'கைதான நபர் திமுக அனுதாபி' - அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் இன்று தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் அவைக்கு வந்திருந்தனர். மாணவி விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த அதிமுக, "கடந்த ஆட்சியில் 3 முறை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட நபர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பியது.
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம் என்ன? கைதான நபர் குறித்தும், 'யார் அந்த சார்?' என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் கூறியது என்ன? இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ், விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேசியது என்ன?
- அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: எஃப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவில் உள்ள 3 அதிகாரிகள் யார்?
- 'வளாகம் மட்டுமல்ல, வகுப்பறையிலும் கூட பிரச்னைதான்' - அண்ணா பல்கலை. மாணவிகள் கூறியது என்ன?
- சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?
- அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்: இந்த முடிவை எடுத்தது ஏன்? விமர்சனங்கள் பற்றி என்ன கூறினார்?
அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்தும் பேட்ஜ் அணிந்தும் வந்திருந்தனர்.
இதில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இந்த விவகாரத்திற்கு, பல்கலைக் கழகத்தின் வேந்தரான ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பூவை ஜெகன்மூர்த்தி, பல்கலைக்கழக பதிவாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார்.
கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் பேசும் போது, பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததுதான் இதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
தமிழக கல்விக் கட்டமைப்பின் மீது ஆளுநரால் மோசமான தாக்குதல் நடைபெற்று வருவதாக வி.சி.கவின் சிந்தனைச் செல்வன் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் செல்வப் பெருந்தகை தெரிவித்த சில கருத்துகளுக்கு அ.தி.மு.கவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதற்குப் பிறகு அ.தி.மு.க சார்பில் பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், "மூன்று முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தது எப்படி? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை பதில் சொல்லாதது ஏன்" எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரகுபதி, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அந்த நபர் மீது போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
இதற்குப் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். "குற்றம் நடந்த பிறகு குற்றவாளியைக் கைதுசெய்யாமல் விட்டிருந்தாலோ, காப்பாற்ற முடிவுசெய்திருந்தாலோ அரசை நீங்கள் குறை சொல்லலாம். ஆனால், சில மணி நேரங்களில் குற்றவாளி கைது செய்யப்பட்ட பிறகும், அரசைக் குறை செல்வது அரசியல் ஆதாயத்திற்கானது. டிசம்பர் 24ஆம் தேதி பிற்பகல் மாணவி கோட்டூர்புரம் காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்த நாள் காலை குற்றவாளி கைது செய்யப்பட்டார். இதற்குப் பிறகு முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்துக் கேட்கிறார்கள். அதற்கு காரணம், மத்திய அரசின் கீழ் செயல்படும் என்.ஐ.சி.தான். காவல்துறை சுட்டிக்காட்டியவுடன் அது சரிசெய்யப்பட்டது.
சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லையென பொத்தாம்பொதுவாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் சரியானவையல்ல. குற்றவாளி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார். முதல் தகவல் அறிக்கையின்படி, 'யார் அந்த சார்?' எனக் கேட்கிறீர்கள். உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி நியமிக்கப்பட்ட புலனாய்வுக்குழுதான் இதனை விசாரிக்கிறது. கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தப் புலன் விசாரணையில் வேறு யாராவது குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது தயவுதாட்சண்யம் இல்லாமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்", என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த வழக்கில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படும். விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்கும். எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் 'யார் அந்த சார்?' என குற்றம்சாட்டுகிறார்கள். உங்களிடம் அதற்கு ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சொல்லுங்கள். அதை விட்டுட்டு ஒரு மாணவி சம்பந்தப்பட்ட வழக்கில் மலினமான அரசியலில் மீண்டும் மீண்டும் ஈடுபட வேண்டாம். இது மக்கள் மத்தியில் எடுபடாது.
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதல் பத்து மாநகரங்களில் கோவையும் சென்னையும் இருக்கின்றன. பெண்கள் அதிகம் பேர் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான். மனசாட்சி இல்லாமல் பெண்களின் பாதுகாவலர் மாதிரி பேசுபவர்கள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என நினைத்துப் பாருங்கள். பொள்ளாச்சியில் நடந்தது, ஒரே ஒரு பெண்ணுக்கு நடக்கவில்லை. பல பெண்களுக்கு நடந்தது. ஒரு கும்பலே இதைச் செய்தது. அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சி.பி.ஐ.க்கு போன பிறகுதான் வழக்கில் முன்னேற்றம் இருந்தது.
