மூன்றே நாளில் இந்தியா சரண் - 5 மாதங்களில் அணியில் மாற்றம் வரும் என்ற கம்பீர் பேட்டியால் புதிய யூகம்
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சிட்னியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 10 ஆண்டுகளுக்கு பிறகு, ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
சிட்னி டெஸ்ட் தொடங்கி மூன்றாவது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியானது இந்த தொடரை இழந்து, கோப்பையையும் பறிகொடுத்துள்ளது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் படுதோல்வியுடன் தாயகம் திரும்ப உள்ளது.
ஆஸ்திரேலியா அணியுடன் கற்றுக்கொண்டவற்றை வைத்து இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்று அணியின் கேப்டன் பும்ரா கூறினார். மேலும் வரும் 5 மாதங்களில் இந்திய அணியில் அதிக மாற்றங்கள் வரக்கூடும் என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதனால், இந்திய அணியில் எவ்வாறான மாற்றங்கள் வரக்கூடும் என்று ரசிகர்களிடையே இப்போதே பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா
பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியதையடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது.
இந்த போட்டி வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2வது முறையாக ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெஸ்ட் தொடரை பரிதாபமாக இழந்த நிலையில் அந்த வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது.
போட்டிச் சுருக்கம்
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 185 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 181 ரன்களும் எடுத்தன. 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய 2வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்திருந்தது.
3-வது நாளான இன்று, கூடுதலாக 16 ரன்கள் சேர்த்தநிலையில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 39.5 ஓவர்களில் 157 ரன்களை குவித்தது. இதையடுத்து, 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 27 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
விமர்சனங்களுக்கு ஆஸ்திரேலியா பதிலடி
பெர்த் டெஸ்டில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தபின் ஆஸ்திரேலியாவின் பேட்டிங், பந்துவீச்சு பற்றி அந்நாட்டு ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
ஆனால், இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் தங்களின் பந்துவீச்சாலும், பேட்டிங்காலும் வீழ்த்தி டெஸ்ட் தொடரை 10 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்திய அணியை தனி ஒருவனாக தாங்கிப் பிடித்த பும்ரா
பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இந்திய அணியை ஒவ்வொரு போட்டியிலும் தோளில் தூக்கி சுமந்து, திருப்புமுனையை ஏற்படுத்தியது வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மட்டும்தான் என்பதில் சந்தேகமில்லை.
பும்ரா என்ற ஒற்றை பந்துவீச்சாளரை நம்பிதான் இந்திய அணி பார்டர் கவாஸ்கர் தொடரை எதிர்கொண்டது. இந்தத் தொடரில் மட்டும் பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 1977 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி 31 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே டெஸ்ட் தொடரில் ஒரு பந்துவீச்சாளர் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டுகளாக இருந்தது. 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த சாதனையை பும்ரா தற்போது முறியடித்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரின் தொடர்நாயகனாகவும் பும்ரா அறிவிக்கப்பட்டார். இந்தத் தொடரில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பும்ரா.
பும்ரா வீசும் ஒவ்வொரு 28 பந்துகளுக்கு ஒருமுறை ஒரு விக்கெட்டை வீழ்த்துபவராக இந்த தொடரில் இருந்தார்.
ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோல்விக்கு காரணங்கள் என்ன?
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு 2வது நாளான நேற்று திடீரென முதுகு பிடிப்பு ஏற்பட்டு பந்துவீச முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து அணியின் மருத்துவரின் உதவியோடு விளையாட்டு அரங்கிலிருந்து வெளியேறி பும்ரா மருத்துவனைக்குப் புறப்பட்டார்.
இருப்பினும் 2வது இன்னிங்ஸில் பேட் செய்த பும்ரா 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் போலந்து பந்துவீச்சில் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார்.
ஆனால், முதுகு தசைப்பிடிப்பு காரணமாக முன்னெச்சரிக்கையாக 2வது இன்னிங்ஸில் பும்ரா பந்துவீசவில்லை. இதனால் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் மட்டுமே பந்துவீசினர். பும்ரா இல்லாமல் இந்திய அணி பந்துவீசியதும் தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.
அது மட்டுமல்லாமல் போட்டி முடிய இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் போது இந்திய அணி முன்னிலைக்காக குறைந்தபட்சம் 350 ரன்களாக இலக்கு வைத்திருந்தால்தான் வெற்றியை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது.
