ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகலால் இந்தியா - கனடா உறவு மேம்படுமா? ஒரு விரிவான அலசல்
- எழுதியவர், ஹிமான்ஷு துபே மற்றும் அபய் சிங்
- பதவி, பிபிசி நிருபர்
கனடா, உலகம் முழுவதுமே தற்போது தலைப்புச் செய்தியாக உள்ளது. அதற்கு காரணம் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவர் பிரதமர் பதவி மற்றும் ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து திங்கள்கிழமை (ஜனவரி 7) ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தான் பதவி விலகுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ அறிவித்தார். கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் பிரதமர் பதவியை விட்டு விலகுவதாகவும் அவர் கூறினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா இந்தியாவில் என்ன விளைவை ஏற்படுத்தும்? இதில் இந்தியா மகிழ்ச்சி அடைய வேண்டுமா? லிபரல் கட்சியின் புதிய தலைவர் இந்தியாவிடம் எவ்வாறு நடந்து கொள்வார்? போன்ற சில கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ள, சர்வதேச அரசியல் விவகாரங்கள் குறித்த நிபுணர்களுடன் பிபிசி உரையாடியது.
ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய பிறகு கனடாவுக்கும் இந்தியாவுக்குமான வெளியுறவு மேம்படுமா? ஓர் அலசல்
இந்தியா மகிழ்ச்சியடைய வேண்டுமா?
"கனடாவின் பிரதமராக ட்ரூடோ இருக்கும் வரை, இந்தியா-கனடா உறவில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை என்பது அண்மைக் காலமாகவே தெளிவாகத் தெரிகிறது."
புதுடெல்லியை தளமாகக் கொண்ட அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைத் துறையின் துணைத் தலைவராக இருக்கும் பேராசிரியர் ஹர்ஷ் வி. பந்த் கூற்று இது.
"ட்ரூடோ இதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டார். இந்த பிரச்னையில் தேவையான தீவிரத்தன்மையை அவர் வெளிப்படுத்தவில்லை. இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் நிறைய சேதத்தை ஏற்படுத்தியது" என்று அவர் குறிப்பிட்டார்.
ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை வெளியிட்டு வந்தார். அதேநேரத்தில், மாணவர் விசாக்கள் குறித்து கனடா எடுத்த முடிவில் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்கள் அதிகரித்தன. இதனால் இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இதேபோன்ற கருத்தை, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வில்சன் சென்டர் சிந்தனைக் குழுவில் உள்ள தெற்காசியா நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் வெளியிட்டுள்ளார்.
"ட்ரூடோவின் ராஜினாமா இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் மோசமடைந்து வரும் உறவுகளை மேம்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கக் கூடும்" என்று மைக்கேல் குகல்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா- கனடா உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு ட்ரூடோ தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவுடனான உறவு மோசமடைந்துள்ள ஒரே மேற்கத்திய நாடு கனடா.
ராஜ தந்திர உறவுகள் இப்போது மாறுமா?
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ராஜ தந்திர உறவுகள் இப்போது மாறுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த பேராசிரியர் பந்த், இப்படி ஒரு மாற்றம் நிகழும் போதெல்லாம் , மாற்றத்திற்கான நம்பிக்கை ஏற்படுகிறது என்கிறார்.
"புதிய நிர்வாகம் பதவிக்கு வரும் போது அது புதிய தொடக்கமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். புதிய பிரதமர் மற்றும் புதிய நிர்வாகத்தின் மீது ஒரு புது நம்பிக்கை உள்ளது. ஆனால், லிபரல் கட்சிக்கும் அதன் சொந்த சவால்கள் இருக்கின்றன" என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அக்டோபரில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலுக்கு நிறைய கால அவகாசம் உள்ளது. லிபரல் கட்சியில் உள்ள இடங்களில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் உள்ளனர்" என்றார்.
மேலும் "அவர்கள் சீக்கிய சமூக நடத்தையை தீவிரமாக ஆதரிப்பவர்கள். எனவே இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்புக்கு மாறானதாக இருக்கின்றது என்றே நினைக்கிறேன்" என்று குறிப்பிட்ட அவர், "தேர்தல் நடைபெறும் வரை, இந்த பிரச்னை தொடரும் என்று நினைக்கிறேன். ஏனெனில், ட்ரூடோ தலைமை வகித்தாலும் அல்லது வேறு யாராவது தலைமை தாங்கினாலும் லிபரல் கட்சி தனது இடங்களைத் தக்க வைத்துக் கொள்வது அவசியம்" என்று தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் கன்வால் சிபலும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். "ட்ரூடோ தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார், இது ஒரு நல்ல விஷயம்" என்று கன்வால் சிபல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"ட்ரூடோ தனது பொறுப்பற்ற கொள்கைகளால் இந்தியா-கனடா உறவுகளை சேதப்படுத்தினார். ஆனால், சீக்கியர் சமூகத்தின் கூறுகள் கனடிய அரசியல் அமைப்பில் ஆழமாக ஊடுருவியுள்ளன. அதனால் கனடாவில் சீக்கியர்கள் தொடர்பான பிரச்னை எளிதில் முடிவுக்கு வராது" என்றும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பழமைவாதிகளின் வருகையால் உறவுகள் மேம்படுமா?
