பாகிஸ்தான் தலைநகரை நோக்கி இம்ரான் ஆதரவாளர்கள் பேரணி - காவலர்களுடன் மோதல், பதற்றம்
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அந்த நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பேரணியாக செல்கின்றனர். இதனால், அங்கே உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.
இஸ்லாமாபாத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில், அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், பதிலடியாக காவல்துறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் முழுவதும் இருந்து இஸ்லாமாபாத்தில் பல ஆயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பதால் மாலையில் நிலைமை இன்னும் கடினமாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த போராட்டத்தை தடுக்கும் முயற்சியில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. சில பகுதிகளில் தொலைபேசி சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான்: சிறையில் இருந்த படியே தேர்தலில் சாதித்த இம்ரான் கான் - ராணுவம் என்ன செய்யப் போகிறது?
- இந்தியா-பாகிஸ்தான் இடையே 'ட்ரோன் ரேஸ்': யாருடைய கை மேலோங்கி இருக்கிறது?
- 53 ஆண்டுகளில் முதல் முறையாக வங்கதேசம் வந்த பாகிஸ்தான் கப்பல் - இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
- எஸ்.சி.ஓ உச்சி மாநாடு: இந்தியாவைவிட சீனாவுக்கு பாகிஸ்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதா?
முன்னதாக இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுக்கு போராட அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இந்த போராட்டம் தொடங்கியது. அரசாங்கம் தங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வரை இஸ்லாமாபாத்தில் தொடர்ந்து இருக்குமாறு, தனது ஆதரவாளர்களுக்கு விடுத்த செய்தியில் இம்ரான் கான் கூறியிருந்தார்.
இம்ரான் கான், தற்போது ஊழல் குற்றச்சாட்டிற்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். அந்தக் குற்றச்சாட்டை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இம்ரான் கான் சிறையில் உள்ளது ஏன்?
பிரதமராக இருந்த போது கிடைத்த பரிசுப் பொருட்களை விற்றது குறித்து அரசுக்கு முறையாக தெரியப்படுத்தத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் 2018இல் பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ராணுவத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டிற்குப் பிறகு 2022இல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் அவர் வெளியேற்றப்பட்டார்.
71 வயதான இம்ரான் கான், தன் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறுகிறார். இம்ரான் கான் சிறையில் இருந்தாலும், அவருக்கு எதிராக புதிய வழக்குகள் தொடரப்பட்டாலும், பாகிஸ்தான் அரசியலில் இன்னும் அவர் செல்வாக்கு செலுத்துகிறார்.
பேரணியில் இம்ரான் கான் மனைவியும் பங்கேற்பு
இம்ரான் கானை விடுவிக்கக் கோரி, இஸ்லாமாபாத்தில் நடைபெறும் பேரணியில், அவரது மனைவியும் முன்னாள் ‘பாகிஸ்தானின் முதல் பெண்மணியுமான’ புஷ்ரா பீபியும் பங்கேற்றுள்ளார்.
கடந்த ஜனவரியில் இம்ரான் கானுடன் புஷ்ராவுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதத்தின் இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட புஷ்ரா பீபி, ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த ஒரு வாகன அணிவகுப்பில் பங்கேற்றார்.
தனது வாகனத்திற்குள் இருந்தவாறு மைக் மூலம் பேசிய அவர், இஸ்லாமாபாத் செல்லும் வழியில் ஓய்வெடுக்க நின்றிருந்த ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்.
"உங்கள் வாகனங்களை விட்டு வெளியே வர வேண்டாம், நமது இலக்கை அடைய இன்னும் வேகமாக செல்வோம். நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது" என்று அவர் பேசினார்.
"இம்ரான் கானை திரும்ப அழைத்து வர நாம் இங்கு வந்துள்ளோம், அவர் இல்லாமல் நாம் திரும்ப மாட்டோம். உங்கள் வாகனங்களில் ஏறுங்கள், அப்போதுதான் நாம் விரைவாக இலக்கை அடைய முடியும்.” என்று அவர் கூறினார்.
