ஹெஸ்பொலா தலைவர் மரணம்: இஸ்ரேலை பழிவாங்க இரான் சூளுரை - பதற்றத்தில் மத்திய கிழக்கு

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹசன் நஸ்ரல்லா

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதைத் தனது டெலிகிராம் பதிவில் ஹெஸ்பொலா உறுதி செய்துள்ளது.

இதைத் தொடர்ந்தும், லெபனானில் ஹெஸ்பொலா இலக்குகளைக் குறிவைத்து தாக்கி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. அதேநேரத்தில், ஹெஸ்பொலா தரப்பும் இஸ்ரேலுக்கு எதிராக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

மறுபுறம், நஸ்ரல்லா மரணத்திற்காக, இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று இரான் மிரட்டல் விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது? அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புகளுக்கு பைடன் பிறப்பித்துள்ள உத்தரவு என்ன?

ரகசிய இடத்தில் காமனெயி

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்குவோம் என்று இரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சூளுரைத்துள்ளார். நஸ்ரல்லா மறைவை முன்னிட்டு இரானில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயதுல்லா அலி காமனெயி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது. காமனெயி ரகசிய இடத்திற்கு சென்றுவிட்டதாக 2 அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஹசன் நஸ்ரல்லா மரணத்தைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஹெஸ்பொலாவுடன் இரான் ஆலோசித்து வருவதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

இஸ்ரேல் - இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரான் உச்ச தலைவர்

ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்திற்கு இரான் அழைப்பு

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதையடுத்து, ஐ.நா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்திற்கு இரான் அழைப்பு விடுத்துள்ளது. அதுதொடர்பாக, ஐ.நா. பாதுகாப்பு அவையின் 15 உறுப்பினர்களுக்கும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் அமீர் இரவானி கடிதம் எழுதியுள்ளார்.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை உறுதி செய்த ஹெஸ்பொலா

ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹெஸ்பொலா உறுதி செய்துள்ளது. அதுகுறித்த அதன் நீண்ட டெலிகிராம் பதிவில், இஸ்ரேலுக்கு எதிரான சண்டையைத் தொடரப் போவதாகவும் கூறியுள்ளது.

அவர் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல்களின்போது இறந்துவிட்டார் என்று ஹெஸ்பொலா தனது டெலிகிராம் பதிவில் உறுதி செய்துள்ளது. “தெற்கு புறநகர்ப் பகுதியில் நடந்த தாக்குதலில்” அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

அதோடு, இஸ்ரேலுக்கு எதிரான அதன் சண்டையைத் தொடரப் போவதாகவும் ஹெஸ்பொலா “உறுதிமொழி அளித்துள்ளது” மற்றும் “காஸா, பாலத்தீனத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், லெபனான் மற்றும் அதன் உறுதியான, மரியாதைக்குரிய மக்களைப் பாதுகாப்பதாகவும்” உறுதியளித்துள்ளது.

ஹெஸ்பொலா தலைவருக்கு இஸ்ரேல் குறி

முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலையில் ஹெஸ்பொலா தலைமையகத்தை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்திருந்தார். இந்த தாக்குதலால் என்ன பலன் கிடைத்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலின் இலக்கு ஹெஸ்பொலா தலைவர் ஹன் நஸ்ரல்லா என்ற பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் உள்ளிட்ட அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான கட்டடத்தில் நஸ்ரல்லா இருந்தாரா என்பது குறித்து எந்தவொரு உறுதியான தகவலும் இல்லாமல் இருந்தது.

ஹெஸ்பொலா இயக்கத்தின் மற்ற மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், இந்த மோதல் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு இருப்பது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம், Reuters

ஹன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

இந்நிலையில் ஹெஸ்பொலா தலைவர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF-ஐடிஎப்) தெரிவித்துள்ளது.

