பேலியோ உணவு முறையை பின்பற்றுவதால் நீரிழிவு ஏற்படுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பேலியோ உணவுமுறையால் நீரிழிவு நோய் ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. சுபகுணம்
  • பதவி, பிபிசி தமிழ்

சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். அவர் பேலியோ உணவுமுறையைப் பின்பற்றத் தொடங்கிய பிறகு நீரிழிவு நோய் ஏற்பட்டு, அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு கோமாவில் இருந்தவர் நேற்று அதிகாலை உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பேலியோ உணவுமுறையைப் பின்பற்றுவது நிரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துமா என்று தெரிந்துகொள்ள ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா ராமச்சந்திரனிடம் பேசியபோது, "பேலியோ, கீட்டோ போன்ற உணவுமுறைகளை யார் பின்பற்றுவதாக இருந்தாலும் முதலில் தங்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்துகொண்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுதான் பின்பற்ற வேண்டும்," எனக் கூறினார்.

மேலும், "குறுகிய காலகட்டத்தில் பலனளிக்கக்கூடிய அனைத்து உணவுமுறைகளிலுமே பின்விளைவுகள் இருக்கும்," என்றும் கூறினார்.

ஆனால், "நான் சுமார் 14,000 பேருக்கு ஆலோசனை அளித்து வருகிறேன். அதில் சுமார் 6,000 பேருக்கும் மேல் நீரிழிவு நோயாளிகள் தான். அவர்களுக்கு டயட் திட்டம் கொடுத்ததில், பாதியில் விட்டுச் சென்ற சிலரைத் தவிர, தொடர்ச்சியாக பின்பற்றுபவர்களுக்கு சர்க்கரை அளவு குறைந்துள்ளது. அவர்களில் வரும்போது அளவுக்கு அதிகமான சர்க்கரை இருந்தவர்களுக்கு சிறிது சிறிதாக இன்சுலினையும் மாத்திரையையும் குறைத்து, சர்க்கரை கட்டுக்குள் வந்துள்ளது," என்கிறார் பேலியோ உணவுமுறை நிபுணர் மருத்துவர் ஹரிஹரன்.

ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா ராமச்சந்திரன், பேலியோ டயட் நிபுணர் ஹரிஹரன் ஆகிய இருவரிடமும் பேலியோ உணவுமுறை குறித்த சில கேள்விகளைக் கேட்டோம். அந்தக் கேள்விகளும் அவர்களுடைய பதில்களும் இனி.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா ராமச்சந்திரன்

பேலியோ உணவுமுறையைப் பின்பற்றுவதில் உள்ள சிக்கல்கள் என்ன? அந்த உணவுமுறையில் என்னவெல்லாம் சாப்பிட வேண்டும், அது என்ன மாதிரியான பாதிப்புகளைக் கொண்டுவரும்?

கோதுமை, பால் பொருட்கள், சில பயிர் வகைகள், சூரிய காந்தி எண்ணெய் போன்றவற்றை தவிர்த்துவிடுவார்கள். இறைச்சி, மீன், முட்டை, காய், பழம், பாதாம் போன்ற பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வார்கள். சான்றாக, பாதாம் பருப்பையே கால் கிலோ அளவுக்கு எடுத்துக் கொள்வார்கள். அதுவே இறைச்சியாக இருந்தால் தட்டில் வெறும் இறைச்சி மட்டுமே முழுவதுமாக இருக்கும்.

நாம் 25, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் உணவுமுறையைப் பின்பற்றி வளர்ந்திருப்போம். அப்படியிருக்க, இப்படி திடீரென புதிய முற்றிலும் வேறுபட்ட உணவுமுறைக்கு மாறும்போது, நம் உடல் எளிதில் அதை ஏற்றுக்கொள்ளாது. எவ்வளவு ஆரோக்கியமான நபராக இருந்தாலும் அதன் பாதிப்பு தெரியும். இதனால், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள் ஏற்படலாம், ஏற்படும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த உணவுமுறையைப் பின்பற்றினால், "நீரிழிவு கட்டுக்குள் வரும், இதில் சர்க்கரை, கொழுப்பு போன்றவையே இருக்காது. அதிகளவில் புரத உணவு தான் இதில் பங்கு வகிக்கிறது. ஆகவே இது நல்லது தான்" என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனரே?

