புலமை

[தொகு]

தீட்சிதர் கர்நாடக சங்கீதத்தில் மட்டுமின்றி இந்துஸ்தானி சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றார். இவரின் குரு மிக்க மகிழ்ந்து "அன்பா இனி தமிழகம் செல். திருத்தணி முருகனை உபாசி. முருகன் அருள் பெற்று நாத வித்தையைப் பரவச் செய்" என வாக்களித்தார். சில நாட்களில் இறைவன் அடி சேர்ந்த தம் குருவின் உடலுக்கு ஹனுமான் கட்டடத்தில் சமாதி கட்டி வைத்து, வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து விட்டு தீட்சிதர் மணலிக்குத் திரும்பினார்.

மணலிக்குத் திரும்பிய தீட்சிதர், பின் குருவின் சொற்படி திருத்தணி சென்றார். சுப்பிரமணியக் கடவுளைத் தரிசிக்க மலை ஏறும் போது ஒரு கிழவர் எதிரில் வந்து "முத்துஸ்வாமி வாயைத் திற" என்று சொல்லி ஒரு கற்கண்டைப் போட்டு ஆசீர்வதித்து மறைந்து விட்டார். அப்போதே மயில் மேல் ஏறிச் செல்லும் முருகனைத் தரிசித்து பரவசமுற்ற தீட்சிதர், சுப்பிரமணிய சுவாமியின் அருளால் கானவாக்கு உதித்து நாத உருப்படிகளை இயற்றும் திறனையும் பெற்றார். இவருடைய முதல் கிருதி மாயாமாளவகௌளையில் "ஸ்ரீ நாதாதி குருகுஹோ ஜயதி" என்பதாகும். தன்னுடைய பாடல்களில் குருகுஹ என்ற முத்திரையைக் கையாண்டார். இவரது கிருதிகள் நாளிகேர ரசத்திற்கு ஒப்பானவை.

இசைப்பணி

[தொகு]

பிறகு திருத்தணியிலிருந்து காஞ்சிபுரம் சென்று அங்குள்ள காமாட்சியையும், ஏகாம்பரரையும் பாடி விட்டு சிதம்பரம், சீர்காழி, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்கு பயணம் செய்து பின்னர் திருவாரூருக்கு சென்று அங்குள்ள தெய்வங்களின் பெயரில் பல உருப்படிகளை இயற்றினார்.

தீட்சிதர், சரசுவதி தெய்வத்தின் மீதான பாடல்கள் பலவற்றை இயற்றினார். சரசுவதியின் மற்ற பெயர்களான சரவதி, கலாவதி, பாரதி, கிர்வாணி மற்றும் வக்தேவி எனும் பெயர்கள் இப்பாடல்களில் காணப்படுகின்றன.[1]

தீட்சிதர் ஒரு பதவர்ணம், ஒரு தரு, ஐந்து இராகமாலிகைகளும் இயற்றியுள்ளார். பதினாறு கணபதிகள் பெயரில் ஷோடஸ கணபதி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். அவற்றில் "வாதாபி கணபதிம்" (ஹம்சத்வனி) "சிறீமகா கணபதி" (கௌளை) என்ற கிருதிகள் பிரசித்தமானவை.

சுவாமிமலை, மன்னார்குடி, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களுக்குச் சென்று கிருதிகள் இயற்றினார். பின் திருச்சிராப்பள்ளியில் மாத்ருபூதேஸ்வரரின் பேரில் யமுனா கல்யாணியில் "ஜம்பூபதே" (பஞ்சலிங்க கிருதி) என்ற கிருதியையும், சிறீரங்கம் ரங்கநாத ஸ்வாமியின் பேரிலும் கிருதிகள் இயற்றினார். இவர் பல தொகுதிக் கீர்த்தனைகளையும் இயற்றினார்.