இவ்வாறான நிலையில் கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பிரதமரானால், இந்தியா குறித்தான அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுகிறது.
பேராசிரியர் பந்த் இக்கேள்விக்குப் பதில் கூறும்போது, "நிச்சயமாக, அவ்வாறு நடக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ட்ரூடோவுக்கு முன், கன்சர்வேடிவ் பதவியில் இருந்த ஸ்டீபன் ஹார்பரின் ஆட்சிக் காலத்தில், இந்தியா-கனடா உறவுகள் ஒரு புதிய பரிமாணம் எடுத்தன."என்கிறார்.
மேலும், "ட்ரூடோ ஆட்சிக்கு வருவதற்கு சற்று முன், பிரதமர் மோதி கனடா சென்றிருந்தார். அப்போது ஸ்டீபன் ஹார்பர் அங்கு பிரதமராக இருந்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவுக்கான திட்டம் தயாரிக்கப்பட்டது."என்று பந்த் தெரிவித்தார்.
பந்த் தொடர்ந்து பேசிய போது , "பின்னர் ட்ரூடோ ஆட்சிக்கு வந்தார். அவர் தனது சொந்த வழியில் சில விஷயங்களைச் செய்தார். இது இந்தியாவுக்கும் கனடாவுக்குமான உறவுகளைப் சேதப்படுத்தியது. பழமைவாதக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியா-கனடா உறவு மேம்படும் என்று நினைக்கிறேன்"என்றார்.
ஆனால், இரு நாடுகளுக்கும் இடையேயான சிக்கல்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் என்று நம்பினால், அது நடக்காது என்றும் பேராசிரியர் பந்த் கூறுகிறார்.
"இந்தப் பிரச்னை அப்படியேதான் இருக்கும். ஆனால், அதனை எப்படிக் கையாள்வது என்பது முக்கியம்.
குறிப்பாக தங்களை ராஜ தந்திரக் கூட்டணி என்று அழைக்கும் நாடுகளுக்கு அது மிகவும் முக்கியம் " எனக் குறிப்பிட்டார்.
ட்ரூடோவின் வெளியுறவுக் கொள்கையால் அவருக்குப் பின்னடைவா?
ட்ரூடோவின் வெளியுறவுக் கொள்கை அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த பேராசிரியர் பந்த், அவரது (ட்ரூடோவின்) அரசியல் வீழ்ச்சி உள் காரணங்களால் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.
"அரசியலில் நான் பலவீனமாகி வருகிறேன் என்று அவர் உணர்ந்ததும், வெளியுறவுக் கொள்கையில் புதிதாக ஏதாவது செய்ய முயற்சித்தது உண்மை தான். உதாரணமாக, முதலில் இந்தியாவுடன் உள்ள உறவில் பதற்றத்தை ஏற்படுத்தினார்" எனத் தெரிவித்த பின்னர் பந்த் தொடர்ந்து பேசினார்.
"அவர் ட்ரம்பை சந்திப்பேன் என்று சமீபத்தில் கூறினார். வரிகளைக் குறைக்க முயற்சிப்பேன் என்று கூறினார். ஆனால் அதன் முடிவையும், அது அவரை எப்படி பாதித்தது என்பதையும் நாம் பார்த்தோம்."என்றார் பந்த்.
"வெளியுறவுக் கொள்கை சார்ந்த விஷயங்களில் ட்ரூடோ தோல்வியடைந்த விதம், இந்தத் தலைமையும் பிரதமரும் இந்த நேரத்தில் எங்களுக்குச் சரியாக அமையவில்லை என்று கனேடிய வாக்காளர்களை நினைக்கத் தூண்டியதாக நான் உணர்கிறேன்" என்று பந்த் கூறினார்.
ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் அவரது சொந்தக்கட்சி தலைவர்களிடமிருந்து சில காலமாக விமர்சனங்களை எதிர்கொண்டார்.
கனடாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா தொடர்பாக பாதுகாப்பு விவகார நிபுணர் பிரம்மா செலானியும் இதே கருத்தைக் கொண்டுள்ளார்.
