குழந்தை பிறப்பு விகிதம்: இந்தியாவிலும் தென் கொரியா போல் குறையும் ஆபத்தா? - ஓர் அலசல்

குழந்தை பிறப்பு விகிதம்: இந்தியாவிலும் தென் கொரியா போல் குறையும் ஆபத்தா? - ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஷகீல் அக்தர்
  • பதவி, பிபிசி உருது, டெல்லி

நாட்டில் உள்ள இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக, தென்கொரியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று குழந்தை பெற்றுக்கொள்ளும் தனது ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 75 ஆயிரம் கொரிய டாலர்கள் போனஸ் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

தென்கொரியாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் வரலாறு காணாத சரிவைச் சந்தித்து வருவதாக தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 'போ யங்' என்ற நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகக் குறைவான குழந்தைப் பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக தென்கொரியா இருந்து வருகிறது, ஆனால் இப்போது நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

'ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கொரியா' (Statistics Korea) என்ற அரசு அமைப்பு புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, குழந்தைகளின் பிறப்பு விகிதம் தற்போது 0.72 ஆகக் குறைந்துள்ளது. இது 2022இல் 0.78 ஆக இருந்தது. தலைநகர் சியோலில் இந்த விகிதம் மேலும் குறைவு, அங்கு 0.55 மட்டுமே.

திருமணத்தை தவிர்க்கும் இளைஞர்கள்

குழந்தை பிறப்பு விகிதம், தென்கொரியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான்.

பட மூலாதாரம், JEAN CHUNG

தென்கொரியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது குறித்து அரசியல் மட்டத்தில் கவலை அதிகரித்து வருகிறது. ஏனெனில் பல்வேறு அரசாங்கங்கள் குழந்தை வளர்ப்பு, புதுமணத் தம்பதிகளுக்கு மானியத்துடன் கூடிய வீடுகள் மற்றும் பிற நலத் திட்டங்கள் மூலம் 2006 முதலே பிறப்பு விகிதத்தை அதிகரிக்கத் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றன.

இதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கு அந்நாட்டு அரசின் தேசிய முன்னுரிமையாக உள்ளது.

மற்ற நாடுகளைப் போலவே தென் கொரியாவிலும், ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள திருமணம் செய்துகொள்வது கட்டாயம். ஆனால் திருமண வாழ்க்கையைத் தொடங்க நிறைய நிதி ஆதாரங்கள் தேவைப்படுவதால், திருமணம் செய்யாமல் தனியாக வாழும் போக்கு இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.

தென் கொரியாவில் குழந்தை பெற்றுக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்

குழந்தை பிறப்பு விகிதம், தென்கொரியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான்.

பட மூலாதாரம், Getty Images

'ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கொரியாவின்' மதிப்பீடுகள்படி, அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்தாலும்கூட 2025இல் நாட்டின் பிறப்பு விகிதம் 0.65 ஆகக் குறையும். இதற்கு பெண்கள் சந்திக்கும் சிரமங்களே முக்கியக் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தை பெற்றுக்கொண்டு வேலை செய்ய விரும்பும் பெண்கள் மீது அதிக சமூக அழுத்தம் உள்ளது. வேலையிலும்கூட நிறைய பாகுபாடுகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

முப்பது வயதான யாசீன் திருமணமாகாத தொலைக்காட்சி தயாரிப்பாளர். தலைநகர் சியோலுக்கு அருகிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் தனது தோழிகளுக்காக உணவு சமைத்துக் கொண்டிருந்தார்.

தோழிகளில் ஒருவர் தனது கைபேசியில் ஒரு மீமை பார்க்கிறார். டைனோசர் மனிதர்களைப் பார்த்து, “புத்திசாலியாக இருங்கள், எங்களைப் போல் அழிந்துவிடாதீர்கள்" எனக் கூறுவது போன்ற மீம் அது.

குழந்தை பிறப்பு விகிதம், தென்கொரியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான்.

பட மூலாதாரம், JEAN CHUNG

இதைப் பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். "இது ஒரு நகைப்புக்குரிய விஷயம், ஆனால் கசப்பான உண்மையும்கூட. ஏனென்றால் நமது அழிவை நாமே ஏற்படுத்த முடியும் என்பது எங்களுக்குப் புரிகிறது," என்று யாசீன் கூறுகிறார்.

