உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிட்சு ஜெர்னிகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிட்சு ஜெர்னிகி
Frits Zernike
பிரிட்சு ஜெர்னிகி (1888–1966)
பிறப்பு1888 சூலை 16
ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து
இறப்பு10 மார்ச்சு 1966(1966-03-10) (அகவை 77)
அமெர்சுபூர்ட், நெதர்லாந்து
தேசியம்நெதர்லாந்து
துறைஇயற்பியல்
பணியிடங்கள்க்ராநிகந் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஆம்ஸ்டர்டேம் பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கிறிஸ்டோபர் பௌவ்காம்ப் (Christoffel Bouwkamp)
ஹெர்மன் டி போயர்
பெர்னார்ட் நிஜ்போயர்
அறியப்படுவதுஒர்ன்ஸ்டீன் செர்னிக்கி சமன்பாடு,
செர்னிக்கி பல்லுறுப்புக் கோவைகளாகக் காரணியாக்கம்,
இயல் நிலை ஒளி மாறுபாடு நுண் நோக்கி.
தாக்கம் 
செலுத்தியோர்
ஜாகபஸ் கப்டேயன்
விருதுகள்Rumford Medal (1952)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1953)
Fellow of the Royal Society[1]
ஒளி மாறுபாடு நுண்ணோக்கி (Phase contrast microscope)

பிரிட்சு செர்னிக்கி (Frits Zernike, சூலை 16, 1888 – மார்ச்சு 10, 1966) என்பவர், டச்சு இயற்பியலாளராகவும், 1953-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவராகவும் அறியப்படுகிறார். இயல் நிலைக்கு மாறாக நுண்ணோக்கி (Phase-contrast microscopy) எனும் கருவியை கண்டுபிடித்தது இவரின், குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.[2]

பிறப்பு

[தொகு]

பிரிட்சு செர்னிக்கி, வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டம் நகரில், 1888-ஆம் ஆண்டு, யூலை 16-ஆம் நாளன்று, பிறந்தவர். தந்தையும் (கார்ல் ஃபிரடெரிக் ஆகஸ்டு செர்னிக்கி "(Carl Frederick August Zernike)", தாயும் "(அன்சி தீபெரின்க் (Antje Dieperink)" கணித ஆசிரியர்களாக அமைந்திருந்த செர்னிக்கிகிக்கு, தனது தந்தையை போலவே இவருக்கும் இயற்கையாகவே இயற்பியலில் ஆர்வம் அதிகரித்திருந்தது.[3]

கல்வி

[தொகு]

தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலேயே முடித்த பிரிட்சு, பெற்றோருடன் இணைந்து மிகவும் சிக்கலான கணக்குகளுக்கு தீர்வுக் கண்டார். பள்ளியில் வரலாறு, உள்ளிட்ட மற்ற பாடங்களில் அவருக்கு சிறிதும் ஈடுபாடு இல்லை என்றாலும், அறிவியல் பாடங்களில் முதல் மாணவனாக திகழ்ந்தார். ஆம்ஸ்டர்டம் பல்கலைக்கழகத்தில் வேதியியல், கணிதம், மற்றும் இயற்பியல் பயின்ற செர்னிக்கி, நிகழ்தகவு (Probability) கோட்பாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரைக்காக 1908-இல் தங்கப் பதக்கம் வென்றவர்.[4]

ஒளியியல் ஆய்வுகள்

[தொகு]

1908-ஆம் ஆண்டில், பால்மிளிர்வு (Opalescence) குறித்த விரிவான ஆய்வுக்காக டச்சு அறிவியல் சங்கம் இவருக்கு தங்கப் பதக்கம் அறிவித்தது. அத்தங்கப் பதக்கக்கத்திற்கு பதிலாக, பணமாக பெற்று, அத்தொகையை தனது பரிசோதனைகளுக்கும், முனைவர் பட்ட ஆராய்ச்சிகளுக்கும் செலவிட்டார். பின்னர், 'கிரானிங்கன்' பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரது அழைப்பை ஏற்று அவருக்கு உதவியாளராகப் பணியாற்றினார். அங்கு கணித இயற்பியல் விரிவுரையாளராக நியமிக்கப்பட்ட அவர், தொலைநோக்கி கண்ணாடிகளின் பிழைகள் குறித்து ஆராய்ந்தார்.[5]

கண்டுபிடிப்புகள்

[தொகு]

