மீன் நெடிக் கூட்டறிகுறி
மீன் நெடிக் கூட்டறிகுறி | |
---|---|
டிரைமெதயிலமின் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
ஐ.சி.டி.-10 | E88.8 |
ஐ.சி.டி.-9 | 270.8 |
ம.இ.மெ.ம | 602079 |
நோய்களின் தரவுத்தளம் | 4835 |
ஜீன்ரிவ்வியூசு |
மீன் நெடிக் கூட்டறிகுறி அல்லது மீன் துர்நாற்றக் கூட்டறிகுறி (Trimethylaminuria (TMAU), fish odor syndrome, fish malodor syndrome) [1] என்பது பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் உண்டாகும் மிகவும் அரிதான வளர்சிதைமாற்றக் குறைபாடு ஆகும்.[2][3] சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் காணப்படும் டிரைமெதயிலமின் எனும் சேர்மத்தை டிரைமெதயிலமின் ஆக்சைடுவாக மாற்றும் செயற்பாட்டை இந்நொதி கொண்டுள்ளது, நொதி சரிவர இயங்காமல் அல்லது பற்றாக்குறையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் டிரைமெதயிலமின் உடலில் தேக்கம் பெற்று வியர்வை, சிறுநீர், மூச்சு வழியே வெளியேறும், இதன்போது அக்குறிப்பிட்ட நபரில் துர்நாற்றம் உண்டாகும்; இது பொதுவாக மீன் நெடி போல வீசும்.
வரலாறு
[தொகு]முதன் முதலாக அறியப்பட்ட மருத்துவ சம்பவம் 1970இல் விவரிக்கப்பட்டது.[4]
அறிகுறிகள்
[தொகு]டிரைமெதயிலமின் உடலில் தேக்கம் பெற்று வியர்வை, சிறுநீர், இனப்பெருக்கத் தொகுதி நீர்மங்கள், மூச்சு வழியே வெளியேறும், இது மீன் நெடி போன்ற நாற்றத்தை உருவாக்கும். சிலருக்கு எப்பொழுதுமே மிகையாக இத்துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும், ஆனால் பெரும்பான்மையினருக்கு குறைவான அளவில் நேரத்துக்கு நேரம் மாறுபட்டு நெடி உண்டாகும். இவர்களுக்கு வேறு ஏதேனும் குறிப்பிடும்படியான அறிகுறிகள் இருப்பதில்லை, பொதுவாக ஆரோக்கியமாகவே திகழ்கின்றனர்.[5] இந்நிகழ்வு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குப் பொதுவாக உள்ளது; காரணம் அறியப்படவில்லை, எனினும் புரோகெசுட்டிரோன் அல்லது ஈசுத்திரோசன் முதலிய பெண் பாலிய இயக்குநீர்கள் அறிகுறியை தீவிரம் அடையச் செய்கின்றன என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். பூப்படையும் பருவத்தில் இது தீவிரமடைகின்றது எனக்கூறும் தகவல்கள் பதியப்பட்டுள்ளன. பெண்களில் மாதவிடாய்க்கு சற்று முன்னர் உள்ள நாட்களிலும் மாதவிடாய் நாட்களிலும் மற்றும் வாய்வழி கருத்தடை மாத்திரை உட்கொள்ளல், மாதவிடாய் நிறுத்தப் பருவம் போன்ற சந்தர்ப்பங்களிலும் தீவிரமடைகின்றது.[5] இத்துர்நாற்ற அளவு பல்வேறு காரணிகளால் மாறுபடுகின்றது: உணவு, இயக்குநீர் மாற்றங்கள், குறிப்பிட்ட இடத்தில் உருவாகும் வேறு மணங்கள், ஒருவரின் மணநுகர்ச்சித் தன்மை.
அறுதியிடல்
[தொகு]சிறுநீரில் டிரைமெதயிலமினுக்கும் டிரைமெதயிலமின் ஆக்சைடுக்கும் இடையேயான விகிதம் அளக்கப்படுகின்றது. இதற்கென மரபணுக் குருதிப் பரிசோதனை உண்டு.
சிகிச்சை
[தொகு]தற்பொழுது இதைக் குணமடையச் செய்யும் மருத்துவம் இல்லை. எனினும், மீன் நெடி உண்டாகாமல் இருப்பதற்கு சில உணவுப்பொருட்கள் உட்கொள்ளலைத் தவிர்க்கவேண்டும், அவையாவன: முட்டை மஞ்சட்கரு, அவரை, பட்டாணி வகை, செவ்விறைச்சி, மீன் போன்றவையும் கோலின், கார்னித்தின், நைதரசன், கந்தகம், லெசித்தின் அடங்கிய உணவுப் பொருட்களும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mitchell SC, Smith RL (2001). "Trimethylaminuria: the fish malodor syndrome". Drug Metab Dispos 29 (4 Pt 2): 517–21. பப்மெட்:11259343.
- ↑ Treacy EP, et al. (1998). "Mutations of the flavin-containing monooxygenase gene (FMO3) cause trimethylaminuria, a defect in detoxication". Human Molecular Genetics 7 (5): 839–45. doi:10.1093/hmg/7.5.839. பப்மெட்:9536088.
- ↑ Zschocke J, Kohlmueller D, Quak E, Meissner T, Hoffmann GF, Mayatepek E (1999). "Mild trimethylaminuria caused by common variants in FMO3 gene". Lancet 354 (9181): 834–5. doi:10.1016/S0140-6736(99)80019-1. பப்மெட்:10485731.
- ↑ Humbert JA, Hammond KB, Hathaway WE. (1970). "Trimethylaminuria: the fish-odour syndrome". Lancet 2 (7676): 770–1. doi:10.1016/S0140-6736(70)90241-2. பப்மெட்:4195988.
- ↑ 5.0 5.1 genome.gov | Learning About Trimethylaminuria