தமிழ்நாடு - இலங்கை கப்பல் போக்குவரத்தின் ஆயிரம் ஆண்டு வரலாறு
- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் விமானத்தின் மூலமே சென்றடைகிறார்கள் என்றாலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில், கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடம் இருந்தது.
தமிழக கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம், மரக்காணம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.
நூற்றாண்டு கால கப்பல் போக்குவரத்து வரலாற்றை கொண்ட நாகை
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துறைத் தலைவரும் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் முன்னாள் பேராசிரியருமான சு. இராசவேலு, இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போக்குவரத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறினார்.
"பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்கள் 2,500 ஆண்டுகளாக தமிழகத்தின் துறைமுகங்களில் நங்கூரம் இட்டன. தமிழகத்தின் வணிகர்கள், வணிகக் குழுக்களாக இணைந்து பல்வேறு நாடுகளோடு வர்த்தகம் செய்ததாகக் கூறும் சு.இராசவேலு, "அவ்வகையில் நாகப்பட்டினம் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக துறைமுக நகராக விளங்கி வந்திருக்கிறது," என்றார்.
அவரது கூற்றுப்படி, நாகப்பட்டினம் அயல் நாட்டு ஆய்வாளர்களால் நிகமா என அழைக்கப்பட்டது. கிரேக்கப் பயணியான தாலமி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள நிகமா என்னும் துறைமுக நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
"நிகமா என்று அவர் குறிப்பிடும் துறைமுக நகரம் நாகப்பட்டினம்தான் என ஸ்காட்லாந்தை சார்ந்த நிலவியல் அறிஞரும் கடலோடியுமான கர்னல் யூல் கி.பி.1873ஆம் ஆண்டு அடையாளம் கண்டார்.
சங்க காலத்தில் காவேரிப்பூம்பட்டினம் ஒரு சிறந்த துறைமுகமாக விளங்கி வந்ததால், சங்க கால இலக்கியங்களில் நாகப்பட்டினம் துறைமுகம் தொடர்பான செய்திகள் அதிகம் நமக்குக் கிடைக்கவில்லை.
எனினும் நிகமா என்னும் பெயர் நாகப்பட்டினத்தைக் குறிக்கலாம் என்ற குறிப்பிலிருந்து இக்கடற்கரை நகரம் கடல் வாணிகம் செய்து வந்த பெருவணிகர்களைக் கொண்டு விளங்கி வந்துள்ளதை அறிய முடிவதாக" கூறுகிறார் பேராசிரியர் சு.இராசவேலு.
வர்த்தக தலைநகரமாகத் திகழ்ந்த பண்டைய நாகை
நிகமா என்னும் சொல் தமிழிக் கல்வெட்டுகளிலும், மட்கல ஓடுகளிலும் குறிக்கப்பட்டுள்ள வணிகக் குழுவோடு தொடர்புடையது. நிகமம் என்றால் பெருவணிகர்கள் வாழ்கின்ற ஊர் எனப் பொருள்படும். எனவே நாகப்பட்டினம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சிறந்த வணிக நகரமாக விளங்கியிருக்கலாம் என்கிறார் பேராசிரியர் இராசவேலு.
கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவராப் பாடல்களில் இந்நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மாட மாளிகைகளையும் மணிமண்டபங்களையும் நெடிய மாடங்களையும் நீண்ட வீதிகளையும் கொண்டு, அலை தழுவும் நகரமாகவும் கோட்டை மதிலுடன் கூடிய நகரமாகவும் இந்நகரைப் பற்றி தேவாரப் பாடல் குறிப்பிடுகிறது.
இந்நகரில் பல வணிகர்கள் வாழ்ந்ததையும் பல நாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதையும் குதிரைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதையும் தேவாரப் பாடல்கள் குறிக்கின்றன. தொடக்க கால கல்வெட்டுகளிலும் தேவாரப் பாடல்களிலும் நாகப்பட்டினம் நாகை எனும் பெயரில்தான் வழங்கப்பட்டுள்ளது.
நாகையில் சீனக் காசுககளும் சீனர்கள் பயன்படுத்திய பானை ஓட்டுச் சில்லுகளும் கிடைத்துள்ளன. இதனால், சீனாவிலிருந்து கப்பல்கள் இத்துறைமுகத்தில் நங்கூரம் இட்டு பின்னர் இலங்கைத் தீவிற்கும் பிற நாடுகளுக்கும் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நாகப்பட்டினத்தில் உள்ள நாகநாதர் கோவிலில் உள்ள தனிக்கல் ஒன்றில் "நாகைப் பெருந்தட்டான்" என்ற பெயர் காணப்படுகிறது. கிபி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டே இவ்வூரில் கிடைக்கும் பழமையான கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பல்லவர் கால எழுத்து வடிவில் இருக்கிறது.
