குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் தகராறு - விவாகரத்து கோரிய தம்பதியரை சேர்த்துவைத்த நீதிமன்றம்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்தி
தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு பெயரிடுவது பற்றி வாதிடுவது சாதாரணமானது. ஆனால் அதற்காக நீதிமன்றம் வரை செல்வது அரிதான நிகழ்வு.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு, தங்கள் மகனுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மூன்று வருட தகராறுக்கு பிறகு நீதிமன்றத் தலையீடு தேவைப்பட்டது.
அவர்களின் கருத்து வேறுபாடு மிகவும் தீவிரமான பிறகு அவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.
இப்பிரச்னை 2021 இல் தொடங்கியது. பெயர் குறிப்பிடப்படாத அந்தப் பெண், ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு சில வாரங்களுக்கு தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றார். இந்தியாவில் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டு ஓய்வெடுக்கவும், குணமடையவும் பெற்றோர் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.
பொதுவாக, தாய் மற்றும் குழந்தை இருவரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வர கணவர் வருவார்.
ஆனால் 21 வயதான அந்தப் பெண், தனது கணவர் தங்கள் மகனுக்குத் தேர்ந்தெடுத்த பெயரை ஏற்க மறுத்ததால், அவரது கணவர் வருத்தமடைந்தார். அதனால் அப்பெண்ணை மீண்டும் அழைத்து வர அவரது கணவர் செல்லவில்லை.
அதற்கு பதிலாக, அவரது பெயரின் முதல் எழுத்து மற்றும் அவரது கணவர் பெயரின் ஒரு பகுதியைக் குறிக்கும் விதமாக அப்பெண் தனது குழந்தைக்கு ஆதி என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார் என்று ஹன்சூர் நீதிமன்றத்தின் உதவி அரசு வழக்கறிஞர் சௌமியா எம்.என் தெரிவித்தார்.
மாதங்கள் வருடங்களாகின. அதுவரையிலும் பெற்றோரின் வீட்டில் இருந்த பெண், கர்நாடக மாநிலத்தின் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஹன்சூர் நகரத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தை அணுகி தனது கணவரிடம் நிதியுதவி கோரினார்.
அவரது வழக்கறிஞர் எம்.ஆர்.ஹரிஷ் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், தற்போது அவர் விவாகரத்து கோரும் அளவுக்கு அவர்களுக்குள் தரகராறு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.
"அப்பெண் இல்லத்தரசி என்பதால் ஜீவனாம்சம் தேவைப்பட்டது," என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கு முதலில் உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் பின்னர் மக்கள் நீதிமன்றத்திற்கு (லோக் அதாலத்) மாற்றப்பட்டது. இந்த நீதிமன்றம், மத்தியஸ்தம் மூலம் தீர்க்கக்கூடிய வழக்குகளைக் கையாளுகிறது.
இறுதியாக நீதிமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயரை அவர்கள் ஒப்புக் கொள்ளும் வரை, நீதிபதிகளிடமிருந்து பல பரிந்துரைகள் இருந்தபோதிலும், தம்பதியினர் உறுதியாக இருந்தனர்.
குழந்தைக்கு இப்போது ஆர்யவர்தனா என்று பெயரிடப்பட்டுள்ளது.
பின்னர் தம்பதியினர் இந்திய பாரம்பரியத்தின்படி திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் சின்னமாக மாலைகளை பரிமாறிக்கொண்டனர். மேலும் தங்கள் திருமண பந்தத்தைத் தொடர வேண்டும்என்ற முடிவுடன் மகிழ்ச்சியுடன் வெளியேறினர்.
சமீப வருடங்களில் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கும் விஷயத்தில் இந்திய நீதிமன்றம் தலையிடுவது இந்த வழக்கில் மட்டும் இல்லை.
கடந்த செப்டம்பரில், கேரளாவில் ஒரு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் காலியாக இருந்தது தெரியவந்ததையடுத்து பள்ளி செல்ல அக்குழந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இப்போது நான்கு வயதாகும் குழந்தையின் பிறப்பைப் பதிவு செய்ய முயற்சித்ததாகவும் ஆனால், பிரிந்த சென்ற தனது கணவர் வராததால், அதிகாரிகள் படிவத்தை பூர்த்தி செய்ய மறுத்துவிட்டனர் எனவும் அக்குழந்தையின் தாய், நீதிமன்றத்தில் விளக்கினார்.
தாய் பரிந்துரைத்த பெயரை ஏற்று தந்தையின் பெயரையும் சேர்த்து, சான்றிதழ் வழங்குமாறு, உயர் நீதிமன்றம் சம்பத்தப்பட்ட அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)