கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் பாஜகவின் நிலை என்ன? - தென்னிந்தியாவின் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
நடைபெற்று முடிந்த 2024 மக்களவைத் தேர்தல்களில், தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கணிசமான இடத்தைப் பிடித்துள்ளது.
தென் மாநிலங்களில் நீண்ட காலமாக பலவீனமான கட்சியாக இருந்து வரும் பாஜக, கர்நாடகாவிலும், தெலங்கானாவிலும் கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது, ஆந்திராவிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
கேரளா காங்கிரஸின் கோட்டையாகத் தொடர்ந்து வந்தாலும், பாஜக தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமே பாஜக காலூன்ற முடியாத ஒரே தென் மாநிலமாக உள்ளது.
தமிழ்நாட்டில் தாமரை மலரவில்லை
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிட்ட பத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோதி, அமித் ஷா ஆகியோர் பலமுறை தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட போதிலும் பாஜகவால் ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியவில்லை.
தலைநகர் சென்னையில் 3 தொகுதிகள் உள்பட மாநிலத்தில் 10 தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மூத்த பத்திரிகையாளர் அருண் ஜனார்த்தனன், "தமிழ்நாட்டில் தங்கள் இருப்பைப் பதிவு செய்வதற்காக எவ்வளவு தீவிரமாக முயன்றும், வெற்றி பெற இயலவில்லை. பாஜகவின் வாக்கு வங்கி இந்த முறை 10% மேல் அதிகரித்துள்ளது. பாஜக போட்டியிட்ட இடங்கள் அதிகரித்துள்ள நிலையில், வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதே," என்றார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த முறை தேனி தொகுதியிலிருந்து ஒ.பி.ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை இரட்டை இலை காலை முதலே எந்தத் தொகுதியிலும் முன்னிலையில் இல்லை.
கிட்டத்தட்ட 29 தொகுதிகளில் இரண்டாவது இடத்தை அதிமுகவால் பெற முடிந்துள்ளது, மற்ற தொகுதிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா காலமானதை அடுத்து அதிமுக சந்தித்துள்ள தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், 39 இடங்களில் 37 இடங்களுடன் அதிமுக ஆதிக்கம் செலுத்தியது. அதே நேரத்தில் 2019 இல் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும், 2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக குறி வைக்கிறது.
கர்நாடகாவில் சரிந்ததை மீண்டும் பெற்ற பாஜக
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மாநிலத்தில் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கைப்பற்றிய 25 நாடாளுமன்ற இடங்களைவிட இது குறைவானதே. எனினும் கடந்த 11 மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
மாநிலத்தில் பாஜகவின் ஆதிக்கம் சரிவதாக எதிர்ப்பார்த்த நிலையில், பாஜக மீண்டும் அதை தக்க வைத்துள்ளது.
கர்நாடாகவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விஜய் குரோவர் கர்நாடக தேர்தல்களில் எப்போதுமே சாதி மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் என்று கூறுகிறார். பிபிசி தமிழுடன் பேசிய அவர், “ 2023ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பாஜகவில் ஓரங்கட்டப்பட்டார், அதன் விளைவுகளை பாஜக சந்திக்க வேண்டியிருந்தது. அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட பாஜக, தற்போது எடியூரப்பாவை பாஜக மாநில தலைவராக்கியுள்ளது," என்றார்.
"பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கர்நாடகவுக்கு எந்த வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வராவிட்டாலும், பாஜக ஆதாயம் பெற்றுள்ளது. காங்கிரஸ் அளித்த ஐந்து வாக்குறுதிகளை ஆட்சி அமைத்த ஓராண்டில் நிறைவேற்றிவிட்டது. ஆனால் அதற்கு மேல், மக்களுக்கு வழங்க அவர்களிடம் எந்த வாக்குறுதிகளும் இல்லை."
மேல்தட்டு மற்றும் வட இந்திய மக்கள் அதிகம் இருக்கும் நகர்ப்புற தொகுதிகளில், பாஜக 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
"கடலோர கர்நாடகாவில், பாஜகவால் சாதிக் காரணியை முறியடித்து, வாக்கு வங்கியை மதத்தின் அடிப்படையில் பிரிக்க முடிந்துள்ளது. அங்கு மக்கள் தங்கள் சாதிகளின் அடிப்படையில் வாக்களிக்காமல் இந்துக்களாகவும், முஸ்லிம்களாகவும் வாக்களித்தனர்,” என்றார்.
மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணி பாஜகவுக்கு மேலும் வலு சேர்த்ததாகவும் அவர் தெரிவித்தார் மூத்த பத்திரிகையாளர் விஜய் குரோவர்.
