சீறும் மாயோன் எரிமலை: நாள்தோறும் அச்சத்துடன் வாழும் பிலிப்பின்ஸ் மக்கள்
- எழுதியவர், விர்மா சிமொனெட் & ஜோயல் குவின்ட்டோ
- பதவி, அல்பே மற்றும் சிங்கப்பூரிலிருந்து
இனிப்பான ரொட்டி மற்றும் மொறுமொறு என இருக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்காக, பச்சை மீன் வாசனைக்கிடையே, மோனெட் ஆக்ஸேல்ஸ், அதிக கவனத்துடன் தனித்தனி பொட்டலமாக கட்டிவைத்துக்கொண்டிருக்கிறார். பிலிப்பின்ஸ் நாட்டில் உறுமிக்கொண்டிருக்கும் மாயோன் எரிமலைக்கு அருகே உள்ள அவரது கிராமத்தில் இருந்து பாதுகாப்பு கருதி ஒரு தற்காலிக தங்குமிடத்தில் தற்போது வசிக்கும் அவர் இந்த மதியவேளைக்கு ஒரு மணிநேரம் முன்பாக தனது வேலைகளை வேகமாகச் செய்துகொண்டிருக்கிறார்.
பிலிப்பின்ஸ் நாட்டின் வடகிழக்கில் உள்ள பைகோல் தீபகற்பத்தின் அல்பே மாகாணத்தில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கானோர் தற்போது இது போன்ற தற்காலிக குடில்களில் வசித்துவருகின்றனர். அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இங்கு வசிக்கவேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. பிலிப்பின்ஸ் நாட்டில், அழகான மலைப்பகுதியாகக் கண்களுக்குத் தெரியும் மாயோன் எரிமலை எப்போது வெடித்துச் சிதறும் எனத் தெரியாததே இதற்குக் காரணம். இந்த எரிமலையிலிருந்து பெருமளவில் லாவா வெளிப்படும் நிலையில், அது பயங்கரமாக வெடித்துச் சிதறும் என அஞ்சப்படுகிறது.
அதனால் அந்த எரிமலைக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு, தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கே அவர்கள் வந்து சில வாரங்களான நிலையில் இன்னும் பல வாரங்களோ, அல்லது மாதக்கணக்கிலோ இங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இது அந்த எரிமலைக்கு அருகே வசிப்பவர்களுக்கு வழக்கமான ஒரு அனுபவமாகவே இருக்கிறது. ஓக்ஸேல்ஸைப் பொறுத்தளவில், அவருடைய சிறிய காய்கறிக் கடையையும் இங்கே கொண்டுவந்து விட்டார். துணி துவைப்பவர்களுக்கு சிறிய சோப்பு விற்பனை செய்வதில் தொடங்கி பல சிறிய பொருட்களை அவர் விற்பனை செய்துவருகிறார்.
தமது 40 வயது வாழ்க்கையில் இதுவரை அவர் 5 முறை தற்காலிக தங்குமிடத்தில் வசிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. தற்போது, மாயோன் எரிமலை விரைவில் தனது சீற்றத்தைக் குறைத்துக் கொண்டு ஒரு அமைதியான எரிமலையாக மாறும் என்றும், அதன் பின் அவரது ஊரில் அவருக்குச் சொந்தமாக உள்ள சிறிய நிலத்தில் மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றும் ஓக்ஸேல்ஸ் நம்புகிறார்.
"நாங்கள் ஏழையாக இருப்பதால், சொந்த ஊரை விட்டுவிட்டு வேறு எங்கும் சென்று புதிதாக தொழில் தொடங்கி பிழைப்பு நடத்த முடியாது," என தனது 5 வயது மகளைப் பார்த்தபடியே பிபிசியிடம் அவர் சொல்கிறார். குயினாபெட்டான் என்ற அவரது சொந்த ஊரில் இருந்து இந்த தற்காலிக குடிலுக்கு வந்த பின் அவரது ஐந்து வயது மகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
"எங்களுடைய ஊர் ஒரு மிகவும் அழகிய இடமாக உள்ளது. மாயோன் எரிமலை வெடித்துச் சிதறுவது தான் அங்கே இருக்கும் ஒரே ஒரு பிரச்சினை. அது ஒரு இயற்கைச் சீற்றம். அதை எதிர்த்து நாங்கள் எதுவும் செய்ய முடியாது. அதனால் இது போல் தற்காலிகமாக வேறு இடங்களில் வசிக்கும் நிலை ஏற்படுகிறது."