பாதிக்கப்பட்ட பெண் தன் அண்ணனிடம் இதைப் பற்றிச் சொன்னவுடன் அவர் சம்பந்தப்பட்டவர்கள் நான்கு பேரை பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஆனால், காவல்துறை வழக்குப் பதிவுசெய்யவில்லை. எல்லோரையும் விடுவித்துவிட்டார்கள். இதுதான் அன்றைய 'சார்' ஆட்சியில் சட்டம் - ஒழுங்கின் லட்சணம். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை, குற்றம்சாட்டியவரிடமே கொடுத்தார்கள். அ.தி.மு.க பிரமுகர் நாகராஜ், பெண்ணின் சகோதரரை தாக்கினார். பிரச்னை பெரிதானதும் முக்கிய நபரான திருநாவுக்கரசை கைது செய்யாமல், மூன்று பேரை கைது செய்து விவகாரத்தை முடிக்கப்பார்த்தார்கள். ஆனால், சிபிஐ விசாரணையில் அ.தி.மு.கவினர்தான் இதில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்து" என்றார்.
இந்தத் தருணத்தில் அ.தி.மு.கவினர் எழுந்து கடுமையாக கோஷமிட்டனர். பிறகு வெளிநடப்புச் செய்தனர். இதற்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தனது பேச்சை மீண்டும் தொடர்ந்தார் .
"இப்படி, பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்திய 'சார்'ங்க எல்லாம் இப்பொழுது பேட்ஜ் அணிந்துகொண்டு உட்கார்ந்திருந்து, பாதியிலேயே எழுந்து போய்விட்டார்கள். இதுபோன்று 100 சார் கேள்விகளை அ.தி.மு.கவைப் பார்த்து என்னால் கேட்க முடியும்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திட அ.தி.மு.க. ஆட்சியில் 12 நாட்கள் ஆனது. ஆனால், சென்னை மாணவி வழக்கிலே புகார் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை போடப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சில மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கிறார். தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, உயர்கல்வி கற்க வருகிற மாணவிகளை அச்சுறுத்தி, அவர்களுடைய கல்வியைக் கெடுத்துவிடாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன்" என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து, அண்ணா நகர் பாலியல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், தி.மு.க. அனுதாபி என்பதைத் தாங்கள் ஒப்புக் கொள்வதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.
சென்னை அண்ணா நகர் பகுதியில் பத்து வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இது அந்தச் சிறுமியின் உறவினரான இளஞ்சிறார் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரி தங்களை மோசமாக நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் என்பவரைக் கைது செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதற்குப் பிறகு, இந்த வழக்கை சி.பி.ஐக்கு உயர்நீதிமன்றம் மாற்றியது. இதனை எதிர்த்து காவல்துறை மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டில் சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை எனக் கூறிய நீதிமன்றம் மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது அ.தி.மு.கவைத் சேர்ந்த சுதாகர் என்பவரையும், பெண் காவல் ஆய்வாளர் ராஜீ என்பவரையும் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கமளித்தார். அண்ணா நகர் வழக்கு தொடர்பான விவரங்களை வெளியிட்டார். அதற்குப் பிறகு, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனைப் பற்றிக் குறிப்பிட்ட முதல்வர் அந்த நபர் தி.மு.க. அனுதாபி எனக் குறிப்பிட்டார்.
"சென்னை மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டவர் – நிச்சயமாக, உறுதியாகச் சொல்கிறேன். அவர் தி.மு.கவில் உறுப்பினராக இல்லை. தி.மு.க. ஆதரவாளர். அதை நாங்கள் மறுக்கவில்லை. அமைச்சர்களுடன் அரசியல்வாதிகளுடன் புகைப்படம் எடுத்திருக்கலாம். அது தவறில்லை. ஆனால், யாராக இருந்தாலும், தி.மு.கவினராக இருந்தாலும், நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அவர் தி.மு.க. உறுப்பினர் அல்ல; தி.மு.க. அனுதாபி. அதுதான் உண்மை" என்று குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)