உள்ளடக்கத்துக்குச் செல்

கருக்கட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு விந்து உயிரணுவானது, முட்டை உயிரணுவைக் கருக்கட்டுவதற்காக முட்டையினுள் உட்செல்லும் செயல்முறை

கருக்கட்டல் என்பது இரு புணரிகள் இணைந்து ஒரு புதிய உயிரினம் உருவாகும் செயல்முறையாகும்.

விலங்குகளில் இது முட்டை, விந்து எனும் இரு புணரிகள் இணைந்து, இறுதியில் ஒரு முளையம் உருவாதலைக் குறிக்கிறது. குறிப்பிட்ட விலங்கைப் பொறுத்து, கருக்கட்டல் செயல்முறையானது உடலின் உள்ளே நடைபெறுமா, அல்லது உடலுக்கு வெளியே நடைபெறுமா என்பது தங்கியிருக்கிறது. தாவரங்களில் மகரந்த மணிகளில் இருக்கும் புணரிக் கலமானது, முட்டைக் கலத்துடன் இணைந்து உருவாகும் செயல்முறையே கருக்கட்டல் எனப்படுகிறது.

கருக்கட்டலின் பின்னர் ஒரு தனி உயிரினம் உருவாகும் முழுமையான செயல்முறையை இனப்பெருக்கம் என்கின்றோம்.

தாவரங்களில் கருக்கட்டல்

[தொகு]

தாவரங்களில் பூக்கும் தாவரங்கள் (flowering plants), வித்துமூடியிலிகளை (gymnospermae) உள்ளடக்கிய வித்துத் தாவரங்கள் (seed-bearing plants) என்ற பிரிவினுள் வரும் விதை கொண்ட தாவரங்களில் இவ்வகையான கருக்கட்டல் நடைபெறுகிறது. ஆனாலும் அது நடைபெறும் செயல் முறையானது வேறுபடுகின்றது. கருக்கட்டலின் பின்னர் உருவாகும் முளையமானது புதியதொரு தாவரமாக விருத்தியடையும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

பூக்கும் தாவரங்கள்

[தொகு]

சூல்வித்திலையானது மகரந்தச்சேர்க்கைக்கு உள்ளான பின்னர், சூலகமுடி அல்லது குறி என அழைக்கப்படும் மகரந்தத்தை ஏற்கும் பகுதியினால் சுரக்கப்படும் வெல்லப் பதார்த்தங்களின் தூண்டுதலால், மகரந்த மணியானது வளர ஆரம்பிக்கும். இந்த மகரந்தக் குழாய் தாவர இழையத்தினூடாக நீண்டு வளர்ந்து சூலகத்தை சென்றடையும். மகரந்த உயிரணுவின் இருமடியக் (diploid) கருவானது இந்தக் குழாயினூடாகச் செல்லும்போது பிரிவுக்குள்ளாகி இரு ஒருமடிய (haploid) விந்துக் கருக்களை (sperm nuclei) உருவாக்கும்[1]. இந்த விந்துக் கரு, சூலகத்திலுள்ள, சூல்வித்து உயிரணுவின் ஒருமடியக் கருவுடன் இணைந்து இருமடியக் கருவை உருவாக்கும். இந்த செயல்முறையே உண்மையில் கருக்கட்டல் நிகழும் இடமாகும். கருக்கட்டலின் பின்னர் சூலகமானது விருத்தியடைந்து பழமாகிறது[2].

வித்துமூடியிலி தாவரங்கள்

[தொகு]

வித்துமூடியிலித் தாவரங்களில் முக்கியமாக இரு வகையில் மகரந்தம் சூல்வித்தை சென்றடைகின்றது. சில வகைகளில் நகரிழைகளின் உதவியுடன் விந்துக் கலங்கள் ஊடகங்களில் நீந்திச்சென்று சூல்வித்தை அடையும். அவ்வாறு நகரிழை அற்றவற்றில், மகரந்தக் குழாய் உருவாக்கத்தால், சூல்வித்தை சென்றடையும்.