எரிமலை வெடிக்கும் போது வெளியேறும் சாம்பல் அவரது ஊர் மற்றும் சுற்றுப் புறங்களில் காற்றில் கலந்து விடுவதால், குழந்தைகளுக்கு சுவாச பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கவலைப்படுகிறார். இங்கே உள்ள தற்காலிக வசிப்பிடத்தில் அவர் வைத்திருக்கும் தண்ணீர், 4 பேரைக் கொண்ட அவரது குடும்பத்தினருக்குப் போதுமானதாக இருக்கும். செல்ஃபோன்கள் மற்றும் மின்விசிறிகளை சார்ஜ் செய்வதற்கு மின் வசதியும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
"இது போன்ற நிலையை பொறுத்துக்கொள்வதை விட நாங்கள் என்ன செய்யமுடியும்?" என அப்பாவியாக கேட்கிறார் அவர்.
இதே போல் மற்றொரு தற்காலிக வசிப்பிடத்தில் தங்கி இருக்கும் பெஞ்சமின் நசோல் என்பவர் தமது சிறிய பன்றிப் பண்ணையை விட்டு விட்டு இங்கே வந்து தங்கியிருப்பது குறித்து கவலைப்படுகிறார். கமாலிக் என்ற ஊரில் உள்ள தனது பண்ணைக்கு ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் சென்று, பன்றிகளுக்கு உணவு அளித்துவிட்டுத் திரும்பி வருவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். திருடர்களிடம் இருந்து அந்த பன்றிகளை பாதுகாப்பாக வைப்பதும் ஒரு சவால் நிறைந்த பணியாகவே அவருக்கு இருக்கிறது.
"எங்களுக்கு அது பழகிப்போய்விட்டது," என 53 வயதான பெஞ்சமின் நசோல் பிபிசியிடம் தெரிவிக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை எரிமலை வெடித்துச் சிதறியதை அவர் நேரில் பார்த்துள்ளதால், எரிமலையிலிருந்து உறுகிய பாறைகள் அருவி போல் ஓடிவரும் காட்சி, அவருக்கு ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துவதில்லை என்கிறார் அவர்.
"நீங்கள் உண்மையில் சோர்வடைந்திருந்தாலும், அல்லது விரக்தியிலிருந்தாலும் உங்கள் சொந்த ஊரில் கட்டாயம் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவு செய்தால் தான் இங்கே நிம்மதியாக இருக்க முடியும்," என்கிறார் அவர்.
எரிமலையின் மையப்பகுதியில் இருந்த பாறைகள் தூக்கிவீசப்பட்ட நிலையில், பல நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் பிலிப்பைன்ஸ் அரசின் புவியியல் விஞ்ஞானிகள் இம்மாதத் தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்தனர். தற்போது மூன்றாவது அதிதீவிர எச்சரிக்கையை விடுத்துள்ள விஞ்ஞானிகள், எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடித்துச் சிதறும் என அறிவித்துள்ளனர்.
சரியாகச் சொல்வதென்றால், தற்போது மாயோன் எரிமலை தனது வேகத்தை மிகவும் மெதுவாக, பல வாரகாலமாகக் காட்டிவருகிறது.
ஒரு மலை உச்சியில் உள்ள கண்காணிப்பு நிலையத்திலிருந்து கண்காணித்து வரும் 'எரிமலை அறிவியல்' நிபுணர் பால் அலானிஸ், எரிமலையின் மையப்பகுதியில் தமது பார்வைக்குத் தெரியும் காட்சிகளை வைத்து, பொதுமக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையின் அளவை நிர்ணயிக்கிறார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வரும் நாட்களில் பொதுமக்களில் எத்தனை பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும் என முடிவெடுக்கப்படுகிறது.
இருப்பினும், வெறும் கண்ணால் பார்க்கும் போது பார்வைக்குத் தெரியாத, எரிமலையின் உள்பகுதி அசைவுகளை சீஸ்மோமீட்டர் என்னும் கருவியைக் கொண்டு அலானிஸ் அளவிடுகிறார்.