ஐடிஎப்-இன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், "ஹசன் நஸ்ரல்லா இனி உலகத்தை அச்சுறுத்த முடியாது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் ஒரே இரவில் நடந்த தொடர்ச்சியான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நஸ்ரல்லா மற்றும் பிற ஹெஸ்பொலா தளபதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஹெஸ்பொலாவின் மத்திய தலைமையகத்தின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ஹெஸ்பொலாவின் இந்த தளம் பெய்ரூட்டின் தாஹிஹ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் கீழே செயல்பட்டு வந்ததாகவும் ஐடிஎப் கூறியது.

Twitter பதிவை கடந்து செல்ல
Twitter பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

‘இஸ்ரேலை யார் அச்சுறுத்தினாலும் விடமாட்டோம்’

ஹெர்சி ஹலேவி

பட மூலாதாரம், IDF

படக்குறிப்பு, ஐடிஎப் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி

இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் (ஐடிஎப்) தலைமை அதிகாரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

"நாங்கள் கூற வரும் செய்தி மிகவும் தெளிவானது. இஸ்ரேலிய குடிமக்களை யார் அச்சுறுத்தினாலும், அவர்களை எப்படி பிடிப்பது என எங்களுக்கு தெரியும். வடக்கு, தெற்கு அல்லது அதற்கு அப்பால் என அவர்கள் எங்கு சென்றாலும் சரி" என்று அதில் அவர் கூறியுள்ளார்.

ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே இந்த காணொளி ஐடிஎப்-இன் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

"பல்வேறு கட்ட ஆயுத்தப்பணிகளுக்கு பிறகு, இஸ்ரேலிய ராணுவம், நஸ்ரல்லா மற்றும் ஹெஸ்பொலாவின் தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் திட்டத்தை செயல்படுத்தியது" என்று லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி கூறியுள்ளார்.

"மிகச்சரியான நேரத்தில், மிகவும் துல்லியமான முறையில் அந்தத் தாக்குதலை நாங்கள் மேற்கொண்டோம். ஆனால் இது முடிவல்ல என்பதில் தெளிவாக இருக்கிறோம். முன்னோக்கிச் செல்லும் திறன் எங்களிடம் அதிகமாகவே உள்ளது" என்றும் அவர் கூறினார்.

‘தாக்குதலில் ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

பட மூலாதாரம், Reuters

‘ஹெஸ்பொலாவின் தளபதி கொலை’- இஸ்ரேல்

தெற்கு லெபனானில், ஹெஸ்பொலாவின் ஏவுகணைப் பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் துணைத் தலைவர் ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதேசத்தை நோக்கி ராக்கெட்டுகளை ஏவியது மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி புதன்கிழமை அன்று ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது உட்பட இஸ்ரேல் மீதான ஏராளமான தாக்குதல்களின் பின்னணியில் அலி இஸ்மாயில் இருந்தார் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

தாக்குதலைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இரான் கூறியது என்ன?

 ஆயத்துல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி

லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் இதை தெரிவித்துள்ளார். ஆனால் தனது அறிக்கையில் நஸ்ரல்லாவை குறித்து அவர் ஏதும் குறிப்பிடவில்லை.

லெபனானின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்த அவர், "இது இஸ்ரேல் தலைவர்களின் குறுகிய பார்வை மற்றும் முட்டாள்தனமான கொள்கைகளை நிரூபிக்கிறது" என்று கூறினார்.

“லெபனானில் உள்ள ஹெஸ்பொலாவின் தளங்களில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தங்களுக்கு வலிமையில்லை என்பதை இஸ்ரேலிய குற்றவாளிகள் அறிந்திருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து சக்திகளும் ஹெஸ்பொலாவை ஆதரித்து, உடன் நிற்க வேண்டும் என்று ஆயத்துல்லா அலி காமனெயி தெரிவித்தார்.