விலங்குகளில் கருக்கட்டல்

[தொகு]

உள்ளான, வெளியான கருக்கட்டல்

[தொகு]

வெவ்வேறு விலங்குகளில் கருக்கட்டலின்போது, விந்துக்கள் வேறுபட்ட முறைகளில் முட்டையை சென்றடையும். அத்துடன் பல விந்துகளில் ஒன்று மட்டும் முட்டையுடன் இணையும். கருக்கட்டலானது உள்ளான கருக்கட்டலாகவோ, அல்லது வெளியான கருக்கட்டலாகவோ இருக்கலாம். உள்ளான கருக்கட்டல் என்பது உடலுக்கு உள்ளாக விந்தும், முட்டையும் இணைவதையும், வெளியான கருக்கட்டல் என்பது உடலுக்கு வெளியாக விந்தும், முட்டையும் இணைவதையும் குறிக்கும்.

மீன், ஐதரா hydra), பவளம் (coral) போன்ற, பொதுவான நீர்வாழ் விலங்குகளில் வெளியான கருக்கட்டலே நிகழ்கிறது. இங்கே ஆணிலிருந்து நீர்த்தன்மையான வெளியூடகம் ஒன்றில் வெளியேற்றப்படும் விந்துக்கள் நீந்திச் சென்று, அங்கே பெண்ணிலிருந்து வெளியேற்றப்படும் முட்டைகளுடன் இணைகின்றது. இவ்வகையான கருக்கட்டலுக்கு, விந்து இலகுவாக உட்புகக் கூடியதாக, முட்டையானது மெல்லிய வெளிமென்சவ்வைக் கொண்டதாக இருக்க வேண்டும். அத்துடன் விந்தானது வீரியமான அசையும் திறன் கொண்டதாக இருப்பதுடன், வெளிச் சூழலை எதிர் கொள்வதால், மிக அதிகளவில் விந்துக்கள் உருவாக்கப்படும் நிலையிலும் இருக்க வேண்டும். இவ்வாறான கருக்கட்டலில் உடல்திரவங்களின் தொடர்பு குறைவாக இருப்பதனால், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அத்துடன் தேர்வற்ற புணரிகளின் இணைவால், மரபியல் வேறுபாடு அதிகளவில் உருவாகும் சந்தர்ப்பமும் ஏற்படும்.

உள்ளான கருக்கட்டலில், பொதுவாக விந்தும், முட்டையும் இணைவது பெண் விலங்குகளின் உடலின் உள்ளேயே நடைபெறும். இவ்வகை கருக்கட்டலில், கருக்கட்டலின் நிகழ்தகவு அதிகமாக இருப்பதுடன், புணரிகள் வீணாதலும் குறைக்கப்படும். அத்துடன் புணரிகளை தேர்வு செய்ய முடிவதுடன், முட்டைக்கான அதிககால பாதுகாப்பும் கிடைக்கும். கோழி போன்ற தடித்த வெளி மென்சவ்வைக் கொண்ட முட்டைகளை உருவாக்கும் விலங்குகளில், முட்டைகள் உடலைவிட்டு வெளியேறிய பின்னர் விந்துக்கள் உட்புகுவது கடினமாதலால், முட்டைகள் உடலினுள் இருக்கையிலேயே, மென்சவ்வை தடிப்பற்றதாக இருக்கும் நிலையிலேயே கருக்கட்டல் நிகழ்ந்துவிடும்.

முலையூட்டிகளில் கருக்கட்டல்

[தொகு]

கருக்கட்டலும், மரபியல் மறுசேர்க்கையும்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Handbook of plant science. Chichester, West Sussex, England: John Wiley. 2007. p. 466. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-05723-0.
  2. Johnstone, Adam (2001). Biology: facts & practice for A level. Oxford University Press. pp. 95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-914766-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருக்கட்டல்&oldid=3582035" இலிருந்து மீள்விக்கப்பட்டது