யாசீனை போலவே, அவருடைய தோழிகள் அனைவரும் திருமணமாகாதவர்கள். தென் கொரியாவில் பொருளாதாரக் காரணங்களால் திருமணம் செய்ய விரும்பாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் திருமணமான பல தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.

குழந்தைகள் பிறப்பதை ஊக்குவிக்க கொரிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் ஒன்று, ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் 2,250 கொரிய டாலர்களை 'பேபி பேமெண்ட்' என்ற பெயரில் பெற்றோருக்கு அரசு வழங்குகிறது.

தென்கொரியாவில் மக்கள் தொகை வீழ்ச்சி தொடர்ந்தால், அடுத்த ஐம்பது ஆண்டுகளில் அங்கு உழைக்கும் மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும். அதாவது, நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேர் ஓய்வு பெறும் வயதை அடைந்திருப்பார்கள், அதாவது பாதிக்கும் மேற்பட்ட மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.

தனியார் நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகள்

நிபுணர்களின் கூற்றுப்படி, இப்போது நாட்டின் தனியார் நிறுவனங்களும் இந்த நெருக்கடியைத் தவிர்க்க முன் வந்துள்ளன. கடந்த வாரம், சியோலில் உள்ள 'போ யங்' என்ற கட்டுமான நிறுவனம், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தால், 75 ஆயிரம் டாலர்கள் வழங்குவதாக அறிவித்தது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தத் தொகையை நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்கும்.

கடந்த 2021 முதல் இந்நிறுவனம் இந்த சலுகைக்காகத் தனது ஊழியர்களுக்கு சுமார் 53 லட்சம் டாலர்களை செலுத்தியுள்ளது. போ யங் நிறுவனத்தின் தலைவரான 83 வயதான லீ ஜாங்-கியோன், "இந்த விகிதம் இப்படியே தொடர்ந்தால், ஒரு கட்டத்தில் நாடு இருத்தலியல் நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்கிறார். இந்த நிதி உதவியின் நோக்கம், ஊழியர் ஒருவர் வேலையில் சமரசம் செய்யாமல் குடும்பத்தை வளர்க்க உதவுவதாகும்.

வேறு சில நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள நிதி உதவி செய்து வருகின்றன. தென் கொரியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்கும் அதன் ஊழியர்களுக்கு 3,750 டாலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

சில நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பது ஏன்?

குழந்தை பிறப்பு விகிதம், தென்கொரியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான்.

பட மூலாதாரம், JEAN CHUNG

சில நிபுணர்களின் கருத்துப்படி, ஒரு நாட்டின் மக்கள் தொகைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கைக்கும் இடையே சமநிலையைப் பராமரிக்க, பிறப்பு விகிதம் 2.1 சதவீதமாக இருக்க வேண்டும். அதாவது ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளாவது இருக்க வேண்டும்.

பிறப்பு விகிதம் இதைவிடக் குறைவாக இருந்தால், படிப்படியாக நாட்டின் மக்கள் தொகை குறையத் தொடங்குகிறது. குழந்தைகள் குறைவாகப் பிறப்பதால், சில காலத்திற்குப் பிறகு நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்குகிறது.

இந்தச் சிக்கலைத் தற்போது சீனா சந்தித்து வருகிறது. கடந்த காலங்களில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல பத்தாண்டுகளாக சீனாவில் 'ஒரு குழந்தை கொள்கை' ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு கட்டத்திற்குப் பிறகு, நாட்டின் மக்கள் தொகை குறையத் தொடங்கியது மட்டுமல்லாது, அடுத்த 30-40 ஆண்டுகளில் அங்கு பணிபுரியும் இளைஞர்களின் எண்ணிக்கையும் குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சீன அரசு தற்போது இந்தக் கொள்கையை மாற்றி, இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள இளைஞர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. ஆனால் புதிய தலைமுறை இரண்டு குழந்தைகளை வளர்ப்பதைச் சுமையாகப் பார்க்கிறது.

சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 2022ஆம் ஆண்டில் இந்த விகிதம் 1.28 ஆக இருந்தது. 2023ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள்தொகையில் 20 லட்சத்துக்கும் அதிகமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

சீனாவை போலவே ஜப்பானும் குறைந்த பிறப்பு விகித பிரச்னையை எதிர்கொள்கிறது. ஓராண்டுக்கு முன்பு இந்த விகிதம் 1.26 ஆக இருந்தது. ஜப்பானில் மக்கள்தொகை வீழ்ச்சியின் போக்கு 2005இல் தொடங்கியது, அதேநேரம் 2023ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் எட்டு லட்சம் குறைந்துள்ளது.

