இந்தியா-பாகிஸ்தான்: கிரிக்கெட்டை காயப்படுத்தும் போர்களும் அரசியலும்
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அண்மையில் தெரிவித்த ஒரு கருத்தால் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்திருக்கிறது.
இந்தத் தொடரை இந்தியா புறக்கணித்தால் அது சர்வதேச கிரிக்கெட்டை பிரித்துவிடும் என்றும், இந்தியாவில் நடைபெறும் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பதைப் பாதிக்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவலை தெரிவித்துள்ளது. நாளை மாலை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவுள்ள நிலையில், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையேயான உறவு போர் சமயத்தில் எப்படி இருந்தது என்பதை பிபிசி திரும்பிப் பார்க்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடந்தபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் போட்டிக்குத் தயாராகும் அறையை நான்கு மாதங்கள் வரை பகிர்ந்துகொண்டதை இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நினைவுகூர்கிறார்.
உலகின் பிற அணிகளைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் ஒரே அணியாக இருந்து, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் விளையாடியபோது இந்த நிகழ்வு நடந்தது. அந்த சமயத்தில் நடந்த போர், 9 மாதங்களுக்குப் பிறகு முடிந்தது. அந்தப் போர் முடிவில் பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் தனிநாடாகப் பிரிந்தது.
"வெளியே என்ன நடந்தாலும் இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே எந்தப் பதற்றமும் இல்லை" என்று தன்னுடைய Sunny Days என்ற சுய வரலாற்று புத்தகத்தில் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
கேரி சோபர்ஸ் தலைமையிலான 17 பேர் கொண்ட அந்த அணியில் 6 பேர் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இந்திய அணியில் இருந்து கவாஸ்கர், சுழற்பந்து வீச்சாளர் பிஷன் பேடி மற்றும் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் பரோக் இன்ஜினியர் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். பாகிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன் ஜாகீர் அப்பாஸ், ஆல்-ரவுண்டர் இன்டிகாப் ஆலம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆசிப் மசூத் ஆகியோர் இடம் பெற்றனர்.
"கிட்டத்தட்ட தினமும் மாலை பாகிஸ்தானியர் ஒருவர் நடத்தும் உணவகத்திற்கு நாங்கள் உணவருத்தச் செல்வோம். அந்த உரிமையாளர் வானொலியில் செய்தி கேட்டு, அன்றைய தினத்தில் என்ன நடந்தது என்பதை ஒரு காகிதத்தில் உருது மொழியில் குறித்து வைத்து இன்டிகாப்பிடம் கொடுப்பார். அதை இன்டிகாப் வாங்கி கசக்கி எறிந்துவிடுவார்" என அந்தப் புத்தகத்தில் கவாஸ்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
களத்தில் சக சர்வதேச வீரர்கள் இரு நாட்டு போர் குறித்து விளையாட்டாக சீண்டியுள்ளனர். கவாஸ்கருடன் பேட்டிங்கைத் தொடங்கிய தென்னாப்பிரிக்காவின் ஹில்டன் அக்கர்மேன், வேடிக்கையாக கற்பனை செய்ய அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தினார்.
"ஆலமும் இன்ஜினியரும் ஒருவரையொருவர் துப்பாக்கிமுனையில் எதிர்கொள்கின்றனர். நான் போர் விமானத்தில் இருக்கிறேன். ஆசிப் மசூத் எனக்கு பின்னால் இருக்கிறார். பிஷனும் ஜாஹீரும் தப்பிக்க முயற்சிக்கின்றனர் என்று அவர் சொன்னதும் நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்" என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில் களத்திற்கு வெளியே சில கவலைகள் இருந்தன.
இன்ஜினியர் அளித்த ஒரு பேட்டியால் சுழற்பந்து வீச்சாளர் பேடி அதிருப்தியடைந்துள்ளார்.
தன்னுடைய வீடு பம்பாயில் கடலை ஒட்டி இருப்பதால் என் மகள், மனைவி பாதுகாப்பு குறித்து தனக்கு பயம் இருப்பதாகவும், அதனால் அவர்களை இங்கிலாந்தின் லங்காஷயரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தவுள்ளதாகவும் இன்ஜினியர் பேட்டி கொடுத்ததாக கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் எல்லைக்கு அருகே அமிர்தசரஸில் தன்னுடைய குடும்பத்தினர் இருந்தும் பேடி செய்தியாளர்களிடம் பேசவில்லை என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
பங்களாதேஷ் போரின் போது இந்திய மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டது பற்றிய கவாஸ்கரின் நினைவுகள், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே இருந்த உறவைக் காட்டுகிறது. இரண்டு முறை நேரடி போர் மற்றும் காஷ்மீர் தொடர்பான சர்ச்சை இருந்தபோதிலும் அவை ஒருபோதும் வீரர்களுக்கு இடையேயான உறவில் குறுக்கிட்டதில்லை.