பேலியோ அல்லது கீட்டோ உணவுமுறை எனக் கூறி பின்பற்றுபவர்களில் பலரும் உண்மையாகவே முற்றிலும் அதைப் பின்பற்றுவதில்லை. அவர்களுடைய வசதிக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்கிறார்கள். புரதச் சத்தும் ஓரளவுக்குத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பேலியோ என்றில்லை, உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் உடற்பயிற்சி செய்பவர்களுமே அதிகளவில் புரதம் எடுத்துக் கொள்கிறார்கள். அதுகூட பின்விளைவுகளைக் கொண்டுவரும்.

ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா ராமச்சந்திரன்

பட மூலாதாரம், Frames In Times Photography

படக்குறிப்பு, ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா ராமச்சந்திரன்

நாம் எதை, எவ்வளவு எடுத்துக் கொண்டாலும், நம்முடைய சிறுநீரகத்திற்கு என்று ஓர் அளவு உண்டு. அதைத் தாண்டி அதிகமாக இறக்கிக் கொண்டேயிருந்தால், நாளடைவில் சிறுநீரக பாதிப்பில் கொண்டுபோய்விடும். பேலியோ உணவுமுறையைப் பொறுத்தவரை, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், வயிற்றிலுள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி மாறுபடுவது ஆகியவை ஏற்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

இது சர்க்கரை, உடல் எடையைக் கட்டுப்படுத்துவது என்பது ஒரு கூற்றாக உள்ளது. சில பேர் அதைச் செய்தும் உள்ளார்கள். ஆனால் அதை மட்டுமே வைத்து இந்த உணவுமுறை சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் எனச் சொல்லிவிட முடியாது.

ஏனெனில் அதற்கான ஆய்வுகள் முழுமையாக எதுவும் இல்லை. அதேவேளையில், புரதம் உடலில் அதிகமாகும்போது இன்சுலின் போன்ற ஹார்மோன் (Insulin like growth factor, IGF-1) சுரப்பது நிகழும். அதை அதிகப்படுத்துவதாலும் நமக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். அதனாலேயே கூட, நமக்கு நீரிழிவு, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வரலாம்.

இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதாக இருந்தால் நிச்சயம் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு, மருத்துவர் வழிகாட்டுதலின்படி தான் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறுகிறீர்களே ஏன்?

இந்த உணவுமுறை என்றில்லை, நாம் டயட் ஒன்றை பின்பற்றுகிறோம் என்றாலே அதை மருத்துவரிடம் ஆலோசித்து, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறதா என்பதை உறுதி செய்தபிறகே பின்பற்ற வேண்டும்.

பேலியோ உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

ஏற்கெனவே, சிறுநீரக பிரச்னை, நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் இப்படியான உணவுமுறைகளை பின்பற்றுவதாக இருந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், திடீரென மாவுச்சத்து உட்கொள்வதைக் குறைத்தால் உடல் அதை ஏற்றுக்கொள்ளாது.

அது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்துவிடும். சர்க்கரை அளவு குறைந்தால் முதலில் மூளையைத்தான் பாதிக்கும். அது உயிருக்கே மிகவும் ஆபத்தானது. ஆகவே, ஒருவர் பேலியோ உணவுமுறையைப் பின்பற்றுவதாக இருந்தால், நிச்சயமாக மருத்துவரை ஆலோசித்த பிறகே முடிவு செய்ய வேண்டும். நான் வழக்கமாக இத்தகைய விரைந்து பலனளிக்கக்கூடிய பக்கவிளைவுகளைக் கொண்ட உணவுமுறையை பரிந்துரைப்பதில்லை.

உடல் எடையை குறைக்க வேண்டும் அல்லது கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால், அதற்கு எந்த வகையான உணவுமுறையைப் பின்பற்றுவது ஆரோக்கியமானது?

முதல்கட்டமாக கொடுக்கப்படும் பரிந்துரை, நடைபயிற்சி தான். தினசரி 30 நிமிடங்கள் அல்லது மூன்று வேளை உணவையும் முடித்து 15-20 நிமிடங்கள் கழித்து மூன்று வேளையும் பத்து நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். அதுவே சிறந்த உடற்பயிற்சி.