கொரியாவை போலவே, ஜப்பானிலும் இளைஞர்கள் திருமணம் செய்ய விரும்புவதில்லை. இதற்காக, அரசாங்கம் ஒரு முறையான அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. அதன் ஊழியர்கள் நாட்டின் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒருவரையொருவர் காதலிப்பதற்கும், அவர்களை திருமணத்திற்குத் தயார்படுத்துவதற்கும் உதவுகிறார்கள்.

ஆனால் எல்லா முயற்சிகளையும் மீறி, அதிவேகமான அன்றாட வாழ்க்கை, பொருளாதார அழுத்தம் மற்றும் குழந்தையை வளர்ப்பதில் உள்ள மன மற்றும் உடல் ரீதியான சவால்கள் குறித்த பயம் காரணமாக, ஏராளமான இளைஞர்கள் திருமணமாகாமல் அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்க விரும்புகிறார்கள்.

தற்போதைய பிறப்பு விகிதம் தொடர்ந்தால், அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஜப்பானின் மக்கள் தொகை முப்பது சதவீதம் குறையும் மற்றும் நாற்பது சதவீத மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஜப்பானின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இந்தப் போக்கை 'ஜப்பானின் மிகக் கடுமையான நெருக்கடி' என்று வர்ணித்துள்ளார். ஜப்பான் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. ஆனால் இங்கு வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகம். பணவீக்க விகிதத்துடன் ஒப்பிடுகையில் மக்களின் சம்பளம் அதிகரிக்கவில்லை. இது மட்டுமல்ல, ஜப்பானியர்களில் நாற்பது சதவீதம் பேர் பகுதி நேர அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

சமூகத்தின் குழந்தைகள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரை ஏற்றுக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பல விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தெற்காசிய நாடுகளின் நிலை என்ன?

குழந்தை பிறப்பு விகிதம், தென்கொரியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான்.

பட மூலாதாரம், Getty Images

ஏறக்குறைய சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற கிழக்கு நாடுகளிலும் இதே நிலைதான். ஆனால் தெற்காசியாவின் நிலைமை சற்று வித்தியாசமாக உள்ளது.

இங்கு அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட உலகின் மூன்று பெரிய நாடுகள் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம், இந்த மூன்று நாடுகளின் மக்கள் தொகை பல பத்தாண்டுகளாக வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவும் வங்கதேசமும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற அமைப்புகளின் உதவியுடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தப் பல நடவடிக்கைகளை எடுத்தன. அவற்றில் முக்கியமானது குடும்பக் கட்டுப்பாடு திட்டம்.

'நாம் இருவர், நமக்கு இருவர்' போன்ற குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள் இந்தியாவில் 1970களில் தொடங்கப்பட்டது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் பெரிய நகரங்களிலும் படித்த வகுப்பினரிடையேயும் வெற்றிகரமாகச் செயல்பட்டன. ஆனால் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் விரும்பிய விளைவை ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இந்தியாவில் பிறப்பு விகிதம் 1990களில் இருந்து குறையத் தொடங்கியது. தற்போது அது 2.1 ஆக குறைந்துள்ளது. இந்த விகிதத்தில் தொடர்ந்து கீழ்நோக்கிய போக்கு உள்ளது. கேரளா, கோவா, ஜம்மு மற்றும் காஷ்மீர், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பல மாநிலங்களில், பிறப்பு விகிதம் மாற்று விகிதத்தைவிடக் குறைவாக உள்ளது.

ஆரம்பத்தில் வங்கதேசத்தின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்தது. ஆனால் அங்குள்ள அரசுகள் மிக விரைவாக பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்தன. 1990 முதல் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை அறிக்கைப்படி, 2023இல் வங்தேசத்தின் பிறப்பு விகிதம் 1.93 ஆக இருந்தது.