ஆந்திராவில் அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக ஆந்திராவின் 25 மக்களவைத் தொகுதிகளில் 21 இடங்களில் தீர்க்கமான வெற்றி கிடைத்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் கோட்டையாக இருந்த ஆந்திராவில், அக்கட்சிக்கான ஆதரவு கணிசமாகச் சரிந்துள்ளது. பாஜகவின் கூட்டணி கட்சியான முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், பாஜக 3 இடங்களையும், பாஜகவின் மற்றொரு கூட்டணிக் கட்சியான ஜனசேனா கட்சி (ஜேஎஸ்பி) 2 இடங்களையும் வென்றுள்ளன. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 4 தொகுதிகளில் சுருங்கியுள்ளது.
ஆந்திராவின் மூத்த பத்திரிகையாளர் சுமித் பட்டாச்சார்ஜி கூறுகையில், "ஆந்திர தேர்தல்களில், மோதி காரணி இல்லை. வளர்ச்சியைப் புறக்கணித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதுவே, தெலுங்கு தேசம் கட்சிக்கான வாக்குகளாக சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் மாறியுள்ளன."
"பாஜகவுக்கு மத்தியில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சந்திரபாபு தனக்குத் தேவையானவற்றைக் கேட்டுப் பெறுவதற்கான சூழல் உள்ளது. இது 2019இல் நடந்ததற்குத் தலைகீழானது. பவன் கல்யாணின் ஜேஎஸ்பி கட்சி 2 மக்களவைத் தொகுதிகளிலும், 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது,” என்றார்.
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் அறிவியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், "தெற்கில் பாஜக ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளதை இந்த முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒற்றைப் பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜக ஆட்சி அமைக்க தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட அதன் கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, "தொகுதி மறுசீரமைப்பு, மொழிப் பிரச்னைகள், நிதிப் பங்கீடு ஆகிய பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், பாஜக இனி தென்னிந்தியாவுக்கு எதிரான கட்சியாக இருக்க முடியாது. நிலையான அரசாங்கத்தை சர்வாதிகார அரசாங்கம் என்று மக்கள் தவறாக விளக்குகிறார்கள். நாங்கள் விரும்புவது நல்லாட்சி அரசுதான்."
தெலங்கானாவில் பலத்தைக் கூட்டிய பாஜக
தெலங்கானாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டியபடியே, பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
மொத்தம் 17 தொகுதிகளைக் கொண்ட மாநிலத்தில் பாஜகவும் காங்கிரஸும் தலா 8 இடங்கள் பெற்றுள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட பாஜக நான்கு இடங்களை அதிகம் வென்றுள்ளது.
ஹைதராபாத் தொகுதியில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தொடர்ந்து 5வது முறையாக வெற்றி வாகை சூடுகிறார். சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சம்ரிதி (பிஆர்எஸ்) ஆதிக்கம் செலுத்தும் மாநிலமாக இருந்த தெலங்கானாவில் இந்த முறை கிடைத்துள்ள முடிவுகள் குறிப்பிட்டத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
மூத்த பத்திரிகையாளர் எம்.வி.கே.சாஸ்திரி கூறுகையில், "பல தொகுதிகளில் பிஆர்எஸ் கட்சியின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளன. உதாரணமாக, மல்காஜ்கிரி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் எட்டலா ராஜேந்திரன், பி.ஆர்.எஸ்-இன் முன்னாள் அமைச்சராவார். ஜெய் ஸ்ரீராம் கோஷம் மற்றும் மோதி மீதான கவர்ச்சியும், பாஜகவுக்கு ஏற்கெனவே வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளது. பி.ஆர்.எஸ்-இன் வாக்குகள் அதை வலுப்படுத்தியுள்ளன. பி.ஆர்.எஸ் கொண்டுள்ள 35% வாக்கு வங்கி சரியும்” என்றார்.
கேரளாவில் கணக்கை தொடங்கியது பாஜக
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கணித்தபடியே, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் கோட்டையாக கேரளா உள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடது ஜனநாயக முன்னணி இடையிலான இருமுனை அரசியல் போட்டி நிலவும் கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ளது.
இதுவரை காலூன்ற முடியாத கேரளாவில், பாஜக தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி 70,000 வாக்கு வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலத்தூர் தொகுதியில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மூத்த பத்திரிகையாளர் அருண் ஜனார்த்தனன் கூறுகையில், "கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுங்கட்சிக்கு எதிராக நிலவி வரும் உணர்வும் தேசிய அரசியலில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் முக்கியத்துவமும், இந்த முறை கேரள தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்த இரண்டு காரணிகள்," என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசியவர், "மாநிலத்தின் மக்கள்தொகையில் இந்துக்கள் 50%க்கும் சற்று அதிகமாக உள்ளனர். சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் பாரம்பரியமாக காங்கிரசுக்கு வாக்களித்து வருகின்றனர். ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கிறது. பினராயி விஜயன் அரசாங்கத்திலும் கட்சியிலும் முழு அதிகாரத்தையும் செலுத்துகிறார். சுமார் 12 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்,” என்றார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)