மாயோன் எரிமலை கடந்த 2018ல் வெடித்துச் சிதறிய போது, அதன் மேல் பகுதியில் குமிழ் போன்ற அமைப்பு உருவானது. அந்த அமைப்பு ஊதிப் பெரிதாவதைப் போல் பெரிதாகிக்கொண்டே இருந்ததை வைத்தே தற்போது எரிமலை வெடிப்பு குறித்து முதன்முதலில் அறியப்பட்டதாக அலானிஸ் தெரிவிக்கிறார். அந்த குமிழ் போன்ற அமைப்பு கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்திலிருந்தே பெரிதாகி வந்துள்ளது.
எரிமலையைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்தும் விதத்தில் மாயோன் எரிமலையின் செயல்பாடுகள் கடந்த வாரம் காணப்பட்டன.
"நான் அதைக் கவனித்து வந்த நேரத்தில் ஒருமுறை எரிமலையின் சீற்றம் திடீரென அதிகரித்தது. இதையடுத்து, பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்தோம்," என அலானிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
எரிமலை விஞ்ஞானிகள் அவ்வப்போது மயோன் எரிமலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாகாண ஆளுனரிடமும், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளிடமும் தெரிவிக்கவேண்டும். அதற்கேற்றார் போல் அவர்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவார்கள்.
எரிமலையிலிருந்து குழம்பு மெதுவாக வெளியேறிவருவது இரண்டு விஷயங்களைக் காட்டுகிறது எனக்கூறும் அலானிஸ், எரிமலைக்குள் அது வெடிப்பதற்குத் தேவையான அளவு வெப்பவாயுக்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது வெப்பத்தில் உருகி வெளியேறும் பாறைக்குழம்புகள் எரிமலைக்குள் உள்ள பாதையை அடைத்துக்கொண்டிருக்கலாம் என்றார். "எரிமலை ஏன் இவ்வளவு மெதுவாக லாவாவை வெளியேற்றிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்டறியவேண்டிய தேவை உள்ளது. ஆனால் இப்போதைக்கு என்னால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது," என்றார் அவர்.
"எரிமலை எப்போது வெடிக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்கத் தேவையான தொழில்நுட்பம் இப்போது நம்மிடம் இல்லை."
பிலிப்பின்ஸ் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 24 எரிமலைகள், எரிமலை வெடிப்பு வரலாற்றில் அதிக அளவில் இடம்பெறும் பசிபிக் எரிமலை வளையத்துக்குள் வருகின்றன.
பொதுமக்களை வெளியேற்றிக் கொண்டிருந்த அதே வாரத்தில், மாயோன் எரிமலைக்குச் சற்றும் தொடர்பில்லாத, 5.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஒன்று தலைநகர் மணிலாவிற்குத் தெற்கில் தாக்கியது. அப்போது மிக உயரமான கட்டடங்களில் இருந்த பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது.
கூம்பு வடிவில் உலக அளவில் உள்ள எரிமலைகளில் முதலிடத்தில் இருந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள மாயோன், அதன் வடிவம் காரணமாக, பொதுமக்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இல்லை என்பது சற்று நிம்மதியைத் தருகிறது.
எரிமலையின் மையப்பகுதியில் ஆக்ரோஷத்துடன் காணப்படும் குழம்புகள் மற்றும் தீ பிழம்புகள் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன. இந்த எரிமலையின் தோற்றம் குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு கதையில் சொல்லப்பட்டுள்ள அழகான இளம்பெண் தாராகேங் மகயோன் குறித்த மீம்ஸ்களும் இணையத்தில் பெரும் எண்ணிக்கையில் உலாவருகின்றன. இந்த தாராகேங் மகயோன், ஒரு மாபெரும் பேரழகி என பைக்கோல் பகுதியில் சொல்லப்படும் கிராமியக் கதைகளில் வர்ணிக்கப்பட்டுள்ளார். 2018ம் ஆண்டில் நடைபெற்ற அழகி போட்டியில், ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த காத்ரியோனா கிரே என்ற பேரழகி, மாயோன் எரிமலையிலிருந்து வெளியேறும் தீ பிழம்புகளின் நிறத்தில் ஆடையணிந்து போட்டியில் பங்கேற்று பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த தற்காலிக வசிப்பிடத்தில் தங்கியிருப்பது பல வகைகளில் மிகவும் சிரமமளிப்பதாக ஜைரா சான் பாஸ்குவால் என்ற பெண் கூறுகிறார்.
