மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணி கடும் போட்டியை எதிர்கொண்ட 4 தொகுதிகள்
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒன்று என 40 நாடாளுமன்றத் தொகுதிகளை இந்தியா கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்கள் கைப்பற்றினர். இதில் விருதுநகர், தருமபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் திமுக கூட்டணிக்குக் கடும் போட்டியை அளித்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 35 தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தங்களது வாக்கு வித்தியாசத்தை உயர்த்திக் கொண்டே சென்றனர்.
ஆனால் தருமபுரியில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி மற்றும் விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் கடும் போட்டியை அளித்து துவக்கம் முதல் முன்னிலையில் இருந்தனர். நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சியில் குறிப்பிட்ட அளவு அதிமுக வேட்பாளர்கள் திமுக வேட்பாளர்களுக்குப் போட்டியைக் கொடுத்தனர். இது எப்படி நடந்தது?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காங்கிரஸூக்கு நெருக்கடி அளித்த தேமுதிக
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவிற்குப் பின்னர் அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல். அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக கடலூர், விருதுநகர், மத்திய சென்னை, தஞ்சாவூர் ஆகிய 4 தொகுதிகளில் களம் கண்டது.
இதில் விஜய்காந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போது எம்.பியாக உள்ள மாணிக்கம் தாகூருக்கு இரண்டாவது முறையாக மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது, பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டார். இதனால் இது நட்சத்திர தொகுதிக்கான அந்தஸ்தை பெற்றது.
விருதுநகரில் பரப்புரைக்குச் செல்லும் இடத்தில் விஜயகாந்த் மகன் என்ற அடிப்படையில் தேமுதிக கட்சிக்கு ஆதாரவான மனநிலை இருந்ததைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக பெண் வாக்காளர்களின் ஆதரவு தேமுதிகவிற்கு இருந்தது. இது வாக்கு எண்ணிக்கையின்போதும் பிரதிபலித்தது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானபோது தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரைவிட அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தார். நான்காம் சுற்றின் முடிவில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருந்தார் விஜயபிரபாகரன்.
இது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதை வெளிப்படுத்தும் விதமாக தொண்டர்கள் சிலர் வேட்பாளர் தங்கியிருந்த விடுதியின் வாசலில் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் துவங்கினர். இதன் பின் அடுத்தடுத்த சுற்றுகளில் இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே இருந்த வாக்கு வித்தியாசம் குறையத் துவங்கியது. பின்னர் எட்டு மற்றும் ஒன்பதாவது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையைப் பிடித்தார். இருப்பினும் 10வது சுற்றை தேமுதிக மீண்டும் கைபற்றி கடும் போட்டி கொடுத்தது.
அதன் பின்னர், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இறுதி வரை முன்னிலையில் இருந்தார். இதனால் விருதுநகர் வாக்கு எண்ணும் மையத்தின் வாசலில் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதைப் போல தொண்டர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
தமிழ்நாட்டில் குறைந்த வாக்கில் வென்ற தொகுதி விருதுநகர்
விருதுநகர் வாக்கு எண்ணும் மையத்தில் பணி இரவு 8 மணியைக் கடந்தும் தொடர்ந்தது. இறுதிச் சுற்றின் முடிவில் மொத்தம் பதிவான 10,66,309 வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள், தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள், பாஜகவின் ராதிகா சரத்குமார் 1,64,149 வாக்குகள் பெற்றனர்.
இதில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் விருதுநகர் தொகுதியைக் கைபற்றியது. தமிழ்நாட்டில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதியாக விருதுநகர் மாறியுள்ளது.
கடந்த முறை இதே தொகுதியில் தேமுதிகவை எதிர்த்துப் போட்டியிட்டு மாணிக்கம் தாகூர் 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது கவனிக்க வேண்டிய அம்சம்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி, விருதுநகர், சிவகாசி, அருப்புகோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.
இதில் அருப்புக்கோட்டை, திருமங்கலம் தொகுதியை மட்டுமே தேமுதிகவால் கைபற்ற முடிந்தது. தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாஜக சார்பாக ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டதால் விருதுநகரில் போட்டி கடுமையாக இருந்தது.
விருதுநகர் தேமுதிக தேர்தல் பொறுப்பாளர் அழகர்சாமி கூறுகையில் “மக்கள் அளித்த ஆதரவைப் பார்த்து கட்டாயம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மனநிலையில்தான் இருந்தோம். இந்தத் தோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏன் தோல்வி ஏற்பட்டது, எங்கே சறுக்கியது என்பது தொடர்பான கள ஆய்வுகளை இன்னமும் தொடங்கவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின்னரே அதைச் செய்யத் திட்டமிட்டுள்ளோம்,” எனக் கூறினார்.
திமுகவிற்கு நடுக்கம் காட்டிய பாமக - என்ன நடந்தது?
பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் களம் கண்டது. இதில் தருமபுரி தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகள் அதிகளவில் இருப்பதால் பாமக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. இதற்கு மிக முக்கியக் காரணம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியா அன்புமணி வேட்பாளராகப் போட்டியிட்டார்.
