உள்ளடக்கத்துக்குச் செல்

அஸ்வான் அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்வான் மேல் அணை
விண்வெளியிலிருந்து அசுவான் அணையின் தோற்றம்
அஸ்வான் அணை is located in Egypt
அஸ்வான் அணை
Location of the Aswan Dam in Egypt
அதிகாரபூர்வ பெயர்Aswan High Dam
அமைவிடம்எகிப்து
கட்டத் தொடங்கியது1960
திறந்தது1970
அணையும் வழிகாலும்
வகைEmbankment
தடுக்கப்படும் ஆறுநைல் நதி
உயரம்111 மீட்டர்கள் (364 அடி)
நீளம்3,830 மீட்டர்கள் (12,570 அடி)
அகலம் (அடித்தளம்)980 மீட்டர்கள் (3,220 அடி)
வழிகால் அளவு11,000 cubic metres per second (390,000 cu ft/s)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்Lake Nasser
மொத்தம் கொள் அளவு132 கன சதுர கிலோமீட்டர்கள் (107,000,000 acre⋅ft)
மேற்பரப்பு பகுதி5,250 சதுர கிலோமீட்டர்கள் (2,030 sq mi)
அதிகபட்சம் நீளம்550 கிலோமீட்டர்கள் (340 mi)
அதிகபட்சம் அகலம்35 கிலோமீட்டர்கள் (22 mi)
அதிகபட்சம் நீர் ஆழம்180 மீட்டர்கள் (590 அடி)
இயல்பான ஏற்றம்183 மீட்டர்கள் (600 அடி)
மின் நிலையம்
பணியமர்த்தம்1967–1971
சுழலிகள்12× 175 MW Francis-type
நிறுவப்பட்ட திறன்2,100 MW
எகிப்தில் நீர்த் தேக்கத்தின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்

அஸ்வான் அணை (Aswan Dam) எகிப்து நாட்டிலுள்ள நைல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இரண்டு அணைகளைக் குறிக்கும். இவை அஸ்வான் என்னும் நகரில் உள்ளன. இவற்றுள் புதிய அணை அஸ்வான் மேல் அணை எனவும், பழையது அஸ்வான் கீழ் அணை எனவும் அழைக்கப்படுகின்றன. 1950களிலிருந்து அசுவான் அணை என்ற பெயர் மேலணையையே குறிக்கின்றது. 1952 எகிப்தியப் புரட்சியை அடுத்து உருவான எகிப்திய அரசு நைல் ஆற்றினால் சுற்றுப் புறங்களில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கவும், மின் உற்பத்தி செய்யவும், வேளாண்மைக்கு நீர் வழங்கவும் மேல் அணையைக் கட்டமைக்க திட்டமிட்டது. இது எகிப்தின் தொழில்மயமாக்கலுக்கு முதன்மைப் பங்காற்றியது. 1960க்கும் 1970க்கும் இடையே கட்டப்பட்ட அசுவான் மேல் அணை எகிப்தின் பொருளியல் வளர்சியிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நைல் ஆறு கட்டுப்படுத்தப்படாது இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் நீரினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இவ்வெள்ளம் நல்ல சத்துப் பொருட்களையும், கனிமங்களையும் கொண்டுவந்து நைலைச் சுற்றிய பகுதிகளை வளப்படுத்தும். இது தொன்மைக் காலங்களில் வேளாண்மைக்கு வாய்ப்பான நிலமாக விளங்கியது. ஆற்றோரப் பகுதிகளில் மக்கள்தொகை அதிகமானபோது, வேளாண்மை நிலங்களையும், பருத்திச் செய்கையையும் வெள்ளப்பெருக்கில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. கூடிய நீர்வரத்துள்ள ஆண்டுகளில் பயிர்ச் செய்கை முழுவதும் அழிந்துபோகும் அதே வேளை, குறைவான நீர்வரத்துக் காலங்களில் வரட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. அசுவானில் கட்டப்பட்ட இரு அணைகளும் வெள்ளக்கட்டுப்பாட்டிற்கு துணை நின்றதுடன் வறட்சிக்காலங்களில் சேகரித்த நீரைப் பயன்படுத்தி வேளாண்மையில் ஓர் நிலைத்த தன்மை அமைய உதவின.

