'அயோத்தி' ரத யாத்திரையின் போது அத்வானியை கைது செய்ய சொன்னது யார்? பிபிசிக்கு லாலு பிரசாத் பேட்டி
- எழுதியவர், ரூபா ஜா
- பதவி, இந்தியா தலைவர், பிபிசி நியூஸ்
- Twitter,
வரும் மக்களவை தேர்தலில் 'இந்தியா' கூட்டணிதான் வெற்றி பெறும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பிகாரின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிபிசி உடனான சிறப்பு உரையாடலில், 'இந்தியா' கூட்டணி சிதைந்துவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த கூட்டணி தற்போது மீண்டும் அதன் வடிவத்திற்கு திரும்புவதாக அவர் கூறினார்.
பாஜக வெற்றி பெறும் என்று பரவலாக கூறப்படுவதை நிராகரித்த அவர், ஊடகங்கள் முற்றிலும் கோழைத்தனமானவை என்றார்.
”எல்லா ஊடகங்களும் விலைபோய்விட்டன. மோதி மட்டுமே அவர்களின் மனதில் உள்ளார். ஆனால் இந்த முறை மோதி வரமாட்டார், நான் ஆரூடம் சொல்கிறேன். மோதி வரமாட்டார், இந்தியா கூட்டணி வெல்லும்" என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
'இந்தியா' கூட்டணி குறித்து பல கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்றன. ஏனெனில் இந்த கூட்டணியின் பல முக்கிய முகங்கள் அதை விட்டு வெளியேறிவிட்டன.
அவர்களில் முக்கியமானவர் பிகார் முதலமைச்சர் நிதீஷ்குமார். ஒரு காலத்தில் 'இந்தியா' கூட்டணியின் முக்கிய தூணாக கருதப்பட்ட நிதிஷ்குமார், சமீபத்தில் இந்த மகா கூட்டணியில் இருந்து பிரிந்து பிகாரில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார்.
இது தவிர உத்தரபிரதேசத்தில் ஜெயந்த் செளத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளமும் (ஆர்எல்டி) என்டிஏவில் இணைந்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக ஜாமீனில்...
ஒரு காலத்தில் எதிர்க்கட்சி அரசியலின் முக்கிய முகமாகக் கருதப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக இப்போது சுறுசுறுப்பாகக் காணப்படவில்லை. அவரது மகனும், பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பொறுப்பை நிர்வகிக்கிறார்.
ஆனால் பிபிசி உடனான உரையாடலில் லாலு பிரசாத் யாதவ், தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததோடு, 'இந்தியா' கூட்டணியின் தரப்பையும் முன்வைத்தார்.
"எல்லோரும் இப்போது ஒன்று கூடுகிறார்கள். போனவர்கள் போய்விட்டார்கள். பார்ப்பதற்கு போய்விட்டார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் பொதுமக்கள் வெளியே போகவில்லை. மக்கள் செல்லவில்லை,”என்றார் அவர்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி. இந்த மோசடியில் ஐந்து வெவ்வேறு வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. 2013 அக்டோபர் 3 ஆம் தேதி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் அவருக்கு முதல் முறையாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் தனது மக்களவை உறுப்பினர் பதவியை இழக்க நேரிட்டது.
லாலு யாதவ் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜாமீனில் வெளியே இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபரில் சிபிஐ அவரது ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கால்நடைத் தீவன ஊழல் மட்டுமின்றி, ’வேலைக்கு நிலம்’ ஊழலிலும் லாலு பிரசாத் யாதவின் பெயர் அடிபட்டது. இவர் ரயில்வே அமைச்சராக இருந்தபோது நிலத்துக்கு ஈடாக வேலை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரிடம் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
மமதா பானர்ஜி பற்றி லாலு கூறியது என்ன?
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜியும் ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்.
ஆனால் சமீபத்தில் அவர் மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நீதி யாத்திரையில் பங்கேற்கவும் அவர் மறுத்துவிட்டார்.
காங்கிரஸின் மாநிலப் பிரிவும் மமதா பானர்ஜியிடம் மோதல் அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. சந்தேஷ்காலி சம்பவம் தொடர்பாக காங்கிரஸின் பல பிராந்திய தலைவர்கள் மமதா பானர்ஜிக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒரு காலத்தில் எதிர்க்கட்சி கூட்டணியின் சிற்பியாக இருந்த மமதா பானர்ஜி தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் என்ன தாக்கம் ஏற்படும்?
இதற்கு பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், இந்தியா கூட்டணியில் இருந்து மமதா பானர்ஜி விலக மாட்டார். அவர் உடன் இருப்பார் என்று கூறினார்.
ராகுல் காந்திக்கு லாலு அறிவுரை
உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில், காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தொகுதி பகிர்வு குறித்து உடன்பாடு ஏற்படாது என்று தோன்றிய ஒரு காலகட்டம் இருந்தது.