இந்தத் தொகுதியில் பாமகவினர் கூடுதல் கவனம் செலுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் அன்புமணியின் மகள்கள் இருவரும் தொகுதி முழுவதும் சுற்றி தீவிரமான பரப்புரையை மேற்கொண்டார்.
இதற்கு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு பாமக சார்பில் போட்டியிட்டு அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் 2019இல் திமுக வேட்பாளர் செந்திலிடம் 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறை பரப்புரையின்போது அவருக்கு மக்கள் அளித்த ஆதரவால் வெற்றி நிச்சயம் என பாமகவினர் திடமாக நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி, பாமக சார்பில் செளமியா அன்புமணி, அதிமுக சார்பில் ரா. அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் பொ.அபிநயா களமிறங்கிருந்தனர்.
வாக்கு எண்ணப்படத் தொடங்கி முதல் சுற்று முடிவுகள் வெளியானபோது திமுக வேட்பாளர் 15,470 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் பாமக வேட்பாளர் செளமியா 25,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். கிட்டத்தட்ட 10 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தது.
நான்கு சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளரைவிட 20,655 வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். ஆனால் அதன் பின்னர் எண்ணப்பட்ட சுற்றுகளில் திமுக வேட்பாளரைவிடக் குறைவாக வாக்குகளைப் பெறத் தொடங்கினார் செளமியா அன்புமணி. மொத்தமாக 24 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் பாமக 8 சுற்றுகளில் மட்டுமே முன்னிலை வகித்தது, திமுக வேட்பாளர் மற்ற சுற்றுகளைக் கைப்பற்றி தன்வசப்படுத்திக் கொண்டார்.
திமுக குறைந்த வாக்கில் வென்ற தொகுதி
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் திமுக 22 இடங்களில் போட்டியிட்டு 17 இடங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திமுக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதியாக தருமபுரி மாறியது.
இந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 12,47,832. அதில் திமுக வேட்பாளர் ஆ.மணி 4,32,667 வாக்குகள் பெற்றார். பாமக சார்பில் போட்டியிட்ட செளமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் பாமக வேட்பாளரைவிட 21,300 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.
மூன்று சட்டமன்றத்தில் பின்னடைவால் தோல்வி
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத பாமக பிரமுகர் கூறுகையில், “பாமகவிற்கு வலுவான வாக்கு வங்கி இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று தருமபுரி. எங்களின் வாக்குகள் பரவலாக பாஜகவிற்கு அனைத்து தொகுதியிலும் சென்றிருக்கின்றன. ஆனால் பாஜகவின் வாக்குகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை," என்று கூறினார்.
மேற்கொண்டு பேசிய அவர், "தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதியில் பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் அதிக வாக்குகளை பாமக பெற்றது. பாலக்கோடு, மேட்டூர் தொகுதிகளில் வாக்குகள் குறைந்தாலும் திமுகவை வீழ்த்தும் அளவில் இருந்தது."
""ஆனால் அரூர் தனித்தொகுதி கைகொடுக்கவில்லை இந்தத் தொகுதியில் மட்டுமே 39,675 வாக்குகளை திமுகவினர் கூடுதலாகப் பெற்றனர். இதுவே பாமகவின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது”, என்றும் தெரிவித்தார்.
திமுகவிற்கு அதிமுக நெருக்கடி அளித்த தொகுதிகள்
நாமக்கல் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் முதல் சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியைவிட 1,089 வாக்குகள் பின் தங்கியிருந்தார். அதன் பின் எண்ணப்பட்ட சுற்றுகளில் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகிக்கத் துவங்கினார்.
பின்னர் சுற்றுகள் செல்லச் செல்ல இரண்டு வேட்பாளர்களுக்குமான இடைவெளி அதிகரித்தது. இறுதியில் திமுக 4,62,036 வாக்குகள், அதிமுக 4,32,924 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இரண்டு கட்சிக்கும் இடையேயான வாக்குகள் வித்தியாசம் 29,112 ஆக இருந்தது.
அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதியில் கடும் போட்டியிருக்கும் அதிமுக வெற்றிபெற வாய்ப்புகள் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது. அங்கு திமுக சார்பில் மலையரசன், அதிமுக சார்பில் குமரகுருபரன் போட்டியிட்டனர். ஆனால் வாக்கு எண்ணும் பணிகள் துவங்கியது முதல் திமுக வேட்பாளர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கத் துவங்கினார்.
அதன்பிறகு தொடர்ச்சியாக வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இறுதியில் 24 சுற்றுகள் முடிவில் திமுக 5,61,589 வாக்குகள், அதிமுக 5,07,805 வாக்குகள் பெற்றது. திமுக வேட்பாளர் மலையரசன் 53,784 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை அடைந்திருக்கிறார். பாமகவை பின்னுக்குத் தள்ளி இந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடம் பிடித்தது.
தமிழ்நாட்டில் வெளியாகியிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைபற்றியது. அதில் 4 தொகுதிகளில் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வமான வாக்கு நிலவரத்தின் மூலம் தெரிகிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)