இஸ்ரேல் - ஹெஸ்பொலா, நஸ்ரல்லா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அமெரிக்கப் படைகளுக்கு புதிய உத்தரவு

மத்திய கிழக்கில் நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்ப, அங்குள்ள அமெரிக்கப் படையினரை உஷாராக இருக்கச் செய்யுமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனை அதிபர் பைடன் உத்தரவிட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

"மத்திய கிழக்கில் நிலைமையை முழுமையாக ஆராய்ந்து, அந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் நலன்களை காக்கவும், தற்காப்பை உறதிப்படுத்தவும் தேவைக்கேற்ப அமெரிக்கப் படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க பென்டகனுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்" என்கிறது வெள்ளை மாளிகை அறிக்கை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் தேவையான தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

‘எந்த சக்தியாலும் இஸ்ரேலைத் தடுக்க முடியாது’

ஜோசப் பொரெல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்கா உட்பட எந்த சக்தியாலும் ‘தடுக்க முடியாது’ என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.

ஜோசப் பொரெல் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாங்கள் செய்வது போர்நிறுத்தத்திற்கு தேவையான அனைத்து அழுத்தங்களையும் கொடுப்பது தான். ஆனால் காஸாவில் அல்லது மேற்குக் கரையில் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை யாராலும் தடுக்க முடியாது என்று தான் தெரிகிறது" என்றார்.

“ஹெஸ்பொலா அழிக்கப்படும் வரை இஸ்ரேலிய ராணுவம் தனது நடவடிக்கைகளை நிறுத்தாது” என்று நெதன்யாகு தெளிவுபடுத்தியதாக பொரெல் கூறினார்.

21 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்கா மற்றும் பிரான்ஸின் அழைப்பையும் அவர் ஆதரித்து பேசினார்.

மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

ஹியூகோ பச்சேகா

பிபிசி நிருபர், பெய்ரூட்டில் இருந்து

பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ஹெஸ்பொலாவின் செல்வாக்கு மிக்க நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என்ற இஸ்ரேலிய ராணுவத்தின் செய்தியை லெபனான் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை, ஹெஸ்பொலாவிடமிருந்தும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.

இது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் ஹெஸ்பொலா, வெறும் ஒரு போராளி இயக்கம் மட்டுமல்ல அதுவொரு அரசியல் கட்சியும் கூட. இந்த அமைப்புக்கு லெபனான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ளது மற்றும் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவும் உள்ளது.

ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவுடன், லெபனான் சமூகத்தின் ஒரு பகுதியாக ஹெஸ்பொலா விளங்குகிறது.

ஹெஸ்பொலா இந்த தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பது தெரியாது. இஸ்ரேலுக்குள் ஊடுருவி சென்று தாக்கக்கூடிய துல்லியமான ஏவுகணைகள் உட்பட, தங்களிடம் இருக்கும் அதிநவீன ஏவுகணைகளை ஹெஸ்பொலா இன்னும் பயன்படுத்தவில்லை.

இஸ்ரேலுடனான ஒரு பெரிய போருக்கு அக்குழு இதுவரை ஆர்வம் காட்டாமல் இருந்தது, அத்தகைய ஒரு போர் அதன் உள்கட்டமைப்பை அழிக்க வழிவகுக்கும் மற்றும் அதன் முக்கிய தலைவர்களின் படுகொலைக்கு வழிவகுக்கும் என்பதால். ஆனால் இப்போதும் அதுதான் நடந்துள்ளது எனும்போது, அடுத்து என்ன என்ற மிகப்பெரிய கேள்வி உள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே ஏதேனும் மிகப்பெரிய மோதல் வெடித்தால், அத்தகைய சூழ்நிலை பிராந்தியத்தில் உள்ள மற்ற இரானிய ஆதரவு குழுக்களையும் இந்த சண்டையில் ஹெஸ்பொலாவுடன் சேர கட்டாயப்படுத்தலாம் என்ற கவலையும் உள்ளது.

கணிக்க முடியாத விளைவுகளுடன் கூடிய மிகவும் ஆபத்தான தருணம் மத்திய கிழக்கில் நிலவுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)