இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் பலி
இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (24/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக 5 நாள்களாக வரிசையில் காத்திருந்த லாரி டிரைவர் அங்கேயே இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மேற்கு மாகாணத்தின் அங்குருவடோட்டாவில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையம் ஒன்றில் 63 வயதான லாரி டிரைவர் ஒருவர் கடந்த 5 நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்தார். அவர் நேற்று தனது வாகனத்திலேயே இறந்து கிடந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இவரையும் சேர்த்து எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இவ்வாறு எரிபொருள் நிரப்பும் மையங்களில் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப்பலிகளால் இலங்கையில் பெரும் சோகம் நிலவுகிறது என்கிறது தினத்தந்தி செய்தி.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க வாய்ப்பு
அடுத்த மாதம் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டி.ஆர்.எஸ்.) எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க வாய்ப்பிருப்பதாக கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது தி ஹிந்து ஆங்கில நாளிதழ்.
யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்தும் முடிவை எதிர்க்கட்சிகள் இறுதி செய்தவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவை தொலைபேசியில் அழைத்து சின்ஹாவுக்காக ஆதரவு கேட்டார். அப்போதே யஷ்வந்தை ஆதரிப்பது தொடர்பான எண்ணவோட்டத்தை சந்திரசேகர் ராவ் வெளிப்படுத்தினார் என்கிறது தி ஹிந்து செய்தி.
இது தொடர்பாக மேலும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
எனினும், தங்கள் கட்சியின் மாநில செயற்குழுவில் விவாதித்த பிறகே இது தொடர்பாக அவர் தமது முடிவை அறிவிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் மற்றும் பாஜகவிடம் இருந்து சம தூரத்தில் விலகி இருப்பதே டி.ஆர்.எஸ். கட்சியின் நிலைப்பாடு. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக 17 எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இரண்டு முறை சந்தித்துப் பேசினர். அந்தக் கூட்டங்களில் காங்கிரசுக்கு முக்கிய இடம் இருந்தது என்பதால் இந்த இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்பதை டி.ஆர்.எஸ். தவிர்த்தது.
மாநிலத்தில் நிலவும் அரசியல் மோதலின் பின்னணியில் பாஜகவை டி.ஆர்.எஸ். பகையாக பார்ப்பதை புரிந்துகொள்ள முடியும். அதே வேளை, காங்கிரசுக்கு இடம் அளித்தால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் சேரப்போவதில்லை என்பதையும் சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டே வந்தார்.
இந்நிலையில், இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல் டி.ஆர்.எஸ். விலகி இருக்கப்போகிறதா அல்லது இரண்டு வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிக்கப்போகிறதா என்பது அனைவரும் பதில் எதிர்பார்க்கும் கேள்வியாக இருந்தது.
ஆனால், பாஜகவை வீழ்த்த முன்முயற்சிகளை மேற்கொள்ளும் சந்திரசேகர் ராவ் 'நாட்டு நலனை' கருத்தில்கொண்டு சின்ஹாவை ஆதரிக்கலாம் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக-வால் ஏராளமான பின்னடைவுகளை சந்திக்கும் சந்திரசேகர் ராவ் பாஜகவை திருப்பித் தாக்க குடியரசுத் தலைவர் தேர்தல் வாய்ப்பாக இருக்கும்.
ஆனால், திரௌபதி முர்மூவை வேட்பாளராக பாஜக அறிவித்த பிறகு, அவர் பழங்குடியினர் என்பதால் அவரை ஆதரிப்பது குறித்தும் டி.ஆர்.எஸ். ஆலோசித்தது. ஆனால், அப்படி ஆதரிப்பது மாநிலத்தில் தங்களோடு மோதும் பாஜகவுக்கு வழிகொடுத்தது போல ஆகிவிடும் என்பதையும், அதனால் ஏற்படும் பாதகங்களையும் யோசித்து திரௌபதியை ஆதரிக்கும் எண்ணத்தை டி.ஆர்.எஸ். கைவிட்டது.