மணிலா நகரில் உள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றும் 39 வயதான அந்தப் பெண், பைக்கோல் நகருக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது, அவரது குடும்பத்தினர் செல்ஃபோனில் அழைத்து, ஒரு தற்காலிக முகாமுக்கு வருமாறு கூறியிருக்கின்றனர். பேருந்தில் ஒரு இடத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் போது எப்படி மீண்டும் வேறு ஒரு இடத்துக்குச் செல்ல முடியும் என தவிப்பு ஏற்பட்டதாகக் கூறுகிறார் அவர்.
இருப்பினும், தற்போதைய தற்காலிக வசிப்பிடத்தில் அவரது குழந்தைப் பருவத்திலேயே ஒரு முறை தங்கியிருந்த அனுபவம் ஏற்கெனவே அவருக்கு இருக்கும் நிலையில், அப்போது இருந்ததைப் போன்று மோசமான நிலை இப்போது இல்லை என்பது சற்று நிம்மதியை அளித்துள்ளது.
"மக்கள் சிரிப்பதையும், நகைச் சுவை உணர்வோடு பேசிக்கொண்டிருப்பதையும் உங்களால் பார்க்க முடியும். தங்கள் துயரங்களில் இருந்து வெளிப்படும் முயற்சியாகவே அவர்கள் இது போல் செய்கின்றனர். அவர்கள் எப்படிப் பட்ட மோசமான சூழ்நிலையில் இருக்கின்றனர் என்பதைப் பற்றி சிந்திப்பதை மறக்கும் ஒரு முயற்சி அது," என்கிறார் அவர்.
அமைதியான இரவு நேரங்களில், இந்த தற்காலிக வசிப்பிடங்களில் இருப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதனால் இது போன்ற பொழுதுபோக்கு அவர்களின் கட்டாயத் தேவையாகிறது. அவர்கள் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து இது போல் பொழுதை போக்கிக்கொள்கின்றனர்.
ஆபத்தான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவது கட்டாயம் என்றாலும் 72 வயதான ரோகெர் அஸிலோவைப் போன்ற சிலர் விடாப்பிடியாக அவர்களின் இடத்தை விட்டு வெளியேற மறுக்கின்றனர்.
அரசு அதிகாரிகள் ஒரு லாரி மூலம் பொதுமக்களை அப்பகுதியில் இருந்து குயினாபெட்டான் முகாமுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, அஸிலோ ஒரு மரத்துக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டார்.
பல தசாப்தங்களாக இந்த எரிமலை வெடிப்பைப் பார்த்து வரும் அஸிலோ, தற்போது அது வெடித்துச் சிதறும் போது பெரும் ஆபத்து நேராது என நம்புகிறார். அவரைக் கவனித்துக் கொள்வதற்காக, அவரது மகனும் அங்கேயே தங்கியிருக்கிறார்.
அஸிலோவின் நண்பர் ஒருவர் தமது இரண்டு பன்றிகளைக் கவனித்துக்கொள்ளுமாறும், அதற்குத் தகுந்த கூலி கொடுப்பதாகவும் கூறிச் சென்றிருந்ததால், அவர் அவற்றைக் கவனிக்கும் வேலையையும் செய்துவருகிறார்.
இரவு நேரத்தில் தமது வீட்டுக்கு முன்பு போடப்பட்டுள்ள ஒரு மூங்கில் பெஞ்சில் அமர்ந்து, எரிமலையின் லாவா வெளியேறுவதை கவனிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
"ஒவ்வொரு முறை எரிமலைக் குழம்பு பீய்ச்சியடிக்கப்படும் போதும், அது உடனடியாக நின்றுவிட வேண்டும் என கடவுளிடம் பிரார்த்திப்பேன்," என அவர் பிபிசியிடம் தெரிவிக்கிறார்.
"எனக்கு மிகுந்த அச்சமிருந்தாலும், எதற்கும் தயாராகவே நான் இருக்கிறேன்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்