சாம்சங் இந்தியா: தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - என்ன பிரச்னை? அரசு கூறுவது என்ன?

படக்குறிப்பு, சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார் (கோப்புப் படம்)
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

சாம்சங் இந்தியா வளாகத்தில் வியாழக் கிழமையன்று மதிய உணவைப் புறக்கணித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பணியில் இருந்த 900க்கும் மேற்பட்ட ஊழியர்களில் 700க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்ததாக, சாம்சங் இந்தியா தொழிற்சங்க (சிஐடியு) தலைவர் முத்துக்குமார் தெரிவித்தார்.

சாம்சங் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நிர்வாக ரீதியான அழுத்தங்களைத் தாங்க முடியவில்லை எனக் கூறி கடந்த செவ்வாய்க் கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சாம்சங் இந்தியாவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதாகக் கூறி இன்று (டிசம்பர் 19) உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை ஊழியர்கள் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசிடம் அளித்த வாக்குறுதிகளை மீறி சாம்சங் இந்தியா நிர்வாகம் நடந்து கொள்வதாக சி.ஐ.டி.யு கூறுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சாம்சங் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

இரு தரப்பிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண உள்ளதாகக் கூறுகிறார், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சாம்சங் இந்தியாவில் நடந்த தொடர் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார் சத்திரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம், தொழிற்சங்க அனுமதி, ஊதிய உயர்வு உள்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தினர்.

சுமார் 1,400 பேர் வரையில் பங்கேற்ற இந்தப் போராட்டத்தால் சாம்சங் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இதைச் சரிசெய்வதற்காக வட இந்தியாவில் இருந்து பணியாளர்கள் வரவழைக்கப்பட்டதாக, சி.ஐ.டி.யு குற்றம் சுமத்தியது.

தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

படக்குறிப்பு, கோப்புப் படம்

ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் மறுத்துவிட்டதால் போராட்டம் தொடர்ந்தது. இதையடுத்து, அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு எட்டப்படவில்லை.

இதன்பிறகு போராட்டப் பந்தல் அகற்றம், நள்ளிரவு கைதுகள், வழக்குகள் என தொழிலாளர்கள் மீதான அரசின் நடவடிக்கைகள் வேகமெடுத்தன. சாம்சங் இந்தியாவுக்கு எதிரான போராட்டம், அரசியல்ரீதியாகவும் தி.மு.க அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இருதரப்பிலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில், 'தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும்போது பழிவாங்கும் நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொள்ளக் கூடாது' என சி.ஐ.டி.யு முன்வைத்த கோரிக்கையை சாம்சங் இந்தியா ஏற்றுக் கொண்டதாக அரசு அறிவித்தது.

போராட்டம் முடிந்த பிறகும் தொடரும் பிரச்னை

படக்குறிப்பு, கோப்புப் படம்

தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கையை சாம்சங் இந்தியா ஏற்றுக்கொண்டது குறித்த அறிவிப்பு, கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று வெளியானது. "இந்த ஒப்பந்தத்தில் தொழிலாளர் நலத்துறையின் உயர் அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர். இது அரசு ஆவணமாக மாறிவிட்டது. இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியும்" என சி.ஐ.டி.யு மாநில தலைவர் அ.சௌந்தரராஜன் கூறியிருந்தார்.

ஆனால், போராட்டம் முடிந்து ஆலைக்குள் சென்ற தங்களுக்கு பணிகளை வழங்காமல் பயிற்சி என்ற பெயரில் நிர்வாகம் இழுத்தடிப்பதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இதை ஏற்க மறுத்த சாம்சங் இந்தியா நிறுவனம், தொழிலாளர்களை குழுவாகப் பிரித்து பயிற்சி அளித்தது. அதுகுறித்த பிபிசி தமிழின் கேள்விக்கு, நிறுவனம்-தொழிலாளர் என இருதரப்புக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாகவே பயிற்சி வழங்கப்பட உள்ளதாக சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது.

ஆனால், "அரசிடம் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தப்படி சாம்சங் இந்தியா நிர்வாகம் நடந்து கொள்ளவில்லை" என்கிறார் சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்தின் (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை சாம்சங் இந்தியா பழிவாங்குகிறதா?

படக்குறிப்பு, கோப்புப் படம்

தொழிற்சாலையில் பணியாற்றும் சி.ஐ.டி.யு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட முப்பதுக்கும் மேற்பட்டோரை தொடர்பில்லாமல் வெவ்வேறு துறைகளுக்கு சாம்சங் இந்தியா நிர்வாகம் மாற்றியுள்ளதாகவும் முத்துக்குமார் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

"வெவ்வேறு துறைகளுக்கு தொழிலாளர்களை மாற்றுவது தவறான ஒன்றல்ல. ஆனால், போராட்டம் முடிந்து உள்ளே சென்ற பிறகு துறைகளை மாற்றுவது உள்நோக்கம் கொண்டது" என்கிறார் முத்துக்குமார்.

