கட்டற்ற வணிகம்

கட்டற்ற வணிகம் அல்லது சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு சந்தை மாதிரி (market model) ஆகும். இது, நாடுகளிடையேயான பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான வணிகம், வரி மற்றும் வரியற்ற வேறு தடைகள் போன்ற அரசாங்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படாமல் நடைபெறுவதைக் குறிக்கும். ஒரு பகுதி பொருளியல் பகுப்பாவாய்வாளர்கள், கட்டற்ற வணிகம், சம்பந்தப்படுகின்ற இரு பகுதியினருக்கும் இலாபகரமானது என்றும், இதன் சாதக விளைவுகள், பாதக விளைவுகளிலும் அதிகம் என்றும் வாதிடுகிறார்கள். உலகமயமாக்கத்துக்கு எதிரானவர்களும், தொழிலாளர் நலன் குறித்த பரப்புரையாளர்களும் பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக்காட்டி இதனை எதிர்க்கின்றனர்.[1][2][3]

கட்டற்ற வணிகம் என்பது பொருளியல், அரசாங்கம் ஆகியவை தொடர்பான ஒரு கருத்துருவாகும். இது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:

  • தீர்வைகள் மற்றும் வேறு தடைகள் அற்றமுறையில் பொருட்களின் அனைத்துலக வணிகம்
  • தீர்வைகள் மற்றும் வேறு தடைகள் அற்றமுறையில் சேவைகளின் அனைத்துலக வணிகம்
  • உள்ளூரைச் சேர்ந்த நிறுவனங்கள், மக்கள் அல்லது உற்பத்திக் காரணிகளுக்கு வெளிநாட்டைச் சேர்ந்தவற்றைவிட சாதகமான நிலைமைகளை வழங்கும் கொள்கைகள் (வரிகள், மானியங்கள், சட்ட விதிகள் என்பன) இல்லாமல் இருத்தல்.

இத்துடன் தொடர்புடைய ஆனால் வேறுபட்ட கருத்துருக்கள்:

  • தொழிலாளர்கள் சுதந்திரமாக நாடுகளிடையே சென்று வருதல்
  • மூலதனம் சுதந்திரமாக நாடுகளிடையே சென்று வருதல்

கட்டற்ற வணிகத்தின் வரலாறு

தொகு

கட்டற்ற வணிகத்தின் வரலாறு, திறந்த சந்தை (open market) வாய்ப்புக்களை நோக்காகக் கொண்ட அனைத்துலக வணிகத்தின் வரலாறு ஆகும்.

வரலாற்றில், வளம் பெற்றுச் செழித்திருந்த பல்வேறு பண்பாடுகளும், வணிகத்தில் ஈடுபட்டிருந்தது அறிந்ததே. இந்த வரலாறுகளின் அடிப்படையில், காலப்போக்கில் கட்டற்ற வணிகத்தின் நன்மைகள் பற்றிய கொள்கைகள் வளர்ச்சியடைய ஆரம்பித்தன. இக் கொள்கைகள், தற்காலத்தின் நவீன கல்விசார்ந்த நோக்கில் வளர்ந்தது, இங்கிலாந்தினதும், பரந்த அடிப்படையில் முழு ஐரோப்பாவினதும் வணிகப் பண்பாட்டின் கடந்த அடிப்படையிலேயே ஆகும். கட்டற்ற வணிகக் கொள்கைகளுக்கு எதிரான வணிகவாதக் (mercantilism) கொள்கைகள், 1500 களில், ஐரோப்பாவில் உருவாகிப் பல உருவங்களில் இன்றுவரை நிலைத்து உள்ளன. வணிகவாத்தத்துக்கு எதிரான தொடக்ககாலக் கட்டற்ற வணிகக் கொள்கைகள், டேவிட் ரிக்கார்டோ, ஆடம் சிமித் என்பவர்களால் முன்வைக்கப்பட்டன. சில பண்பாடுகள் வளம் மிக்கவையாக இருந்ததற்குக் காரணம் வணிகமே என்னும் வாதத்தைக் கட்டற்ற வணிகக் கொள்கையாளர்கள் முவைத்தனர். எடுத்துக்காட்டாக, மத்தியதரைக் கடல் பண்பாடுகளான எகிப்து, கிரீஸ், ரோம் என்பன மட்டுமன்றி, வங்காளமும், சீனாவும் கூடச் செழிப்புப் பெற்றிருந்ததற்குக் காரணம் வணிகமே என்று ஆடம் சிமித் எடுத்துக் காட்டினார்.

கட்டற்ற வணிகத்தை பிரெஞ்சு சொல்லான Laissez faire எனவும் அழைப்பர். பிரெஞ்சு மன்னன் 14ம் லூயி காலத்தில், அவன் பிரதமர் வாணிகர்களை 'உஙளை எப்படி கட்டுக்குள் வைப்பது' என கேட்டாராம்; அதற்கு வாணிகர்கள் 'எங்களை சும்மா விடுங்கள்' - பிரெஞ்சில் Laissez faire - என சொன்னார்களாம். அதனால் Laissez faire என்ற பெயரும் நிலைத்துவிட்டது.

கடந்த நூற்றாண்டுகளில், கட்டற்ற வணிகக் கொள்கைகள், வணிகவாதம், பொதுவுடைமைவாதம் (communism) மற்றும் பலவிதமான கொள்கைகளுடன் கொள்கைப் போராட்டம் நடத்தின. அபினிப் போர்கள் (Opium Wars), பல குடியேற்றவாதப் போர்கள் உட்பட ஏராளமான போர்கள், முக்கியமாக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன.

எல்லா வளர்ச்சியடைந்த நாடுகளும் பாதுகாப்புவாதக் கொள்கைகளைக் கைக்கொண்டிருந்தன எனினும், செல்வப் பெருகியபோது இக் கொள்கைகளைப் பெரும்பாலும் தளர்த்திக்கொண்டன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Murschetz, Paul (2013). State Aid for Newspapers: Theories, Cases, Actions. இசுபிரிங்கர் பதிப்பகம். p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3642356902. Parties of the left in government adopt protectionist policies for ideological reasons and because they wish to save worker jobs. Conversely, right-wing parties are predisposed toward free trade policies.
  2. Peláez, Carlos (2008). Globalization and the State: Volume II: Trade Agreements, Inequality, the Environment, Financial Globalization, International Law and Vulnerabilities. United States: Palgrave MacMillan. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0230205314. Left-wing parties tend to support more protectionist policies than right-wing parties.
  3. Mansfield, Edward (2012). Votes, Vetoes, and the Political Economy of International Trade Agreements. Princeton University Press. pp. 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0691135304. Left-wing governments are considered more likely than others to intervene in the economy and to enact protectionist trade policies.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டற்ற_வணிகம்&oldid=4170678" இலிருந்து மீள்விக்கப்பட்டது