மூன்று நாடுகளில் பாகிஸ்தான் பின்தங்கியுள்ளது. குடும்பக் கட்டுப்பாட்டு பணிகள் இங்கு திறம்படச் செய்யப்படவில்லை. மாற்று விகிதத்தைவிட மிக அதிகமான பிறப்பு விகிதம் கொண்ட ஒரே தெற்காசிய நாடு இதுதான்.

தற்போது இந்த விகிதம் 3.18 ஆக உள்ளது. ஆனால் படிப்படியாக, பாகிஸ்தானிலும் குறிப்பாக நகர்ப்புறங்களில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய பிறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் மிக அதிகமாக இருந்தாலும், கடந்த பத்து ஆண்டுகளாக பிறப்பு விகிதத்தில் நிலையான சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருடாந்திர சரிவின் போக்கு வரும் ஆண்டுகளில் மிக வேகமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவின் பிற நாடுகளிலும் மக்கள்தொகை வீழ்ச்சியின் போக்கு காணப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இரான் போன்ற நாடுகளிலும் குறைவான குழந்தைகளைப் பெறும் போக்கு அதிகரித்து வருகிறது.

ஒரு நாட்டின் மக்கள்தொகை மற்றும் பிறப்பு விகிதம் வேகமாகக் குறையும்போது, ​​அதன் முதல் விளைவு 20-30 ஆண்டுகளில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவது. பின்னர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் மக்கள்தொகை அதிகரிக்கத் தொடங்கும்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலும் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இந்தப் போக்கு ஆப்பிரிக்காவிலும் மெதுவாகத் தொடங்குகிறது. மாறி வரும் உலகில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை குறைந்துகொண்டே வருகிறது.

'இது தொழிலாளர் இடப்பெயர்வை அதிகரிக்கும்'

குழந்தை பிறப்பு விகிதம், தென்கொரியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான்.

பட மூலாதாரம், JEAN CHUNG

கொல்கத்தாவில் உள்ள டயமண்ட் ஹார்பர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனிந்திதா கோஷல் கூறுகையில், "பிறப்பு விகிதம் குறையும் போக்கு தெற்காசியா நாடுகளிலும் அதிகரித்து வருகிறது. ஆனால் இது ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, சீனா போன்ற நாடுகளைவிட மிகவும் மெதுவாக உள்ளது, இதன் காரணமாக இரு குழுக்களுக்கு இடையில் வேறுபாடு உள்ளது. நாடுகளுக்கு இடையிலான இந்த மக்கள்தொகை இடைவெளி நீண்ட காலத்திற்கு இருக்கும்," என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "புதிய வகை இடப்பெயர்வு ஏற்கெனவே படிப்படியாகத் தொடங்கியுள்ளது. முன்பு, புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொழில் ரீதியாகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்தனர். இப்போது நடக்கும் இடம்பெயர்வு என்பது பெரும்பாலும் திறமையற்ற அல்லது குறைவான திறன் கொண்ட கூட்டமாக இருக்கும்," என்கிறார்.

''இந்தப் பணி வங்கதேசத்தில் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் பணியாளர்கள் வாழ்வதற்கு கடினம் எனக் கருதப்படும் நாடுகளுக்கு படிப்படியாக நகர்கின்றனர். இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கைவினைஞர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், மருத்துவச்சிகள் மற்றும் உதவியாளர்கள் புதிய நாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லை," என்று பேராசிரியர் கோஷல் கூறுகிறார்.

"இந்தச் சூழ்நிலையில், இளைஞர்கள் பணிக்காக மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக வளர்ந்த நாடுகளுக்கு இடம்பெயர்வது, வரும் நாட்களிலும் அதிகரிக்கும். இந்த நிலை எதிர்காலத்தில் உலகம் முழுவதும் உருவாகும்," என்கிறார்.

"மனித நாகரிகத்தின் ஒவ்வொரு யுகத்திலும் சிறந்த வாய்ப்புகளைத் தேடி ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இடம்பெயர்வது ஒரு நிரந்தர செயல்முறையாக இருக்கிறது. ஆனால் உலகின் வளர்ந்த மற்றும் பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளில் பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வருவது தீவிரமான சமூக மற்றும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது," என்கிறார் பேராசிரியர் கோஷல்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

சிறப்புச் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டது

500

Internal server error

Sorry, we're currently unable to bring you the page you're looking for. Please try:

  • Hitting the refresh button in your browser
  • Coming back again later

Alternatively, please visit the BBC News homepage.