இலங்கை: 70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன

இலங்கை எரிபொருள் நெருக்கடி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (27/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்திகளை வெளியிடும் நியூஸ் ஃப்ர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, 30 நாட்களுக்கு முன்னரே முற்பதிவு செய்த போதிலும், போதியளவு எரிபொருள் இன்னும் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் W.S.S. பெர்னாண்டோ தெரிவித்தார்.

அமைச்சரின் கூற்றுக்கிணங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே எரிபொருள் கிடைக்கும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுதொகை எரிபொருளே விநியோகிக்கப்பட்டுள்ளதால், 20 வீதமானோருக்கேனும் எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார்.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்கு போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால், ராணுவ பாதுகாப்பை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மோதல்கள் இடம்பெறுவதால், 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு போடப்படுவது அவசியம் எனவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வலியுறுத்தினார்.

தமிழகத்தில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு

தமிழ்நாட்டில் முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியில், "முட்டை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர். கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் நாட்களில் கொள்முதல் விலை 600 காசுகள் என்ற அதிகபட்ச விலையை எட்டும் என கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

முட்டையின் நுகர்வைப் பொறுத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன்படி நாமக்கல் மண்டலத்தில் (சென்னை தவிர தமிழகம் முழுவதும்) பண்ணைக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது. பண்ணைக் கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில், மேலும் 15 காசுகள் உயர்த்தி 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முட்டை விலை உயர்வு

பட மூலாதாரம், Getty Images

மேலும், அந்தச் செய்தியில் இதுகுறித்துப் பேசியுள்ள தமிழ்நாடு முட்டைக்கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம், "கடந்த ஓராண்டாக கோழி பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு 400 காசுகளில் இருந்து 450 காசுகளாக அதிகரித்துள்ளது. தற்போது, 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டாலும், 515 காசு மட்டுமே கையில் கிடைக்கிறது. ஆண்டுதோறும் முட்டை உற்பத்தி 10 சதவீதம் உயரும் நிலையில் தற்போது 20 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக முட்டை கொள்முதல் விலை 600 காசுகள் வரை உயர வாய்ப்புள்ளது," என்றார்.

பண்ணைக் கொள்முதல் விலை 600 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டால் சில்லறை விற்பனைக் கடைகளில் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

"அவசரநிலையின்போது நிலவிய பயங்கரமான சூழலை மறந்துவிடக்கூடாது" - பிரதமர் மோதி

காங்கிரஸ் அரசு நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியபோது, ஜனநாயகத்தைச் சீர்குலைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோதி 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் தெரிவித்ததாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோதி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களிடம் உரையாடி வருகிறார். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

அதில், "நாட்டில் 1975-ஆம் ஆண்டு இதே ஜூன் மாதத்தில் தான் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்படி, நாட்டிலுள்ள குடிமக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன.

அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளில் ஒன்று தான் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த உயிருக்கும் தனிமனித சுதந்திரத்துக்குமான உரிமை.

அவசர நிலை நடைமுறையில் இருந்த காலத்தில், ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டின் நீதிமன்றங்கள், சட்ட அமைப்புகள், பத்திரிகைகள் என அனைத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. புகழ் பெற்ற பாடகர் கிஷோர் அரசைப் புகழ்ந்து பாட மறுத்ததால், வானொலியில் அவர் குரல் ஒலிக்கத் தடை விதிக்கப்பட்டது.

ஜனநாயகத்தை சீர்குலைக்கப் பல முயற்சிகள் நடைபெற்ற போதிலும், ஆயிரக்கணக்கான கைதுகள், லட்சக்கணக்கான மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகளுக்குப் பிறகும்கூட நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதிருந்த நம்பிக்கை சற்றும் குறையவில்லை. ஜனநாயக உணர்வு நம் நாடி நரம்புகளில் ஊறியிருக்கிறது என்பதால், இறுதியில் வெற்றி பெற்றது ஜனநாயகம் தான்.

அவசரநிலையின்போது, நாட்டு மக்களின் போராட்டத்துக்குச் சான்றாக உடனிருந்து போராடிய பெரும்பேறு எனக்கும் கிடைத்தது. தற்போது நாடு 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வருகிறது. அவசரநிலையின்போது நிலவிய பயங்கரமான சூழலை மக்கள் மறந்துவிடக் கூடாது. இனிவரும் தலைமுறையினரும் மறக்கக் கூடாது. வரலாற்றின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலிருந்தும் கற்றுக்கொண்டு நாம் முன்னேற வேண்டும்," என்று பிரதமர் மோதி பேசினார்.

பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images

சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெற இலங்கை மந்திரிகள் ரஷ்யா பயணம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்கு பெட்ரோல், டீசலுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க ரஷ்யா மற்றும் கத்தார் நாடுகளிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் பெறுவதற்கான முயற்சிகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, அதில் முதல் கட்டமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவது குறித்துப் பேசி முடிவெடுப்பதற்காக இலங்கை மந்திரிகள் 2 பேர் இன்று(திங்கட்கிழமை) ரஷ்யா செல்கின்றனர்.

இதுபற்றி இலங்கை எரிசக்தித்துறை மந்திரி காஞ்சன விஜேசேகரா கூறுகையில், "2 நாட்களுக்கும் குறைவான தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே எரிபொருள் இருப்பு உள்ளது. அது அத்தியாவசிய சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமைக்காக தேசத்திடம் மன்னிப்பு கோருகிறோம். சலுகை விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு 2 மந்திரிகள் ரஷ்யா செல்கிறார்கள். அங்கு அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிப்பார்கள்" என்றார்.

காணொளிக் குறிப்பு, இந்த நாட்டில்தான் பிறக்கவேண்டும் என்பது என் குழந்தையின் விதி: இலங்கை தமிழ் அகதியின் குரல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: