உலக அகதிகள் தினம்: அகதிகள், புலம் பெயர்ந்தோர், குடியேறிகள், தஞ்சம் கோரிகள் என்ன வேறுபாடு?
கடந்த இரண்டு தசாப்தங்களில், மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து வேறிடம் சென்று வாழ்வது இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. 2000இல் 17 கோடியே 30 லட்சம் பேர் தாய் நாட்டிற்கு வெளியே வாழ்ந்தததாகவும், 2020-ல் அந்த எண்ணிக்கை 28 கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
இது உலக மக்கள் தொகையில் 3.6 சதவிகிதம் ஆகும்.
ஆனால் மக்கள் வேறு நாட்டிற்குச் செல்வதைப் பற்றி நாம் அனைவரும் பேசும் விதம் குழப்பமாக இருக்கும். புலம்பெயர்ந்தோர், அகதிகள், புகலிடம் கோருவோர் மற்றும் குடியேறிகள் என்ற வெவ்வேறு சொற்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் அவற்றை விவரிக்க சரியான வழி இருக்கிறதா?
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில், Centre for Migrationல் மூத்த விரிவுரையாளராக உள்ள Dr Charlotte Taylor, எல்லைகளைக் கடக்கும் மக்களை விவரிக்க ஊடகங்கள் எவ்வாறு மொழியைப் பயன்படுத்துகின்றன என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்.
நாம் அவ்வப்போது கேட்கும் சில சொற்களைப் பற்றிய விளக்கங்களுக்கு அவரது உதவியைப் பெற்றோம்.
Migrant-புலம் பெயர்ந்தவர்
நீங்கள் அடிக்கடி கேட்கக்கூடிய வார்த்தை இது. வேலை அல்லது மேம்பட்ட வாழ்க்கையைத் தேடுவதற்காக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும் நபரை புலம் பெயர்ந்தவர் எனலாம்.
உதாரணமாக, நீங்கள் இங்கிலாந்தில் வசிக்கிறீர்கள் என்றால், இந்த கோடையில் சில மாதங்களுக்கு ஸ்பெயினில் வேலைக்குச் செல்ல முடிவு செய்தால், நீங்கள் புலம் பெயர்ந்தவர் என்று விவரிக்கப்படலாம்.
"புலம் பெயர்ந்தோர் என்ற சொல் தற்போதைக்கு ஒப்பீட்டளவில் சர்ச்சைக்குரியது அல்ல, ஆனால் அது பாதுகாப்பான வார்த்தையாக தொடராது. காலப்போக்கில் அவை மாறும்" என்று, சார்லட் டெய்லர் கூறுகிறார்.
அரசியல் காரணங்களுக்கான இடம்பெயர்வு என்பது சற்று வித்தியாசமானதாக இருக்கும்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களைப் போல, ஒரு குறிப்பிட்ட ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து விலகிச்செல்வதற்காக யாராவது இடம்பெயர்வது அப்படி ஒரு வேறுபட்ட இடபெயர்வாக இருக்கலாம்.
இடம்பெயர்வுகளை மையப்படுத்தி பயன்படுத்தப்படும் "அலை, ஓட்டம், வெள்ளம்" போன்ற வார்த்தைகள் பற்றிதான் சார்லட் கவலைகொள்கிறார்.
புலம்பெயர்பவர்கள் தொடர்ந்து வருகைதரும் நாட்டில் உள்ள மக்கள், அவர்களை "மக்களாக அல்லாமல் பொருள்களாக " பார்க்க முடியும் என்ற அர்த்தத்தை அந்த வார்த்தைகள் வெளிப்படுத்துவதாக அவர் நம்புகிறார்.
Immigrant-குடியேறியவர்
ஒரு நபர் வெளிநாட்டில் நிரந்தரமாக வாழ வரும்போது அவர் குடியேறியவர் எனப்படுகிறார்.
அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை, அது ஒரு தேர்வாக இருக்கலாம்.
நாடுவிட்டு நாடு மாறி வாழ்வதற்குச் சரியான காரணங்கள் இருந்தாலும், சட்டப்பூர்வ குடியேற்றத்திற்கும், சட்டவிரோத குடியேற்றத்திற்கும் வேறுபாடு உண்டு.
அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் ஒருவர் ஒரு நாட்டிற்கு வர அனுமதிக்கப்படுகிறார் என்றால், அவர் சட்டவிரோதமாக குடியேறியவர் அல்ல.
``ஊடகங்கள் பெரும்பாலும் குடியேற்றத்தைப் பற்றி விவாதிக்கின்றன, வெளியேற்றத்தைப் பற்றி அல்ல. அதாவது, மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும்போது ஊடகங்கள் விவாதிப்பதிலை`` என்று கூறும் சார்லட், "அவை இப்போது உண்மையில் தனித்தனி செயல்முறைகளாகக் பார்க்கப்படுகின்றன. இரண்டுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை மக்கள் அடையாளம் காண்பதில்லை" என்கிறார்.
Refugee-அகதி
போர், இயற்கை பேரழிவு, துன்புறுத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காக, தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவரே அகதி எனப்படுவர்.
"இது மிகவும் வித்தியாசமான நிலை" என்கிறார் டாக்டர் சார்லட் டெய்லர்.
"ஒருவரை அகதி என்று நீங்கள் ஒப்புக்கொண்டவுடன், அவர்களுக்கு குறிப்பிட்ட சில உரிமைகள் உள்ளன என்பதையும் நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்." என்றும், "அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளால் இயக்கப்படுகிறார்கள்." என்றும் சார்லட் டெய்லர் கூறுகிறார்.
Asylum seeker - தஞ்சம் கோரிகள்
இந்த நபர் வேறு நாட்டில் சர்வதேச பாதுகாப்பைக் கோரினாலும், மேற்கூறியவற்றின் கலவையாக இருக்கலாம்.
அதில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நிலம் அல்லது நீர் நிலைகளைக் கடந்து தங்கள் இலக்கை அடைய முயற்சிக்கும் நபர்களும் அடங்குவர்.
தஞ்சம் கோரிகள் எனும் வார்த்தையை, இந்தச் சூழ்நிலையில் பயன்படுத்துவதற்கு வசதியாக உணர்கிறார் சார்லட்.
"யாராவது தஞ்சம் கோரினால், அவர்கள் தஞ்சம் கோருகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் சில நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள், தஞ்சம் கோரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளன.
"நேர்மையான காரணங்களுக்காக தஞ்சம் கோருவதற்கும், அதற்கு மாறாகத் தஞ்சம் கோருவதற்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அது நிராகரிக்கப்படலாம், ஆனால் தஞ்சம் கோருவது உண்மை." என்கிறார், டாக்டர் சார்லட் டெய்லர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்