பிரிட்டிஷ் இந்தியா பிரிவினைக்குப் பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை. 1952ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முதன்முறையாக சுற்றுப்பயணம் வந்தபோது, இரு நாடுகளும் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடின.
A corner of a foreign field என்ற புத்தகத்தில் பரந்த இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அரசியல் காரணங்களால் ஏற்பட்டிருக்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான சிக்கலான மற்றும் முரண்பாடான விளையாட்டு உறவு குறித்து விளக்க இந்த சுற்றுப்பயணத்தை ராமச்சந்திர குஹா விவரிக்கிறார்.
பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவுக்குச் சொந்தமான பாகிஸ்தானின் டான் செய்தித்தாளின் முன்பக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் தனது ராணுவத்தை இந்தியா அதிகரிக்கிறது என்று செய்திகள் இடம்பெற்றாலும், பின்பக்கத்தில் கிரிக்கெட் அணி நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தும். அவர்கள் நல்லெண்ணத்தின் தூதர்கள் என செய்திகள் இருந்தன.
அந்தத் தொடர் இந்தியாவுக்கு வெற்றிகரமாக அமைந்தது. கல்கத்தாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என தீவிர இந்து அமைப்பு பிரசாரம் செய்தபோதிலும், அந்தப் போட்டியைக் காண பெருந்திரளான மக்கள் திரண்டனர். அந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
இரு அணிகளும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் விளையாடி வந்தாலும், இருவரும் 58 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடியுள்ளனர். ஒப்பீட்டளவில், இதே காலகட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 102 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளனர்.
இரு நாட்டு அணிகளுக்கும் இடையேயான ஆரம்பக்கால தொடர்கள் சுவாரசியமாக இல்லை. 1960-61 காலகட்டத்தில் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர் உட்பட பல போட்டிகள் ட்ராவில் முடிந்தன. 1965 மற்றும் 1971இல் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டபோது இரு தரப்பு உறவும் மோசமடைந்தது. இரு நாடுகளும் அடுத்த 17 ஆண்டுகளுக்கு நேருக்கு நேர் விளையாடாத நிலையில், 1978ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றதும் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் உறவு மீண்டும் தொடர்ந்தது.
அடுத்த இரு தசாப்பதங்களுக்கு இரு நாடுகளுக்கும் இடையே அந்த உறவு தொடர்ந்த நிலையில், மீண்டும் அரசியல் குறுக்கிட்டது. காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் கிளர்ச்சியைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டி இந்தியா விளையாட மறுத்தது. பின், கார்கில் போருக்குப் பிறகு எடுக்கப்பட்ட ராஜதந்திர முயற்சியால் 2003-2004 காலகட்டத்தில் இந்தியா மீண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வருடாந்திர சுற்றுப்பயணம் இருந்த நிலையில், 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இரு தரப்பு உறவு மீண்டும் தடைபட்டது. ஒரேயொரு விதிவிலக்காக 2012-213 காலகட்டத்தில் மூன்று ஒருநாள் மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் இந்தியா வந்தது. ஐபிஎல் தொடரிலும் பாகிஸ்தான் வீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.
"இந்தியா, பாகிஸ்தான் இடையே இருக்கும் இது போன்ற உறவை முறித்தல், பிறகு புதுப்பித்தல் என்பதற்கு இணையான ஒன்றை கிரிக்கெட் உலகிற்குள் கண்டுபிடிப்பது கடினம்" என்று இந்திய வரலாற்றாசிரியர் முகுல் கேசவன் ஒரு கட்டுரையில் எழுதினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி உணர்வு, பொதுவாக வீரர்களை விட ரசிகர்களின் இதயங்களிலும் மனங்களிலும் மிகவும் தீவிரமாக இருப்பதாக விளையாட்டு எழுத்தாளர் சுரேஷ் மேனன் கூறுகிறார்.
பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு மற்றும் பாராட்டு குறித்து இந்திய வீரர்கள் எப்போதும் பேசியிருக்கிறார்கள். 1955ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கராச்சி விமான நிலையத்தில் கூடினர்.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இந்தியா வீரர்கள் வெளியே செல்லும்போது, கடைக்காரர்கள் அவர்களிடம் பணம் வாங்க மறுத்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.
கிரிக்கெட் களத்தில் கிடைக்கும் வெற்றிதான் ஓர் அரசியல் அமைப்பு, ஒரு மதம் அல்லது ஒரு தேசம் மற்றொன்றை விட உயர்ந்தது என்பதற்கான உறுதியான ஆதாரம் என்று நம்பும் ரசிகர்கள் இன்றைய சமூக ஊடக சண்டைகளில் ஈடுபடுகின்றனர். மிகப்பெரிய விளையாட்டு மற்றும் தனித்துவமான போட்டி உணர்வு, துணைக்கண்டத்தின் அரசியலிடம் தொடர்ந்து பணயக் கைதியாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்