இந்திய அறிவியல் பேராய சங்கம்
இந்தி அறிவியல் பேராய சங்கம் (Indian Science Congress Association) [1] என்பது மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவின் முதன்மையான அறிவியல் அமைப்பாகும். 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் தொடங்கப்பட்ட இந்த சங்கம் ஆண்டுதோறும் சனவரி முதல் கிழமையில் கூடுகிறது. இதில் 30,000க்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
முதல் இந்திய அறிவியல் பேராயக் கூட்டம் 1914 இல் கல்கத்தாவில் உள்ள ஆசிய சங்கத்தில் நடைபெற்றது. 2019 இந்திய அறிவியல் பேராயத்தில் போலி அறிவியல் உரைகள் ஆற்றப்பட்டப் பிறகு, எதிர்கால மாநாடுகளில் பேச்சாளர்கள் தங்கள் பேச்சுக்களின் உள்ளடக்கத்தை கூர்ந்தாய்வு செய்ய வேண்டும் என்ற கொள்கையை பேராயம் நிறுவியுள்ளது.
நோபல் பரிசு பெற்றவர்கள் உட்பட பல முக்கிய இந்திய மற்றும் வெளிநாட்டு அறிவியலாளர்கள் பேராயத்தின் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
தோற்றம்
[தொகு]இந்திய அறிவியல் பேராய சங்கமானது பேராசிரியர் ஜே. எல். சைமன்சன், பேராசிரியர் பி. எஸ். மக்மகன் ஆகிய இரு பிரித்தானிய வேதியியலாளர்களின் முன்முயற்சியால் உருவானது. அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரித்தானிய சங்கம் போன்று ஆராய்சியாளர்களின் வருடாந்திரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தால், அது இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு தூண்டுதலாக இருக்கும் என அவர்களுக்குத் தோன்றியது.
குறிக்கோள்கள்
[தொகு]சங்கம் பின்வரும் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது :
- இந்தியாவில் அறிவியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தல்;
- இந்தியாவில் பொருத்தமான இடத்தில் ஆண்டுதோறும் மாநாட்டை நடத்துவது;
- ஆழ்ந்து ஆராய்ந்த முடிவுகளை பத்திரிகைகள், பிற வெளியீடுகளில் வெளியிடுதல்;
- அறிவியலை மேம்படுத்தவதற்கான சொத்துக்களையும், நிதி என அனைத்தையும் பாதுகாத்தல் மற்றும் நிர்வகித்தல்;
இந்திய அறிவியல் பேராயத்தின் அமர்வுகள்
[தொகு]முதல் மாநாடு
[தொகு]பேராயத்தின் முதல் கூட்டம் 1914 சனவரி 15 முதல் 17 வரை கல்கத்தாவில் உள்ள ஆசிய சங்க வளாகத்தில் நடைபெற்றது. மாண்புமிகு நீதியரசர் சர் அசுதோஷ் முகர்ஜி, அப்போதைய கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நூற்றைந்து அறிவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். தாவரவியல், வேதியியல், இனவரைவியல், புவியியல், இயற்பியல், விலங்கியல் ஆகிய ஆறு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 35 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
வெள்ளி விழா
[தொகு]அறிவியல் பேராயத்தின் வெள்ளி விழா அமர்வு 1938 இல் கல்கத்தாவில் நெல்சன் பிரபு ரதர்ஃபோர்ட் தலைமையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவரது திடீர் மரணம் காரணமாக, சர் ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு அமர்வுக்கு தலைமை வகித்தார். இந்த வெள்ளிவிழா அமர்வில்தான் இந்திய அறிவியல் பேராயத்தின் அமர்வில் வெளிநாட்டு அறிவியலாளர்கள் கலந்துகொள்ளுதல் முதன் முதலில் தொடங்கியது.
34வது பதிப்பு - வெளிநாட்டு அறிவியலாளர்கள் பங்கேற்பு
[தொகு]இந்திய அறிவியல் பேராயத்தின் 34 வது ஆண்டு அமர்வு 3-8 1947 சனவரியில் தில்லியில் நடந்தது. அதற்கு ஜவகர்லால் நேரு பொதுத் தலைவராக இருந்தார். அறிவியல் பேராயத்தில் பண்டித நேரு தனிப்பட்ட ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் அவர் அனைத்து அமர்வுகளிலும் கலந்துகொண்டார். நாட்டில், குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே அறிவியல் சூழலை மேம்படுத்துவதில் அவர் கொண்டிருந்த ஆர்வத்தினால் அவர் பேராயத்தின் செயல்பாடுகளை பெரிதும் மேம்படுத்தினார். 1947 முதல், வெளிநாட்டு சங்கங்கள் மற்றும் கல்விக்கூடங்களில் இருந்து பிரதிநிதிகளை அழைப்பதற்கான அவரது ஆலோசனை அறிவியல் பேராயத்தில் சேர்க்கப்பட்டது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் இந்தப் போக்கு இன்னும் தொடர்கிறது.
பொன்விழா ஆண்டு
[தொகு]அறிவியல் பேராயம் தனது பொன்விழாவை தில்லியில் 1963 அக்டோபரில் கொண்டாடியது. அந்த அமர்வுக்கு பொதுத் தலைவராக பேராசிரியர் டி. எஸ். கோத்தாரி இருந்தார். இவ்விழாவில் இரண்டு சிறப்பு வெளியீடுகள் வெளியிடப்பட்டன:
- இந்திய அறிவியல் பேராய சங்கத்தின் சுருக்கமான வரலாறு
- இந்தியாவில் ஐம்பது ஆண்டுகால அறிவியல் (12 தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட அறிவியல் துறை குறித்த மதிப்புரைகள் இடம்பெற்றன)
வைர விழா ஆண்டு
[தொகு]அறிவியல் பேராயத்தின் வைர விழா ஆண்டு அமர்வு 1973 சனவரி 3-9 நாட்களில் சண்டிகரில் டாக்டர். எஸ். பகவந்தம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் இரண்டு சிறப்பு வெளியீடுகள் வெளியிடப்பட்டன:
- A Decade (1963–72) இந்திய அறிவியல் பேராய சங்கம் (பொதுத் தலைவர்களின் வாழ்க்கை ஓவியங்களுடன்)
- A Decade (1963–72) அறிவியல் (பிரிவு வாரியாக).
குறிப்புகள்
[தொகு]- ↑ "Government of India,Indian Science Congress". www.sciencecongress.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.