உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலாப் இராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலாப் இராசு
பிறப்பு6 சூன் 1979 (1979-06-06) (அகவை 45)
தொழில்(கள்)பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர்
இசைத்துறையில்2010– தற்போது வரை

ஆலாப் இராசு (Aalap Raju) (பிறப்பு 6 சூன் 1979) இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த பின்னணி பாடகரும், கித்தார் இசைக் கலைஞருமாவார்.[1] ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்த கோ திரைப்படத்திலிருந்து "என்னமோ ஏதோ" என்ற பாடலை பாடியது 2011ஆம் ஆண்டில் பல மாதங்களுக்கு இசை பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும், சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதையும் வென்றது. ஹாரிஸ் ஜயராஜ், தமன், ஜி. வி. பிரகாஷ் குமார், தீபக் தேவ், டி. இமான், சிறீகாந்து தேவா போன்ற இசை இயக்குனர்களுக்காக இவர் பாடியுள்ளார். முகமூடி படத்திலிருந்து "வாய மூடி சும்மா இருடா", எங்கேயும் காதல் படத்தில் "எங்கேயும் காதல்", நண்பன் படத்தில் இடம்பெற்ற "எந்தன் கண் முன்னே" பாடலும், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் "அகிலா அகிலா", "காதல் ஒரு பட்டர்பிளை" பாடலும் வந்தான் வென்றான் படத்தின் "அஞ்சனா அஞ்சனா", ஐய்யனார் படத்தின் "குத்து குத்து", யுவ் என்ற மலையாளப் படத்திலிருந்து "நெஞ்சோடு சேர்த்து", மாற்றான் படத்திலிருந்து "தீயே தீயே", மனம் கொத்திப் பறவை படத்திலிருந்து "ஜல் ஜல் ஓசை", என்னை அறிந்தால் படத்தின் "மாயா பஜார்" போன்ற பாடல்கள் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தது.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

இவர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இசை இவருக்கு இயல்பான ஒன்றாக இருந்தது. இவரது பெற்றோர்களான ஜே. எம். ராஜுவும், இலதா ராசுவும் மலையாளத் திரையுலகில் பின்னணி பாடகர்களாக உள்ளனர். அதே நேரத்தில் இவரது பாட்டி மறைந்த சாந்தா பி. நாயர், தாத்தா, மறைந்த கை. பத்மநாபன் நாயர் ஆகியோர் 60-70களில் மலையாள இசைத் துறையில் நன்கு அறியப்பட்ட பெயர்கள். தனது பள்ளி நாட்களில் இவர் ஒரு தொழில்முறை துடுப்பாட்ட வீரராகி சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினாலும், சென்னையில்ல் பட்டப்படிப்பு நாட்களில் இவருக்கு வேறு திட்டங்கள் இருந்தன. இவரது கல்லூரித் தோழர்கள் இவரை இணையாக பாடல் மற்றும் கித்தார் கற்க ஊக்கமளித்தனர். பல மாத பயிற்சி, இவரை கித்தார் வாசிப்பதிலும் பாடுவதிலும் ஒரு சுயமாக கற்ற இசைக்கலைஞராக்கியது, இவரது பெயர் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க கலாச்சார நிகழ்வுகள் மூலம் பரவியது. சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் நடத்திய 'சாரங்' என்ற நிகழ்ச்சி இவரது வாசிப்பிற்கு சிறந்த கருவியாக அமைந்தது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான பதிவு அமர்வுகள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளின் தொடக்க புள்ளியாக அது இருந்தது. ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்த "என்னமோ ஏதோ", 2011இல் வெளியான " எங்கேயும் காதல்" ஆகியவை இவரது பாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தன. இப்போது அரங்கங்களிலும், நேரடி இசை நிகழ்ச்சிகளிலும் பாடுவதும், கித்தார் இசைப்பதுவுமாக இருக்கிறார்.[2]

யுவ் என்றை இவரது மலையாளப் பாடலான 'நெஞ்சோடு சேர்த்து' யூடியூப்பில் உடனடி வெற்றியைப் பெற்றது. வெளியான 4 மாதங்களில் 1.4 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Smooth jazz show". தி இந்து. 4 December 2006 இம் மூலத்தில் இருந்து 13 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071113061306/http://www.hindu.com/mp/2006/12/04/stories/2006120400110500.htm. பார்த்த நாள்: 17 December 2011. 
  2. "Aalaap Raju". Last.fm.
  3. "Nenjodu Cherthu from Yuvvh – Another Viral Hit in Youtube". Theater Balcony. 10 April 2012. பார்க்கப்பட்ட நாள் 11 May 2012.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலாப்_இராசு&oldid=3989259" இலிருந்து மீள்விக்கப்பட்டது