இந்த வாகன அணிவகுப்பு திங்கட்கிழமை காலை இஸ்லாமாபாத்திற்குள் நுழையும் என்று பெஷாவர் பிராந்திய தலைவர் அர்பாப் ஆசிம் தெரிவித்திருந்தார்.
டி-சௌக் பகுதியில் திரள திட்டம்
இம்ரான் கான் ஆதரவாளர்களின் இறுதி இலக்கு மத்திய இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய நகர சதுக்கமான டி-சௌக் ஆகும். பாகிஸ்தானின் பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட பல குறிப்பிடத்தக்க அரசாங்க கட்டிடங்களுக்கு அருகில் இந்த சதுக்கம் அமைந்துள்ளது.
சில சமயங்களில் ‘டெமாக்ரசி சௌக்’ (Democracy Chowk) என்று குறிப்பிடப்படும் இந்த சதுக்கம் பெரும்பாலும் அரசியல் பேரணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது இரண்டு முக்கிய சாலைகளில் அமைந்துள்ளதால், ‘டி-சௌக்கில்’ நடத்தப்படும் பெரிய கூட்டங்கள், இஸ்லாமாபாத்தில் போக்குவரத்தை பல முறை முடக்கியுள்ளன.
‘அதிகாரிகள் மீது கல்வீச்சு’
இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான மோதல்கள் பற்றிய தகவல்கள் இரு தரப்பிலிருந்தும் இருந்தும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
போராட்டக்காரர்கள் தங்கள் மீது கற்களை வீசுவதாகவும், இதனால் காயமடைந்த 14 அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இம்ரான் கான் ஆதரவாளர்கள் “போலீசார் தங்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தங்கள் மீது தடியடி நடத்துவதாக” குற்றம்சாட்டுகின்றனர்.
திங்கட்கிழமை காலை இஸ்லாமாபாத் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக மத்திய இஸ்லாமாபாத்தில், பல முக்கிய அரசாங்க கட்டடங்களுக்கு அருகே உள்ள ‘டி-சௌக்’ (D-Chowk) என்ற மிகப்பெரிய சதுக்கத்தில் குறைந்தது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, “டி-சௌக்கை போலீசார் கண்காணித்து வருவதாகவும், சதுக்கத்தில் நுழையும் எவரையும் போலீசார் கைது செய்வார்கள்” என்றும் கூறினார்.
பாகிஸ்தான் வரும் பெலாரஸ் அதிபர்
இஸ்லாமாபாத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அந்நகரம் இன்று (நவம்பர் 25) பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை வரவேற்கவும் தயாராகி வருகிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான வர்த்தகம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, கடந்த செப்டம்பர் மாதத்தில் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, லுகாஷென்கோவின் இந்த மூன்று நாள் பாகிஸ்தான் பயணம் நடைபெறுகிறது.
எரிசக்தி, போக்குவரத்து, இயற்கை வளங்கள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளுக்கான பெலாரஸ் அமைச்சர்களும் லுகாஷென்கோவுடன் வந்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்பதற்கான காரணங்களில் ஒன்றாக இந்த அரசு பயணத்தை பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
வியாழக்கிழமை (நவம்பர் 21) அன்று இந்த போராட்டம் சட்டவிரோதமானது என்று இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவில் பெலாரஸ் அதிபரின் பயணம் குறித்தும் குறிப்பிட்டுள்ளது. “பெலாரஸ் தூதுக்குழுவின் பாதுகாப்பு மற்றும் அதன் சுதந்திரம் ‘மிக முக்கியமானது’ மற்றும் ஒரு நட்பு நாட்டுடனான உறவுகளை நேரடியாக உள்ளடக்கியது. எனவே, இது நாட்டின் நலன் சம்பந்தப்பட்டது". என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)