கட்டுமான வரலாறு

[தொகு]

அசுவான் அருகே அணை கட்டும் முயற்சி 11வது நூற்றாண்டிலேயே பதியப்பட்டுள்ளது. பாத்திம கலீபா அல்-ஹகிமு பி-அமர் அல்லா அராபிய பொறியிலாளர் இபன் அல்-ஹேதமை எகிப்திற்கு வரவழைத்து நைல் ஆற்றில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த அணை கட்ட ஆணையிட்டார்.[1] அவரது களப்பணிகளை அடுத்து இவ்வாறு அணை கட்டுவது இயலாத பணியாக உணர்ந்து கொண்டார்.[2]

அசுவான் கீழ் அணை 1898-1902

[தொகு]

இவற்றுள் முதலாவது அணையைப் பிரித்தானியர் 1889 ஆம் ஆண்டில் கட்டத் தொடங்கினர். இது 1902 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இது 1902 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. சர் வில்லியம் வில்காக்ஸ் (William Willcocks) என்னும் பொறியாளர் இத் திட்டத்தை வடிவமைத்திருந்தார். சர் பெஞ்சமின் பேக்கர் (Benjamin Baker), சர். ஜான் எயார்ட் (John Aird) ஆகிய முன்னணிப் பொறியாளர்களும் இத் திட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுள் ஜான் எயார்டின் ஜான் எயார்ட் அண்ட் கோ என்னும் நிறுவனமே முதன்மை ஒப்பந்தகாரராக இருந்தது. இவ்வணை 1,900 மீட்டர் நீளமும், 54 மீட்டர் உயரமும் கொண்டதாக இருந்தது. முதல் வடிவமைப்பு போதுமானதாக இராததால் 1907-1912, 1929-1933 ஆகிய காலப் பகுதிகளில் இரண்டு தடவைகள் அணை உயர்த்திக் கட்டப்பட்டது.

முன்னேற்பாடுகள் 1954-1959

[தொகு]
மே 14, 1964இல் அசுவான் அணை கட்ட ஏதுவாக நைல் ஆற்றை திசைதிருப்பும் பணிக்கான தொடக்கவிழாவில் எகிப்திய அரசுத்தலைவர் நாசரும் சோவியத் தலைவர் குருச்சேவும். இந்த விழாவில்தான் குருசேவ் இதனை "எட்டாவது உலக அதிசயமாக" அறிவித்தார்.

1946 ஆம் ஆண்டில் அணை நிரம்பி வழிந்தபோது, அணையை மேலும் உயர்த்துவதிலும், இன்னொரு புதிய அணையை பழைய இடத்திலிருந்து 6 கிமீ தொலைவில் ஆற்றின் மேல் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கமால் அப்துல் நாசரைத் தலைவராகக் கொண்டு கட்டுப்படாத அலுவலர்களால் நிகழ்த்தப்பட எகிப்தியப் புரட்சிக்குப் பின்னர் 1954 நாலாம் ஆண்டில் புதிய அணை அமைப்பதற்கான முறையான திட்டங்கள் தொடங்கின. தொடக்கத்தில் பிரித்தானியாவும், ஐக்கிய அமெரிக்காவும் 270 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்குவதன் மூலம் இத் திட்டத்துக்கு உதவுவதாக இருந்தது. இதற்குப் பதிலாக நாசர் அரபு-இஸ்ரேல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குத் தலைமை ஏற்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாசரை ஒழித்துக் கட்டுவதற்காக உருவான இரகசியத் திட்டமொன்றின் ஒரு பகுதியாக, 1956 ஆம் ஆண்டு ஜூலையில், இந்த உதவி வழங்கும் திட்டத்தை இரு நாடுகளும் நிறுத்திவிட்டன. எகிப்து செக்கோஸ்லவாக்கியாவுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய ஆயுத ஒப்பந்தமும், அது மக்கள் சீனக் குடியரசை அங்கீகரித்ததும் இம் முடிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டன. 1958 இல் சோவியத் ஒன்றியம் புதிய அணைத் திட்டத்துக்கு உதவ முன்வந்தது. சோவியத் தொழில்நுட்பவியலர்களையும், கனரக எந்திரங்களையும் கொடுத்து உதவியது. பாரிய பாறை மற்றும் களி மண்ணாலான அணை சோவியத்தின் நீரியல்திட்ட நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.

