அமெரிக்காவின் தடையை மீறி இரான் - சீனா கச்சா எண்ணெய் வர்த்தகம் நடப்பது எப்படி?
ஏப்ரல் மாதத்தின் மத்தியில் இஸ்ரேலை நோக்கி 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இரான் ஏவியது. இதைத் தொடர்ந்து, இரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இரான் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக எண்ணெய் ஏற்றுமதி உள்ளது. 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இரானின் எண்ணெய் ஏற்றுமதி 35. 8 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் அதன் அதிகபட்ச எண்ணெய் ஏற்றுமதி அளவு இது என இரானின் சுங்கத்துறை தலைவர் கூறுகிறார்.
பொருளாதாரத் தடைகளை மீறி இரானால் எப்படி எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் ஈட்ட முடிந்தது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதற்கான பதில் சீனாவிடம் உள்ளது. ஆம், இரானிடம் இருந்து எண்ணெயை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா விளங்குகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற நிதிக் குழு அறிக்கையின்படி, இரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 80 சதவீதம் சீனாவுக்குச் செல்கிறது. இரானிடம் இருந்து தினமும் 15 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை அந்நாடு வாங்குகிறது.
இரானிடம் சீனா எண்ணெய் வாங்குவது ஏன்?
இரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். அப்படியிருந்தும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான சீனா இரானிடம் இருந்து எண்ணெயை இறக்குமதி செய்வது ஏன்?
இதற்கான பதில் மிகவும் எளிமையானது - இரானிய எண்ணெய் விலை மலிவானது. அதேநேரம் தரத்தில் சிறந்தது.
உலகில் நிலவும் மோதல்கள் காரணமாக சர்வதேச சந்தையின் எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது, ஆனால் இரான் தனது எண்ணெயை மலியான விலையில் விற்று வருகிறது.
அக்டோபர் 2023 இல், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை, வர்த்தகர்கள் மற்றும் கப்பல் கண்காணிப்பாளர்களிடமிருந்து தரவைச் சேகரித்தது. இந்த புள்ளிவிவரங்களின்படி, 2023ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இரான், ரஷ்யா மற்றும் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்ததன் மூலம் சீனா சுமார் 10 பில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தியது. இரானைப் போலவே ரஷ்யா மற்றும் வெனிசுலாவும் மலிவு விலையில் எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன.
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. பேரலுக்கு 90 அமெரிக்க டாலருக்கும் அதாவது இந்திய மதிப்பில் 7,500 ரூபாய்க்கும் குறைவாகவே பெரும்பாலும் இருக்கிறது.
தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Kpler இன் மூத்த ஆய்வாளர் (ஹொமயன் ஃபலாக் ஷாஹி) Humayun Falakshahi, இரான் தனது கச்சா எண்ணெயை ஒரு பீப்பாய்க்கு 5 டாலர் தள்ளுபடியில் வர்த்தகம் செய்வதாக மதிப்பிடுகிறார். கடந்த ஆண்டு இந்த விலை குறைப்பு ஒரு பீப்பாய்க்கு 13 டாலர் வரை இருந்தது.
சீனா இரானிடம் இருந்து எண்ணெயை வாங்குவதற்கு புவிசார் அரசியலும் ஒரு காரணம் என்று ஃபலாக் ஷாஹி (Falakshahi)நம்புகிறார்.
அமெரிக்கா, சீனாவுக்கு இடையே நடக்கும் பெரிய விளையாட்டின் ஒரு பகுதியாக இரான் இருப்பதாக அவர் கூறுகிறார்.
"குறிப்பாக இஸ்ரேல் தொடர்பான பதற்றம் மத்திய கிழக்கில் அதிகரித்துவரும் வேளையில், இரானின் பொருளாதாரத்தை ஆதரிப்பதன் மூலம், சீனா மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கு புவிசார் அரசியல் மற்றும் ராணுவ சவால்களை அதிகரிக்கிறது,." என்றும் அவர் தெரிவிக்கிறார்.
சீனாவும் இரானும் வர்த்தகத்திற்கான சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
சீனாவில் இரானிய எண்ணெய் சுத்திகரிக்கப்படும் இடங்கள் Teapots என அழைக்கப்படுகின்றன. சிறிய அளவிலான சுயாதீன சுத்திகரிப்பு நிலையங்கள் இவை.
