உள்ளடக்கத்துக்குச் செல்

செம்முகப் பூங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்முகப் பூங்குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. pyrrhocephalus
இருசொற் பெயரீடு
Phaenicophaeus pyrrhocephalus
(பென்னான்ற், 1769)

செம்முகப் பூங்குயில் (Phaenicophaeus pyrrhocephalus) என்பது குயிற் குடும்பத்தில் பூங்குயில் பேரினத்தில் உள்ள ஒரு அழகிய பறவையாகும். இப்பறவையினம் இலங்கையில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்பான பறவையினங்களில் ஒன்றாகும்.

விபரம்

[தொகு]

இப்பறவையினம் 46 சமீ வரை வளரும் பெரிய பறவையினங்களுள் ஒன்றாகும். இதன் முதுகு கடும் பச்சை நிறமாகவும் வால் இளம் பச்சையாகவும் வாலின் நுனிப் பகுதி வெண்மையாகவும் காணப்படும். இதன் தலையும் கழுத்துப் பகுதியும் கருமையாக இருக்கும். முகத்தின் கீழ்ப் பகுதி வெண்மையானதாகும். இதன் கண்களைச் சுற்றி முகம் முழுவதும் சிவப்பாக இருப்பதுடன் சொண்டு பச்சை நிறத்தில் காணப்படும். இப்பறவைகளின் ஆண், பெண் இனங்களை வேறுபடுத்திக் காண்பது கடினம். எனினும், இதன் குஞ்சுகள் பெரியவற்றை விடச் சற்று நிறம் மங்கிக் காணப்படும்.

செம்முகப் பூங்குயில்கள் பல வகையான பூச்சிகளையும் புழுக்களையும் சிறிய பல்லிகள் போன்ற ஊர்வனவற்றையும் உணவாகக் கொள்ளும். சில வேளைகளில் இவை சிறு பழங்களை உணவாகக் கொள்வதாகக் கூறப்பட்டாலும் அது உறுதியாக அறியப்படவில்லை.[2]

ஏனைய குயிலினங்களைப் போன்றில்லாமல் இவை பெரும்பாலும் அமைதியான பறவைகளாகும். இவற்றின் ஒலி மெல்லிய சீட்டியடித்தல் போன்றிருக்கும்.[2]

பரவல்

[தொகு]

பழங் காலப் பதிவுகள் சில செம்முகப் பூங்குயில் தென்னிந்தியாவில் காணப்பட்டதாகத் தவறாகக் கூறினாலும், இது இலங்கையில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்பான பறவையினமாகும்..[3]. பெக்கர் (1934) என்பவர்[4] திருவாங்கூரின் தென் பகுதியில் இவை காணப்பட்டதாகவும் இவற்றின் கூடுகளை அவரது நண்பர் கண்டெடுத்ததாகவும் குறிப்பிடுகிறார். பின்னர், பிட்டுல்ப்[5] என்பவர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் செம்முகப் பூங்குயில்கள் காணப்பட்டதாகக் கூறியுள்ளார். எனினும், திலோ ஹோப்மன்[6] என்ற பறவையியலாளர் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மேற்படி தகவல்களில் எதுவும் நவீன தரவு முறைகளுக்கு உட்பட்டனவாக இல்லையென்றும், அக்கூற்றுக்களைக் கவனத்தில் எடுக்க முடியாது என்றும் நிறுவினார்.[7].

தற்காலத்தில் உலகின் மிகச் சிறந்த உயிர்ப்பல்வகைமையைக் கொண்ட இடமான சிங்கராஜக் காட்டிலும் அதனை அண்டிய காடுகளிலுமே செம்முகப் பூங்குயில்கள் கூடுதலாகக் காணப்படுகின்றன. கடல் மட்டத்திலிருந்து 920-1540 மீற்றர் உயரமான இடங்களில் காணப்படும் இவை இலங்கையின் ஈரவலயத்திலேயே பெரும்பான்மையாக உள்ளன. இவை பொதுவாக தாழ்நில மழைக்காடுகளிலும் மலைசார் மழைக்காடுகளிலும் காணப்படுகின்றன. சில வேளைகளில் இவற்றை இலங்கையின் உலர்வலய என்றும் பசுமையான காடுகளிலும் காணலாம்.

வாழிடம்

[தொகு]

செம்முகப் பூங்குயில்கள் பொதுவாக அடர்ந்த காடுகளிலேயே வாழ்கின்றன. அதனால், அவற்றின் முழு உடலையும் சரியாகப் பார்ப்பது கூட மிகக் கடினமாகும்.

இனப்பெருக்கம்

[தொகு]

மரங்களில் கூடு கட்டி வாழும் இது ஒரு முறைக்கு 2-3 முட்டைகள் இடும். பொதுவாக இவை யனவரி-மே காலத்திலேயே இனப்பெருக்கம் செய்வதாகப் பதியப்பட்டுள்ளது. எனினும், சில வேளைகளில் இவை ஓகத்து-செப்டெம்பர் காலப் பகுதியிலும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதுண்டு.

நடத்தை

[தொகு]

சிங்கராஜ காட்டுப் பகுதியில் சேர்ந்து இரை தேடும் பறவையினக் கூட்டங்கள் பலவற்றிலும் இவை பொதுவாகக் காணப்படுவதுண்டு.[8]

பண்பாட்டு முக்கியத்துவம்

[தொகு]

சிங்கள மொழியில் இவ்வகையைச் சேர்ந்த பறவைகளை மல்கொஹா என அழைப்பர்.[9] இதன் பொருள் பூங்குயில் என்பதாகும். இப்பறவையைச் சிறப்பிப்பதற்காக இலங்கை அஞ்சல் திணைக்களம் வெளியிட்ட ஐந்து ரூபாய் முத்திரையொன்றில் இதன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.[10]

காப்பு

[தொகு]

இவை எதிர்நோக்கும் முக்கிய சவால்களில் வாழிடமிழத்தல் குறிப்பானதாகும். இலங்கைக் காடுகளில் இடம்பெறும் சட்டவிரோத மாணிக்க அகழ்வு, மரங்களைத் தறித்தல், விறகு சேமிப்பு, காடுகளை அண்டிய பகுதிகளில் ஏற்படும் குடியிருப்புக்கள் என்பன இவற்றுக்குத் தீங்கேற்படுத்துகின்றன. செம்முகப் பூங்குயில் இலங்கையில் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்ட இனமாகும். இவற்றின் வாழிடங்களான காட்டு மரங்களைத் தறித்தல் 1990 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2004). Phaenicophaeus pyrrhocephalus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006.
  2. 2.0 2.1 Salgado, Amila (2006) Some observations on the diet of Red-faced Malkoha Phaenicophaeus pyrrhocephalus in Sri Lanka. Forktail 22:122-123 PDF
  3. Hoffmann, T. W. (1997) Red-faced Malkohas. Newsletter for Birdwatchers 37(1): 14-15.
  4. Baker, E.C.S. 1934. Nidification of birds of the Indian Empire. Vol III, Taylor & Francis, London.
  5. Biddulph, C.H. (1956). "Occurrence of the Red-faced Malkoha, Phoenicophaus pyrrhocephalus (Pennant) in Madura district, Madras presidency.". Journal of the Bombay Natural History Society 53: 697–698. 
  6. Hoffmann, T.W. (1996). "New bird records in Sri Lanka and some connected matters.". Journal of the Bombay Natural History Society 93: 382–388. 
  7. Erritzoe, J., Fuller, R.A. (1997). "Little-known Oriental bird: Red-faced Malkoha.". Bulletin of the Oriental Bird Club 26: 35–39. 
  8. Kotagama, S. W. and Goodale, E. (2004) The composition and spatial organization of mixed species flocks in a Sri Lankan rainforest. Forktail 20: 63–70. PDF பரணிடப்பட்டது 2008-07-04 at the வந்தவழி இயந்திரம்
  9. Anonymous (1998). "Vernacular Names of the Birds of the Indian Subcontinent" (PDF). Buceros 3 (1): 53–109. http://www.bnhsenvis.nic.in/pdf/vol%203%20(1).pdf. பார்த்த நாள்: 2011-03-28. 
  10. http://www.birdtheme.org/country/srilanka.html