ஆனால் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டபோது அது 'இந்தியா' கூட்டணியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பிறகு டெல்லி மற்றும் குஜராத்தில், காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.
மக்களவை தேர்தல் ஏற்பாடுகளுக்கு மத்தியில் ராகுல் காந்தி நடத்தி வரும் யாத்திரை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் பற்றி லாலு யாதவிடம் கேள்வி எழுப்பியபோது, ’இது ராகுல் காந்தியின் பலவீனம் அல்ல’ என்று அவர் பதில் அளித்தார்.
"அவருக்கு எந்த பலவீனமும் இல்லை. உட்கார்ந்துமட்டுமே இருந்தால் வேலை நடக்காது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களை விழிக்கச்செய்ய வேண்டும்," என்றார் அவர்.
ராகுல் காந்தி அனைவரையும் தன்னுடன் ஒருங்கிணைத்துச் செல்வதில்லை என்று கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
ஆயினும் இப்போது அவர் சுற்றித் திரிவதை விட்டுவிட்டு மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்று லாலு யாதவ், ராகுல் காந்திக்கு அறிவுரை கூறினார்.
இனி நேரம் இல்லை. தொகுதி பகிர்வை செய்து தயாராகுங்கள் என்றும் அவர் ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டார்.
லாலுவின் ஆதர்ச நாயகர்கள் யார்?
லாலு பிரசாத் யாதவ், நளின் வர்மாவுடன் இணைந்து எழுதிய 'கோபால்கஞ்ச் டு ரைசினா' புத்தகம் குறித்தும் பேட்டியின் போது அவர் விவாதித்தார்.
தனது அரசியல் பயணத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், கர்பூரி தாக்கூர், லோஹியா மற்றும் ஜக்தேவ் பிரசாத் ஆகியோர் தனது முன்மாதிரிகள் என்று கூறினார்.
"ஒடுக்கப்பட்டவர்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர்" என்று ஜக்தேவ் பிரசாத் பற்றி அவர் குறிப்பிட்டார்.
ஏழைகளுக்கு ஆதரவாக உரையாற்றும் போது ஜக்தேவ் பிரசாத் சுட்டுக்கொல்லப்பட்டதையும் லாலு பிரசாத் யாதவ் நினைவு கூர்ந்தார்.
“இவர்கள் அனைவரும் என்னுடைய ஆதர்ச மனிதர்கள்,” என்று அவர் கூறினார்.
ரத யாத்திரையின் போது அத்வானியை கைது செய்ய சொன்னது யார்?
பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியின் ரத யாத்திரை மற்றும் பிகாரில் அது நிறுத்தப்பட்டது குறித்து லாலு பிரசாத் யாதவ் தனது புத்தகத்தில் விரிவாகப் பேசியுள்ளார்.
இந்த சம்பவம் 1990 ஆம் ஆண்டு நடந்தது. பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி ரத யாத்திரை புறப்பட்டார். பிகாரில் அவரது ரத யாத்திரை நிறுத்தப்பட்டது.
அப்போது லாலு பிரசாத் யாதவ் பிகார் முதல்வராக இருந்தார். லாலு பிரசாத் யாதவின் அரசியல் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய முடிவாக கருதப்படுகிறது.
அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த லாலு பிரசாத் யாதவ், "பிகார் முதல்வராக இதைச் செய்வது என் கடமை. பிகாருக்கும் நாட்டுக்கும் நல்ல செய்தியை அனுப்புவது, மத சார்பற்ற செய்தியை அனுப்புவது என் பொறுப்பு. வன்முறை, கலவரங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆட்சி இருந்தாலும் சரி போனாலும் சரி. எவர் ஒருவரும் நமது அரசியலமைப்பு மற்றும் அதன் மதிப்புகளுக்கு தீங்கு விளைவித்தால், அது பொறுத்துக்கொள்ளப்படாது," என்று கூறினார்.
அத்வானிக்கு எடுத்துக்கூற தான் டெல்லி சென்றதாகவும், இதையெல்லாம் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் லாலு குறிப்பிட்டார்.
"அவர் மிகவும் கோபமாக கர்ஜித்தார். எந்த அம்மாவின் மகனுக்கு, அவரிடம் தாய்ப்பால் குடித்தவருக்கு என் ரதத்தை நிறுத்துவதற்கு தைரியம் உள்ளது என்றார். நீங்கள் உங்கள் தாயின் பாலை குடித்தீர்களா அல்லது பவுடர் பால் குடித்தீர்களா என்று எனக்கு தெரியாது. நான் எருமைப்பால் குடித்தவன். உங்களை விடமாட்டேன் என்று அவரிடம் சொன்னேன். அவரை சமஸ்திபூரில் கைது செய்தோம்." என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
"அத்வானி கைது செய்யப்பட்டதால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இங்கு அவரை கைது செய்தோம். அங்கு வி.பி.சிங்கின் அரசு கவிழ்ந்தது. இவர்கள் (பாஜக) தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். அரசை இழந்தோம். இது பாபர் மசூதியை காப்பாற்றுவதற்கான எங்கள் முயற்சி.”
அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அப்படி செய்யச் சொன்னாரா என்று கேட்டபோது அதற்கு பதிலளித்த லாலு யாதவ், எந்த தலைவரோ, எந்த நபரோ தன்னிடம் எதுவும் சொல்லவில்லை என்றும் தான் சொந்தமாக முடிவெடுத்து அத்வானியை கைது செய்ததாகவும் கூறினார்.
அன்றைய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீத் இதை தடுத்ததாகவும், நீங்கள் அனைவரும் அதிகார போதையில் மயங்கி கிடக்கிறீர்கள் என்று தான் அவரிடம் சொன்னதாகவும் லாலு பிரசாத் யாதவ் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
லால் கிருஷ்ண அத்வானியால் ஒருபோதும் பிரதமராக முடியாது என்று லாலு பிரசாத் யாதவ் ஒருமுறை கூறியிருந்தார்.
பிரதமராக அத்வானி ஆகியிருக்க வேண்டும், ஆனால் மோதி ஆகிவிட்டார் என்று இப்போது அவர் கூறுகிறார்.
அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதற்கு தான் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டார்.
"வகுப்புவாத சக்திகளுடன் சமரசம் இல்லை"
லாலு பிரசாத் யாதவ் தனது அரசியல் வாழ்க்கையில் எப்போதுமே வகுப்புவாத சக்திகளுடன் சமரசம் செய்து கொண்டதில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் அவரது கூட்டாளிகளாக இருந்த பல அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் கட்சிகள் பல முறை அணி மாறின.
பிகாரில் நிதிஷ் குமார் நீண்ட காலம் பாஜகவுடன் இருந்தார். பின்னர் மகா கூட்டணியில் இணைந்து ஆர்ஜேடியுடன் ஆட்சியும் அமைத்தார்.
ஆனால் இப்போது அவர் மீண்டும் பாஜக பக்கம் வந்துள்ளார். இவரைப் போலவே பிகாரைச் சேர்ந்த அவரது சகாக்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் அவ்வப்போது பாஜகவுடன் சமரசம் செய்துகொண்டுள்ளனர். ஆனால் லாலு யாதவ் எப்போதுமே பாஜகவுடன் செல்லவில்லை.
”ஒருபோதும் வகுப்புவாத சக்திகளுக்கு முன் நான் அடிபணிந்ததில்லை. அவர்களுடன் நின்றதில்லை. எப்போதும் அவர்களை வேருடன் அழிப்பதை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
இந்த விவகாரத்தில் தேஜஸ்வி யாதவ் சமரசம் செய்து கொள்வாரா என்று வினவியபோது, "தேஜஸ்வியும் வகுப்புவாத சக்திகளுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்" என்று லாலு யாதவ் பதில் அளித்தார்.
இருந்த போதிலும் நிதிஷ் குமாருடன் மீண்டும் மீண்டும் சமரசம் செய்துகொள்வதாக லாலு யாதவ் மீது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
"நாங்கள் மீண்டும்மீண்டும் நிதிஷ் குமாருடன் போகவில்லை. அவர் எங்களிடம் மீண்டும் மீண்டும் வருகிறார்" என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் குறிப்பிட்டார்.
மகா கூட்டணிக்கு நிதிஷ்குமார் திரும்புவாரா என்று கேட்டபோது அவர் மீண்டும் எங்கிருந்து வருவார் என்று லாலு பிரசாத் யாதவ் பதில் கேள்வி எழுப்பினார்.
ஒரு அரசியல்வாதியாக தனது வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது, ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, பல சிரமங்களை சந்தித்து, இவ்வளவு உயரத்தை தான் எட்டியது ஆச்சரியமாக இருக்கிறது என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
வரலாறு உங்களை எப்படி நினைவில் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,"சமூக நீதி, ஏழைகளுக்கு வலிமை மற்றும் தைரியம் அளித்துள்ளேன். ஏழைகளுக்கு நிறைய பலத்தையும் அதிகாரத்தையும் கொடுத்துள்ளேன். இதற்காக நான் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது. பல வகையான சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. மக்கள் என்னை நினைவில் வைத்துக்கொள்வார்கள்” என்றார்.
ஊடகங்கள் மீது லாலு பிரசாத் யாதவ் கோபமாக காணப்பட்டார். மீடியாவைப் பற்றி என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது தான் மிமிக்ரி செய்வதாக ஊடகங்கள் கூறி வந்தன என்றார்.
சோனியா காந்தி தனக்கு மிகவும் பிடித்த அரசியல்வாதி என்று லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)