உலகப் பாரம்பரியக் களம்
உலக பாரம்பரியக் களம் (World Heritage Site) என்பது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவினால் நிர்வகிக்கப்படும் அனைத்துலக உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு களம் ஆகும். இது, காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம், நகரம் போன்ற எதுவாகவும் இருக்கலாம்[1]. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, நாடுகளின் பொதுக் குழுவினால் தெரிவு செய்யப்படும்.[2] 21 பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்[3]
மனித இனத்தின் பொதுப் பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத் திட்டத்தின் நோக்கமாகும். சில களங்களின் மேம்பாட்டுக்காக, சில நடைமுறைகளின் கீழ், உலக பாரம்பரிய நிதியத்தில் இருந்து நிதி உதவி வழங்கப்படுவதும் உண்டு. இவ்வாறான களங்களைப் பாதுகாக்கும் நோக்குடன், 16 நவம்பர் 1972 ஆம் ஆண்டில் நடந்த யுனெஸ்கோவின் பொது மாநாட்டில் கொண்டு வரப்பட்ட சாசனத்தில்,[4] இத்திட்டம் உருவாக்கப்பட்டது. மார்ச் 2012 அறிக்கையின்படி, இத் திட்டத்தில் இதுவரை 189 நாடுகள் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன[5].
2012 ஆம் ஆண்டு நிலவரப்படி இது வரை 962 களங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 157 நாடுகளில் அமைந்துள்ள இக்களங்களில், 745 பண்பாட்டுக் களங்களும், 188 இயற்கைசார் களங்களும், 29 கலப்பு இயல்புக் களங்களும் அடங்குகின்றன.[6][7]. போர்க்காலங்களிலும் இந்தச் சின்னங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது இதன் முக்கிய அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரியத்துக்கு இன்றியமையாத இயற்கை மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான களங்களைப் பட்டியலிட்டு, அவற்றைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்[8].
இத்தாலியிலேயே அதிகளவு உலகப் பாரம்பரியக் களங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யுனெஸ்கோ ஒவ்வொரு பாரம்பரியக் களத்திற்கும் ஒவ்வொரு அடையாள இலக்கத்தை வழங்கி வருகின்றது. புதிதாக பட்டியலிடப்படும் களங்களில் சில பழைய பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதனால், அடையாள இலக்கங்களின் எண்ணிக்கை 1200 ஐ விட அதிகமாக இருப்பினும், களங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குறிப்பிட்ட களங்கள் அந்தந்த நாட்டின் சட்டப்படியான எல்லைக்குள் இருப்பினும், இவை ஒவ்வொன்றையும் பாதுகாப்பது உலக சமூகத்தின் கடமை என யுனெஸ்கோ கருதுகின்றது.
வரலாறு
ஐக்கிய அமெரிக்காவில் 1872ஆம் ஆண்டில் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா நிறுவப்பட்டது; இதுவே நூறாண்டுகள் கழித்து, நிக்சனின் நிர்வாகத்தின்போது, 1972ஆம் ஆண்டில் அமெரிக்க அரசால் 'உலக பாரம்பரிய அறக்கட்டளைக்கு' பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுவே உலகளவில் தேசியப் பூங்கா கருத்துக்களுக்கு அடிப்படையானது.[9]
1954ஆம் ஆண்டில் எகிப்திய அரசு அஸ்வான் அணை கட்ட முடிவெடுத்தபோது அதன் நீர்பிடிப்புப் பகுதியிலிருந்த பள்ளத்தாக்கில் அபு சிம்பெல் கோவில்கள் போன்ற பல பண்டைய எகிப்தின் பொக்கிசங்கள் மூழ்குவதாக இருந்தது. அப்போது இவற்றைக் காத்திட யுனெசுக்கோ உலகளவில் பெரும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டது. அபு சிம்பெல் மற்றும் [[பிலே கோவில்கள்}} கல், கல்லாக பெயர்க்கப்பட்டு உயரமான பகுதிக்கு எடுத்துச் செல்லப்படு அங்கு மீண்டும் கட்டமைக்கப்பட்டது. தெண்டூர் கோவில் இதேபோல நியூ யார்க்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.[10]
இந்தத் திட்டத்திற்கு US$ 80 மில்லியன் செலவானது; இதில் ஏறத்தாழ $ 40 மில்லியன் செலவை 50 நாடுகள் ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து இத்தாலியில் வெனிஸ், பாக்கித்தானில் மொகெஞ்சதாரோ மற்றும் இந்தோனேசியாவில் போரோபுதூர் கோவில் வளாகங்களையும் பாதுகாக்க பன்னாட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. மனித இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் காத்திட எழுந்த எண்ணக்கருவினால் யுனெசுக்கோ பன்னாட்டு சின்னங்கள் மற்றும் களங்களுக்கான கருத்தரங்கை உருவாக்கியது.