நாம் வழக்கமாகச் சாப்பிடும் உணவுகளில் அளவைக் கட்டுப்படுத்தினாலே போதுமானது. மூன்று இட்லி சாப்பிடும் இடத்தில் ஐந்து இட்லி சாப்பிடுவது தவறு. இரண்டு இட்லி சாப்பிட்டுக் கொண்டு அதோடு அதிகமாக காய் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

பேலியோ உணவுமுறை

பட மூலாதாரம், Getty Images

நாளின் மூன்று வேளை உணவிலும், சட்னி, பொறியல், தோசையில் கலந்துகொள்வது என்று ஏதாவது ஒரு விதத்தில் காய் சேர்த்துக்கொள்ள வேண்டும். சாப்பிடுவது வயிற்றுக்கு நிறைவாக, டயட் இருக்கிறோம் என்ற உணர்வே வராத வகையில் அதை மேற்கொள்ள வேண்டும். தீவிர கட்டுப்பாட்டோடு இருந்தால், சில மாதங்களில் அது திகட்டிவிடும். ஆகவே மென்மையாக, வழக்கமான உணவுமுறையில் நம் டயட்டை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

தன்னுடைய உடலுக்கு ஓர் உணவுமுறை ஏற்புடையதா, ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானதா என்பதை அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசித்த பிறகு தான் பின்பற்ற வேண்டும்.

பேலியோ உணவுமுறை நிபுணர் ஹரிஹரன்

பேலியோ டயட் பின்பற்றுவதால் நீரிழிவு நோய் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றனவே! இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

அடிப்படையில் பேலியோ உணவுமுறை என்பது மாவுச்சத்து பொருட்களை தவிர்ப்பது தான். அது தான் ரத்தத்தில் குளுகோஸாக மாறுகிறது. அதைத் தவிர்க்கும்போது ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைந்து, உடலின் சர்க்கரை அளவு குறைகிறது. சர்க்கரை அளவு குறைந்து கட்டுக்குள் வரும்போது இன்சுலினை நிறுத்துகிறோம். சிலருக்கு மாத்திரையை நிறுத்துகிறோம். சர்க்கரை அளவு அதீதமாக இருப்பவர்களுக்குத் தான் இந்த உணவுமுறையோடு குறைந்த அளவுக்கு இன்சுலினும் மாத்திரையும் கொடுக்கப்படுகிறது.

டைப் 1 நீரிழிவு நோய் இருந்தவர்கள், பேலியோ டயட் பின்பற்றிய பிறகு அதை கட்டுக்குள் வைத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். இந்த உணவுமுறையின் மூலம் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பே இல்லை.

பேலியோ உணவுமுறை
படக்குறிப்பு, பேலியோ உணவுமுறை நிபுணர் ஹரிஹரன்

இந்த உணவுமுறையில் புரதச் சத்து அதிகளவில் சேர்க்கப்படுவதால், இன்சுலின் போன்ற ஹார்மோன் (IGF-1) அதிகரித்து, அதனால் நீரிழிவு ஏற்படுவதாகச் சொல்கிறார்களே?

அதற்கு வாய்ப்பே இல்லை. பலரும் ஆறு ஆண்டுகளாக இந்த உணவுமுறையைப் பின்பற்றி சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். புரத அளவு அதிகரித்தால் ஐஜிஎஃப்-1 ஏற்படுவது உண்மைதான்.

ஆனால், புரதம் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. முழுமையான முட்டை ஒன்றில் 6 கிராம் தான் புரதம் இருக்கும். ஒருநாளைக்கு நமக்குத் தேவை 55 கிராம் புரதம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் கூறுகிறது.

ஒரு நாளைக்கு 10 முட்டை எடுத்தால் தான் அந்த அளவை எட்ட முடியும். அதிகபட்சமாக 60 அல்லது 70 கிராம் புரதம் தான் எடுப்பார்கள். அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் 100 கிராம் வரை எடுக்கலாம். மாவுச்சத்து எடுக்காததால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகுவாகக் குறைகிறது. அதேநேரம், கூடுதலாக எடுக்கும் புரதம் தேவைப்படும் குளுகோஸாக மாறுகிறது. அதுமட்டுமின்றி, பேலியோ என்பது அதிக கொழுப்புச் சத்து, சராசரி அளவிலான புரதச் சத்து மற்றும் மாவுச்சத்து முற்றிலும் தவிர்க்கப்படும் உணவுமுறை. இதனால் எந்தப் பிரச்னையும் வருவதில்லை.

