உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டாங்

ஆள்கூறுகள்: 3°17′0″N 101°31′0″E / 3.28333°N 101.51667°E / 3.28333; 101.51667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டாங்
Kundang
குண்டாங் is located in மலேசியா
குண்டாங்
      குண்டாங்       மலேசியா
ஆள்கூறுகள்: 3°17′0″N 101°31′0″E / 3.28333°N 101.51667°E / 3.28333; 101.51667
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோம்பாக் மாவட்டம்
நிர்வாக மையம்செலாயாங்
அமைவு1910
அரசு
 • நகராட்சிசெலாயாங் நகராட்சி
(Selayang Municipal Council)
நேர வலயம்மலேசிய நேரம்
அஞ்சல் குறியீடு
48050
தொலைபேசி எண்கள்+60-360
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்mps.gov.my
குண்டாங் பழம்

குண்டாங் அல்லது பெங்காலான் குண்டாங், (மலாய்: Pengkalan Kundang; ஆங்கிலம்: Kundang; சீனம்: 昆当); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், கோம்பாக் மாவட்டத்தில் (Gombak District); செலாயாங் நகராட்சியில் (Majlis Perbandaran Selayang) உள்ள ஒரு நகரம். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ. மேற்கே உள்ளது.[1]

முன்பு காலத்தில் குண்டாங் ஒரு வேளாண் கிராமமாக இருந்தது. ஆனால் இப்போது, அதன் சொந்த நெடுஞ்சாலையான E25  கோலாலம்பூர்-கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை (Kuala Lumpur–Kuala Selangor Expressway) (LATAR) எனும் விரைவுச்சாலையைப் பெற்று சிலாங்கூர் மாநிலத்தின் நவீன கிராமங்களில் ஒன்றாக விளங்குகிறது.

பண்டார் தாசேக் புத்திரி (Bandar Tasik Puteri), பெக்கான் குண்டாங் (Pekan Kundang), ரவாங் ஆகியவை அருகிலுள்ள நகரங்கள் ஆகும்.[2]

இந்தக் கிராமப்புற நகரம், சீனா கௌசோ (Gaozhou) நகரில் இருந்து குடியேறியவர்களின் ஈயச் சுரங்கக் குடியேற்றமாகும். ஈயச் சுரங்கத் தொழிலில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டதும், கிராம மக்கள் விவசாயத் தொழில்களில் ஈடுபட்டனர்.

பெயர் தோற்றம்

[தொகு]

குண்டாங் (Kundang) என்ற பெயரின் தோற்றம் குண்டாங் ஆறு (மலாய்: Sungai Kundang; ஆங்கிலம்: Kundang River) என்பதில் இருந்து வந்தது. குண்டாங் என்பது கொத்துப்பேரி மாம்பழம் (Bouea Macrophylla) என்பதன் மலாய்ப் பெயர் ஆகும். இந்தப் பழம் கண்டரியா (Gandaria) என்றும் அழைக்கப் படுகிறது.[3]

குண்டாங் பழத்தின் பூர்வீகம் மலேசியா மற்றும் இந்தோனேசியா. மேலும் இந்த பழம் தாய்லாந்து மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளது. நீண்ட காலத்திற்கு முன்பு, குண்டாங் பழம் மலேசிய தபால் தலைகளில் ஒரு கருப்பொருளாக சித்தரிக்கப்பட்டது.

குண்டாங் மரத்துடன் உள்ள தொடர்பு காரணமாக இந்த இடம் குண்டாங் என்று அழைக்கப் படுகிறது. ஆனால், நூறு ஆண்டுகள் கடந்தும் குண்டாங் மரங்கள் இங்கு தென்படவில்லை. அத்துடன் குண்டாங் மரம் எப்படி இருக்கும் என்றுகூட குண்டாங் வாசிகள் பலருக்கும் தெரியாது.