விண்ணப்பிக்கும் நடைமுறை
ஒவ்வொரு நாடும், தனது நாட்டிலுள்ள பண்பாட்டு, இயற்கை முக்கியத்துவம் உள்ள களங்களைக் கணக்கெடுக்க வேண்டும். இது ஆய்விற்கான ஒரு பட்டியலாகக் கொள்ளப்படும். இந்தப் பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படும் களத்தை உலக பாரம்பரியக் களத்திற்காக குறிப்பிட்ட நாடு முன்மொழியலாம். இந்தப் பட்டியலில் இல்லாத ஒரு களத்தை உலக பாரம்பரியக் களத்திற்காக ஒரு நாடு முன்மொழியக் கூடாது.
அப்படி முன்மொழியப்பட்ட களங்களை நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையும், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கமும் மதிப்பீடு செய்யும். பின்னர் குறிப்பிட்ட களமானது உலக பாரம்பரியக் களத்துக்கான தகுதியைப் பெற்றிருப்பின், அதனை உலகப் பாரம்பரியக் குழுவிற்குப் பரிந்துரை செய்யும். அந்தக் குழுவே ஆண்டுக்கொருமுறை ஒன்றுகூடி, குறிப்பிட்ட களத்தை உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் இணைத்துக் கொள்வதா இல்லையா என்பதை முடிவு செய்யும். சிலசமயம் இறுதி முடிவு எடுப்பதற்கு மேலதிக தகவல்கள் தேவை என குறிப்பிட்ட களத்தை முன்மொழிந்த நாட்டிடம் கேட்கப்படும்.
தேர்விற்கான விதிகள்
2004 ஆம் ஆண்டுவரை பாரம்பரிய பண்பாட்டு களங்களுக்கு ஆறு தேர்வு அளவீடுகளும், பாரம்பரிய இயற்கைக் களங்களுக்கு நான்கு தேர்வு அளவீடுகளும் கொடுக்கப்பட்டிருந்தன. பின்னர் 2005ஆம் ஆண்டு முதல் இந்த முறையில் சிறுமாற்றம் செய்யப்பட்டு, அனைத்து வகையான பாரம்பரியக் களங்களுக்கும் பொதுவாக பத்து தேர்வு அளவீடுகள் கொடுக்கப்பட்டன. பமுன்மொழியப்படும் பாரம்பரியக் களமானது உலகளாவிய நோக்கில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகவும், குறிப்பிட்ட பத்து அளவீடுகளில் ஒன்றையாவது நிறைவு செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.[11]
பண்பாட்டு களங்களுக்கான தேர்வு அளவீடுகள்
இயற்கை களங்களுக்கான தேர்வு அளவீடுகள்
=வரையறுக்கப்பட்ட களங்களுக்கான சட்டம்சார் நிலை
பரம்பல்
கீழுள்ள அட்டவணையில், உலகின் வெவ்வேறு வலயங்களில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் பரம்பலைக் காணலாம்:[12][13]
வலயம் | இயற்கை | பண்பாடு | கலப்பு | மொத்தம் |
---|---|---|---|---|
வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் | 68 | 417 | 11 | 496[14] |
ஆசியா-பசிபிக்கும் ஓசியானியாவும் | 55 | 148 | 10 | 213[14] |
ஆபிரிக்கா | 39 | 48 | 4 | 91 |
அரபு நாடுகள் | 5 | 67 | 2 | 74 |
லத்தீன் அமெரிக்காவும் கரிபியனும் | 36 | 91 | 3 | 130 |
Sub-Total | 203 | 771 | 30 | 1004 |
இருமுறை பதிவானவற்றைக் கழிக்க* | 15 | 26 | 1 | 42 |
Total | 188 | 745 | 29 | 962 |
- சில களங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சொந்தமாக இருப்பதனால் வலயங்களின் அடிப்படையில் கணக்கிடும்போது, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பதிவு செய்யப்பட்டிருப்பதனால் இவ்வாறு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுகின்றது.