சின்ஹா நேரடியாக காங்கிரஸ் வேட்பாளர் அல்ல என்பதால் அவரை ஆதரிப்பதில் பெரிய தடை இல்லை என்றும் டி.ஆர்.எஸ். கருதுகிறது என்கிறது தி ஹிந்து செய்தி.
பல நிறுவன ஊழியர்களுக்கு 'பொதுப் பணியிடங்கள்' அமைத்த மேற்கு வங்க அரசு நிறுவனம்
பல காரணங்களுக்காக அலுவலகம் செல்ல முடியாமல் வெளியே வேலை செய்ய நேர்கிற பல நிறுவனங்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் சேர்ந்து வேலை செய்ய கொல்கத்தா நகரின் நியூடவுன் பகுதியில் 'ஹேப்பி ஒர்க்ஸ்' என்ற பெயரில் பொதுப் பணியிடங்கள் அமைத்தது மேற்கு வங்க பொதுத்துறை நிறுவனமான ஹிண்ட்கோ (West Bengal Housing Infrastructure Development Corporation) என்று செய்தி வெளியிட்டுள்ளது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ்.
இந்த பொதுப் பணியிடத்தில் வேலை செய்ய விரும்புகிறவர்களுக்கு மணிக் கணக்கில் குறைந்த கட்டணத்தில் வேலையிடமும், கணினியும் வழங்கப்படுகிறது. முதல் ஒன்றரை மணி நேரத்துக்கு 30 ரூபாயும், அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 20 ரூபாயும் செலுத்தி இங்கே பணி செய்யலாம். சில வாடிக்கையாளர்கள் மாதக்கணக்கில் வேலை செய்வதற்கு முன்கூட்டியே பணம் செலுத்தி இடத்தைப் பதிவு செய்துகொள்கிறார்கள், என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியூடவுன் பகுதியில் இது போல மூன்று பொதுப் பணியிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுயேச்சையாக வேலை செய்வோர், புதிய நிறுவனங்களைத் தொடங்குவோர், வேலை செய்யும் தாய்மார்கள் இந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கிய சில நிறுவனங்கள் வாடகை கொடுத்து அமைக்கப்பட்ட அலுவலகங்களை கைவிட்டுவிட்டன என்று தெரிவிக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
என்ன வசதிகள்?
மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவன் திரும்பி வரும்வரை காரில் அமர்ந்து அலுவலகப் பணியை மேற்கொள்ளும் ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு, காரில் அமர்ந்து வேலை செய்வதில் உள்ள சிரமங்களையும் குறிப்பிடும் இச் செய்தி, இது போன்ற பெண்களுக்கும், புதிய தொழில்முனைவோருக்கும் பொதுப் பணியிடத் திட்டம் எப்படி உதவியாக இருக்கிறது என்பதை விவரிக்கிறது.
ஏ.சி., வைஃபை வசதி, ஒவ்வோர் இருக்கைக்கும் புத்தக அலமாரி ஆகியவையும் அளிக்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு பெண்கள் சுய உதவிக் குழுக்களிடம் தரப்பட்டுள்ளன.
பல நிறுவனங்களை சேர்ந்தோர் பொதுவாக வேலை செய்வதற்கான இடத்தை அளிக்கும் இந்த திட்டம் வேறொரு நன்மையையும் கொண்டிருப்பதாக இந்த செய்தி குறிப்பிடுகிறது. வெவ்வேறு துறைகளை சேர்ந்தோர் சந்திக்கவும், தங்கள் கருத்துகளைப் பறிமாறிக்கொள்வதற்குமான வாய்ப்பை இந்தப் பொதுப் பணியிடம் அளிக்கிறது என்கிறது இச் செய்தி.
எதிர்காலத்தில் பிரும்மாண்டமான பொதுப் பணியிடங்களை அமைக்கப்போவதாக கூறுகிறது ஹிண்ட்கோ என்கிறது அச்செய்தி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்