வரலாறு

[தொகு]
குண்டாங் நகருக்குள் செல்வதற்கான சந்திப்பு
குண்டாங் நகரில் உள்ள நீல ஏரி

குண்டாங் நகரத்தின் வரலாறு ஈயக் கனிமத்துடன் வலுவான தொடர்புடையது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், குண்டாங் ஆற்றில் ஈயக் கனிமம் (Tin Ore) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பு பல சீனக் குடியேற்றவாதிகளை அந்த இடத்திற்கு ஈர்த்தது; அதன் பின்னர் குண்டாங் குடியேற்றம் (Kundang Settlement) நிகழ்ந்தது.[1]

1840-களில் ரவாங் மாவட்டத்தில் உள்ள கஞ்சிங் நீர்வீழ்ச்சி (Kanching Falls) பகுதியில் ஈயச் சுரங்க நடவடிக்கைகள் தொடங்கப் பட்டன. கஞ்சிங் நீர்வீழ்ச்சி பகுதி சிலாங்கூரில் உள்ள பழமையான ஈயச் சுரங்கப் பகுதிகளில் ஒன்றாகும்.[4]

கா யின் - கோ சோவ் இனக் குழுவினர்

[தொகு]

அதன் பிறகு, ரவாங், குண்டாங், குவாங் (Kuang) நகரங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஈயச் சுரங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. புதிய குடியிருப்புகளும் அமைக்கப்பட்டன.

தொடக்கக்கால சீன குடியேறிகளில் கா யின் (Ka Yin) மற்றும் கோ சோவ் (Kochow) இனக் குழுவினர் முதலிடம் வகிக்கின்றனர். கா யின் இனக் குழுவினர்தான் இப்போதும் குண்டாங்கில் பெரும்பான்மைக் குடியிருப்பாளர்களாக உள்ளனர். ஈயச் சுரங்கத் தொழிலை ஊக்குவிக்க, பிரித்தானிய காலனித்துவவாதிகள் தொடருந்து சேவையைத் தோற்றுவித்தனர்.

குண்டாங் தொடருந்து நிலையம்

[தொகு]

1915 ஆம் ஆண்டில், குண்டாங் மற்றும் குவாங் நகரங்களை பத்து ஆராங் நகரத்துடன் இணைக்கும் முதல் தொடருந்து பாதை கட்டப்பட்டது. ஈயச் சுரங்கத் தொழிலின் வீழ்ச்சிக்குப் பிறகு, தொடருந்து அமைப்பும் அதன் செயல்பாட்டை நிறுத்தியது. குண்டாங் தொடருந்து நிலையம் (Kundang Railway Station) 1970-இல் இடிக்கப்பட்டது. கைவிடப்பட்ட தொடருந்து தண்டவாளங்கள் இப்போது வரலாற்றின் சான்றுகளாக மாறியுள்ளன.[5]

குண்டாங் ஈயத் தொழில் நிறுவனம் (Kundang Tin Company) 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குண்டாங்கில் பிரித்தானியருக்குச் சொந்தமான மிகப்பெரிய சுரங்க நிறுவனமாகும். 1924-ஆம் ஆண்டில், கோலாலம்பூர் ரப்பர் நிறுவனம் (Kuala Lumpur Rubber Company) குண்டாங்கில் ஈயச் சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் பெயர் பின்னர் கோலாலம்பூர் கெப்போங் நிறுவனம் (Kuala Lumpur Kepong Berhad) என மாற்றப்பட்டது.

இரண்டாம் உலகப் போர்

[தொகு]

குண்டாங் ரப்பர் தோட்டம்

[தொகு]

1920-இல், பெருமளவில் ரப்பர் பயிரிடுவதற்கு அங்கிருந்த குடியிருப்பாளர்களை பிரித்தானியர் ஊக்குவித்தனர். ரப்பர் பயிரிட குடியிருப்பாளர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. குண்டாங் தோட்டம் (Kundang Estate) அந்தக் காலத்தில் குண்டாங்கின் மிகப்பெரிய ரப்பர் தோட்டத் தோட்டமாக இருந்தது.