  1. பஞ்சலிங்க ஸ்தலக கிருதி - 5 கிருதிகள்
  2. கமலாம்பா நவா வர்ணம் - 9 கிருதிகள்
  3. அபயாம்பா நவா வர்ணம் - 9 கிருதிகள்
  4. சிவ நவா வர்ணம் - 9 கிருதிகள்
  5. நவக்கிரகக் கிருதி - 9 கிருதிகள்

தீட்சிதர் கிருதிகளை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்கள் கொண்டவை. மற்றொன்று பல்லவி, அனுபல்லவி மட்டும் கொண்டவை. சரணம் உள்ள கிருதிகளில் ஒரு சரணத்திற்கு மேல் இல்லை. இவருடைய கிருதிகளில் காணப்படும் மற்றொரு சிறப்பம்சம் மத்திமகால சாகித்தியம் ஆகும். அநேகமாக எல்லாக் கிருதிகளிலும் இது காணப்படுகின்றது. சில கிருதிகளுக்கு சிட்டைஸ்வரம், சொற்கட்டுஸ்வரம் ஆகியவற்றையும் இவர் இயற்றியுள்ளார்.

தீட்சிதரின் பெரும்பாலான கிருதிகள் சமஸ்கிருத மொழியில் இருப்பினும் சில கிருதிகள் மணிப்பிரவாளத்திலும் உள்ளன. ப்ராஸம், அனுப்பிராஸம் இவைகளோடு யாகம், கோபுச்சம், சுரோதோவாகம், ஸ்வர அட்சரம் ஆகிய அலங்காரங்களையும் 35 தாள முறைகளையும் இவர் கையாண்டுள்ளார்.

தீட்சிதரின் கிருதிகள், இசையில் ஆரம்பப் பயிற்சி பெறும் மாணவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்ளும் வகையிலும் நன்கு தேர்ச்சி பெற்ற வித்துவான்களும் சபையில் பாடும் வகையிலும் அமைந்துள்ளன.

சீடர்கள்

[தொகு]
  1. சுத்த மத்தளம் தம்பியப்பா
  2. சின்னையா
  3. பொன்னையா
  4. சிவானந்தம்
  5. வடிவேலு
  6. திருக்கடையூர் பாரதி

இறுதிக்காலம்

[தொகு]

தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சீடர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த "மீனலோசனி பாப மோசனி" என்ற கிருதியைப் பாடப் பாடக் கேட்டுக் கொண்டு, இரு கைகளையும் தலை மேல் குவித்து சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. இவரது சமாதி எட்டயபுரத்தில் அமைந்துள்ளது.

நுாற்றி எண்பது ஆண்டுகளுக்கு முன்... அந்த சம்பவம் தீபாவளியன்று நடந்தது. எட்டயபுரத்து மக்கள் தீபாவளியைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தனர். எட்டயபுரம் மன்னர் குமாரவெங்கடேச பூபதி, தீபாவளியன்று தன் சமஸ்தானத்துப் பட்டத்து யானைக்கு காலையில் 'கஜ' பூஜை செய்வது வழக்கம். பாகன், எட்டயபுரத்திலுள்ள பெரிய தெப்பக்குளத்தில் இருக்கும் யானைப் படித்துறைக்கு அழைத்து சென்றான்.

வழக்கமாக நீரில் இறங்கி துதிக்கையால் நீர் பீய்ச்சி விளையாடும் காங்கேயன் யானை, அன்று நீரில் இறங்க மறுத்தது. பாகன் நீரில் இறங்கக் கட்டளையிட்டான். காங்கேயன் நீரில் இறங்காமல் வெறித்துப் பார்த்தவாறு நின்றது. பின், குளத்தில் கிழக்குப் பக்கமாக ஓடி சுடுகாட்டில் போய் படுத்துக் கொண்டு பிளிறியது.

பாகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை? இது அபசகுனமாகுமே! அதுவும் இன்று தீபாவளி. கவலையுடன் பாகன் ஓட்டமும், நடையுமாக அரண்மனை சென்று, அரசரிடம் நடந்ததைக் கூறினான். திடுக்கிட்ட மன்னர் குமாரவெங்கடேச எட்டப்ப பூபதி 'இது கெட்ட சகுனமாகத் தெரிகிறதே; என் சமஸ்தானத்துக்கோ என் மகளுக்கோ ஏதேனும் விரும்பத்தகாதது நடக்கப் போகிறதோ' என்று புலம்பினார்.

மனைவியின் அறிவுரை :மன்னரின் மனைவி... 'ராஜா, பதட்டப்பட வேண்டாம்; நமது சமஸ்தானத்து வித்வான், உங்கள் குரு முத்துசுவாமி தீட்சிதரிடம் போய் இது பற்றி கேளுங்கள்' என்றவுடன் 'நல்ல யோசனை!' என்ற மன்னர் எட்டையபுரம் மாட வீதியில் கடைசி வீட்டில் தங்கி இருந்த தீட்சிதரைப் பார்க்க, பல்லக்கை தவிர்த்து நடந்து வந்தார்.

தீபாவளித் திருநாள் என்பதால் சமஸ்தான வித்வான், முத்துசாமி தீட்சிதர், அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்து மாடத்தில் இருக்கும் காசி அன்ன லட்சுமிக்கு விளக்கேற்றி, அவர் அம்பாள் மேல் இயற்றிய பாடல்களை ராகத்துடன் சிஷ்யர்களை பாடச் சொன்னார். சிஷ்யர்கள் பாடிக்கொண்டிருந்தனர். முத்துசுவாமி தீட்சிதர் கண் மூடி தியானத்திலிருந்தார்.

அப்போது பதட்டத்துடன் தீட்சிதர் முன் நின்றார் மன்னன், எட்டப்பன். மன்னருக்கு ஆறுதல் கண்மூடி தியானத்திலிருந்த தீட்சிதர் மெல்ல கண் திறந்து, எட்டப்ப மன்னரை சற்று நோக்கினார். எட்டப்ப மன்னர் தேடி வந்த நோக்கம் ஒரு நொடியில் தீட்சிதருக்குப் புரிந்தது.

'எட்டப்ப மன்னரே..! உன் மனக்குழப்பம் அறிகிறேன். உன் சமஸ்தானத்து மக்களுக்கோ, உன் குடும்பத்தாருக்கோ, உனக்கோ எந்தவித தீங்கும் நேரா; பட்டத்து யானை அரண்மனைக்கு திரும்பி வரும்' என்றார். மனம் லேசான மன்னர், மனக்கவலை நீங்கி அரண்மனைக்கு திரும்பினார். பாகனும் மன்னரிடம் 'பட்டத்து யானை அமைதியாகி கொட்டடிக்கு வந்து விட்டது' என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறினான்.

தீட்சிதரின் கடைசி நிமிடம் :மன்னர் சென்றவுடன் முத்துசுவாமி தீட்சிதர் தன் சிஷ்யர்களிடம்... 'இன்று சதுர்தசி, தேவிக்கு உகந்த நாள். எனவே தேவியின் மீதான கீர்த்தனங்களை பாடுங்கள் என்று கூற, சிஷ்யர்கள் தேவி மீதான 'மீனாஷி மேமுதம் தேஹி' என்று பாடினர்.

சுருதியின் அனுபல்லவியில்'மீனலோசனிபாசமோசனி'மானலோசனிபாசலோசனி என்ற வரியை மீண்டும், மீண்டும் பாடச் சொன்ன தீட்சிதர், கண்மூடி கேட்டுக் கொண்டே, வீட்டின் மாடத்தில் அன்னலட்சுமி முன் ஏற்றிய விளக்கின் ஜோதியோடு இரண்டறக் கலந்தார்.

