வடகொரியா: நீருக்கடியில் அணு ஆயுத சோதனை - போர் சூழலில் புதிய அச்சுறுத்தலா?
- எழுதியவர், பிரான்செஸ் மாவோ
- பதவி, பிபிசி செய்திகள்
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக, வடகொரியா நீருக்கடியில் தனது அணு ஆயுத அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
நீருக்கடியில் அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய டிரோன் ஒன்று, கிழக்கு கடற்கரை பகுதியில் சோதனை செய்யப்பட்டதாக வடகொரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சோதனைகள் நடத்தப்பட்டதற்கு வேறு எந்த ஆதாரமும் இல்லை மற்றும் டிரோன்களின் திறன் பற்றிய வடகொரியாவின் விளக்கங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று தென் கொரியா முன்பு கூறியிருந்தது.
இன்று வெளியான வடகொரியாவின் அணு ஆயுத சோதனை அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க ஜப்பான் மறுத்துவிட்டது.
தனது 'ஹெயில்-5-23' அணு ஆயுத அமைப்பின் சோதனைகள் குறித்து முன்னரே அறிவித்திருந்தது வடகொரியா, ஆனால் கடந்த சில வாரங்களாக இராணுவ நடவடிக்கைகளை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் இப்போது வெளிவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று திட எரிபொருள் மூலம் இயங்கும் ஒரு புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக கூறியது வடகொரிய அரசு. ஜனவரி முதல் வாரத்தில் தென் கொரியாவுடனான கடல் எல்லையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறியது.
கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர் சூழல்
கடந்த சில மாதங்களில் பல அமைதி ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன், தனது கொள்கைகளை அமல்படுத்துவதில் மிகவும் ஆக்ரோஷமாக செயலாற்றி வருகிறார்.
அரசு நிறுவனமான கே.சி.என்.ஏ-வின் அறிக்கையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் மேற்கொண்ட கூட்டுப் பயிற்சிகளே, வடகொரியா நீருக்கடியில் அணு ஆயுதங்களை சோதனை செய்வதற்கு தூண்டுகோலாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூட்டுப் பயிற்சிகள் 'பிராந்திய நிலைமையை மேலும் சீர்குலைக்கும்' என்றும் வடகொரியாவின் பாதுகாப்பிற்கு அவை அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
அதே வேளையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை வட கொரியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் கடந்த ஆண்டு அதிக பயிற்சிகளை நடத்தியதாக கூறுகின்றன.
அணுசக்தி ஏவுகணைகளின் பலகட்ட சோதனைகள் மற்றும் புதிய ஆயுதங்களை ஏவுதல் ஆகியவை வட கொரியாவின் இராணுவ நடவடிக்கைகளில் அடங்கும். இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஐ.நா.வின் தடைகளை மீறுவதாகும்.
ஆனால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் போர் வெடிப்பதற்கான சூழ்நிலை இருப்பதால், அதற்கு தயாராக இருக்க தனது அரசு இராணுவ ஆயுத சோதனைகளை செய்வதாக கிம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தென் கொரியா குறித்த தனது நிலைப்பாட்டில் சில அடிப்படைக் கொள்கை மாற்றங்கள் ஏற்படும் என மறைமுகமாக கூறியிருந்தார். இந்த வார தொடக்கத்தில் தென் கொரியாவுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கான முன்னாள் அடித்தள இலக்கு முடிந்துவிட்டதாக கிம் அறிவித்தார். மேலும் தென் கொரியாவை 'முதல் எதிரி' என்று குறிப்பிட்டார்.
வடகொரிய நாட்டின் இராணுவ மற்றும் அணுசக்தி திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், கிம்மின் ஆட்சியில் நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பு சோதனை போன்ற ஆயுத சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த செப்டம்பரில், அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன் கொண்ட தனது முதல் நீர்மூழ்கிக் கப்பலை வடகொரியா அறிமுகப்படுத்தியது.
உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலா
‘சுனாமி’ என பெயரிடப்பட்ட அணு ஆயுதம்
மார்ச் 2023 முதல், 'ஹெயில்' எனப்படும் அணு ஆயுத அமைப்பின் சோதனைகள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது வடகொரியா. ஹெயில் என்பவை நீருக்கடியில் அணு ஆயுதம் சுமந்து செல்லும் டிரோன்கள்.
ஹெயில் என்றால் கொரிய மொழியில் 'சுனாமி' என்று பொருள்.
இந்த ஆயுதங்கள் அல்லது அவற்றின் செயல்திறன் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் அவை எதிரிகளின் கடல் எல்லைக்குள் புகுந்து, நீருக்கடியில் மிகப்பெரிய வெடிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்று விவரித்துள்ளன வடகொரிய ஊடகங்கள்.
வடகொரியா ஊடகங்கள் கூறுவது போன்ற செயல்திறனுடன் இந்த ஆயுதங்கள் இருந்தாலும், கிம் அரசின் அணு ஏவுகணைகளை விடவும் முக்கியத்துவம் குறைந்த ஆயுதமாகவே அவை பார்க்கப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"வடகொரியாவின் இராணுவ அறிவியல் மற்றும் ஆயுதங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது என்ற உண்மையைக் கருத்தில் கொண்டால், ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கட்டத்திற்கு அவை இன்னும் வரவில்லை" என்று வட கொரிய ஆய்வுகளுக்கான உலக நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆராய்ச்சியாளரான ஆன் சான்-இல், ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
பல முயற்சிகளுக்கு பிறகு, வடகொரியாவின் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளியில் நிலைநிறுத்திவிட்டதாக கடந்த ஆண்டு கிம்மின் அரசு அறிவித்தது. மேலும் இந்த ஆண்டு மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தப் போவதாகவும் வடகொரிய அரசு கூறியுள்ளது.
செயற்கைக்கோள் உண்மையில் செயல்படுகிறதா என்பது இன்னும் சரிபார்க்கப்படவில்லை. ஆனால்,யுக்ரேனில் நடந்த போருக்காக வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை ரஷ்யா பெற்றதாகவும், அதற்கு கைமாறாக தான் வடகொரியாவின் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த ரஷ்யா உதவியது என்றும் தென் கொரியா கூறியது.
கிம் கடந்த ஆண்டு ரஷ்யாவின் தலைவர் விளாடிமிர் புடின் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு ஆகியோருடன் முக்கிய சந்திப்புகளை நடத்தினார். வடகொரியாவின் வெளியுறவு அமைச்சரும் இந்த வாரம் மாஸ்கோவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)