"கனடாவின் மூன்று முக்கிய பிரச்னைகள் அனைத்தும் "டி" என்ற எழுத்தில் தொடங்குவதாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். ட்ரூடோ, பயங்கரவாதம் (ஏர் இந்தியா குண்டுவெடிப்பு போன்றவை) மற்றும் வரி" என்று அவற்றை விளக்கியிருந்தார்.
" கனடாவின் பிரதமராக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வகித்த பிறகு, டிரம்பின் வரி அச்சுறுத்தல் ட்ரூடோவை ராஜினாமா செய்ய வழிவகுத்தது"என்றும் அப்பதிவில் நிபுணர் பிரம்மா செலானி குறிப்பிட்டிருந்தார்.
ராஜினாமா செய்த பிறகு ட்ரூடோ கூறியது என்ன ?
"ஒவ்வொரு நாளும் பிரதமராக பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. தொற்றுநோய்களின் போது நாங்கள் பணியாற்றினோம், வலுவான ஜனநாயகத்திற்காக பணியாற்றினோம், சிறந்த வணிகத்திற்காக உழைத்தோம். நான் ஒரு போராளி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்" என்று ராஜினாமா அறிவிப்பை வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
"நான் 2015 இல் பிரதமரானதில் இருந்து, கனடாவையும் அதன் நலன்களையும் பாதுகாக்க உழைத்தேன். நடுத்தர வர்க்கத்தை மேம்படுத்த உழைத்தேன். தொற்றுநோய்களின் போது நாட்டில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதைக் கவனித்தேன்," என்றும் அவர் கூறினார்.
ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்பது நீண்ட காலமாக பேசப்பட்டு வருவதாக பேராசிரியர் பந்த் கூறினார். அது லிபரல் கட்சிக்கும், கனேடிய அரசியலுக்கும் முக்கியமானதாக இருந்தது என்று பந்த் விளக்கினார்.
"அங்கு (கனடாவில்) குழப்பமான சூழ்நிலை நிலவியது. இந்தியா மற்றும் கனடா இடையேயான உறவுகளுக்கும் ட்ரூடோ பதவி விலகல் முக்கியமானதாக நான் கருதுகிறேன்" என்றார் பந்த்.
"ஏனென்றால், ட்ரூடோ ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நம்பப்பட்டது" என்று குறிப்பிட்ட பந்த், "ட்ரூடோ ஆட்சியில் இருந்து வெளியேறிய பிறகு, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் எவ்வளவு விரைவாக மாற்றங்கள் வரும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்தியா-கனடா உறவுகள் எவ்வாறு மோசமடைந்தன?
ஜூன் 2023 இல், 45 வயதான காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் , கனடாவின் வான்கூவர் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார் .
இந்த கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்தது.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டதாக அமெரிக்க செய்தித்தாளான 'வாஷிங்டன் போஸ்ட்' குறிப்பிட்டது.
2024-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி கனடா அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மோரிசன், நாட்டின் குடிமக்கள் தற்காப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குழுவிடம், கனேடிய குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது படுகொலை செய்யும் நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறினார். அதன்பிறகு இந்தியா - கனடா உறவு மேலும் மோசமடைந்தது.
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தியா அதை மறுத்து வருகிறது.
இந்தியா - கனடா வர்த்தகம்
இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின் படி, கடந்த நிதியாண்டில் (2023-2024) மார்ச் 31-ஆம் தேதி வரை, கனடா மற்றும் இந்தியா இடையேயான இரு தரப்பு வர்த்தகம் 8.4 பில்லியன் டாலர்களாக இருந்தது.
ரத்தினங்கள், நகைகள், விலையுயர்ந்த கற்கள், மருந்துகள், ஆயத்த ஆடைகள், கரிம ரசாயனங்கள் மற்றும் இலகுரக பொறியியல் பொருட்களை கனடாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
கனடாவில் இருந்து பருப்பு வகைகள், செய்தித்தாள், மரக்கூழ், கல்நார், தாதுக்கள், கனிமங்கள், இரும்புக் கழிவுகள் , தாமிரம் மற்றும் தொழில்துறை இரசாயனங்கள் ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது.
தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வசதி அமைப்பு (இன்வெஸ்ட் இந்தியா) தரவுகளின்படி, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையில் கனடா 18வது இடத்தில் உள்ளது.
2020-21 முதல் 2022-23 வரை இந்தியாவில் கனடாவின் மொத்த முதலீடு 3.31 பில்லியன் டாலர் ஆகும். கனடாவின் இந்த முதலீடு இந்தியாவில் உள்ள மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் அரை சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)