இலங்கைக்கு இரான் அதிபர் வந்துள்ள நேரத்தில் அமெரிக்க கடற்படையினர் அங்கே என்ன செய்கிறார்கள்?
இஸ்ரேல் உடனான பதற்றத்திற்கு நடுவே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இன்று இலங்கைக்குச் சென்றுள்ளார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது இதுவே முதல்முறை. அதேநேரம், அமெரிக்க கடற்படை குழுவொன்றும் திருகோணமலைக்குச் சென்றிருப்பது கவனம் பெற்றுள்ளது.
இரான் அதிபர் இலங்கைக்குச் சென்றிருப்பது ஏன்? இந்த பயணத்தின் பின்னணி என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
இரான் - இஸ்ரேல் மோதல்
ஏப்ரல் 1ம் தேதி சிரியாவில் உள்ள இரான் தூதரக வளாகத்தின் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இரான் – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மோதல் வலுத்தது. தங்கள் தூதரகம் தாக்கப்பட்டதற்கு இஸ்ரேலை குற்றம்சாட்டிய இரான், அந்நாட்டின் மீது ஏப்ரல் 13ம் தேதி வான்வழித் தாக்குதலை தொடுத்தது. இது உலக அரங்கில் பெரும் அதிர்வுகளை கிளப்பியது.
இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க, இரானின் இஸ்ஃபஹான் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருநாடுகளும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இப்படியாக, இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், ஏப்ரல் 21ம் தேதி இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பாகிஸ்தானில் 3 நாள் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், ஜனாதிபதி ஆசிஃப் அலி ஜர்தாரி , இராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் உள்ளிட்டோரை ரைஸி சந்தித்துப் பேசினார்.
பாகிஸ்தான் பயணத்தை முடித்த பிறகு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி புதன்கிழமை காலையில் இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றார்
புதிய திட்டம் தொடக்கம்
இலங்கை இரான் இருதரப்பு நிதியுதவியில் உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நீர் மின் நிலையத்தை ரைஸி திறந்து வைத்தார். தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையே 5 புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின
உமா ஒயா திட்டம் இலங்கையின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என இலங்கை ஜனாதிபதி மாளிகை தெரிவிக்கிறது.
ஜனாதிபதி மாளிகையின் செய்திக்குறிப்பின் படி, இலங்கையின் தென்கிழக்கில் வறண்ட பகுதிகளில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையைப் தனிப்பதற்காக, உமா ஓயாவில் ஆண்டுதோறும் சேரும் 145 கன மீட்டர் தண்ணீருக்கும் மேலதிகமான தண்ணீரை கிரிந்தி ஓயவிற்கு திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
ஓய என்பது நீர்நிலைகளை குறிப்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் பாசன வசதி கிடைப்பதோடு, குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் இத்திட்டத்தின் மூலம் 290 ஜிகாவாட் மின் சக்தியும் கிடைக்கும் என இலங்கை அரசு கூறுகிறது.
இந்த நிகழ்ச்சியின்போது, இந்திய பெருங்கடலில் இலங்கையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என இரான் அதிபர் ரைஸி உறுதியளித்தார். அனைத்து ஆசிய நாடுகள், அண்டை நாடுகள், இறையாண்மை மற்றும் சுதந்திர நாடுகளுடன் இருதரப்பு உறவை விரிவுபடுத்த இரான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
ரைஸி தொடங்கி வைத்த திட்டத்தின் மதிப்பு சுமார் 514 மில்லியன் டாலர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிக்கிறது.
2008-ஆம் ஆண்டில் இந்த திட்டத்திற்காக இரான் இலங்கைக்கு நிதியுதவி செய்வதாகக் கூறியிருந்தது. இதன் அடிப்படையில் 2013-ம் ஆண்டு வரை 50 மில்லியன் டாலர்களை இலங்கைக்கு இரான் வழங்கியது. அதன் பிறகு இரானால் நிதிப் பங்களிப்பு செய்ய முடியவில்லை. அந்த சமயம், அமெரிக்கா, இரான் மீது சர்வதேச தடைகளை விதித்ததால் மேற்கொண்டு இலங்கைக்கு பொருளாதார பங்களிப்பை இரானால் செய்ய முடியவில்லை.