எனவே பல்லவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக நாகை விளங்கியிருக்கலாம் எனக் கூறுகிறார் சு.இராசவேலு. "தட்டான் என்பது உலோக வேலைப்பாடுகள் செய்கின்ற மக்களைக் குறிக்கும். சோழர் காலத்தில் நாகையில் தயாரிக்கப்பட்ட பல பௌத்த படிமங்கள் தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் சென்றுள்ளன."
சோழர்களின் கப்பற்படை தளமாக செயல்பட்ட நாகை
சிற்பிகளும் வணிகர்களும் வாழ்ந்த பகுதியாக இந்நகரம் இருந்திருக்கிறது என்பதை வரலாற்று, இலக்கிய, மற்றும் தொல்லியல் தரவுகள் மூலம் புரிந்துகொள்ளலாம்.
இந்நகரம் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான குடவையாறு மற்றும் உப்பனாறு ஆகிய ஆறுகளின் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்ததால், தேவாரத்தில் இந்நகர் "கழி சூழ் கடல் நாகை" எனக் குறிப்பிடப்படுகிறது.
அப்பரும், சம்பந்தரும் நாகை துறைமுகத்தில் பல்வகை கலங்கள் நின்றிருந்ததைக் குறிப்பிடுவதுடன் இத்துறைமுகத்தில் கற்பூரமும் யானைகளும் கப்பல்களில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்ததையும் துறைமுக கண்காணிப்பாளர்கள் இவற்றுக்குச் சுங்கவரி வசூலித்ததையும் குறிப்பிடுகின்றனர்.
ஆரம்பத்தில் நாகை எனக் குறிப்பிடப்பட்ட இந்நகரம், சோழர் காலத்தில்தான் பட்டினம் என்னும் வார்த்தையுடன் சேர்ந்து நாகப்பட்டினம் என்ற பெயருடன் அழைக்கப்படலாயிற்று. நாகை என்னும் பெயர் கடல் சங்கைக் குறிக்கும் நாகு என்னும் பெயரிலிருந்து வந்திருக்கலாம் என்கிறார் சு.ராசவேலு.
பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த சோழர்கள் தொன்மைத் துறைமுகமான காவேரிப்பூம்பட்டினத்தைத் தவிர்த்து நாகப்பட்டினத் துறைமுகத்திற்குச் சிறப்பிடம் அளித்தனர். இவர்கள் காலத்தில் இந்நகரம் மிகச் சிறந்த வணிக நகரமாகவும் சோழர்களின் கப்பற்படை இருந்த நகரமாகவும் விளங்கியது.
முதலாம் பராந்தக சோழர் தனது மூன்றாவது ஆட்சியாண்டில் ஈழத்தைக் கைப்பற்றி 'மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்னும் பட்டத்தை வைத்துக் கொள்கின்றார். எனவே இந்த மன்னரின் ஆட்சிக் காலத்திலேயே சோழர்கள் சிறந்ததொரு கப்பற்படையை வைத்திருந்துள்ளனர் என அறியலாம்.
அதன்மூலம் இலங்கையைக் கைப்பற்றியதுடன் இலங்கை அரசர்களுடன் நட்புறவு பாராட்டிய பாண்டியர்களையும் முதலாம் பராந்தக சோழர் வெற்றி பெற்றார். தொடர்ந்து சோழ மன்னன் ராஜராஜன் காலத்தில் அவரது மகன் ராஜேந்திர சோழன் நாகப்பட்டினத்தை சோழர்களின் சிறந்த துறைமுக நகரமாக மாற்றியதோடு பல கப்பல்களை அங்கிருந்து செலுத்தும் வகையில் நாகை துறைமுகத்தை விரிவுபடுத்தினார்.
கேரளப் பகுதியிலிருந்து வந்த வணிகர்களும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் செல்ல நாகைப்பட்டினத் துறைமுகத்தையே பயன்படுத்தியுள்ளனர்.
நாகை அருகேயுள்ள கீழையூர் சிவன் கோவிலில் யவனர்கள் குறித்த முதல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டத்துக்கு உட்பட்ட கீழையூர் கைலாசநாதர் கோவிலில் கி.பி.1287ஆம் ஆண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டில் "யவனர் திடர்" என்ற சொற்கள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் யவனர்கள் பற்றிய சொல் பயன்பாட்டுடன் கூடிய முதல் கல்வெட்டு இதுதான். 'யவனர் திடர்' என்பது 'யவனர் திடல்' எனப் பொருள்படும். இது, யவனர்கள், அதாவது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்த வணிகர்கள் குடியிருந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
சோழர்களுக்குப் பின் தஞ்சாவூர் நாயக்கர் காலத்திலும் இத்துறைமுக நகரம் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து இருந்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு அது நிறுத்தப்பட்டது.
நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
போதிய பயணிகள் இன்மையால், அந்தச் சேவை நிறுத்தப்பட்டு, இந்த ஆண்டு மறுபடியும் தொடங்கப்பட்டிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)