தீட்சிதர் மறைவு எட்டப்ப மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த எட்டப்பர், விரைந்து தீட்சிதர் இல்லம் சென்று உடலைப் பார்த்து, 'உனக்கோ, உன் சமஸ்தானத்து மக்களுக்கோ, உன் குடும்பத்தாருக்கோ ஒன்றும் நேராது என்று கூறினீர்களே... உங்களை நான் மறந்து விட்டேனே...' என்று அழுதார்.

மன்னர் எட்டப்பர், தீட்சிதரின் உடலை தகுந்த வைதீக முறைப்படி, எட்டயபுரம் பஸ் நிலையம் சமீபம் இருக்கும் 'அட்டக்குளம்' கரையில் அடக்கம் செய்தார். பின் ஒரு சமாதி கட்டி வழிபாடு செய்தார். தற்போது நல்ல பொலிவுடன் இச்சமாதி, மண்டபமாக உள்ளது. சாஸ்திரிய சங்கீதம் கற்பவர்கள், ஒரு முறையேனும் அங்கு சென்று, தீட்சிதரின் சமாதியின் முன் அமர்ந்து, இரண்டு நிமிடம் அவரின் கீர்த்தனையைப் பாடி, மானசீகமாக ஆசீர்வாதம் பெற வேண்டும்.

அமிர்தவர்ஷினியும் ஆனந்தமழையும் முத்துசாமி தீட்சிதர் எட்டயபுரம் வந்தது தனிக்கதை. அவரது தம்பி பாலுசாமி தீட்சிதருக்கு (எட்டயபுரம் சமஸ்தானத்தில் வித்வானாக இருந்தார்) திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தார் எட்டயபுரம் மன்னர். இதை அறிந்த முத்துசாமி தீட்சிதர் தம்பியைக் காணவும், திருமணத்தில் கலந்து கொள்ளவும், எட்டயபுரம் வந்தார். வரும் வழியில் மழையின்றி கரிசல் நிலங்கள் பாளம், பாளமாக வெடித்திருந்ததையும், நீர் நிலைகள் வறண்டு இருந்ததையும் கண்டு வருந்தினார் முத்துசாமி தீட்சிதர்.

இதனை தொடர்ந்து 'ஆனந்த மருதார்கர்ஷினி! அம்ருதவர்ஷினி!'என உருகிப் பாட கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. மகிழ்ச்சி அடைந்த மன்னன், முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய அரண்மனையின் வித்வானாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதனால் தான் எட்டயபுரத்தில் தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்.

காசியில் தீட்சிதர் இருக்கும் பொழுது, கங்கையில் ஒரு வீணை கிடைத்தது. அதன் யாழி வழக்கத்துக்கு மாறாக மேல் நோக்கி இருந்தது. மேலும் அதில் ராமா என்ற சொல் செதுக்கப்பட்டிருந்தது.

தீட்சிதரின் கீர்த்தனைகள்

[தொகு]

முத்துசுவாமி தீட்சிதரின் கிருதிகள் யாவும் சமஸ்கிருத மொழியிலேயே அமைந்துள்ளன. கிருதிகள் பலவற்றுள் இராகத்தின் பெயர் புகுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம். இவருடைய தொகுதிக் கீர்த்தனைகள் வருமாறு:

  • கமலாம்பா நவாவர்ணம் (9 கிருதிகள்)
  • அபயாம்பா நவாவர்ணம் (9 கிருதிகள்)
  • சிவ நவா வர்ணம் (9 கிருதிகள்)
  • பஞ்சலிங்கஸ்தல கிருதிகள் (5 கிருதிகள்)
  • நவகிரக கிருதிகள் (9 கிருதிகள்)

இயற்றிய பாடல்களின் பட்டியல்

[தொகு]
எண் பாடல் இராகம் தாளம்
1 வாதாபி கணபதிம் பஜே... ஹம்சத்வனி ஆதி
2 ஏஹி அன்னபூர்ணே... புன்னாகவராளி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'தி இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 20, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்

வெளி இணைப்புகள்

[தொகு]