சிட்னி போன்ற கிரீன்டாப் பிட்சில் 162 ரன்கள் இலக்காக வைத்துக்கொண்டு போட்டியை வெல்வது சாத்தியமில்லாதது. அதிலும் பும்ரா அணியில் பந்துவீசியிருந்தால்கூட வெற்றி கிட்டும் என்று நம்பலாம். ஆனால், பும்ரா இல்லாமலும், வெற்றியைக் கைப்பற்ற போதுமான ஸ்கோரும் இல்லாத நிலையில் தோல்வி அடைவது உறுதியானது.
இந்தத் தொடரை இந்திய அணி இழப்பதற்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்று பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங் மட்டும்தான்.
அனுபவமான வீரர்களான புஜாரா, ஹனுமா விஹாரி, ரஹானே ஆகியோர்களை உள்நாட்டு போட்டியில் விளையாட வைத்துவிட்டு அனுபவம் குறைந்த கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்றோரை நம்பினர். ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் மீதும் பெரிய நம்பிக்கை இருந்தநிலையில் இருவரும் பேட்டிங்கில் சொதப்பினர்.
இதில் கோலி முதல் போட்டியில் சதம் அடித்ததோடு சரி மற்ற எந்த போட்டியிலும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ரோஹித் சர்மா எந்தப் போட்டியிலும் ஒற்றை இலக்க ரன்னையே கடக்கவில்லை.
இந்தத் தொடரில் கோலியின் பேட்டிங் சராரசி 23.75 ஆக இருக்கிறது. ஒரு டெஸ்ட் தொடரில் சதம் அடித்தபின் ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து சொதப்பி மோசமான சராசரி வைத்துள்ள 3வது பேட்ஸ்மேனாக கோலி இருக்கிறார் என்று கிரிக்இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25 டெஸ்ட் சீசனில் கோலியும், ரோஹித் சர்மாவும் 10 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளனர்.
இந்த டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சரியில்லையா அல்லது தேர்வே சரியில்லையா, அல்லது தேர்வுக்குழுவே சரியில்லையா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியது, என வர்ணனையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
போராடிய பிரிசித், சிராஜ்
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 162 ரன்களை இலக்காக இந்திய அணி நி்ர்ணயித்திருந்தது. இது வெற்றி பெற போதுமான இலக்கு அல்ல என்பது தெரிந்தபோதிலும் பும்ரா இல்லாத சூழலில் இந்திய அணி களமிறங்கியது, கேப்டன் பொறுப்பை கோலி ஏற்று செயல்பட்டார்.
சாம் கோன்ஸ்டாஸ், கவாஜா அதிரடியாகத் தொடங்கினர். கோன்ஸ்டாஸ் ஒரு கேமியோ ஆடி 17 பந்துகளில் 22 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லாபுஷேன் 6 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஸ்லிப்பில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த ஸ்டீவ் ஸ்மித்தும் 6 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்
ஆஸ்திரேலிய அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதைப் பார்த்தபோது இந்திய வீரர்களுக்கு சற்று நம்பிக்கை துளிர்விட்டது. .
கவாஜா, டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கவாஜா 41 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார். 104 ரன்களுக்கு 4 வது விக்கெட்டைஆஸ்திரேலியா இழந்தது. இந்த பார்ட்னர்ஷிப்பை விரைவாக உடைத்திருந்தால் நிச்சயம் ஆட்டம்மாறியிருக்கும்.
5வது விக்கெட்டுக்கு வெப்ஸ்டர், டிராவிஸ் ஹெட் கூட்டணி நிதானமாக பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அறிமுக வீரர் வெப்ஸ்டர் 39, ஹெட் 34 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.
இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
"உடல்நிலைக்கும் மதிப்பளிக்க வேண்டும்'
இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா போட்டி முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசுகையில், " இந்த தோல்வி சிறிது வருத்தமாக இருக்கிறது, இருப்பினும் உடல்நிலைக்கும் மதிப்பளிக்க வேண்டும், உடல்நிலையோடு சண்டையிட முடியாது. சில நேரங்களில் அதற்கும் மதிப்பளிக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற பிட்சில் பந்துவீச எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், முதல் இன்னிங்ஸில் இருந்தே சிறிய பிரச்சினை எனக்கு ஏற்பட்டது. மற்ற பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்துவீசலாம் என்று முடிவு செய்துதான் உடற்தகுதி நிபுணர்களுடன் பேசினேன் ஆனால், அவர்கள் வேண்டாம் என்று கூறினர்.