ஈரான் அதிபர் தனது ஆசிய சுற்றுப்பயணத்தின் போது இலங்கைக்கு வந்து, இந்த திட்டத்தை திறந்து வைப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் இழந்த சந்தையை மீட்டெடுத்து, இலங்கையின் தேயிலை ஏற்றுமதி சந்தையை பலப்படுத்தியதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையின் அதிக தேயிலையை கொள்வனவு செய்யும் நாடாக இரான் மாறியிருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்கா அதிருப்தி?
இரான் அதிபர் இலங்கைக்கு வருவது குறித்து அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதாக சில செய்திகள் வெளியாகின. இது குறித்து பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, "உண்மையில், யாரும் எங்களுக்கு கவலையோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. மற்றவர்களின் எதிரிகள் எங்களுக்கும் எதிரிகள் அல்ல. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை அனைவருக்கும் நட்பு கரங்களை நீட்டுகிறது. இரான் அதிபரின் பயணம் திடீரென திட்டமிடப்பட்டது அல்ல. இந்த வளர்ச்சித் திட்டத்திற்கான பணிகள் முடிந்ததும் திறப்பு விழாவுக்கு அவரை அழைக்க வேண்டும் என முன்பே முடிவு செய்திருந்தோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அலி சப்ரி, "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் இரானுக்கு பயணம் மேற்கொண்ட போது, அதிபர் ரைஸிக்கு, இலங்கை அரசு சார்பில் அழைப்பிதழை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில்தான் தற்போது இரான் அதிபர் இலங்கை வந்திருக்கிறார். சுதந்திர நாடாக, நாங்கள் அணிசேரா வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிறோம்" என கூறினார்
இரான் ஜனாதிபதியின் இலங்கை பயணம், சர்வதேச ரீதியாகவும் பொருளாதார, அரசியல் ரீதியாகவும் இலங்கை மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என சர்வதேச உறவுகள் தொடர்பான ஆராய்ச்சியாளரும் ஆலோசகருமான கலாநிதி ஹசித் கந்தவுடஹேவாவிடம் பிபிசி சிங்களம் கேட்டது..
இதற்குப் பதிலளித்த அவர், இரான் அதிபரின் இலங்கை பயணத்தில் சாதகமும் பாதகமும் இருப்பதாகக் கூறினார்.
ஏப்ரல் 13ம் தேதி இஸ்ரேலுக்கும் இரானுக்கும் மோதல் தீவிரம் அடைவதற்கு முன்பே, இரான் அதிபர் ரைஸி இலங்கைக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அப்போது இலங்கை ஒரு வகையான இராஜ தந்திர சிக்கலை எதிர்கொண்டது. காரணம், இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது இராணுவ ஆதரவை வழங்கிய நாடாக இஸ்ரேல் இருந்தது.
மறுபுறம், இஸ்ரேலும் இலங்கையும் தற்போது பல்வேறு பொருளாதார, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இதன் காரணமாக இரான் அதிபரின் இலங்கை பயணம், இஸ்ரேலுடன் தற்போதுள்ள உறவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
"தற்போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் உள்ளது. எனவே இந்த திட்டத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது அவசியம். இந்த கோணத்தில் பார்த்தால், இரான் அதிபரின் பயணத்திற்காக இலங்கைக்கு அமெரிக்கா நேரடியாக தமது எதிர்ப்பை பதிவு செய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளன" என்கிறார் கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா.
இலங்கையின் தேயிலை மற்றும் ஏனைய ஏற்றுமதிப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக இரான் திகழ்கிறது. எனவே, இந்த சூழலில், ரைஸி வருகை தர வேண்டாம் என இலங்கை முடிவெடுத்தால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலத்த அடியாக அமையும். எதிர்காலத்தில் இரானிடம் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய பொருளாதார ஒத்துழைப்பை இலங்கை இழக்க நேரிடும் என கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா குறிப்பிடுகிறார்.
அமெரிக்க கடற்படையினர் என்ன செய்கிறார்கள்?
இரான் அதிபரின் வருகைக்கு நடுவே, இலங்கையின் திரிகோணமலைக்கு அமெரிக்க கடற்படையினரும் சென்றுள்ளனர். அமெரிக்கா கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி நடவடிகைக்களுக்காக ஏப்ரல் 22 முதல் 26 வரை திருகோணமலையில் இருப்பார்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற மரைன் கார்ப்ஸின் சிறப்புப் பிரிவான FAST எனும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஃப்ளீட் ஆண்டி டெரரிசம் செக்யூரிட்டி டீம் (ஃபாஸ்ட்) இந்த பயிற்சியில் பங்கேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)