நாடுகள் அடிப்படியிலான புள்ளிவிவரத்திற்கு உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலைப் பார்க்கவும்.
உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்
- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - அரபு நாடுகள்
- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆபிரிக்கா
- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - அமெரிக்கா
- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
- உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஐரோப்பா
ஆபத்தான நிலையிலுள்ள உலக பாரம்பரியக் களங்கள்
இலங்கையிலுள்ள உலக பாரம்பரியக் களங்கள்
தற்போது, இலங்கையில் எட்டு இடங்கள் யுனெசுகோவினால் உலக பாரம்பரியக் களங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு பண்பாட்டுக் களங்களாகவும் இரண்டு இயற்கைக் களங்களாகவும் விளங்குகின்றன.[15]
- பண்டைய புனித நகரமான அனுராதபுரம்
- தங்கக் கோயில், தம்புள்ளை
- புனித நகரம் கண்டி
- பண்டைய நகரமான பொலன்னறுவை
- பண்டைய நகரமான சிகிரியா
- காலியின் பழைய நகரமும் அதன் கோட்டைகளும்
- சிங்கராஜ வனம்
- இலங்கையின் மத்திய உயர்நிலங்கள்
இன்னமும் அறிவிக்கப்படாது ஆய்நிலையிலுள்ளப் பட்டியல்:
- சேருவில மங்கள ரஜ மகாவிகாரை
- சேருவில முதல் ஸ்ரீ பாத வரை (புனித காலடி ஆலயம்), மகாவலி ஆற்றோர பண்டைய யாத்திரிகர் பாதை
தமிழகத்திலுள்ளவை
- மாமல்லபுர மரபுக்கோயில்கள் - பல்லவர்களால் கட்டப்பட்டது.
- அழியாத சோழர் பெருங்கோயில்கள் - சோழர்களால் கட்டப்பட்டது.
- நீலகிரி மலை இரயில் பாதை - 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப்பாதை(rack railway) ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ "World Heritage".
- ↑ "The World Heritage Committee". UNESCO World Heritage Site. பார்க்கப்பட்ட நாள் 2006-10-14.
- ↑ According to the UNESCO World Heritage website, States Parties are countries that signed and ratified The World Heritage Convention. As of November 2007, there are a total of 186 states party.
- ↑ Convention Concerning the Protection of World Cultural and Natural Heritage
- ↑ World Heritage List
- ↑ World Heritage List, UNESCO World Heritage Sites official sites.
- ↑ Twenty-seven new sites inscribed, UNESCO World Heritage Sites official sites.
- ↑ வல்லமை.காம்
- ↑ World Heritage Convention, National Park Service Official Sites.
- ↑ Brief History, UNESCO World Heritage Sites official sites.
- ↑ "Criteria for Selection". World Heritage. பார்க்கப்பட்ட நாள் 2006-10-14.
- ↑ Stats
- ↑ [1]
- ↑ 14.0 14.1 The Uvs Nuur basin located in Mongolia and Russia is here included in Asia-Pacific zone.
- ↑ http://www.worldheritagesite.org/countries/srilanka.html