இந்தத் தொடர் முழுவதும் ஆஸ்திரேலியாவுடன் கடுமையாக போட்டியிட்டோம், சவாலான தொடராக இருந்தது. இந்த டெஸ்டிலும் அப்படித்தான் இருந்தது. ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன, அதிகமாகக் கற்றுக்கொண்டோம். இளம் வீரர்கள் பலர் அணிக்குள் வந்துள்ளர், அவர்களும் கற்றுக்கொண்டது எதிர்காலத்தில் உதவும், அணியை மேலும் பலமாக்கும். இந்த கற்றுக்கொண்ட உணர்வோடு அடுத்தக் கட்டத்துக்கு நகர்வோம். சிறந்த தொடராக அமைத்து தந்தமைக்கு ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.
5 மாதங்களில் மாற்றம் வரும் என கம்பீர் தகவல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், "அணியின் ஒரு பிரிவு மட்டுமே காரணம் என்று சொல்லி அவர்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அணியின் ஒவ்வொரு பிரிவிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது", என்றார்.
வரும் ஜூன் மாதம், இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து கம்பீர் பேசுகையில், அடுத்த ஐந்து மாதங்களில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், "அடுத்த ஐந்து மாதங்களுக்கான திட்டம் குறித்து பேசுவது இப்போது மிகவும் சீக்கிரமாக இருக்கும். அணியின் ஃபார்ம், அணுகுமுறை, வீரர்கள் என அனைத்திலும் மாற்றங்கள் வரக்கூடும்", என்றும் குறிப்பிட்டார்.
ஐந்தாவது டெஸ்டில் ரோஹித் சர்மாவின் விலகல் குறித்து கேட்டதற்கு, "அவராக முன்வந்துதான் இந்த போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்", என்று கம்பீர் பதில் அளித்தார்.
பேட்ஸ்மேன்களின் செயல்திறன் பற்றிய கேள்விக்கு, "எல்லா வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த அளவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், ஒரு அணிக்கு தேவையான சிறப்பான வீரர்களை பெற முடியாது", என்று தெரிவித்தார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு யூகங்கள் குறித்து பேசிய கௌதம் கம்பீர், "அவர்கள் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் அவர்களுக்கு இந்த விளையாட்டின் மீது இன்னும் பசி இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்வார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் என்ன செய்தாலும், இந்திய கிரிக்கெட்டின் நலனை முன்வைத்தே செய்வார்கள்", என்று கூறினார்.
கம்பீர் பதவி மீது தொங்கும் கத்தி
இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணி பல தோல்விகளைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது, உள்நாட்டில் 12 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை 3-0 என இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகியது. இப்போது பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை 3-1 என 10 ஆண்டுகளுக்குப்பின் இழந்துள்ளது.
இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் இருந்தபோது வீரர்களுடன் சுமூகமான தொடர்பு, பேச்சு, அனுசரணையான போக்கு இருந்தது. அதேபோன்ற போக்கு கம்பீர் பயிற்சியாளராக வந்தபின் வீரர்களிடம் இல்லை, வீரர்களைக் கையாள்வதும் சரியான முறையில் இல்லை, வீரர்கள் ப்ளேயிங் லெவனில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி இழந்தால் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் தொடர்வது இந்திய அணிக்கு பாதுகாப்பானதாக இருக்காது, அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிறது என்பதால் அதற்குள் முடிவு செய்வோம், அதிபட்சமாக ஜனவரி 12ம் தேதிக்குள் ஏதாவது முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்களுக்கு சிறப்பான நாள்
10 ஆண்டுகளுக்குப்பின் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில் "என்னால் நம்ப முடியவில்லை. ஆனால், எங்கள் அனைவருக்கும் தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. எங்கள் திட்டங்கள் குறித்து தெளிவான பார்வையுடன் செயல்பட்டோம்.
ரன்களைக் குறைவாகக் கொடுக்க வேண்டும், விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம். பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டனர். உண்மையில் பெருமையாக இருக்கிறது. இந்தத் தொடரை கைப்பற்ற குழுவாக அதிகமான நேரத்தை செலவிட்டுள்ளோம். சில வெற்றிகள் எப்போதும் மறக்கமுடியாததாக அமைந்துவிடுகிறது. இந்த வெற்றியை, நாங்கள் அடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறோம். இளம் வீரர்களின் பங்களிப்பும் அற்புதமாக இருந்தது. ரசிகர்களும் எங்களுக்கு தொடர் முழுவதும் நல்ல ஆதரவு அளித்தனர். இந்த 2025ம் ஆண்டில் இந்தநாள் எங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)