கட்டுமானம் 1960–1976

[தொகு]
அசுவான் அணை கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் எழுப்பப்பட்ட அரபு-சோவியத் நட்புறவுக்கான நினைவுச்சின்னம். சிற்பி நிக்கோலாய் வெச்கனோவ் வடிவமைத்த இதன் இடதுபுறத்தில் சோவியத் அரசுச்சின்னமும் வலதுபுறத்தில் எகிப்திய அரசுச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.

1960 ஆம் ஆண்டில் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டு, 21 ஜூலை 1970 இல் நிறைவெய்தின. இந் நீர்த்தேக்கங்களினால் தொல்லியல் களங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்துத் தொல்லியலாளர் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 24 முக்கிய தொல்லியற் சின்னங்கள் அகழப்பட்டு வேறிடங்களுக்கு மாற்றப்பட்டன. சில உதவி செய்த நாடுகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டன. எடுத்துக்காட்டாக டெபூட் கோயில் மாட்ரிட்டுக்கும், டெண்டூர் கோயில் நியூ யார்க்குக்கும் அனுப்பப்பட்டன.

சோவியத் அரசு தொழில்நுட்ப வல்லுநர்களையும் கனரக இயந்திரங்களையும் வழங்கியது. கற்களால் நிரப்பப்பட்ட மிகப்பெரிய அணையை சோவியத் நீரியல் கழகம் வடிவமைத்தது. 25,000 எகிப்திய பொறியாளர்களும் தொழிலாளர்களும் இந்த பெரிய திட்டத்தை முடிக்க உழைத்தனர். எகிப்திய பக்கத்திலிருந்து ஒப்பந்தப்புள்ளியை எடுத்த ஓசுமான் அகமது ஓசுமான் இத்திட்டத்தை முன்னின்று நடத்தினார்.[3]

  • 1960: சனவரி 9 அன்று கட்டமைப்பு தொடங்கியது[4]
  • 1964: அணையின் முதற்கட்டம் முடிவுற்றது, நீர்த்தேக்கம் நிரம் துவங்கியது
  • 1970: மேல் அணை, சூலை 21 முடிவுற்றது
  • 1976: நீர்த்தேக்கம் கொள்ளளவை எட்டியது
  • 2011: அணையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Rashed, Roshdi (2002-08-02), "PORTRAITS OF SCIENCE: A Polymath in the 10th Century", Science, Science magazine, 297 (5582): 773, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1126/science.1074591, PMID 12161634, பார்க்கப்பட்ட நாள் 2008-09-16
  2. Corbin, Henry, History of Islamic Philosophy, Translated by Liadain Sherrard, Philip Sherrard, London; Kegan Paul International in association with Islamic Publications for The Institute of Ismaili Studies-1993; original French 1964, p. 149, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7103-0416-1
  3. "Osman the Efficient". Archived from the original on 2010-10-30. பார்க்கப்பட்ட நாள் 2013-06-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Collins, Robert O. (2002), The Nile, Yale University Press, p. 181, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-09764-6

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aswan High Dam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வான்_அணை&oldid=3793131" இலிருந்து மீள்விக்கப்பட்டது