வரலாறு: யுக்ரேனில் ஹிட்லரின் யூதப் படுகொலை வரலாறு: யுக்ரேனில் 34,000 யூதர்களை துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்ற ஹிட்லரின் நாஜிப் படை
இப்போது பெரும் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யுக்ரேன் இரண்டாம் உலகப் போர் காலகட்டதிலும் கொடூரமான நிகழ்வுகளின் களமாக இருந்திருக்கிறது. இப்போது ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள கீயவ் நகரத்தில் 80 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனர். அதை பாபின் யார் படுகொலை என வரலாறு பதிவு செய்திருக்கிறது.
1941-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யுக்ரேனின் தலைநகர் கீயவை ஹிட்லரின் ஜெர்மானிய நாஜிப் படைகள் கைப்பற்றின. அப்போது அது சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதி.
கீயவ் தங்கள் கட்டுப்பாட்டுகள் வந்த சில நாள்களில் அந்த நகரத்தில் இருந்து யூதர்கள் அனைவரும் தங்கள் முன் வரும்படி நாஜிப் படையினர் கட்டளையிட்டனர். அனைவரும் சோதனைச் சாவடி ஒன்றின் அருகே கூட வேண்டும் என்பது அந்தக் கட்டளையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கட்டளையை ஏற்று ஆயிரக்கணக்கணக்கான யூதர்கள் வரிசை வரிசையாக அந்தச் சோதனைச் சாவடிக்கு வந்து சேர்ந்தார்கள். தங்களை ஜெர்மனிக்கோ பாலத்தீனத்துக்கோ அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்தது. நடந்தபடியும் வாகனங்களிலும் யூதர்கள் குவிந்தனர். குழந்தைகளும் பெண்களுமாக கூடியிருந்தனர்.
அவர்கள் அனைவரையும் பத்திரமாக வழியனுப்பி வைப்பது நாஜி படைகளின் நோக்கமல்ல. துப்பாக்கிகள் மூலம் அவர்களை நாஜி படையினர் மிரட்டினர். பாபின் யார் என்ற ஓடைப் பள்ளத்தாக்குக்கு அவர்களை கொண்டு சென்றனர். அங்கே வைத்து அவர்கள் அனைவரையும் கொன்று விட வேண்டும் என்பதுதான் திட்டம்.
ஒட்டு மொத்தமாகக் கொல்லும் கொடுங் கருவிகள் ஏதுமில்லை. நச்சு வாயு செலுத்தப்படும் அறைகளும் கிடையாது. ஒவ்வொருவரையும் துப்பாக்கிக் குண்டுகள் மூலம் கொல்ல வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.
உடுத்திய ஆடைகளைத் தவிர வேறு எந்தப் பொருள்களையும் எடுத்து வரக்கூடாது என்று கட்டளையிட்ட நாஜி வீரர்கள், பின்னர் ஆடைகளையும் களையச் சொன்னார்கள். நிர்வாணமாக பாபின் யார் ஓடைப் பள்ளத்தாக்கில் நடந்து போகும்படி கூறினார்கள். அங்கு மக்களைக் கொல்வதற்காகவே நிறுவப்பட்ட படையினர் காத்திருந்தனர். மக்கள் வரவர அவர்களைத் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர்.
ஒரு சிலரோ, சில நூறு பேரோ அல்ல. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரம் என்கிறது புள்ளி விவரம். நாஜிக்களின் ஆவணங்களின் படியே அந்த ஒரு சம்பவத்தில் மட்டும் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை 33,771.
யூதப் படுகொலை பாபின் யார் பகுதிக்கு வெளியே பரவித் தொடர்ந்தது. பல பகுதிகளில் கொல்லப்பட்டோரின் உடல்களும் பாபின் யார் ஓடைப் பள்ளத்தாக்குப் பகுதியில் கொண்டு வந்து கொட்டப்பட்டன. 1943-ஆம் ஆண்டு சோவியத் படைகள் கீயவ் நகரை மீண்டும் கைப்பற்றும் வரை சுமார் ஒரு லட்சம் பேரின் உடல்கள் அங்கு வீசப்பட்டதாக மதிப்பிடுப்படுகிறது.
யூதர்கள், ரோமா, யுக்ரேனியர்கள், சோவியத் போர்க் கைதிகள் போன்றோர் கொல்லப்பட்டோரில் அடங்குவார்கள். போரின் பிற்பகுதியில் பாபின் யார் பள்ளத்தாக்குப் பகுதியை ஜெர்மானியர்கள் சமதளப்படுத்தி, உடல்களை ஒட்டு மொத்தமாக எரித்து தங்களது குற்றத்தை மறைக்க முயற்சி செய்தனர்.
அந்தப் படுகொலையின்போது குழந்தைகளாக இருந்து தப்பிப் பிழைத்த பலரும் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நடந்த கொடூர நிகழ்வுகளின் சாட்சியங்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
இந்தப் பகுதியில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதை ஒட்டிய பகுதிகளில் அண்மையில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலின்போது ஏவுகணைகள் வீசப்பட்டன. அதை மனிதத் தன்மை அற்ற செயல் என்று யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி விமர்சனம் செய்திருந்தார்.
யூதர்கள் அதிகம் வசிக்கக் கூடிய நாட்டில், யூதர் அதிபராக இருக்கும் தருணத்தில் யூதப் படுகொலை நடந்த ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஒரு முரண் என்னவெனில் அப்போது கீயவை பாதுகாப்பதற்காக சோவியத் படைகள் போராடின. இப்போது சோவியத்தின் அங்கமாக இருந்த ரஷ்யாவே கீயவில் கொடூரப் படுகொலைகள் நடந்த இடத்தில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்