1942 முதல் 1945 வரை மலாயாவில் சப்பானிய ஆக்கிரமிப்பின் (Japanese occupation of Malaya) போது, மலாயா மக்களின் சப்பானிய எதிர்ப்பு இராணுவத்தின் (Malayan Peoples' Anti-Japanese Army) (MPAJA Headquarters) தலைமையகமாக குண்டாங் இருந்தது.

மலாயா பொதுவுடைமை கட்சி

[தொகு]

1948-இல், மலாயா பொதுவுடைமை கட்சியினர் (Communist Party of Malaya) பொதுமக்களிடம் இருந்து உதவிகள் பெறுவதை முறியடிக்க, குண்டாங் பகுதியில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களையும் பிரித்தானியர் ஒன்று திரட்டினர். குடியிருப்பாளர்களுக்காக குண்டாங் புதிய கிராமத்தை (Kundang New Village) நிறுவினர். அப்போதைய குண்டாங் பழைய நகரம், குண்டாங் புதிய கிராமத்தின் ஒரு பகுதியாக மாறியது.

1948-இல், குண்டாங் புதிய கிராமம் முதன்முதலில் நிறுவப்பட்டபோது ஏறக்குறைய 1500 மக்களுடன் 200 குடும்பங்களைக் கொண்டு இருந்தது.

சிலாங்கூர் பப்பாளி கிராமம்

[தொகு]

1980-களில் ஈயம் மற்றும் ரப்பர் விலை வீழ்ச்சி அடைந்தது. அதைத் தொடர்ந்து குண்டாங் பகுதி பொருளாதாரத்தில் மீண்டும் சரிவுற்றது. அதனால் குண்டாங் மக்கள் குண்டாங் புதிய கிராம எல்லையில் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பப்பாளி பயிரிடத் தொடங்கினர்.

குறுகிய காலத்தில், நூற்றுக்கணக்கான நிலங்கள் பப்பாளி தோட்டங்களாக மாறின. அந்த நேரத்தில், குண்டாங் புதிய கிராமம் 'சிலாங்கூர் பப்பாளி கிராமம்' (Selangor's Papaya Village) என்றும் அழைக்கப்பட்டது. இந்த நல்ல நிலை நீண்ட காலம் நீடிக்கவில்லை. அதற்கு காரணம், அங்கு நடப்பட்ட பப்பாளி வகை சாதாரண மரபணுக்களில் (Ordinary Genes) இருந்து வந்தது. மற்றொரு பிரச்சனை பப்பாளி மர நோய்கள்.

1990-களில் குடியிருப்பாளர்கள் படிப்படியாக பப்பாளி தோட்டத் துறையை விட்டு வெளியேறினர். வெளியூர்களுக்குச் சென்று வாழ்வாதாரங்களைத் தேடிக் கொண்டனர். இப்போது குண்டாங்கில் மக்கள் தொகை அதிகமாக இல்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Kundang is a town located in Rawang, Selangor. It was a tin mining settlement by Chinese immigrants from the city of Gaozhou. After the sudden decline of the tin mining business, the villagers turned to agriculture". www.land.plus. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
  2. "LATAR Expressway was opened on Thursday 23 June 2011. It provides for a faster, safer, smoother and non-congested drive that would take just a brief 18 minutes to accomplish from end-to-end". www.latar.com.my. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
  3. "It is believed that the town got its name from the nearby Kundang River. Buah Kundang is the Malay name for plum mango". The Edge Malaysia. பார்க்கப்பட்ட நாள் 13 May 2023.
  4. "The Kanching territory which is in the Rawang district, have started tin mining operations in the 1840s is one of the oldest tin mining area in Selangor. After that, areas around Rawang town like Kundang and Kuang have initially started tin mining activities respectively". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
  5. Tan, Vincent. "Sleepy towns facing changes: Pekan Kuang is a quiet area with the main centrepiece being the Keretapi Tanah Melayu (KTM) station. The train used to run through the nearby town of Kundang, although the service has been discontinued". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டாங்&oldid=3996995" இலிருந்து மீள்விக்கப்பட்டது