மேலும், " சாம்சங் இந்தியா நிர்வாகம் தரப்பில் வொர்க்கிங் கமிட்டி என ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த கமிட்டியில் இணைவதாக ஒப்புக்கொண்டால் பழையபடி வேலை செய்யலாம் என நிர்பந்தம் செய்கின்றனர்" என்று கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, வன்முறையில் ஈடுபட்டதாக 11 தொழிலாளர்களுக்கு சாம்சங் இந்தியா நிர்வாகம், ஷோகாஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளதாகக் கூறும் முத்துக்குமார், "அதிகாரிகளை எதிர்த்து ஒருமையில் பேசுதல், உத்தரவுக்குக் கீழ் படியாமல் போவது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளை நிர்வாகம் சுமத்தியுள்ளது" என்றும் தெரிவித்தார்.

நிர்வாகரீதியான அழுத்தங்களைத் தாங்க முடியாமல் சுதாகர் என்ற ஊழியர், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறுகிறார், முத்துக்குமார்.

பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுதாகருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இவர், சாம்சங் இந்தியா நிறுவனத்தின் ரெஃபிரிஜிரேட்டர் பிரிவில் பத்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, சாம்சங் இந்தியா போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களைப் பழிவாங்குவதாகக் குற்றம் சாட்டிய தொழிலாளர்கள், உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்து, இன்று (வியாழக்கிழமை) 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

படக்குறிப்பு, கோப்புப் படம்

இதன் தொடர்ச்சியாகவே, வியாழக் கிழமையன்று உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர்.

இதைத் தவிர்க்கும் வகையில், சாம்சங் இந்தியா நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் செவ்வாய்க் கிழமையன்று காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் கமலக்கண்ணன், தொழிலாளர்கள் தரப்பில் சி.ஐ.டி.யு நிர்வாகி எல்லன் உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

சாம்சங் இந்தியா தரப்பில் நிறுவனத்தின் பொதுமேலாளர் பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது சி.ஐ.டி.யு தரப்பில் ஊதிய உயர்வு உள்பட 20 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

"ஆனால், நிறுவனத்தின் உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை எனக் கூறி கோரிக்கைகளை ஏற்க நிர்வாகம் மறுத்துவிட்டது" என்கிறார் முத்துக்குமார். சுமார் இரண்டரை மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

மீண்டும் ஜனவரி 8ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது, 'தங்களின் கோரிக்கைக்கு முடிவு எட்டப்பட வேண்டும்' என அதிகாரிகளிடம் சி.ஐ.டி.யு தெரிவித்துள்ளது.

"போராட்டம் முடிந்து தொழிற்சாலைக்குள் சென்றவர்களுக்கு பயிற்சி என்ற பெயரில் சி.ஐ.டி.யு சங்கத்துக்கு எதிரான மனநிலையை உருவாக்க முயன்றனர். உற்பத்தி சார்ந்து பயிற்சி கொடுத்திருந்தால் ஏற்கலாம். தற்போது உற்பத்தியில் இலக்கை அடையவில்லை என நிர்வாகம் கூறுவதை ஏற்க முடியாது" என்கிறார் முத்துக்குமார்.

'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் சி.வி.கணேசன்

படக்குறிப்பு, கோப்புப் படம்

இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கமலக்கண்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், "நேற்று(டிசம்பர் 17) இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. உணவுப் புறக்கணிப்பு போராட்டம் நடத்த வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "தொழில் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு வராமல் அரசு பார்த்துக் கொள்கிறது. அதேநேரம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது" என்கிறார்.

சாம்சங் இந்தியா நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறிய சி.வி.கணேசன், "அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்போம். இருதரப்பும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சாம்சங் இந்தியா சொல்வது என்ன?

சாம்சங் இந்தியா நிறுவனம் பிபிசி தமிழிடம் இதுகுறித்து அளித்த விளக்கத்தில் தொழிலாளர்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

அதேநேரம் தனது விளக்கத்தில், "எங்கள் சென்னை தொழிற்சாலையில் நேற்று ஒரு தொழிலாளி சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மேலும் முழுமையான விசாரணையை மேற்கொள்வோம்" எனக் கூறியுள்ளது.

மேலும், "சாம்சங்கில், எங்கள் தொழிலாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். நிறுவனம் எந்தக் குழுவிலும் சேர ஊழியர்களுக்கு எந்த விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை, மேலும் எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முரணாகக் கூறப்படும் கூற்றுகள் முற்றிலும் உண்மையல்ல," என்று தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)