இந்த Teapots, கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வதை உலகின் பார்வையில் இருந்து மறைக்கும் Dark Fleet எனப்படும் எண்ணெய் கப்பல்கள் மற்றும் சீனாவின் பிராந்திய வங்கிகள் போன்றவை சீனா- இரான் வர்த்தக அமைப்பின் முக்கிய கூறுகளாக பார்க்கப்படுவதாக கூறுகிறார் மாயா நிகோலட்ஸ் (Maia Nikoladze). இவர் அட்லாண்டிக் கவுன்சிலின் Economic StateCraft-ன் உதவி இயக்குநராக இருக்கிறார்.
சீனாவில் உள்ள பெரிய அரசாங்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாற்றாக Teapots சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
ஆரம்ப காலத்தில் தேநீர் குப்பிகள் போன்று இவை தோற்றமளித்ததால், இவை அந்த பெயரிலேயே அழைக்கப்படுவதாக ஃபலாக் ஷாஹி கூறுகிறார்.
அரசுக்கு சொந்தமான பெரிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்படுகின்றன, அமெரிக்காவின் உலகளாவிய நிதி கட்டமைப்பை பயன்படுத்தும் தேவை இவற்றுக்கு இருக்கிறது. இவற்றுடன் ஒப்பிடும்போது, Teapots எனப்படும் சிறிய சுத்திகரிப்பு நிலையங்கள் குறைவான ஆபத்தையே எதிர்கொள்கின்றன.
"இத்தகைய சிறிய சுத்திகரிப்பு நிலையங்கள் வெளிநாடுகளில் வர்த்தகம் செய்வதில்லை, டாலர்களில் வர்த்தகம் செய்ய தேவையில்லை, வெளிநாட்டு நிதியுதவியையும் பெற தேவையில்லை" என்றும் ஃபலாக் ஷாஹி குறிப்பிடுகிறார்.
Dark Fleet என்பது என்ன?
“உலகம் முழுவதும் கடல்களில் செல்லும் எண்ணெய் டேங்கர்களை மென்பொருள் மூலம் கண்காணிக்க முடியும். அவற்றின் இருப்பிடம், வேகம் மற்றும் பாதை ஆகியவை டிராக்கர் மூலம் கண்காணிக்கப்படுகின்றது. இந்த கண்காணிப்பில் சிக்குவதை தவிர்க்க, இரானும் சீனாவும் எண்ணெய் டேங்கர்கள் கொண்ட வலையமைப்பை உருவாக்கியுள்ளன, இதன் காரணமாக அவற்றின் சரியான இருப்பிடத்தை அறிய முடியாது " என்று கூறுகிறார் நிகோலட்ஸ் (Nikoladze).
"இந்த அமைப்புகள் மேற்கத்திய டேங்கர்கள், கப்பல் சேவைகள் மற்றும் தரகு சேவைகளை முற்றிலுமாக புறக்கணிக்க முடியும், எனவே, தடைகள் உட்பட மேற்கத்திய நிபந்தனைகளை சீனா பின்பற்ற வேண்டியதில்லை" என்று அவர் கூறுகிறார்.
இந்த எண்ணெய் பரிமாற்றங்கள் பெரும்பாலும் கப்பலில் இருந்து கப்பலுக்கு நடப்பதாக நம்பப்படுகிறது. சீனாவுடனான சர்வதேச கடற்பகுதியில், இந்த பரிமாற்றங்கள் நடைபெறுவதாகவும் கருதப்படுகிறது. மோசமான வானிலை நிலவும் போதே பெரும்பாலான பரிமாற்றங்கள் நடப்பதால் அவற்றின் இருப்பிடம் மற்றும் செயல்பாடுகளை ரகசியமாக வைக்க முடிவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் இந்த கச்சா எண்ணெய் எங்கிருந்து சீனாவுக்கு வந்தது என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.
இந்த பரிமாற்றங்கள் பொதுவாக தென்கிழக்கு ஆசிய கடற்பரப்பில் நிகழ்கின்றன என் கெப்ளரின் கணிப்புகள் கூறுகின்றன.
இந்த செயல்பாடுகளின் ஒருபகுதியாக மற்றொரு கப்பல் மலேசிய கடற்பரப்பில் இருந்து வடகிழக்கு சீனாவுக்கு சென்று கச்சா எண்ணேயை வழங்குகிறது. கச்சா எண்ணெய் இரானில் இருந்து வரவில்லை, மாறாக மலேசியாவில் இருந்தே வருகிறது என கருதவைப்பதே இதன் பின்னால் உள்ள நோக்கம் என்று ஃபலாக் ஷாஹி (Falakshahi) கூறுகிறார்.
அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின் (EIA) படி, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 இல் மலேசியாவில் இருந்து 54 சதவீதம் அதிக கச்சா எண்ணெயை சீனா இறக்குமதி செய்ததாக சுங்கத் தரவு காட்டுகிறது. இந்த தரவுகள் அடிப்படையில் பார்த்தால், மலேசியா உற்பத்தி செய்யும் ஒட்டுமொத்த கச்சா எண்ணெயின் அளவைக் காட்டிலும் அது சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணெயின் அளவு அதிகமாக இருக்கிறது. அது எப்படி சாத்தியம்?
"இதனால்தான் மலேசியா குறிப்பிடுவது உண்மையில் இரானிய எண்ணெயாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது`` என கூறுகிறார் அட்லாண்டிக் கவுன்சில் பகுப்பாய்வாளர் நிகோலட்ஸ்
சிறிய வங்கிகள் மூலம் பணப் பரிமாற்றம்
இரானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனைகள் மேற்கத்திய நாடுகளால் கண்காணிக்கப்படும் சர்வதேச நிதி அமைப்பு மூலம் அல்லாமல் சீனாவின் சிறிய வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் நிகோலட்ஸ் ( Nikoladze) கூறுகிறார்.
"இரானிய எண்ணெயை வாங்குவதில் உள்ள அபாயங்களை சீனா நன்கு அறிந்திருக்கிறது, அதனால்தான் இந்த பரிவர்த்தனையில் அதன் முக்கிய பெரிய வங்கிகளை ஈடுபடுத்த சீனா விரும்பவில்லை. அதற்கு பதிலாக சர்வதேச ஆபத்தை எதிர்கொள்ளாத சிறிய வங்கிகளை அது பயன்படுத்துகிறது." என்று அவர் கூறுகிறார்.
டாலர் முறையில் பணப் பரிமாற்றத்தை தவிர்ப்பதற்காக இரானிய எண்ணெய்க்கு ஈடாக சீன நாணயத்தில் பணம் செலுத்துப்படுவதாகவும் நம்பப்படுகிறது.
இது குறித்து பேசிய ஃபலாக்ஷாஹி, அந்தப் பணம் இரானிய அரசுடன் தொடர்புடைய சீன வங்கிகளின் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. பின்னர், சீன பொருட்களை இயக்குமதி செய்ய இந்த பணம் பயன்படுத்தப்படுகிறது. இதுபோக இந்த பணத்தில் பெரும்பகுதி இரானுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது என்று தெரிவித்தார்.
அதேநேரம், இந்த முழு கட்டமைப்பும் மிகவும் தெளிவற்றது என்றும், அனைத்து பணமும் இரானுக்கு திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என்றும் அவர் கூறுகிறார்.
எண்ணெய் விலை மேலும் உயரும் என்ற அச்சம்
ஏப்ரல் 24 அன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் நிதியுதவி வழங்கும் மசோதாவில் கையெழுத்திட்டார். அதில் இரானிய எண்ணெய் மீதான கூடுதல் தடைகளும் அடங்கும்.
இரானில் இருந்து வரும் எண்ணெயை தெரிந்தே அனுமதிக்கும் வெளிநாட்டு துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் புதிய சட்டம் தடை விதிக்கிறது.
அதேநேரம், கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த அமெரிக்கா தயங்குவதாக ஃபலாக்ஷாஹி கூறுகிறார். இது தொடர்பாக அவர் பேசும்போது, வெளிநாட்டு கொள்கைகளை விட அமெரிக்காவில் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதே பைடன் நிர்வாகத்தின் முன்னுரிமையாக இருக்கிறது என்றார்.
பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக உள்ள இரான் ஒரு நாளைக்கு சுமார் 3 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது. இது ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 சதவீதம் ஆகும்.
இரானில் இருந்து எண்ணெய் விநியோகம் முற்றிலுமாக தடைபட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இரான் எண்ணெய் ஏற்றுமதியை குறைத்தால், சர்வதேச சந்தையில் எண்ணெயின் விநியோகம் குறைந்து கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் என்பதை பைடன் அறிந்திருக்கிறார். அவ்வாறு நடந்தால், அமெரிக்காவிலும் எரிபொருளின் விலை அதிகரிக்கும். எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக இத்தகைய சூழலை அவர் விரும்ப மாட்டார்` என்கிறார் ஃபலாக் ஷாஹி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)