சிறுவயது ஓய்வு நேரத்தை பல பரிசோதனைகளுக்கே பயன்படுத்திய செர்னிக்கி, பல இயற்பியல் கருவிகளை தனது சேமிப்பிலிருந்து வாங்கி, பரிசோதித்து அவை குறித்து அறிந்துகொண்டார். கண்ணாடி, கண்ணாடி கற்கள், வண்ணங்கள் குறித்த ஆய்வில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அவர். வண்ணப் புகைப்படக் கள ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, அதற்குரிய பண வசதி இல்லாததால், புகைப்பட சோதனைகளுக்குத் தேவையான ஈதரை தானாகவே உருவாக்கிக்கொண்டார். மேலும் தனது ஆராய்ச்சிகள் மூலம் புகைப்பட படப்பெட்டி (கேமரா(Camera), சிறிய வானியல் கண்காணிப்பு கருவி உள்ளிட்டவற்றை உருவாக்கினார்.[6]

மேம்பாடுகள்

[தொகு]

1915-இல் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரித்சு, பார்வைத் திறன் குபற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். மேலும், நிறமாலை (Spectrum) வரிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதோடு, அதன் அடிப்படையில் ‘பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ (Phase-contrast microscopy) கருவியை மேம்படுத்தினார். 1933-இல் வேஜெனிங்கன் (Wageningen) நகரில் நடந்த இயற்பியல், மருத்துவ மாநாட்டில், ‘பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்’ தொழில்நுட்பத்தை விளக்கிக் கூறிய அவர், அதே முறையை ஒளியியல் வில்லைகளின் (Convex lens) திறனை சோதிக்கவும் பயன்படுத்தினார். மேலும், தன் மாணவர்களுடன் இணைந்து, லென்ஸ் முறைகளின் பிறழ்ச்சிகளால் ஏற்படும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டார்.[7]

நன்மதிப்புகள் மற்றும் விருதுகள்

[தொகு]

லண்டன் அரச கழகத்தின் (The Royal Society of London) ராம்ஃபோர்ட் பதக்கம், நெதர்லாந்து கலை, அறிவியலுக்கான றோயல் அகாடமி, றோயல் சொசைட்டி உள்ளிட்ட பல அமைப்புகளின் உறுப்பினராக இருந்துள்ள செர்னிகி, பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப் (Phase Contrast Microscope) என்ற மகத்தான கண்டு பிடிப்புக்கு உடனடியாக வரவேற்போ, அங்கீகாரமோ பெற இயலவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1941-இல் இரண்டாம் உலகப் போருக்காக செருமனியில் அதிக எண்ணிக்கையில் 'ஒளி மாறுபாடு நுண்ணோக்கி' உற்பத்தி செய்யப்பட்டு, அதன் பின்னர்தான் இவரது புகழ் பரவியது. இறுதிவரை பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்ட பிரிட்ஸ் செர்னிகிக்கு 1953-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.[8]

இறப்பு

[தொகு]

ஒர்ன்ஸ்டீன் செர்னிக்கி சமன்பாடு, செர்னிக்கி பல்லுறுப்புக் கோவைகளாகக் காரணியாக்கம், இயல் நிலை ஒளி மாறுபாடு நுண் நோக்கி, போன்ற பற்பல மூலங்களையும், கருவிகளையும், குறிப்பாக, "பேஸ் கான்ட்ராஸ்ட் மைக்ரோஸ்கோப்" (Phase Contrast Microscope) எனும் ஒளி மாறுபாடு நுண்ணோக்கியையும் கண்டறிந்து, அதற்கான 1953-இல் இயற்பியல் நோபல் பரிசையும் வென்ற பிரிட்சு செர்னிகி, நெதர்லாந்தின், அமெர்சுபூர்ட் என்ற மாநகரில், 1966-ஆம் ஆண்டு, மார்ச்சு 10-ஆம் நாளில், தனது 77-வது அகவையில், காலமானார்.[9]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. Tolansky, S. (1967). "Frits Zernike 1888-1966". Biographical Memoirs of Fellows of the Royal Society 13: 392–402. doi:10.1098/rsbm.1967.0021. 
  2. "Frits Zernike - Biographical". www.nobelprize.org (ஆங்கிலம்). © The Nobel Foundation 1953. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Frits Zernike". wwww.nndb.com (NNDB) (ஆங்கிலம்) -2014. பார்க்கப்பட்ட நாள் 07 ஆகத்து 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Frits Zernike". www.britannica.com (ஆங்கிலம்) -2014. பார்க்கப்பட்ட நாள் 03 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Frits Zernike (1888-1966)". www.rug.nl (ஆங்கிலம்). October 02, 2015 22:57. பார்க்கப்பட்ட நாள் 2016-09-03. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "Frits Zernike - Biographical". www.nobelprize.org (ஆங்கிலம்) - 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-08-26.
  7. Zernike, F. (1938). "The concept of degree of coherence and its application to optical problems". Physica 5 (8): 785–795. doi:10.1016/S0031-8914(38)80203-2. Bibcode: 1938Phy.....5..785Z. 
  8. "Frederik (Frits) Zernike (1888 - 1966)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 17 July 2015.
  9. "Frits Zernike Biography". www.thefamouspeople.com. 2016. பார்க்கப்பட்ட நாள் 06 09 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)