பேலியோ உணவுமுறையால் நீரிழிவு நோய் ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images

நீரிழிவு மட்டுமல்ல, இந்த உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

நீண்டகாலமாக சிறுநீரகக் கல் இருந்து அது கண்டுபிடிக்கப்படாமலே இருந்திருக்கும், அதனால் சிறுநீரக பிரச்னை ஏற்படும். இந்த உணவுமுறையைப் பின்பற்ற ஒருவர் ஆலோசனைக்கு வரும்போது, பல்வேறு பரிசோதனைகளைச் செய்த பிறகே பரிந்துரைக்கிறோம்.

அந்தப் பரிசோதனைகளை எடுக்கும்போதே உடலில் என்ன பாதிப்புகள் உள்ளன என்பது தெரிந்துவிடும். சிறுநீரக பாதிப்பு இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இதைப் பரிந்துரைப்பதில்லை.

பேலியோ டயட் எடுப்பதால் சிறுநீரக பாதிப்பு வருகிறது என்பது தவறான வாதம். இதைப் பின்பற்றுபவர்கள் யாருக்கும் இந்த பாதிப்பு வந்ததாக பதிவுகள் இல்லை.

பல ஆண்டுகளாக இருக்கும் வழக்கமான உணவுமுறையில் இருந்து திடீரென ஒரு புதிய உணவுமுறைக்கு மாறும்போது, உடல் அதை ஏற்றுக்கொள்ளாது. அதனால் பின்விளைவுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறதே?

நீண்டகாலம் குடித்துக் கொண்டிருந்தவர் திடீரென அதை நிறுத்தும்போது கை நடுக்கம் வருகிறதல்லவா, அதைப் போலத்தான் இதுவும். பேலியோவை பின்பற்றத் தொடங்கிய சில நாட்களுக்கு தலைவலி, மலச்சிக்கல் ஏற்படும்.

இரண்டு நாட்கள் முதல் பத்து நாட்கள் வரை, ஒவ்வொருவருக்கும் அது இருக்கக்கூடிய காலகட்டம் மாறுபடும். ஆனால், அதற்குப் பிறகு உடல் அதை ஏற்றுக் கொள்ளும். இதைத் தாண்டி பெரிய பின்விளைவுகளோ பாதிப்புகளோ உயிராபத்தோ பேலியோவால் ஏற்படுவதில்லை.

பேலியோ உணவுமுறையால் நீரிழிவு நோய் ஏற்படுமா?

பட மூலாதாரம், Getty Images

என்னுடைய நோயாளிகள் ஆண்டுக்கணக்கில் இதைப் பின்பற்றுகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் அவர்களின் உடல்நிலையைப் பரிசோதித்து வருகிறோம். 2018ஆம் ஆண்டில் இருந்ததைவிட 2022இல் உடல் ஆரோக்கியம் மேம்பட்டுதான் இருக்கிறது.

இவைபோக மேலும், "ஒருவேளை இந்த உணவுமுறைக்கு நடுவே மற்ற உணவுகளைச் சாப்பிட்டாலும்கூட இதில் கிடைக்கக்கூடிய பலன் கிடைக்காமல் போகுமே தவிர உடல் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

குறிப்பாக, உரிய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவர் ஆலோசனைகளுக்குப் பிறகு இதைப் பின்பற்றும்போது நீரிழிவு நோய் போன்ற பிரச்னைகள் வராது, அதைக் குணப்படுத்தவே செய்யும். ஏற்கெனவே பிரச்னைகள் இருந்து அதைக் கவனித்து, ஆலோசனை பெறாமல் சுயமாக எடுத்தால், உரிய வழிகாட்டுதலின்றி பின்பற்றிவிட்டு, உணவுமுறை மீது பழி போடுவது தவறான விஷயம்," எனக் கூறுகிறார் மருத்துவர் ஹரிஹரன்.

Banner
காணொளிக் குறிப்பு, தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: